அவள் 16
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

``பரிசுப்பொருள் வாங்க கடைகளைத் தேடுறதே இல்லை!''

``பரிசுப்பொருள் வாங்க  கடைகளைத் தேடுறதே இல்லை!''
பிரீமியம் ஸ்டோரி
News
``பரிசுப்பொருள் வாங்க கடைகளைத் தேடுறதே இல்லை!''

கிராஃப்ட்

‘‘இந்த உலகத்தில் வீணான பொருள் என எதுவும் இல்லை’’ என்று ஆரம்பிக்கிறார், மெகா பரிசுப் போட்டிகளில், கிராஃப்ட் போட்டியின் வெற்றியாளர், திருநெல்வேலி மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வாகீஸ்வரி. கைவினைக் கலைஞரான இவர், ஒவ்வொரு வருடமும் தனது கலைப்பொருட்களைக்கொண்டு கண்காட்சி நடத்தும் அளவுக்கு இதில் தீவிர ஆர்வமும் ஈடுபாடும்கொண்டவர்.

‘‘கடந்த 20 வருஷமா கிராஃப்ட் என் தோழி. `வீட்டில் உபயோகமற்ற பொருட்களை தூக்கி எறியாமல், ஆர்ட் ஃப்ரம் வேஸ்ட் மாதிரி செய்யலாமே’னு யோசிச்சு ஆரம்பிச்ச பயணம். ஆனாலும் எல்லாம் ஒரே நாளில் கைவந்ததில்லை. முறையான பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். பிறகு பொருட்களை வடிவமைக்க ஆரம்பிச்சேன். இப்போ எங்க உறவினர்கள், நண்பர்களின் பிறந்தநாள், திருமணநாள், அவங்க வீட்டு சுபநிகழ்ச்சிகள்னு எதுக்கும் நான் பரிசுப்பொருள் வாங்க கடைகளைத் தேடுறதே இல்லை. நானே உருவாக்கிடுவேன். அப்போ அவங்களுக்குக் கிடைக்கும் ஆச்சர்யத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இருக்காது.

``பரிசுப்பொருள் வாங்க  கடைகளைத் தேடுறதே இல்லை!''

என் மகன் ஆதவன், அமெரிக்காவில் இருக்கான். அவனுக்குப் பிறந்தநாள் உள்ளிட்ட விசேஷ தினங்களுக்கு நான் பிரத்யேகமா செய்து அனுப்பும் வாழ்த்து அட்டைகளைப் பார்க்கிற அவன் நண்பர்கள் எல்லாம், வியந்து பாராட்டுறதை பெருமைபொங்கச் சொல்வான். என் மகள் அருணாவும், அவளோட ஃப்ரெண்ட்ஸ் யாருக்காச்சும் வாழ்த்துத் தெரிவிக்க எங்கிட்டதான் ஹேண்ட்மேட் கார்டுகள் செய்யச்சொல்லி வாங்கிக்கொடுப்பா. முன்பு நாங்க சென்னையில் இருந்தவரைக்கும் வருடந்தோறும் கண்காட்சி நடத்தினதோட, சிஷ்யா பள்ளியிலும், என் வீட்டிலும் கைவினைப் பயிற்சி வகுப்புகள் எடுத்தேன். கணவரின் வேலை காரணமா நெல்லைக்கு வந்தபின்னும் சிலர் என்னைத் தேடிவந்து பயிற்சி எடுத்துக்கிறது மகிழ்ச்சியா இருக்கு’’ என்று படபடவெனப் பேசும் வாகீஸ்வரி, பாரம்பர்யமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆம்... மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் மருமகள் இவர்.

‘‘சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கணும் என்பதை வலியுறுத்துறதே என்னோட முதல் நோக்கம். அதனாலதான் எளிதில் கிடைக்கக்கூடிய பனை ஓலை, தேங்காய் சிரட்டை, பாதாம் தோல், காகிதங்கள்னு என்னோட படைப்புகளுக்குப் பயன்படுத்துறேன். எனக்கு பெயின்ட்டிங்கும் தெரியும். எங்க வீட்டில் நிறையப் படங்களை ஃபிரேம் போட்டு வைத்திருந்தாலும், இரவையும் பகலையும் மையமா வைத்து நான் வரைந்த ஓவியம் என் கணவருக்கு ரொம்பப் பிடிக்கும்’’ என்றவர்,

‘‘போட்டிக்கும், பரிசுக்கும், அவள் விகடனுக்கும் நன்றி!’’ என்றார் சந்தோஷத்துடன்! 

ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்