`` `குறைவான விலைதான் வாங்கணும்'னு மாநில அரசு உத்தரவு போடுது; மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையைக் கூட்டுது. எங்களுக்கும் புள்ள குட்டியெல்லாம் இருக்கு. அதுங்களும் படிக்கணும், சோறு திங்கணும், விசேஷம் வந்தா நல்ல துணி உடுத்தணும், சோறு போடுற இந்த ஆட்டோவுக்கு டியூவையும் கட்டணும். 67 ரூபாய்க்கு டீசல் போட்டுட்டு... 29 ரூபாய் கட்டணம் வாங்கிக்கனா, நாங்க என்ன பண்றது?'' - சென்னை பெரம்பூரில் ஆட்டோ ஓட்டும் பச்சையப்பன் குமுறுகிறார்.
``இவனுங்க டீசல் விலை ஏத்தின பிறவு நாலு நாள் நான் காரையே எடுக்கலை. கையில காசு இல்லை. இருக்கிற காசுக்கு டீசல் போட்டு ஓட்டினா, எங்கேயாவது கார் நின்னுபோச்சுனா என்ன பண்றது?'' கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கார் ஓட்டும் கேப்ஸ் டிரைவர் ரமேஷ்.
ஃபெடெக்ஸ் கூரியர் நிறுவனத்தில் வேலைசெய்யும் கார்த்திக்கும் இதே நிலைமைதான். ``இதுக்கெல்லாம் காரணம், இந்த மத்திய அரசுதான். 2016 மார்ச் மாசம், 62 ரூபாய்க்கு நான் பெட்ரோல் போட்டேன். இப்போ அதே பெட்ரோல் 75 ரூபாய்!'' - துணிச்சலாக சொன்னார் கார்த்திக்.
இந்த பெட்ரோல் விலை, அனைத்துத் தரப்பினரையும் பேச வைத்துவிட்டது. பணமதிப்பு இழப்புக்குப் பேசாத மக்கள், ஜி.எஸ்.டி-க்குப் பேசாத மக்கள், அனிதாவுக்குப் பேசாத மக்கள் இப்போது பேசுகின்றனர். குறை கூறுகின்றனர். காரணம், பெட்ரோல்-டீசல் விலை அவர்கள் வாழ்வில் அவ்வளவு முக்கியமானது. ஒவ்வொரு பொருளுக்கான விலை ஏறும்போது, அதில் இந்த பெட்ரோல்-டீசல் விலையும் ஒரு பகுதியாக இருக்கும். பருப்பு, பால், கோழிக்கறி, கார், சலூன் என எல்லாமே இந்த விலையைப் பொறுத்ததுதான்.
`அவன் கண்ணாடிய திருப்பினா, என் ஆட்டோ எப்புடி ஜீவா ஓடும்?' எனக் கேட்காதீர்கள். பெட்ரோல்-டீசல்தான் எல்லா ஆட்டோக்களையும் ஓட்டுகின்றன. அமெரிக்க அரசோட ஆட்டோவே கச்சா எண்ணெயில்தான் ஓடுது. அது வேற மேட்டர், அதுக்குத் தனி கட்டுரை இருக்கு.
ஜனவரி 2015-ல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 61.38 ரூபாய். தற்போது அதே அளவு பெட்ரோலின் விலை 75 ரூபாய். மும்பையில் இதைவிடக் கொடுமையாக 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த விலை ஏற்றத்திலேயே இதுதான் அதிகம். பெட்ரோலுக்கும் டீசலுக்கும் உள்ள விலை இடைவெளி குறைந்துவரும் நிலையில், மும்பையில் டீசலின் தற்போதைய விலை 67.50 ரூபாய். சென்னையில் 66.84 ரூபாய். இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம், எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்யின் விலையை அதிகரித்துவருவதுதான்.
இது மட்டுமே காரணம் எனச் சொல்லிவிட முடியாது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை $70 டாலர். 2016, ஜனவரியில் $30 டாலர் ரூபாய் வரை சரிந்தது. 50 சதவிகிதத்துக்கும் அதிகமான அளவு விலை குறைந்தபோதும் நமக்கு பெட்ரோல் 30 ரூபாய்க்குக் கிடைக்கவில்லையே! இதற்குக் காரணம் `Excise duty' எனப்படும் கலால்வரி. இந்த வரி வைத்திருப்பதே பணம் சம்பாதிக்கத்தான். இந்த வரி மூலம் அரசு தன் லாபத்தை அதிகப்படுத்திக்கொள்ளும். கடந்த மூன்று ஆண்டில் இந்த வரியை ஒன்பது முறை மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு. ஏப்ரல் 2014-ல் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.9.48 என்றிருந்த கலால் வரி, தற்போது 19.48 ரூபாய். இரண்டு மடங்குக்குமேல் அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் இதே வரி 21.48 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கலால் வரியை இரண்டு இரண்டு ரூபாயாகப் பலமுறை அதிகரித்தது மத்திய அரசு.
``நாங்களும் சும்மா இல்ல, எங்களுக்கும் சம்பாதிக்க தெரியும்!'' என்று சொல்லிக்கொண்டு போட்டிபோட்டு பெட்ரோல்-டீசல் மீது உள்ள வாட் வரியை அதிகரித்தது தமிழக அரசு. 27 சதவிகிதம் இருந்த வாட் வரியை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 34 சதவிகிதமாக அதிகரித்தது தமிழக அரசு. கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோது 30 சதவிகிதம் இருந்த வாட் வரியை 27 சதவிகிதமாக மாற்றியிருந்தது. இப்போது வாட் 34 சதவிகிதம். மத்தியப்பிரதேசத்தில் 40 சதவிகித வாட் வரி.
மத்திய - மாநில அரசுகள் விலையையும் வரியையும் தொடர்ந்து உயர்த்திக்கொண்டேபோகின்றன. 15 நாள்களுக்கு ஒருமுறை விலை மாற்றம் அறிவித்தபோதும், எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் அளித்துவந்தது மத்திய அரசு. இப்போது தினம் தினம் விலை மாறுவதால் அந்த மானியமும் லாப கணக்கில் சேர்ந்துவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை, பெட்ரோலும் டீசலும் பணம் காய்க்கும் மரங்கள். பணம் காய்த்துக்கொண்டே இருக்கிறது. சாமானியனின் ரத்தத்தில்தான் இந்த மரம் வளர்கிறது என்பது, இவர்களுக்கு எப்போது புரியும்? இந்தியாவில் மருத்துவமோ, கல்வியோ, உணவோ, தொலைத்தொடர்பு சேவைகளோ, ரயில் - பேருந்துக் கட்டணங்களோ, வங்கிச்சேவைகளோ எதுவுமே இலவசமில்லை. அதுகூட வேண்டாம், விலை குறைவாகக் கிடைத்தாலே போதுமானது. இவற்றில் எதுவுமே ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தினரின் பட்ஜட்டில் அடங்குவதில்லை.
இப்போது சொல்லுங்கள், அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி மட்டும் எதற்கு அதிகரித்துக்கொண்டேபோகிறது? நீங்கள் சம்பாதித்தது போதும் அரசாங்கமே! பச்சையப்பனும், ரமேஷும், கார்த்திக்கும் நேர்மையான முறையில் கொஞ்சம் சம்பாதிக்கட்டும் அவர்களின் வாழ்வுக்காக... கனவுகளுக்காக!