மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வட்டியும் முதலும் - 10

வட்டியும் முதலும்
பிரீமியம் ஸ்டோரி
News
வட்டியும் முதலும்

'ஒரே ஒரு ராத்திரி அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டு, காலையில் தாய்க் கழகத்துக்கு வந்துவிட்டார்’ என என்.என். தாத்தாபற்றியும் சொல்வார்கள்!

னக்கு ஓட்டு ஊரில் இருக்கிறது! தேர்தல் காலம் என்றால், ஊரில் திருவிழா தொடங்கிவிடும்.

தி.மு.க-வின் பிரபல தலைமைக் கழகப் பேச்சாளர் நன்னிலம் நடராஜன் எனக்கு ஒண்ணுவிட்ட தாத்தா. ஊரில் எங்கள் வீட்டில் இருந்து நாலைந்து வீடுகள் தள்ளித்தான் அவர் வீடு. அப்போது எல்லாம் தெருவில் 'டபுடுபு டபுடுபு’வென அவர் புல்லட் சத்தம் கேட்டால், பொடிசுகள் நாங்கள்தெறித் துத் தெருவுக்கு ஓடி வந்து, 'கலைஞர் வாழ்க... கலைஞர் வாழ்க...’ எனக் கத்துவோம். 'சுட்டிக் கழுதைகளா...’ என்று 'தேவர் மகன்’ சிவாஜி மாதிரி அவர் ஆரஞ்சு மிட்டாய்களை அள்ளி வீசுவார். எங்கள் ஊருக்கு அவர்தான் 'கறுப்புக் கலைஞர்’.

அவர் பிறந்த நாளைக்குத் தெருவே கரை வேட்டிகளால் களைகட்டும். 'பாளையங்கோட்டைச் சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே’ என ஸ்பீக்கர் கட்டி அலறும். கோ.சி.மணி, பழனிமாணிக்கம், பூண்டி கலைச்செல்வன் எனக் கட்சிப் புள்ளிகள் எல்லாம் வியர்வை வழியத் திரிவார்கள். ஆரஞ்சு மிட்டாய்களுக்குப் பதில் அன்று கேக் கிடைத்த சந்தோஷத்தில் நாங்கள் எகிறி எகிறி 'வாழ்க...’ சொல் வோம்.

வட்டியும் முதலும் - 10

எலெக்ஷன் என்றால் என்.என். தாத்தா பேச்சுக்குத்தான் ஏரியாவில் கூட்டம் கும்மும். சாந்தமாக ஆரம்பிப் பார். 'என் தலைவன் இருக்கானே... எங்கூட்ல ஒரு புள்ள டீச்சர் டிரெயினிங் முடிச்சுட்டு, சும்மாதோசை சுட்டுக் கிட்டுக் கெடக்கு. அதுக்கு ஒரு போஸ்ட் வாங்கித் தாய்யான்னா, மூஞ்சைத் திருப்பிக்கிறாரு...’ என பெர்சனல் டச் கொடுப்பார். திடுதிப்பென்று வேட்டி யின் ஒரு நுனியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவர் டபுள் மீனிங் ஆட ஆரம்பித்தால், கூட்டத்தில் பெண்கள் ஏரியா மொத்தமாகக் காலியாகும். 'ஏம்மா... நான் உன்னைக் கேக்கறேன்...’ என அவர் கேட்க ஆரம்பித்தாலே... சென்ஸார்தான்!  

ஒரு முறை ராதாரவியும் எஸ்.எஸ்.சந்திரனும் கொரடாச்சேரிக்கு வந்திருந்தார்கள். அப்போது இருவரும் தீவிர தி.மு.க. கில்லிகள்.

அண்ணாவில் இருந்து சிம்ரன் வரை பார்த்த காந்தி பூங்காவில் நடந்த கூட்டத்தில், ஜெயலலிதாவைக் காலி பண்ணினார்கள். சிவப்பு கலரில் பப்பளபளவென ராமராஜன் சட்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த ராதாரவியைப் பார்க்கக் கூட்டம் முண்டியது. கூட்டம் முடிந்து ஒரு பாய் வீட்டில் இரண்டு பேருக்கும் பிரியாணி விருந்து. சில பல வருடங்களுக்குப் பிறகு, ஒரு பிரசாரத்துக்காக அதே காந்தி பூங்காவில் எஸ்.எஸ். சந்திரன் அ.தி.மு.க. கில்லியாக வந்திருந்தார். கலைஞர் குடும்பத்தையே விட்டு விளாசி னார். அ.தி.மு.க. பாய் வீட்டில் பிரியாணி சாப்பிட்டார்.

அன்று இரவு கட்டாரி மாமாவோடு வெட்டாத்துப் பாலம் சைக்கிள் கடைக்குப் போனபோது, என்.என். தாத்தாவும் தீப்பொறி ஆறுமுகமும் உட்கார்ந்திருந்தார் கள்.

''இவுனுவோ பாருங்கய்யா... பொடுக்குனு அந்தம்மா பின்னாடி போயிட்டானுவோ. எம்.ஜி.ஆர். பின்னாடி போயிருந்தா... நானும் தீப்பொறியும் இன்னிக்கு மினிஸ்டருய்யா. மனுசனுக்குக் கொள்கை வேணா மாய்யா...'' எனத் தாத்தா கோபப்பட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு தீப்பொறியும் அ.தி.மு.க-வுக்குப் போனார்.

'ஒரே ஒரு ராத்திரி அ.தி.மு.க-வுக்குப் போய்விட்டு, காலையில் தாய்க் கழகத்துக்கு வந்துவிட்டார்’ என என்.என். தாத்தாபற்றியும் சொல்வார்கள்!
வட்டியும் முதலும் - 10

தாத்தா வாரத்துக்கு ஒரு முறைதான் ஊரில் இருக்கும் வீட்டுக்கு வருவார். அவர் வருகிற அன்று மஞ்சள் தேய்த்துக் குளித்து, சுங்குடி கட்டித் தகதகவெனத் திரியும் ஜெகதாம்பா ஆத்தா. புல்லட்டில் வருகிற தாத்தா, ஒவ்வொரு முறையும் ஒரு அலுமினிய வாளியோடு வருவார். தெருவில் விளையாடித் திரியும் எங்களிடம், ''டேய்... இதை ஆத்தாட்டக் குடு'' என வாளியைக் கொடுப்பார். ஒரு முறை ஆவலில் யாருக்கும் தெரியாமல் அந்த வாளியைத் திறந்து பார்த்தேன். அரை வாளிக்கு அரிசி இருந்தது. அதன் மேல் ஒரு பாலிதீன் கவரில் அல்வா, வாழை இலையில் மல்லிப்பூ பண்டல். இப்போது நினைத்தால், அத்தனை ஆண்டு காலத் திராவிடக் கட்சிகளின் அரசியலை எவ்வளவு சூசகமாக அந்த வாளிக்குள் அடக்கிவிட்டார் தாத்தா எனத் தோன்றுகிறது. அரிசி... மல்லிப்பூ... அல்வா!

தேர்தல் காலங்களில் கலைஞர், ஜெயலலிதா, வைகோ எனப் பெருந் தலைவர்கள் ஆன் தி வேயில் ஊர் கடைத் தெருவுக்கு திடுதிப்பென்று வந்துவிடுவார்கள். தடதடவெனத் தகவல் பரவி மொத்த ஜனமும் ஓடும். ஊரில் சரிபாதி முஸ்லிம் மக்கள் என்பதால், வருகிற அத்தனை பேரும் 'மதச்சார்பின்மை’, 'சிறுபான்மைச் சமுதாயத்துக்கு’ போன்ற வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.

ஓர் இரவு ஜெயலலிதா வந்து கடைத் தெருவில் வேனில் நின்றபடி பேசினார். டியூப் லைட் வெளிச்சத்தில் கொசுக்கள் மொய்க்க, அதைக் கை களால் வீசியபடி, ஒரே நிமிஷத்தில் பேசி முடித்துக் கிளம்பிவிட்டார். வீட்டுக்கு வந்து கமலா அத்தை, ''ஏயப்பா... ரோஸ் கலர்ல இருக்கு. நம்ம கைல மருதாணி வெச்சாப்ல இருக்கு அந்தம்மா கன்னம்... எவ்வளவு அழகா கொசு அடிச்சுச்சு பாரேன்...'' என ராத்திரி எல்லாம் பேசிக்கொண்டே இருந்தது.

ஒரு முறை கலைஞர் வந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டைச் சேர்ந்த பாவா, ''ரோட் டோட போயிடாதீங்க... வெட் டாத்துல இறங்கிப் பார்த்துட் டுப் போங்க. மணல் அள்றது பூராம் உங்க ஆளுங்களும் அ.தி.மு.க-காரனும்தான்...'' எனக் கத்த, பெரிய களேபரம்ஆனது.

கடந்த தேர்தலில் எல்லாம் எங்கள் ஊர்க்காரர்கள் பயங்கர சோம்பேறிகளாகிவிட்டார்கள். விஜயகாந்த்தில் இருந்து

வடிவேலு வரைக்கும் பொழு துக்கும் டி.வி-யில் கரைச்சலைக் குடுக்க, எந்தத் தலைவருக்கும் கடைத்தெருவில் பாதிக் கூட்டம்தான் கூடியது. அந்த நேரத்தில் வீட்டுக்குப் போன் பண்ணும்போது அம்மாவிடம் கேட்டேன், ''ஊர்ல என்னம்மா விசேஷம்?''

''இந்த ஸ்டாலின் கடத்தெருவுக்கு வந்துருக்காராம்... சித்தார்த்தன் போயிருக்கான்...''

''ஏன் நீ போவல..?''

''போய்யா, டி.வி-யிலயே போரடிச்சுப் போச்சுய்யா'' என்றது அலட்சியமாக!

ஒருவன் கள்ள ஓட்டுப் போட்ட அனுப வத்தை எழுதினால், அது தேசத்தின் இறை யாண்மையைப் பாதிக்குமா எனத் தெரிய வில்லை. நான் போட்ட முதல் ஓட்டு கள்ள ஓட்டுதான். ஓட்டுப் பட்டியலில் இடம் இல்லாத 16 வயதில், முள்ளால் மாமா வீட்டுக்குப் போயிருந்தேன். தேர்தல் நாள் அன்று மூர்த்தி அண்ணன் அவசரமாக வந்து, ''தம்பிக்குட்டி, வாடா குட்டி... மாரீஸ்ல போய் 'அபூர்வ சகோதரர்கள்’ படம் பார்ப் போம்!'' என இழுத்துப் போனவர், லால் குடியில் ஒரு ஸ்கூலுக்கு எதிரே இருந்த அ.தி.மு.க. பூத்துக்குக் கூட்டிப்போனார்.

''தி.மு.க-காரன் தாளிக்கிறான்... தடுக்கவே முடியலை. போன தடவை பூத் பாலிடிக்ஸ் லயேதான் ஜெயிச்சானுங்க...'' என பூத்துக் குள் கூட்டம் போட்டுக் கொந்தளித்துக்கொண்டு இருந்தார்கள்.

அங்கே இருந்த ஒரு குண்டரிடம் மூர்த்தி அண்ணன் என்னைக் காட்டி, ''குட்டி எப்பிடி? கோவிந்தராஜன் பையனுக்கு...'' என்றார். அலட்சியமாகக் கையைக் காற்றில் வீசி ஓ.கே. சொன்னார் குண்டர். கோவிந்தராஜன் என்பவரது மகன் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு சாயம் போடப் போய்விட்டான். அவன் ஓட்டை நான் போட வேண்டும். அண்ணனும் கூட இரண்டு பேரும் என்னை ஒரு மூத்திரச் சந்துக்குக் கூட்டிப்போனார்கள். அதில் ஒருவர் என்னிடம் சின்சியராக, ''தம்பி... ஓட்டுப் போடப் போகும்போது உன்னை விசாரிப்பாங்க. தெளிவாச் சொல்லணும். இப்போ உன் பேரு ஜி.வீரமணி. ங்கொப்பன் பேரு கோவிந்தராஜி, அம்மா பேரு மயிலாம்பா... நல்லா ஏத்திக்கப்பா...'' என்றார். தெருப் பெயர், வீட்டு அட்ரஸ் என எல்லாவற்றையும் மனப்பாடம் பண்ணிப்போய் வெற்றிகரமாக ஓட்டுப் போட்டுவிட்டு வந்தேன். நான் திரும்ப வந்தபோது பூத்தில் என்னைப்போல் இன்னும் நாலைந்து பேர் நின்றிருந்தார்கள். அந்தக் குண்டர் என் கன்னத்தைக் கிள்ளி ஒரு உம்மா குடுத்தார். ''தம்பி, ஓட்டு போடப் போனப்போ என்ன நடந்துச்சுனு இவுனுவோளுக்குச் சொல்லு...'' என என்னை புது கஸ்டமர்களுக்கு டியூஷன் எடுக்கவிட்டார்.

இரவு மாரீஸில் 'அபூர்வ சகோதரர்கள்’ பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, மூர்த்தி அண்ணன் கையில் பெரிய கட்டுப் போட்டுக்கொண்டு கூட்டத்தோடு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு பூத் ஏரியாவில் நடந்த தகராறில் கைகலப்பாகி அண்ணனுக்குக் கை பணால். மூன்று வருடங்களுக்கு முன்பு மூர்த்தி அண்ணனைப் பார்த்தபோது ஏரியா கவுன்சிலர் ஆகி இருந்தார்!

12 வருடங்களுக்கு முன்பு மதுரை டி.வி-எஸ்ஸில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆர்வமாக இருந்தேன். நிரந்தரம் இல்லாத கூலித் தொழிலாளிகள் எல்லாம் ஓர் அணியாக இருந்தோம். லோகுதான் எங்கள் அணிக்கு லீடர். அப்போது வந்த நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்காக லோகு ஆவேசமாகக் களத்தில் குதித்தார்.

கொள்கை வெங்காயம் எல்லாம் இருக்கட்டும்... கோனார் கடை கறித் தோசைக்காகவே நாங்கள் ஒரு குரூப் இரவெல்லாம் போஸ்டர் ஒட்டுவோம். ஒரு ஹீரோ அனுபவத்துக்காகவே மைக் கட்டிய ஆட்டோக்களில் தொத்திக்கொண்டு கோஷம் போடுவோம். ''புரட்சி மலரும் பொழுது, விடியும் வறுமையின் இரவு, ஊழலை எரிக்க, ஏழைகள் சிரிக்க...'' என்றெல்லாம் லோகு மைக்கில் கவிதையாக முழங்குவார். ஏரியா ஏரியாவாகப் போய் நோட்டீஸ் போடுவதும் சைக்கிள் பேரணி கிளம்புவதுமாக உச்சி வெயிலில் செம பிஸியாகத் திரிவோம். அங்கங்கே தண்ணீர்ப் பந்தல், மோர்ப் பந்தல் சப்ளைக்கு நிற்போம். வி.ஐ.பி-க்கள் பிரசாரத்துக்கு வந்தால் வண்டிகள் பின்னாலேயே ஓடி, போலீஸ் அடி வாங்குவது தனி ஹீரோயிஸம்.

பிரசாரத்துக்குப் போகும்போது, அங்கங்கே சாராயம் ஆறாக ஓடும். கரை வேட்டிகள் ஏரியாவில் பணப் பட்டுவாடா பின்னி எடுக்கும். ஆளாளுக்கு பிரியாணி யைக் கட்டிவிட்டு வாட்டர் பாக்கெட்டு களை பீய்ச்சிக்கொண்டு கிறுகிறுத்து அலைவார்கள்.

வட்டியும் முதலும் - 10

லோகு சரக்கடிப்பது இல்லை. அதனாலேயே எங்களுக்கும் சரக்கு கட். காசும் வாங்க மாட்டார். ''பசங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தா மட்டும் போதும்ணே...'' என்பார். எங்கள் குரூப்புக்கே டென்ஷன் ஆகும். ''கான்ட்ராக்ட் லேபர்ஸைத் தகுதி அடிப்படையில நிரந்தரமாக்கணும். ஓ.டி. காசை அதிகம் ஆக்கணும்...'' என லோகு, எலெக்ஷனுக்குப் பிறகு நிறைவேற்றிக் கொள்வதற்குப் பெரிய லிஸ்ட்டே வைத்து இருந்தார்.

அந்த எலெக்ஷனில் லோகு வேலை பார்த்த கூட்டணி வேட்பாளர்தான் ஜெயித்தார். நான் அங்கிருந்து வந்து விட்டேன். லோகுவின் கோரிக்கைகள் நிறைவேறினவா என்பது தெரியவே இல்லை!

லோகு இப்போது சிவகாசியில் பிரின்டிங் பிசினஸ் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நான் பத்திரிகை, சினிமா என வந்துவிட்ட பிறகு, தொடர்பேஅற்று விட்டது. சில மாதங்களுக்கு முன்பு எங்கேயோ நம்பர் பிடித்து போன்பண்ணி னார். அவ்வப்போது பேசுவோம். போன மாதம் சென்னைக்கு வந்தபோதுதான் 12 வருடங்களுக்குப் பின்பு அவரை நேரில் பார்த்தேன்.

மதுரையில் சேகுவேரா - ஸ்டாலின் படங்கள் ஒட்டப்பட்ட அறையில் மண் சட்டியில் பீடி தட்டியபடி ஆவேசமாகப் பேசும் லோகுவே இல்லை அவர். பளிச் என்று வெள்ளைச் சட்டை, கறுப்பு பேன்ட், கோல்டு வாட்ச் கட்டி அம்சமாக இருந்தார்.

''அண்ணே... ஆளே மாறிட்டீங்க ளேண்ணே...'' என்றதற்கு சிரித்தபடி, ''முதலாளி ஆகிட்டோம்ல...'' என்றார்.

''என்னண்ணே... அரசியல்லாம் என்னாச்சு..?'' என்றதும் இன்னும் சிரித்தார்.

''தம்பி, அரசியல் பிசினஸ் ஆயிருச் சுன்னு நமக்குப் புரியத்தான் லேட்டா கிருச்சு. இங்க எலெக்ஷன், கலெக்ஷன் எல்லாத்தையும் அம்பானி ஆளுகதானே நடத்துறான்.

சிவகாசிப் பக்கம் கிராமத்துல எல்லாம் கேன் வாட்டர் குடிக்க ஆரம்பிச்சுட் டான். ஊருக்கு ஊர் தண்ணி ஃபேக்டரி வந்துருச்சு. நம்ம கண்ணு முன்னாடி சைக்கிள்ல போனவன்லாம் கவுன்சிலர் அது இதுன்னு ஆகி சுமோல போறான். ரியல் எஸ்டேட் பண்றேன்னு குவாலிஸ்ல போறான். அவனைக் கேள்வி கேக்க அவங்க கச்சித் தலைவருங்க யாருக்கும் தகுதி இல்லை. இவன் லட்சம்னா, அவன் அசால்ட்டா ஆயிரம்... லட்சம்... கோடிங் கிறான்.

ஒண்ணு தெரியுமா ஒனக்கு... வார்டு மெம்பர்ல இருந்து எம்.பி. வரைக்கும் ஒவ்வொருத்தருமா சம்பாதிக்கிறதே... வருஷத்துக்கு ஒரு ஸ்பெக்ட்ரம் காசாம். அதனாலதான், கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. கட்சி தர்ற மாசச் சம்பளத்துல நேர்மையா வாழ்றார்னா... அதை நியூஸ் போட்டு ஆச்சர்யமாக் கொண்டாடுற அளவுக்கு கேவலமா இருக்கு இந்த நாடு. மொத்த இந்தியத் தேர்தல் அரசியலையும் ஒரு வார்த்தைல சொல்லவா...'' என நிறுத்திவிட்டுச் சொன்னார்...

''வாராவாரம் உன் தொடர் முடிவுல நீங்க போடுறீங்களே... அதான்... போட்டு வாங்கலாம்!''

(போட்டு வாங்குவோம்)

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan