மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 24

கலைடாஸ்கோப் - 24
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 24

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 24

அக்னி

`` `தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா... நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா' - உங்க ஊர்ல ஒரு பொயட் இப்டி எழுதியிருக்காராமே. ஹவ் இட் இஸ் பாசிபிள்?” எனக் கேட்டார் புரொஃபசர் கெல்வின்.

கெல்வினைப் புன்னகையால் பார்த்தான் முகுந்தன்.

எக்ஸோதெர்மிக் விதிகளின்படி எந்தப் பொருளும் ஆக்ஸிடேஷன் ஆகியே தீரும். ஐ மீன் விரல் தீப்பற்றிக்கொள்ளும் அல்லவா... இதற்கான விடை தேடித்தான், கெல்வின் தன் பழைய கெமிஸ்ட்ரி ஆய்வு நண்பர் முகுந்தன் வீட்டில் உட்கார்ந்திருந்தார்.

முகுந்தன் மடியில் இருந்த இரண்டு வயது மகன் சுப்ரு, அந்த வெள்ளைக்கார அங்கிளை விசித்திரமாகப் பார்த்தான்.

``உங்க ஊரில் எல்லாமே எக்ஸென்ட்ரிக்தான். கேட்டால் `ஐம்பூதம்’ என்பீர்கள். `நெருப்பும் ஒரு பூதம். உடலில் நெருப்பு இருக்கு. தூய மனநிலையில் தீயும் சுடாது’ எனக் கதை விடுவீர்கள்” எனச் சிரித்தார் கெல்வின்.

கலைடாஸ்கோப் - 24

மேஜை நடுவில் ஒரு சின்ன தீபம் சுடர்விட்டு, காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

``இந்த ஃப்ளேம்கூட, அந்த ஆயில் ஆக்ஸிஜன் ரிச் காம்பவுண்டாகச் செயல்படுவதால்தான் எரிகிறது. அதாவது இதில் கோக்கனட் ஆயில்தான் ஆக்ஸிடைஸர். இதில் விரலை வைத்தால் ஸ்கின்னுடன் வேதியியல் வினை புரிந்தே தீரும்” என்றார் கெல்வின்.

முகுந்தன் ஏதோ சொல்வதற்காக தீபத்தை நோக்கிக் குனிந்தான்.

குட்டி சுப்ரு தன் பிஞ்சு விரல்களை நீட்டி ஒரு கணம் சுடரைப் பிடித்தான். முகுந்தன் குழந்தையைப் பின்னுக்கு இழுத்தான். கெல்வின் பதறிவிட்டார். குட்டி சுப்ரு தன் பால் பற்கள் தெரிய கெல்வின் மட்டுமே பார்க்கும்படி மெள்ளப் புன்னகைத்தான்... தூய புன்னகை! 

கலைடாஸ்கோப் - 24

அசோக சக்கரம்

பிரிட்டிஷ் அருங்காட்சியகக் கலை வரலாற்று ஆய்வாளர் நீல் மெக்கிரிகர் (Neil MacGregor), `உலகின் வரலாற்றில் 100 முக்கியமான பொருட்கள்’ என ஒரு புத்தகம் எழுதியிருக் கிறார். அதில் ஒன்று, நமது அசோகரின் தூண்கள்.

உண்மையில் நாம் இன்று பார்க்கும் நான்கு சிங்க முகங்கள் (எல்லோரையும்போல நானும் மூன்று முகங்கள் என்றே சின்ன வயதில் நினைத்திருந்தேன்.) கொண்ட தூண் அதில் ஒன்றுதான். ஆனால், அசோகர் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு இடங்களில், இதுபோன்ற தூண்களை நாட்டியிருந்திருக்கிறார். கி.மு 3-ம் நூற்றாண்டு எனச் சொல்கிறார்கள். இப்போது கிட்டத்தட்ட 19 தூண்கள் உள்ளன. அதில் சாரநாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தூணில்தான் நமது தேசியச் சின்னமான நான்முகச் சிங்கங்கள் உள்ளன.

ராம்பூர்வா முதல் நந்தன்கார்க் வரை பல்வேறு தூண்களில் சிங்கங்கள் மட்டும் அல்லாது காளை, யானை போன்ற உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அசோகரின் தூண்களில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தூண், பழைய டெல்லியின் இடிபாடுகளுக்கு இடையில்தான். அது பித்தளையால் செய்யப்பட்டது என முதலில் நினைத்திருக்கிறார் தாமஸ் கொர்ட்யட்யால் என்னும் பிரிட்டிஷ்காரர். பிறகுதான் உலோகம் போன்ற மணற்கற்களால் செய்யப்பட்டு பளபளக்கிறது எனத் தெரிந்தது.

`முதலில் கொடுங்கோலனாக இருந்து, புத்தமதத்துக்கு மாறி அகிம்சையைக் கொண்டாடினார் அசோகர்’ என வரலாற்றில் படித்தோம். ஆனால், அதே புத்தத்தின் பெயரால் கொலைகள் நடப்பது சமகால வரலாறு. அதிகாரத்தின் ரத்தம் கேட்பவர்களுக்கு புத்தன் பற்றிய கவலை இல்லை போலும்!

`கலாய்’ கிராஃபிக்ஸ்

டேனிஷ் எழுத்தாளர் மைக்கேல் மற்றும் கார்ட்டூனிஸ்ட் ஆண்டெர்ஸ் இருவரும் தங்களின் சுவராஸ்யமான இன்ஃபோகிராஃபிக்ஸ்களால் இன்றைய லைஃப்ஸ்டைலைக் கலாய்ப்பதில் வல்லவர்கள். அவர்களுடைய சின்னச்சின்னக் கலாய்களை இணையத்தில் பார்த்தேன். சாம்பிளுக்கு சில இன்ஃபோகிராஃபிக்ஸ்கள் இதோ...  

கலைடாஸ்கோப் - 24

உப்புக் கலைஞன்

ஒரு படைப்பாளி டொக்காகிவிட்டால், `சரக்கு காலி’ எனச் சொல்லி ஆளைக் காலிசெய்வார்கள் நம் ஊரில். `உப்புச்சப்பில்லாத படைப்பு’ என்றும் ஓரம்கட்டுவார்கள். ஆனால், ராப் ஃபெரலை அப்படி யாரும் சொல்லிவிட முடியாது. காரணம், அவர் படைப்புகளை உருவாக்குவதே உப்பினால்தான்.

கலைடாஸ்கோப் - 24

ராப் ஃபெரல் உண்மையில் ஒரு சிகை அலங்காரக் கலைஞர். அமெரிக்காவின் சான் ஆண்டனியோவில் இரண்டு, மூன்று சலூன்களை நடத்துகிறார். `ஹேர் ஆர்ட்’ என தலையிலும் கலையை இறக்குகிறார். தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள், விஷயங்கள் என தங்கள் `தலையெழுத்தை’ ஃபெரல் கைகளில் கொடுத்துவிட்டுக் காத்திருக்கிறார்கள் கஸ்டமர்கள். தன் கார் கண்ணாடியில் தூசி படிந்தால்கூட கவலைப்படாமல், அதையும் கலையாக்கி இணையத்தில் போடுகிறார்.

நாம் எல்லாம் ஹோட்டலுக்குப் போனால் சாப்பாட்டில் உப்பைப் போடுவோம்; ஃபெரல் சாப்பாட்டு மேஜையிலேயே உப்பைக் கொட்டுகிறார். அப்படியே விரல்களால் உப்பின் மீது நடனம்புரிந்து அற்புதமான ஓவியங்களை நொடிகளில் உருவாக்கி, பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் தண்ணீர் குடிக்கவைக்கிறார். பெரும்பாலும் பிரபலங்களின் உருவச் சித்திரங்கள். கேட்டால்... `நான் இவர்களின் ஃபேன்’ என்கிறார். இன்ஸ்டாகிராமில் இவரின் சித்திரங்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்.

இப்படி உப்புப்பரல்கள் முதல் தலைமுடி வரை எது கிடைத்தாலும் அதில் திறமையைக்காட்டும் ஃபெரலின் உருவ ஓவியங்களில் இருக்கும் துல்லியம், அவர் ஓர் அசாத்தியக் கலைஞர் எனக் காட்டுகிறது.

கலைடாஸ்கோப் - 24

பரலையும் கலையாக்கும் ஃபெரல்!

உறி

குட்டி கண்ணன் வெண்ணெய் திருடும் அனிமேஷன் எபிசோடை, யூடியூபில் காட்டித்தான் என் பையனுக்கு உறி என்றால் என்னவென நான் சொன்னேன். உறி என்பதன் அர்த்தம் என்னவென க்ரியா தற்காலத் தமிழ் அகராதியில் தேடினேன். `வீடுகளில் பால், வெண்ணெய் முதலிய பொருட்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும், உத்தரத்தில் இருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்பு வடிவ அமைப்பு’ எனப் போட்டிருக்கிறது. ஆனால், ஏன் `உறி’ என்கிறோம் எனத் தெரியவில்லை.

கலைடாஸ்கோப் - 24

உண்மையில் பால் வெண்ணெய் மட்டும் அல்ல, எங்கள் ஊரில் மீன் போன்ற உணவுகளையும் பாட்டி உறியில்தான் வைத்திருப்பாள். பூனைகள் மற்றும் இரண்டுகால் பூனைகளான குழந்தைகளிடம் இருந்தும் உணவைப் பாதுகாக்க அதுவே வழி. தென்னம் ஓலைகளைப் பின்னி தாத்தா உறி செய்வார். அது தற்காலிகமானது. யூஸ் அண்ட் த்ரோ போல கொஞ்சம் காலத்துக்குத்தான் வரும். ஆனால், கயிற்றால் செய்த உறி கொஞ்சம் புரொஃபஷனல். இரண்டு மூன்று அடுக்கு வட்டில்களைக் கோத்துச்செய்தால், அன்றைக்கு சமைத்த மொத்த பானைகளையும் அதில் தொங்கவிடலாம்.

ஏன் இப்போது உறிகளுக்கான தேவை இல்லாமல் போனது? குழந்தைகள் முன்புபோல திருடித் தின்பது இல்லை. சாப்பாட்டைத் தின்னவைக்கவே பெரும்பாடாக இருக்கிறது. பூனைகளும் திருந்திவிட்டனவா என்ன? இல்லை... முன்பெல்லாம் பெரும்பாலான உழைக்கும் மக்கள் அந்தியில்தான் சமைப்பார்கள். மீதியை உறியில் தொங்கவிட்டு காலையில் பழையதைச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்புவார்கள். இப்போது பகலில் சமைத்து இரவில் காலி செய்துவிட்டுத் தூங்குகிறார்கள் அல்லது ஃப்ரிட்ஜுக்குள் அடைத்துவிடுகிறார்கள். பால், வெண்ணெய் எல்லாம் தேவைக்கு பாக்கெட்டுகளில் வாங்கி ஃப்ரீஸரில் சேமிக்கிறார்கள். `இந்த அரிபரி வாழ்க்கைக்கு எதுக்கு உறி?’ என விட்டுவிட்டார்கள்போல!