அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

"சாதிக்கத் தேவை... சகிப்புத்தன்மை!"

"சாதிக்கத் தேவை... சகிப்புத்தன்மை!"
பிரீமியம் ஸ்டோரி
News
"சாதிக்கத் தேவை... சகிப்புத்தன்மை!"

சக்சஸ் ஸ்டோரி

பொதுவாக ஒரு தொழிலில் ஜெயிக்க, பலரும் தங்கள் அனுபவத்தில் பல சூத்திரங்கள் சொல்வதுண்டு. சென்னை, தி.நகர் ‘அர்ச்சனா ஸ்வீட்ஸ் அண்ட் ரெஸ்டாரன்ட்’டின் நிர்வாகி சந்திரவதனா ராஜு சொல்வதோ, சகிப்புத்தன்மைமையும், பொறுமையையும்! கிட்டத்தட்ட 30 வருடங்களாகத் தன் ஸ்வீட் ஸ்டால் பிசினஸை எடுத்துச் செலுத்திவரும் வெற்றிப் பயணத்தின் மைல்கல்களை நம்மிடம் பகிர்கிறார், சந்திரவதனா.

"சாதிக்கத் தேவை... சகிப்புத்தன்மை!"

‘‘இன்னிக்கு கல்லூரியில் படிக்கும்போதே இளைஞர்கள் தங்களோட வாழ்க்கை பற்றின தெளிவான திட்டமிடலை உருவாக்கிக்கிறாங்க. ஆனா, எங்கப்பா ராஜு சொந்தமா தொழிலை ஆரம்பிச்சதே தன்னோட 51-வது வயதில்தான். அதுவரை பார்ட்னர்ஷிப்லயே தன்னோட உழைப்பை எல்லாம் கொடுத்துட்டார். அதன் பிறகு வெளிச்சம் தேடி, ‘அர்ச்சனா ஸ்வீட்ஸ்’ஸை ஆரம்பிச்சார். அப்போ அவரோட ஆரோக்கியம், பொருளாதாரம்னு எதுவும் அவருக்கு ஒத்துழைக்கலை. இன்னொரு பக்கம், நானும், என் தங்கையும் கல்லூரி முடித்து திருமண வயதில் நின்றோம். ‘இப்படிக் கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்களை வெச்சுட்டு, இந்த வயசுல எதுக்கு ரிஸ்க்?’னு தன்னை நோகடிச்ச விமர்சனங்களை எல்லாம் சகிச்சுட்டு, தன் பிசினஸில் முழு உழைப்பையும் நேரத்தையும் கொட்டினார்.

முதல் ஆறு மாசம், எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லை. ஆனாலும் தளராம, தன் கடை உணவுப் பதார்த்தங்களின் தரத்தில் நம்பிக்கை வைத்துக் காத்திருந்தார். ஓரளவு தொழில் ஸ்திரமானப்போ, அப்பாவுக்கு உடல் வலுவிழந்தது. கடையை ஆரம்பிச்ச மூணே வருஷத்துல உடல்நிலைக் குறைவால் இறந்துட்டார். அந்தக் கடைசி தருணத்தில் அவர் எங்கிட்ட சொன்னது இதுதான்... ‘லாபத்துக்காக எப்பவும் தரத்தில் சமரசம் செய்யக்கூடாது. தொழிலில் நாணயம்தான் முக்கியம்’. இன்னிக்கு வரைக்கும் அதை வேதவாக்கா எடுத்துட்டு வெற்றிகரமா எங்க ஸ்வீட் ஸ்டாலை நடத்தி வர்றோம்’’ என்ற சந்திரவதனா, அப்பாவின் தொழில் அவருக்கும் அவர் கணவருக்கும் கைமாறியதையும், அதில் அவர்களுக்குக் கைவந்ததையும் பற்றித் தொடர்ந்து பகிர்ந்தார்.

‘‘என் அப்பா கடையை ஆரம்பிச்ச வருஷமே எனக்குத் திருமணம் முடித்தார். என் கணவர் பெயரும் ராஜுதான். அப்பாவின் மறைவுக்குப் பின் கடை பொறுப்பு என் கைக்கு வந்தது. அப்போ எனக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருந்த நேரம். அவங்களை பார்த்துக்கவே நேரம் போதாது. ஆனாலும், 50 வயசுக்கு அப்புறமும் என் அப்பா நம்பிக்கையோட ஆரம்பிச்ச இந்தத் தொழிலை, அப்படியேவிடக் கூடாது என்ற வைராக்கியத்தில், தொழில் பொறுப்பை ஏற்றோம். அப்பாவின் தொழில் அனுபவங்களை எல்லாம் எங்களுடனும் அவர் பகிர்ந்திருந்ததால, ஆரம்பகாலச் சறுக்கல்களை எதிர்கொள்ள முடிந்தது.

‘எந்தப் பிரச்னையும் இல்ல, நல்லபடியா போகுது’ என்ற நிலைக்கு வந்ததும், அந்தப் புள்ளியிலேயே நிக்காம, அடுத்து என்னனு யோசிச்சேன். ஸ்வீட் ஸ்டால் கூடவே, ரெஸ்டாரன்ட்டும் ஆரம்பிச்சேன். அடுத்ததா, இந்தக் கடை தவிர, வெளியிடங்களில் எங்கள் கேன்டீன் நிறுவும் முயற்சிகளை எடுத்தேன். அதன்படி, சென்னை, போரூர் ராமசந்திரா மெடிக்கல் காலேஜில் 20,000 ஸ்கொயர் ஃபீட்டில் கேன்டீனை ஆரம்பிச்சோம். அதற்குப் பிறகு இன்னும் சில இன்ஜினீயரிங் மற்றும் மெடிக்கல் காலேஜ்களிலும் கேன்டீன் ஆரம்பித்து நடத்திவர்றோம். இப்போ எங்களுக்கு மொத்தம் 10 கிளைகள் இருக்கு.

எங்கப்பா இந்தக் கடையை விட்டுட்டுப் போனப்போ, எங்ககிட்ட 60, 70 பேர் வேலை பார்த்தாங்க. தொழில்ல ரொம்ப அடிபடும்போது, ‘நம்மளை நம்பி இருக்கிற இவங்களுக்கு என்ன வழி?’னு எல்லாம் மனசு தவிச்சிருக்கு. ஆனா, இப்போ 700 ஊழியர்களோட பிசினஸை வெற்றிப் பாதையில் செலுத்திட்டு இருப்பதை நினைச்சா, ரொம்ப சந்தோஷமாவும், நம்பிக்கையாவும் இருக்கு. சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்த ஒரு பெண்மணி எங்க கடைக்கு வந்திருந்தாங்க. ‘20 வருஷத்துக்கு முன்னாடி நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ இங்கே ரசமலாய், பாசந்தி எல்லாம் சாப்பிட்டிருக்கேன். அதே டேஸ்ட் இப்பவும் இருக்கு’னு பாராட்டிட்டு வாங்கிட்டுப் போனாங்க. எங்கப்பா சொன்ன வார்த்தையைக் காப்பாத்திட்டோம் என்பதை இப்படி பல வாடிக்கையாளர்களோட பாராட்டுல தான் உறுதிபடுத்திக்கிறோம்’’ என்பவரின் ஸ்வீட் ஸ்டாலில் காஜூ கத்லி, காஜூ கசாட்டா, காஜூ பிஸ்தா ரோல், மைசூர் பாக், பாதுஷா, பாதாம் அல்வா, மில்க் ஸ்வீட்ஸ், சந்திரகலா, மிக்ஸர், கார்ன் ஃபிளேக் மிக்ஸர், ஆந்திர முறுக்கு, சால்ட் பெப்பர் கேஷ்யூநட் போன்றவை மிகப் பிரபலம்.

‘‘இப்போ என் ரெட்டைப் பெண்கள் அர்ச்சனா, ஐஸ்வர்யாவில் ஐஸ்வர்யாவுக்குத் திருமணம் முடிச்சுட்டேன். என் மகள்கள் கைக்குழந்தைகளா இருந்தப்போ நான் ஏத்துக்கிட்ட இந்தப் பொறுப்பில், என் பேரக்குழந்தைகளைக் கொஞ்சுற வயசுவரைக்கும் நீந்தி வந்திருக்கேன். இந்தப் பயணத்தில் நான் நிறைய சம்பாதிச்சதும், பயன்படுத்தியதும் சகிப்புத்தன்மையைதான். குறிப்பா, சுயதொழிலில் இறங்கும் பெண்களுக்கு இது மிக அவசியம். எல்லோரும் முதல் போடலாம், எல்லோரும் தொழிலை ஆரம்பிக்கலாம், எல்லோரும் உழைக்கலாம். ஆனா, அந்தப் போட்டியில் இந்த உலகம் நமக்குத் தர்ற அவமானங்கள், புறக்கணிப்புகள், நிராகரிப்புகள், ஏமாற்றங்கள்னு எல்லாத்தையும் சகிப்புத்தன்மையோட கடந்தாதான், வெற்றியின் வாசலை அடையலாம் என்பது நான் அனுபவத்தில் கத்துக்கிட்ட பாடம். தொழில் அறிவு மட்டும் பத்தாது, நம்ம குணத்திலும் சில மாற்றங்களை கொண்டுவருவது அவசியம்’’ என்ற சந்திரவதனா, தன் ரெஸ்டாரன்டில் டெலிவரிக்காகக் காத்திருந்த ஒருவரின் முகம் மாறுவதைக் கண்டு, நம்மிடம் விடைபெற்று நகர்கிறார்... வேலையை விரைவுபடுத்த!

வே.கிருஷ்ணவேணி, படங்கள்: பா.காளிமுத்து