அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஐம்பதிலும் அபிநயம் பிடிக்கலாம்!

ஐம்பதிலும் அபிநயம் பிடிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐம்பதிலும் அபிநயம் பிடிக்கலாம்!

நாட்டியம்

‘சின்ன வயசில் எனக்கு பரதநாட்டியம் கத்துக்க ரொம்ப ஆசை. ஆனா, அதுக்கான வாய்ப்பே கிடைக்கல. அதான் இப்போ என் பொண்ணை டான்ஸ் கிளாஸுக்கு அனுப்பிட்டிருக்கேன்...’

- இப்படியான ஆதங்கத்தை, பொருமலை நம்மில் பலரும் நம் உறவு மற்றும் நட்பு வட்டப் பெண்களிடமிருந்து கேட்டிருப்போம்.

ஐம்பதிலும் அபிநயம் பிடிக்கலாம்!

‘ஏக்கத்தை சுமந்துகொண்டே இருக்க வேண்டாம். பெண்கள் எந்த வயதிலும் பரதம் கற்று, மேடை நிகழ்ச்சியிலும் ஆடலாம்’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் மாலா பரத். 17 வருடங்களாக இயங்கிவரும் இவருடைய ‘ஆத்மலயா’ நடனப் பள்ளியில் பயிலும் மாணவிகள் எல்லோருக்குமே வயது 30 ப்ளஸ். இருப்பதிலேயே சீனியர் மோஸ்ட் ஸ்டூடன்ட்டின் வயது, 78. ஆச்சர்யம் விலகாமலே சந்தித்தோம் மாலாவை...

‘‘எங்க அம்மாவுக்குச் சின்ன வயசில் பரதம் கத்துக்கணும்னு ஆசையாம். அது முடியல. அதனால என்னை என்னோட நாலரை வயசிலேயே குத்தாலம் கணேசம் பிள்ளைகிட்ட நடனம் கத்துக்க அனுப்பிச்சாங்க. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதும், படிச்சு முடிச்சு, சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தபோதும்கூட நடனப் பயிற்சியை நான் விடல. இடையிடையே மேடை நிகழ்ச்சி களிலும் பங்கெடுப்பேன்.

என் கூட வேலை பாக்கறவங்க எல்லோரும், ‘எப்படி படிப்பு, வேலைன்னு எல்லா நேரத்திலும் உன்னால டான்ஸை விடாமதொடர முடியுது? எங்களால முடியலயே’னு பெரு மூச்சுவிடுவாங்க. நிறையப் பேர் அப்படித்தான்... கல்யாணம் ஆனாலோ, வேலைக்குப் போனாலோ தன்னோட ஹாபி, ஆர்வம் எல்லாத்தையும் அப்படியே விட்டுடறாங்க. இருந்தாலும் என்கிட்ட ஆச்சர்யமாக் கேட்ட பெண்கள்ல 99 சதவிகிதம் பேருக்கு, நடனத்தை மீண்டும் தொடரணும் என்ற ஆசை இருந்தது. அதுக்கான வாய்ப்புதான் கிடைக்காம இருந்தாங்க.

ஐம்பதிலும் அபிநயம் பிடிக்கலாம்!

‘ஏன் இவங்க நடனப் பயிற்சியைத் தொடர நாம உதவக் கூடாது?’னு தோணுச்சு. அந்த எண்ணம்தான் 1998-ல் ‘ஆத்மலயா’ உருவாக முழுமுதற் காரணம். அது, ஏரோபிக்ஸ் வகுப்புகள் அறிமுகமாகி, பிரபலமாக இருந்த நேரம். அதேபோல ஏன் நடனத்தையும் நடுத்தர வயதுப் பெண்களின் உடலுக்கும் மனசுக்குமான ஒருங்கிணைப்புப் பயிற்சியாகத் தரக் கூடாதுனு, சோதனை முயற்சியா கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்திப் பார்த்தேன். குறிப்பிட்ட ஒரு டாபிக் எடுத்துக்கிட்டு, அதுக்கான டான்ஸ் ஸ்டெப்ஸ், அபிநயங்கள், இறுதியாக தியானம்னு அந்த ரெண்டு மணி நேர ‘ஆத்மலயா’ வொர்க்‌ஷாப்புக்கு  நல்ல வரவேற்பு இருந்தது. கொஞ்ச நாள் அப்படியே தொடர்ந்து, பிறகு அது ரெகுலர் டான்ஸ் கிளாஸாக மாறியது’’ என்று உற்சாகமாகப் பேசுகிறார் மாலா. இவருடைய கணவர் கன்சல்டன்டாக இருக்கிறார். மான்யா, மஹிதா என இரு பெண் குழந்தைகள். இருவருமே நடனம் கற்கிறார்கள்.

ஐம்பதிலும் அபிநயம் பிடிக்கலாம்!

‘‘டான்ஸ் கிளாஸ்னு ஆரம்பிச்ச பிறகு, முதலில் 12 நாள் கோர்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தினேன். அதுக்கு அப்புறம்தான் இப்போது இருக்கும் வாரம் ஒரு நாள் வகுப்பு நடைமுறைக்கு வந்தது. 2004-ல் ஆர்.ஏ.புரத்தில் மட்டும் ரெகுலர் வகுப்புகளை ஆரம்பிச்சேன். முதலில் 14 மாணவிகள் வந்து சேர்ந்தாங்க. அப்போ சோஷியல் மீடியா எல்லாம் அவ்வளவா இல்லாததால, என் ஃப்ரெண்ட்ஸ் மூலமாகக் கேள்விப்பட்டு வந்தவங்கதான் எல்லோரும். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் பரவி, இப்போ சென்னையில் மட்டும் 8 கிளைகள். பெங்களூரிலும் ஹைதராபாத்திலும்கூட கிளைகள் இருக்கு. என்னை மாதிரி புரொஃபஷனல் டான்ஸர்ஸ்தான் ஆசிரியர்களாக இருக்காங்க. எல்லா இடங்களிலும் சேர்த்து மொத்தம் 100 ஸ்டூடன்ட்ஸ் இருப்பாங்க. எல்லோருமே நடுத்தர வயதுப் பெண் கள்தான். டாக்டர், இன்ஜினீயர், சுயதொழில் செய்பவர்கள், தொழிலதிபர்கள், வழக்ககறிஞர்கள்னு பல துறைப் பெண்களில் இருந்து இல்லத்தரசிகள்வரை ஆர்வமாகக் கத்துக்கிறாங்க. 73, 78 வயசில்கூட மாணவிகள் இருக்காங்க’’ என்ற மாலா, தன் வகுப்புகள் பற்றிப் பேசினார்.

‘‘என் மாணவிகளுக்கு பரதத்தை ஆரம்பம் முதல் கற்றுத் தருவதில்லை. அடவு, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம்... இப்படி ரெகுலர் மார்க்கத்தில் சொல்லித் தர்றதில்லை. காரணம், சின்னக் குழந்தைகள்போல 40, 50 வயசு பெண்களை திடீர்னு அரைமண்டி போடச் சொன்னா, கஷ்டப்படுவாங்க. அதனால அடிப்படை ஸ்டெப்ஸ், முத்ராஸ் கற்றுக்கொடுத்துட்டு, அவங்களுக்குப் பிரபலமான சின்னச் சின்னப் பாடல்களுக்கு அபிநயங்கள் சொல்லிக்கொடுப்போம். மேடையில் ஆடும் வாய்ப்பும் கொடுப்போம்.

ஐம்பதிலும் அபிநயம் பிடிக்கலாம்!

நடன அசைவுகளால் அவங்க உடல் நலம் மேம்படுது. டான்ஸ் சீக்வன்ஸ்களை நினைவு வெச்சுக்கிறது மூலமா அவங்க நினைவாற்றல் மேம்படுது. அசைக்காமல் இருந்த தசைகளை அசைச்சு ஆடறதால, உடம்பின் விறைப்புத்தன்மை விலகி நெகிழ்வுத்தன்மை கிடைக்குது. கை, கால், கண் ஒருங்கிணைப்பு இருக்கும். எல்லாத்தையும்விட, குடும்பக் கவலை, ஆபீஸ் பிரச்னைகள் எல்லாம் தாண்டி, தனக்குனு, தன் விருப்பத்துக்குனு அவங்க செலவு பண்ற அந்த ஒரு மணி நேரம், நிச்சயமா அவங்களுக்கான மிகப் பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர்’’ என்றவரிடம், அந்தப் பெண்களின் வீடுகளில் இதற்குக் கிடைக்கும் ஒத்துழைப்பு பற்றிக் கேட்டோம்.

‘‘சென்னை மாதிரியான மெட்ரோ சிட்டியில் இப்போ குடும்பத் தலைவிக்குன்னு சில உரிமைகள் கிடைக்குது. இங்கே வர்ற பெண்களுக்கு எல்லாம் கணவர், குடும்பத்தினர்னு சிறப்பான சப்போர்ட் கிடைக்கிறதை நேரடியா பார்க்கிறேன். எங்க ஆண்டு விழாவில், டான்ஸ் ஆடற பெண்களோட பசங்க, பொண்ணுங்க, பேரக்குழந் தைங்கன்னு ஒரே இளைய தலைமுறைக் கூட்டம்தான் ஆடியன்ஸ். எல்லோரும் தங்க ளோட பாட்டி, அம்மா பரதம் ஆடறதை ஆசையோட பார்த்து, கைதட்டி ஆரவரிச்சு, மொபைலில் போட்டோஸ், வீடியோஸ் எடுத்துத் தள்ளுவாங்க’’ என்றவர்,

‘‘கலைகள் ஆத்மாவைத் தொடுபவைனு சொல்வாங்க. அது 100 பர்சன்ட் நிஜம். அதைப் பெண்கள் ஏன் மிஸ் செய்யணும்? எங்க ‘ஆத்மலயா’ மாணவிகளுக்கு அந்த ஆத்ம சுகத்தை முழுக்க முழுக்க அனுபவிக்கும் வாய்ப்பை எந்த வயசிலும் கொடுக்கிறோம்!’’

- லயித்துச் சொல்கிறார் மாலா பரத்.

பிரேமா நாராயணன் படங்கள்:ஆ.முத்துக்குமார், ர.சதானந்த்