
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

`` `ஆதியிலே வார்த்தை இருந்தது’ என பைபிளில் யோவான் அதிகாரம் ஒன்று, முதல் வசனம் ஆரம்பிக்கிறது. விழிப்பு, கனவு, தூக்கம் இவற்றைத் தாண்டிய நான்காவது நிலையாக அந்த ஒலியை மாண்டூக்கிய உபநிஷத் கூறுகிறது’’ என்றான் அக்கவுஸ்ட்டிக் இன்ஜினீயர் அனந்தன், ஒலி ஆய்வாளன். குழுவினர், அவனை வைத்த காது வாங்காமல் கேட்டனர்.
``நமது அறிவியல் மொழியில் சொன்னால், பெருவெடிப்புக்கு முந்தைய நிலை. அந்த வார்த்தையை, அதாவது அந்த ஒலியைப் பதிவுபண்ணவே இந்த முயற்சி. காலத்தில் பின்னோக்கி நான் அனுப்பிய `நானோ சோனிக் ரிக்கார்டர்’ தாங்கிய டைம் மெஷின் அதைப் பதிவுசெய்து நமக்கு இப்போது அனுப்பும்’’ என்றான்.
விண்கலம் அனுப்பும் ரேடியோ வேவ்ஸை, எலெக்ட்ரான்களின் உதவியுடன் சவுண்டு வேவ்ஸாக மாற்றி, ஒலிபரப்பும் நியோனிய ஸ்பீக்கர்கள் தயாராக இருந்தன.
``இந்த நீல நிற எல்.இ.டி லைட் ஒளிரும்போது நாம் அந்த ஆதி ஒலியை ஐந்து நொடிகளில் கேட்கப்போகிறோம்’’ என்றபடி தயார் ஆனான். எல்லோரும் பரபரப்பாக காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டனர்.
``5, 4, 3, 2, 1.’’
லைட் ஒளிரவே இல்லை. ``ஷிட்... வாட் ஹேப்பெண்டு?’’ எனக் கத்தினான். `என்ன ஆச்சு இந்த இயந்திரத்துக்கு?’ மனம் கொந்தளித்தது. `இத்தனை நாள் ஆராய்ச்சி எல்லாம் வீணா?’ அப்படியே நாற்காலியில் சாய்ந்தான்.
குழுவினர் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
`ஏன் இந்த அவசரம்..? ஈஸி ஈஸி’ என உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான். மனதில் கொஞ்சம் கொஞ்சமாக அலை அடங்குவதை, மூச்சு நிதானமாவதை அறிந்தான்.
மெள்ள காதுக்குள் அதை ஆழமாக உணர்ந்தான். அமைதி, பேரமைதி.

நீல நிற லைட் ஒளிர்வதை அப்போதுதான் கவனித்தான்!

பழைய சினிமாக்களில், பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது எம்ப்ராய்டரி போட்டு ஸ்வெட்டர் தைப்பதை அல்லது கம்பளி நூலில் சாக்ஸ் கோப்பதைக் காட்டுவார்கள். மேற்கத்திய சினிமாக்களில் இருந்து இறக்குமதியானவை இது மாதிரியான காட்சிகள் என நினைக்கிறேன். எங்கள் ஊரில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் அக்காக்கள் (மேரி அல்லது எலிசபெத்) எம்ப்ராய்டரியில் பூ வேலைப்பாடுகள் செய்வதையும், பிளாஸ்டிக் வொயரில் கைவினைப் பொருட்கள் பின்னுவதையும் சிறுவயதில் பார்த்திருக் கிறேன். பள்ளி நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது இது மாதிரி கர்ட்டன்கள், மிதியடிகள் என வசீகரமாக இருக்கும்.
`எம்ப்ராய்டரி என்பது, குடும்பத் தலைவிகளின் கலை’ என நினைத்தேன். அதிகபட்சம் ரோஜா பூ,

பட்டாம்பூச்சி, ஒரு ஜோடிக் குருவிகள். ஆனால், மிஷெல் கிங்டம் அந்த நினைப்பில் தன் ஊசியால் மெல்லிசாக ஒரு குத்து குத்துகிறார். லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த மிஷெலின் எம்ப்ராய்டரி ஓவியங்கள், கிளாஸிக் ஓவியங்களுக்குச் சற்றும் சளைக்காதவை என்பது பார்க்கும்போது தெரிகிறது. மோனே (Claude monet) வான் கா (Vincent van gogh) போன்ற ஓவியர்களின் இம்ப்ரெஸனிச பாணி ஓவியங்களில் இருக்கும் ஸ்ட்ரோக்குகளை எம்ப்ராய்டரியில் கொண்டுவந்துவிடுகிறார்.
எம்ப்ராய்டரி பொறுமையும் அதீத நுணுக்கமும் தேவைப்படும் கலை. அதனால்தான் அது பெண்களின் கலையாக இருக்கிறதா? மிஷெலின் ஓவியங்களை அவர் தன் மனதின் நிலக்காட்சி எனச் சொல்கிறார். அப்படி என்றால்..? ஒரு நேர்காணலில் அவரே விளக்குகிறார்... `எம்ப்ராய்டரி என்பது என்னைப் பொறுத்தவரை மிகவும் அந்தரங்கமான கலை வடிவம். அவை எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ஞாபகங்கள்; எங்கள் குடும்பத்தின் பழைய நினைவுகள் மற்றும் எனது கனவுகள். சில ஓவியங்களை எனது பாட்டியின் பழைய குடும்பப் புகைப்படத்தில் இருந்து உருவாக்கினேன். எனது படைப்புகளை, ரொம்ப நாட்களுக்கு வெளி உலகத்துக்குக் காட்டாமல்தான் வைத்திருந்தேன். ஆனால், பெண்களின் கனவு உலகை அவர் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் அது ஒட்டுமொத்தப் பெண்களின் மனதின் நிலக் காட்சியாகிவிடுகிறது. அதுதான் கலையின் யுனிவெர்சல் தன்மை.'
மிஷெலின் எம்ப்ராய்டரி ஓவியங்களைப் பார்த்து தயங்காமல் சொல்வேன்... `பின்னியிருக்கிறார்’.

எங்கள் அம்மாவின் சொந்தத்தில் ஒரு பாட்டி, நிழல் விழும் நீளத்தை வைத்து நேரத்தைச் சொல்வாள். `ஒரு மணி முப்பத்தைந்து நிமிடம்’ எனத் துல்லியமாக எல்லாம் சொல்ல மாட்டாள். குத்துமதிப்புதான். கூடத்தில், சுவரில் கடிகாரம் இருக்கும். அதில் மணி பார்க்க பாட்டிக்கு தலையைச் சுற்றும். `சின்ன முள், பெரிய முள், நொடி முள் என இத்தனை குழப்பம் எதுக்கு? ஒரே நிழல்... மதியமாச்சு’ என்பாள். அவ்வளவுதான். `அரை மணி, முக்கால் மணி என நேரத்தைத் துண்டு துண்டாக்கி என்னதான் பண்ணப்போகிறார்கள்?’ என நினைத்திருப்பாள்போல. நான் சொல்வது 20 வருடங்களுக்கு முன்னர்.
ஆனால், 2,000 வருடங்களுக்கு முன்னால் நேரம் அறியும் கருவியைக் கண்டுபிடித்துவிட்டார்கள். கி.மு 1500-களில் எகிப்தில் சண்டயல் (Sundial) உபகரணத்தை வைத்து சூரிய ஒளியில் நேரம் பார்த்தார்கள். மணல் கடிகாரம், நீர்த்துளியை வைத்துக் கணக்கிடுவது என காலத்தை ஓட்டியிருக்கிறார்கள். நவீன கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனின் பீட்டர் ஹென்லின். 16-ம் நூற்றாண்டு... பாக்கெட் கடிகாரங்கள். முதலாம் உலகப்போர் காலம் வரைக்கும் ஆண்கள் பாக்கெட்டில்தான் செயின் கட்டிய கடிகாரங்களை வைத்துக்கொண்டு திரிந்திருக்கிறார்கள். மணிக்கட்டில் வாட்ச் கட்ட ஆரம்பித்தவர்கள் பெண்கள்தானாம். பிறகுதான் ஆண்கள் அதை காப்பி அடித்திருக்கிறார்கள்.
நம் ஆட்கள் அந்தக் காலத்தில் நாழிகை வட்டில், குறுநீர்க்கன்னல் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். செந்தமிழன் இயக்கத்தில் வெளிவந்த `பாலை’ படத்தில் நீர்த்துளிகளைக்கொண்டு நேரம் அறியும் உபகரணத்தைப் பார்த்திருக்கிறேன்.
`பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்…’ என ஆரம்பிக்கும் ஒரு முல்லைப் பாட்டு `…குறுநீர்க்கன்னல் இணைத்தென்று இசைப்ப’ என முடிகிறது. நாழிகைக் கணக்கர்கள், குறுநீர்க்கன்னலை வைத்து நேரம் அறிந்து ஆள்பவரை வாழ்த்திப் பாடுவார்கள் என அறியமுடிகிறது. குறுநீர்க்கன்னலில் இருந்து நவீன கடிகாரங்களுக்கு மாறிவிட்டோம். ஆனால், நேரம் கெட்ட நேரத்தில் ஆள்பவரை வாழ்த்திப் பாடுவதை மட்டும் இன்னும் விடவில்லை!

இன்று, ஊரில் பெரும்பாலான வீடுகளில் காஸ் அடுப்பு இருக்கிறது. திருமணத்துக்கு மறக்காமல் ஒருவர் இண்டக்ஷன் ஸ்டவ் கிஃப்ட்டாகக் கொடுத்துவிடுகிறார். எலெக்ட்ரானிக் நம்பர்களை அழுத்தி, பாத்திரம் சூடாகாமல் பால் காய்ச்சுகிறார்கள். மண் அடுப்புகள் எல்லாம் தொல்பொருள் துறை வஸ்துவாகி மூலையில் எங்கோ கிடக்கின்றன.
அப்போது எல்லாம் மண் அடுப்புகளை சமையலறை கட்டும்போதே சேர்த்துக் கட்டிவிடுவார்கள். தோட்டத்துப் பக்கம் ஒரு ரவுண்டு சுற்றிவந்தால் சுள்ளிகள், விறகுகள் பொறுக்கிவிடலாம். மண் அடுப்புகளில் கூடவே, `மாற்றான்’ சூர்யா மாதிரி ஒட்டிக்கொண்டு கொடி அடுப்பு ஒன்று இருக்கும். மெயின் அடுப்பில் நெருப்பு மூட்டி சாதம் வைக்கும்போதே, அதன் பக்கவாட்டு தீ ஜுவாலையை கொடி அடுப்பில் செலுத்தி, குழம்பும் வைக்கும் டெக்னிக் அம்மாக்களுக்குத் தெரிந்திருந்தது.
எங்கள் குமரி மாவட்டத்தில் `மரப்பொடி அடுப்பு’ என்று ஒன்று இருக்கும். பிற ஊர்களில் உண்டா எனத் தெரியாது. மரம் அறுக்கும் மண்டிகளில் சென்று, மரப்பொடியை வாங்கிவருவோம். மரப்பொடி அடுப்பு வட்டமாக இருக்கும். கீழே ஒரு துவாரம். அடுப்பின் நடுவில் ஏதேனும் ஒரு பாட்டிலை வைத்து சுற்றி மரப்பொடியை அடைத்துவிட்டு பாட்டிலை உருவினால், நடுவில் குழி மாதிரி வெற்றிடம் உருவாகும். துவாரத்தின் வழியாக ஒரே ஒரு விறகைச் செருகிப் பற்றவைத்தால் போதும், மரப்பொடி கனன்று எரியும்.
`மண் அடுப்பு சமையலுக்கு, தனிச் சுவை உண்டு' என்பது, நினைவில் ருசி உள்ளவர்களின் சொல். மண் அடுப்புக்கு மவுசு இருப்பதை சில ரெஸ்டாரான்ட் விளம்பரங்களில் அறிகிறோம். இப்போதும் சில ஊர்களில் விறகு அடுப்பில் சமைப்பவர்கள் உண்டு. `விறகு அடுப்பில் சமைப்பதால்தான் குளோபல் வார்மிங் வருகிறது’ என லண்டனிலோ பாரிஸிலோ பர்கர் சாப்பிட்டபடி தீர்மானம் இயற்றாதவரை கவலை இல்லை.

`இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்’ என்பார்கள். ஆம்னிடைரக்ஷனல் கேமராவுக்கு (Omnidirectional camera) உடல் எங்கும் ஒன்பது கண்கள். `360 டிகிரியில் பார்க்கும் இம்மெர்ஸிவ் வீடியோ’ எனச் சொல்கிறார்கள். அதை இந்த மாதிரி கேமராக்களில்தான் எடுக்கிறார்கள். `பனோரமிக் வியூ’ என்ற ஒன்று, உங்கள் மொபைல்போனில் இருக்கும். 180 டிகிரியில் படம் எடுக்கலாம். அதாவது அரைவட்டம். ஆனால், இந்த இம்மெர்ஸிவ் வீடியோ 360 டிகிரி சுழற்றிப் பார்க்கலாம்... தலைக்கு மேல் விரியும் வானம் முதல் தரையில் நாலா பக்கம் சுற்றி நடப்பது வரை. ஸ்பாட்டில் நீங்களே இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.
வழக்கமாக போட்டோகிராஃபியில் `ஃபீல்ட் ஆஃப் வியூ’ என்பார்கள். அதாவது, மனிதக் கண்களின் ஃபீல்டு ஆஃப் வியூ கிடைமட்டமாக 180 டிகிரி செங்குத்தாக 135 டிகிரி. `கிட்டத்தட்ட’ என்பதையும் சேர்த்துக்கொள்ளவும்.
சில பறவைகளுக்கு 360 டிகிரி என்கிறார்கள். இந்த இம்மெர்ஸிவ் வீடியோக்கள் 360 டிகிரி ஃபீல்டு ஆஃப் வியூ. இருந்த இடத்தில் இருந்தபடி ஒரு வெர்ச்சுவல் டூர் போகலாம். விகடனின் யூடியூப் சேனலில், சென்னை வெள்ளம் பாதித்த பகுதிகளை இப்படி 360 டிகிரியில் பார்க்கிற மாதிரி வீடியோ போட்டிருக்கிறார்கள். வெள்ளத்தின் நினைவுகளை மக்கள் மறந்தாலும் இணையம் மறக்காது. இணையத்தின் மகா மூளையில் பைனரிகளாக சாஸ்வதம் பெற்றுவிட்டது!