மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

எந்தக் கடையில் கிடைக்கும் இரும்புக் கரம்?!

##~##

எஸ்.பரத்குமார், புதுச்சேரி.

அது எப்படி சுவிட்சர்லாந்து நாடு கடிகாரம் கண்டுபிடிப்பதில் முன்னணி வகிக்கிறது? குறிப்பாக ஏதாவது காரணம் உண்டா?

அப்படி அமைந்துவிட்டது! 'குக்கூ’ கடிகாரம் கண்டுபிடித்தவர்களும் அவர்கள்தான். அதற்குத் தமாஷான காரணம் சொல்லப்படுகிறது. சுவிட்சர்லாந்து கண்டுபிடித்த இன்னும் ஒரு பொருள்... உருகிவிட்டது! ஆகவே உருகாத, திடப் பொருளாக ஒன்றைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் இறங்கினார்கள். அதுதான் கடிகாரம். உருகிய பொருள் - சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம்!

ஹெச்.யாஸின், தஞ்சாவூர்.

உலகிலேயே தைரியமாகத் தங்கள் அரசாங் கத்தைக் கிண்டல் செய்பவர்கள் அதிகம் உள்ள நாடு எது?

ஹாய் மதன் கேள்வி - பதில்

சந்தேகம் இல்லாமல், அமெரிக்காதான்!

பில் கிளின்டன் ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு டி.வி. சேனலில் தமாஷாக ஒரு வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவை வெளியிட்டார்கள். அதில் பெண்களுக்கு ஒரு கேள்வி - ''கிளின்டனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்மதமா?'' அமெரிக்காவில் உள்ள 90 சதவிகிதம் பெண்கள் அளித்த பதில்: ''ஐயையோ! மறுபடியுமா?!''

ம.லட்சுமி நரசிம்மன், ஈரோடு.

கதவு மூடியிருந்தாலும் ஆவிகள் சுவர் வழியாக உள்ளே வந்துவிடுமாமே... அப்படி என்றால் ஆவிகளைத் தடுத்து நிறுத்தவே முடியாதா?!

அப்படியே சுவர் வழியாக ஆவிகள் உங்கள் அறைக்குள் வந்தாலும் தரை வழியாகக் கீழ் வீட்டுக்குள் விழுந்துவிடும். கவலைப்பட வேண்டாம். தரை என்பதும் 'படுக்கவைக்கப்பட்ட’ சுவர்தானே?!

நீதி: குறைந்தபட்சம் முதல் மாடியில் குடித்தனம் போகவும்!

மீனா பிரேம்குமார், சேலம்.

கிராமங்களில் நாடியைப் பிடித்துப் பார்த்துக் கர்ப்பமாகிவிட்டதைக் கண்டுபிடிப்பதை விட்டுவிடுவோம்! விஞ்ஞானரீதியில் சிறுநீரைச் சோதித்து 'கர்ப்பம்’ என்று இப்போது டாக்டர்கள் அறிவிக்கிறார்களே... இது எப்போது தொடங்கியது?

ஹாய் மதன் கேள்வி - பதில்

  நல்ல கேள்வி! அதைவிட, அதற்கு முன்பு கர்ப்பம் என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பதுதான் ஆச்சர்யம்! கர்ப்பமான பெண்களின் உடலில் - சிறுநீரில் ஹெச்.சி.ஜி.(hcg) என்கிற ஹார்மோன் தோன்றும். 1931-ல் மாரிஸ் ஃப்ரைடு மேன் என்கிற விஞ்ஞானி, சிறுநீரைப் பெண் முயலின்  ஓவரியில் செலுத்தினால் அங்கே சில மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டுபிடித்தார். அதாவது, முயலுக்குள் சிறுநீரைச் செலுத்தி 48 மணி நேரம் கழித்து முயலைக் கொன்று 'ஓவரி’யைச் சோதித்து, குறிப்பிட்ட பெண் கர்ப்பமாகி இருக்கிறாள் என்று கண்டுபிடித்தார்கள். இப்போதும் சிறுநீரில் உள்ள ஹெச்.சி.ஜி-யைத்தான் சோதிக்கிறார்கள். ஆனால், லேபில்! 1976-ல் வீட்டில் நீங்களே யூரினை செக் செய்துகொள்ளும் 'ப்ரெக்னென்ஸி டெஸ்ட்’ வந்துவிட்டது.  முயல்களின் தியாகமும் முடிவுக்கு வந்தது. பாவம், ஒரு காலத்தில் யாரேனும் உடலுறவுகொள்வதைப் பார்த்தாலே முயல்கள்நடுங்கி இருக்கும்?!

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

காங்கிரஸில் இணைந்த நடிகர் சிரஞ்சீவி, 'ராகுல் பிரதமராக வர வேண்டும்' என்று தன் ஆசையை வெளிப்படுத்தி உள்ளாரே?

காங்கிரஸில் சேர்ந்துவிட்டால், 'ராகுல் பிரதமராக வேண்டும்’ என்று சொல்லியே தீர வேண்டும் - 'ராகுல் பிரதமராக வேண்டும்’ என்று நீங்கள் சொன்னால், காங்கிரஸில் சேரப்போகிறீர்கள் என்று அர்த்தம். அது உங்களுடைய பாஸ்போர்ட்!

ச.புவனேந்திரன், தேனி.

'தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்’ என்று முன்னாள் மத்திய உள்துறை மந்திரியான சிவராஜ் பாட்டீலும் இந்நாள் உள்துறை மந்திரி ப.சிதம்பரமும் கூறிய அந்த இரும்புக்கரம் எந்தக் கடையில் கிடைக்கும் என்று கூற முடியுமா?

  கடையில் கிடைக்காது. சுதந்திரம் கிடைத்த சமயம் சர்தார் வல்லபாய் படேல் என்று ஓர் உள்துறை அமைச்சர் இருந்தார். அவர் இறந்தபோது இரும்புக் கரத்தையும் 'கையோடு’ கொண்டுபோய்விட்டார். இப்போது நம்மிடம் இருப்பது 'தகரக் கரம்’தான்!

பொன்விழி, அன்னூர்

'பத்துக் கட்டளைகள்’ ஹாலிவுட் படம் பைபிளின் தழுவலா?

ஹாய் மதன் கேள்வி - பதில்

தழுவல் இல்லை. பைபிளில் (பழைய ஏற்பாடு) அந்தக் கதை (The Ten Commandments) வருகிறது. 'ஸ்பார்ட்டகஸ்’ படமும் பைபிளில் இருந்து எடுக்கப்பட்டதுதான். பைபிளில் வரும் கதைகளை வைத்து நிறைய ஹாலிவுட் படங்கள் வந்துள்ளன. பெரிய லிஸ்ட் அது!