Published:Updated:

‘கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு!’

விகடன் டீம், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தரவற்றோருக்கு அடைக்கலமாகத் திகழ்கிறது சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ‘குட் லைஃப் சென்டர்’. 20 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த இல்லத்தில், குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை 153 பேர் வாழ்கின்றனர். இதில் 82 பேர் பெண்கள். மேற்கு தாம்பரம், மண்ணிவாக்கம், திருவண்ணாமலை ஆகிய மூன்று இடங்களில் இந்த இல்லம் செயல்படுகிறது.

 ‘கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு!’

சமீபத்திய மழை வெள்ளத்தில், மண்ணிவாக்கத்தில் உள்ள இல்லம் முற்றிலும் சிதிலம் அடைந்தது. உடைகள், புத்தகம், சமையல் பொருட்கள் என அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அங்கு இருந்த சிறுவர்களை தற்காலிகமாக தாம்பரத்தில் தங்கவைத்திருக்கிறார்கள். `` ‘அறம் செய விரும்பு’ திட்டத்தின் கீழ் இந்த மாணவர்களுக்கு உதவ முடியுமா?'' எனக் கேட்டிருந்தார் நம் வாசகர்.

 ‘குட் லைஃப் சென்டர்’ நிறுவனர் பாஸ்கரனிடம் என்னென்ன உதவிகள் தேவை எனக் கேட்டு அறிந்தோம். மூன்று இல்லங்களுக்கும் மூன்று மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் (அரிசி, எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், மிளகு, எள் என மொத்தம் 13 பொருட்கள்) 2,20,000 ரூபாய்க்கும், 30,000 ரூபாய்க்கு ஆடைகளும் வாங்கிக்கொண்டு, குட் லைஃப் சென்டரில் இறக்கினோம்.

“நாம வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோம்னு தெரிந்துகொண்ட ‘ராகவா லாரன்ஸ்’ அங்கிளும், ஆனந்த விகடன் டீமும் சேர்ந்து, நாம மூணு மாசத்துக்கு சாப்பிடத் தேவையான மளிகைப் பொருட்களும், சில உடைகளும் வாங்கிக் கொடுத்திருக்காங்க” என குட் லைஃப் சென்டரின் நிறுவனர் பாஸ்கரன் சொன்னதும், குழந்தைகள் புன்னகையுடன் கைதட்டி வரவேற்றனர்.

 ‘கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு!’

“இந்தக் குழந்தைங்கதான் சார் என் உலகம். 1996-ம் ஆண்டு சென்ட்ரல் பக்கத்துல வேலைபார்த்தேன். அப்ப மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை, ரோட்டுல அநாதையா நின்னுட்டு இருந்தது. உடனே நானும் என் நண்பரும் அந்தக் குழந்தையைத் தூக்கிட்டுப் போய், ஆதரவற்ற இல்லங்களில் சேர்க்க முயற்சி செஞ்சோம். யாரும் சேர்த்துக்கலை. கொஞ்ச நாட்கள் தெரிந்த நண்பர்கள் வீட்டில் தங்கவெச்சோம். அங்கேயும் சரியாப் பார்த்துக்க முடியலை. `நாமளே ஏன் பார்த்துக்கக் கூடாது?'னு கேள்வி எழுந்தது. அதான் இந்த ‘குட் லைஃப் சென்டர்’ தொடங்க முக்கியக் காரணம்.

குழந்தைங்க வளரும்போதே அவங்களை எங்கே இருந்து எடுத்துட்டு வந்தோம்கிற எல்லா விவரங்களையும் தெளிவா சொல்லிடுவோம். ஒரு குழந்தை எங்க இல்லத்துக்கு வந்தா, நல்ல சாப்பாடு, நல்ல உடை கொடுத்து நல்ல படிப்பும் கொடுத்து வேலைக்குச் சேரும் வரை பத்திரமா பார்த்துக்குவோம். வேலைக்குச் சேர்ந்த ரெண்டு மாசத்துல வெளியே தங்கிக்கோங்கனு சொல்லிடுவோம். பெண்களுக்கு 23 வயசு ஆனதும் தெரிஞ்சவங்க மூலமாகவே நல்ல பையனா விசாரிச்சு, கல்யாணம் செஞ்சு கொடுப்போம். இதுவரை நாலு பெண்களுக்குக் கல்யாணம் ஆகியிருக்கு. அரசாங்க ஆதரவு இருக்கு. ஆனா, நிதியுதவி எதுவும் இதுவரை கிடைக்கலை. பிறந்த நாள், கல்யாண நாள்னு பலர் சாப்பாடு வாங்கிக் கொடுப்பாங்க. சிலர் பணமாத் தருவாங்க. அதைவெச்சுத்தான் இந்த இல்லத்தை நடத்துறோம்” என்றவர் வெள்ளப் பாதிப்புகள் குறித்தும் சொன்னார்.

 ‘கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு!’

“பசங்க மண்ணிவாக்கம் இல்லத்திலும், பெண்கள் மேற்கு தாம்பரம் இல்லத்திலும் இருந்தாங்க. மண்ணிவாக்கம் இல்லத்துக்குத்தான் அதிகப் பாதிப்பு. தண்ணீர் வரும்னு தெரிஞ்ச உடனே வாடகைக்கு பஸ் பிடிச்சு பசங்களை வெளியே கொண்டுவந்துட்டோம். ஆனா, பசங்க உடுத்தும் உடை, படிக்கும் புத்தகம் அவங்க ஸ்கூல் பேக்னு எதையும் காப்பாத்த முடியலை. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா சுத்தப்படுத்துறோம். இப்ப நீங்க கொடுத்த மளிகைப் பொருட்களும் உடைகளும் ரொம்ப உதவியா இருக்கும். ஒட்டுமொத்தமா இவ்வளவு பெரிய உதவி வர்றது, 20 வருஷத்துல இதுதான் முதல் முறை” என நெகிழ்ந்தார்.

இதை எல்லாம் பாஸ்கரன் அருகில் இருந்து கவனித்துவந்த நான்காவது படிக்கும் சுரேந்தர், “லாரன்ஸ் அங்கிள்தான் எங்களுக்கு எல்லாம் உதவி செஞ்சதா அப்பா(பாஸ்கரன்) சொன்னார். அடுத்த முறை ராகவா லாரன்ஸ் அங்கிளையும் வரச் சொல்லுங்க. இங்க அவருக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க” எனச் சொல்லி ரெண்டு ஸ்டெப் போட்டு காண்பித்தான்.

 ‘கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு!’

ப்ளஸ் ஒன் படிக்கும் தேவி, “நான் பிறந்ததில் இருந்தே இங்கதான் இருக்கேன். அம்மா-அப்பா இல்லாதது ஒரு குறையாவே தெரியலை. அப்பாவும் இங்கே இருந்த அக்காக்களும்தான் என்னைத் தூக்கி வளர்த்தாங்க. நான் இப்ப இங்க இருக்கிற சின்னக் குழந்தைகளை வளர்க்கிறேன். ஸ்கூலுக்குக் கிளம்பறதுக்கு முன்னாடி இவங்களை எல்லாம் குளிக்கவெச்சு ரெடி பண்ணுவேன். ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் இவங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துட்டே நானும் படிப்பேன். பத்தாவதுல 409 மார்க் எடுத்தேன். ப்ளஸ் டூ-வில் நிறைய மார்க் வாங்கி, டாக்டர் ஆகணும். அப்பா படிக்கவைக்கிறேன்னு சொல்லியிருக்கார்” என்றார் உற்சாகமாக.

மூன்றாவது படிக்கும் அன்பு, பிரியன் இருவரும் `டங்கா மாரி...' பாடலுக்கு டான்ஸ் ஆட, அந்த இடமே உற்சாகமானது.

``இப்போ கேர்ள்ஸ் எல்லாம் சேர்ந்து பாட்டு பாடப்போறோம்...''

“கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
கருணை பொங்கும்... உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு...”


அந்தக் குழந்தைகள் பாடப் பாட பெருக்கெடுத்தது அன்பு!

 ‘கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு!’

`அறம் செய விரும்பு' திட்டத்தின் செயல்பாடுகள் ஆனந்த விகடனில் பகிரப்படும். திட்டம் தொடர்பான தகவல்களை www.vikatan.com/aramseyavirumbu என்ற வலைதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.