Published:Updated:

சிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது! கதை சொல்லிகளின் கதை பாகம் 10

சிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது! கதை சொல்லிகளின் கதை பாகம் 10

சிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது! கதை சொல்லிகளின் கதை பாகம் 10

Published:Updated:

சிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது! கதை சொல்லிகளின் கதை பாகம் 10

சிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது! கதை சொல்லிகளின் கதை பாகம் 10

சிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது! கதை சொல்லிகளின் கதை பாகம் 10

பிரசாரக் கதைகள் எழுதியவர் எனச் சொல்லி, நவீன இலக்கியவாதிகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் ஒரு சிறுகதை எழுத்தாளர் அண்ணா. அறிஞர், பேரறிஞர் என்கிற அடைமொழிகளுடன் அழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சரான அண்ணா, நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். மிக அதிகமாக `திராவிட நாடு' இதழிலும், சில கதைகளைப் பெரியாரின் `குடி அரசு' இதழிலும் எழுதியுள்ளார். அவரது முதல் சிறுகதையான `கொக்கரக்கோ’, 1934-ம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் வெளியானது. 70-களில் முதன்முதலாக நான் வாசித்தது அவருடைய `கருப்பண்ணசாமி யோசிக்கிறார்' என்ற கதையைத்தான்.

`மணி ஒலித்தது.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

கருப்பண்ணசாமி அலறியபடி உள்ளே ஓடலானார். ஒளிந்துகொள்ள இடம் தேடினார்.

`களுக்’கென ஒரு சிரிப்பொலி கேட்டது. கருப்பண்ணசாமி கோபம்கொண்டு ``வேதனைப்படுகிறேன் நான். இந்த வேளையில் கேலி வேறு செய்கிறாயா?” என்று கேட்டார் சிரித்தபடி, தன் எதிரே வந்த தேவியைப் பார்த்து.

``கருப்பண்ணா, என்ன கலக்கம்? ஏன் ஓடுகிறாய்?” என்று தேவி கேட்க, கருப்பண்ணசாமி ``காதிலே விழவில்லையா, மணி சத்தம்” என்று கேட்டார்.

``விழுந்தது. அது கேட்டு அச்சம் ஏன் வர வேண்டும்? ஆச்சர்யமாக இருக்கிறதே!” என்று தேவி கேட்டார்.

``உனக்கு ஒன்றும் புரிவதில்லை. யாரோ பக்தர்களல்லவா வருகிறார்கள்” என்று பயத்துடன் பேசினார் கருப்பண்ணர்.

``பைத்தியமே! பக்தர்கள் வருகிறார்கள் என்றால், பயம் ஏன் வரவேண்டும்? உன்னைத் தொழ, சூடம் கொளுத்த, சோடசோபசாரம் செய்ய, படையல் போட வருகிறார்கள் பக்தர்கள். இதற்கு ஏன் பயப்பட வேண்டும்? ஓஹோ! இவ்வளவு பூஜையை ஏற்றுக்கொண்டும் எங்கள் கஷ்டத்தைப் போக்காமல் இருக்கிறாயே கருப்பண்ணசாமி! என்று அந்தப் பக்தர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்ற பயமா?” என்றாள் தேவி.

இப்படி அமர்க்களமாக ஆரம்பிக்கும் அந்தக் கதை, கருப்பண்ணசாமியின் பயத்துக்குக் காரணம் என்ன என்று ஒவ்வொன்றாக ஆராய்ந்தபடி நகரும்.

``தேவி, பக்தர்களால் எனக்கு ஏற்பட்ட ஆபத்தும் சங்கடமும் உனக்கு என்ன தெரியும்? வரவர இந்த `வேலை’யிலேயே எனக்கு வெறுப்பு வளர்ந்துவருகிறது. தான் செய்த மோசத்தை அரை பலம் கற்பூரப் புகையிலே மறைத்துவிடலாம் என்று எண்ணுகிறான். அதற்கு நான் உடந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனுடைய பேராசைக்கு நான் துணைபோக வேண்டும் என எண்ணுகிறான். காரணம் கேட்டால், பெரிய படையலிட்டிருக்கிறேன் என்று கூறுகிறான்.”

பக்தர்கள்தாம் தன்னைக் கேவலப்படுத்துவதாகக் கருப்பண்ணன் கூறுகிறார். நாஸ்திகர்களால் பிரச்னை இல்லை என்கிறார். நாஸ்திகர்கள் `மனிதருடன் பழகுவதும் மனிதர்களின் பிரச்னைகளைக் கவனிப்பதுமாகக் காலந்தள்ளுகிறார்கள். என்னைக் கேவலப்படுத்தியது பக்தர்கள்!”

``தேவி, கேள் இந்த விஷயத்தை. இந்தப் பக்தர்களை இன்னின்னது செய்யுங்கள் என் மனமகிழ்ச்சிக்காக, இன்னின்னது படையுங்கள் என்று நான் கேட்டதில்லை. அவர்களாகவே வருகிறார்கள். அவர்கள் மனதுக்குத் தோன்றியபடி ஏதேதோ செய்கிறார்கள். நான் சிவனே என்று எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்துக்கொண்டிருக்கிறேன். என் பொறுமை, பெருந்தன்மை இவற்றைக் கண்டு இந்தப் பக்தர்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவுகொண்டு...'' கருப்பண்ணரின் தொண்டை அடைத்துக்கொண்டது துக்கத்தால்! தேவியின் ஆச்சர்யம் அதிகரித்தது. ஆத்திரத்துடன் கூறினார் கருப்பண்ணசாமி, ``ஒரு அறையிலே போட்டுப் பூட்டிவிட்டார்கள்!” என்று. தேவிக்கும் லேசாகத் திகில் ஏற்பட்டது.

அதாவது பக்தகோடிகள் இரண்டு கோஷ்டியாகிவிட்டார்கள். ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை வழிபடவிடாமல் தடுக்கக் கையாண்ட உபாயமாக கருப்பண்ணசாமியை அறைக்குள் தள்ளிப் பூட்டுகிறார்கள்.

``போட்டுப் பூட்டடா, என்ன நடந்துவிடுதுன்னு பார்க்கலாம்” என்று ஒருவன் கொக்கரிக்கிறான்.

``பெரிய பூட்டு கொண்டுவா'' என்று கூவுகிறான் ஒருவன்.

``அலிகார் பூட்டு வேண்டுமா?” என்று கேட்கிறான் இன்னொருவன்.

கடைசியில் போலீஸ் கேஸாகி ``லால்குடி சப் இன்ஸ்பெக்டர் (அவர் பிள்ளை குட்டிகள் நல்லா இருக்கணும்) தயவில் நான் ரிலீஸானேன்'' என்று கதையைச் சொல்லி முடிக்கிறார் கருப்பண்ணசாமி.

``… அதனாலேதான் எனக்கு பயம் ஏற்பட்டுவிட்டது. நிஜமா சொல்றேன், இனி இந்தப் பக்தர்களை நம்பி பிரயோஜனமில்லை. ஏதோ பூஜை செய்றாங்களேன்னு பூரிப்படையுறதுல அர்த்தமில்லை. இனி நமக்கு அவங்க தயவு வேண்டாம். சகவாசமே கூடாதுன்னு தோணிவிட்டுது.”

தேவியும் கதையைக் கேட்டுக் கலக்கம் அடைந்தார்.

``ஆமாம், இனி இந்தப் பக்தர்களை நம்பக் கூடாது” என்று தேவியும் தீர்ப்பளித்தார்கள். ``நாம் ரெண்டு பேர் மட்டும் தீர்மானித்தால் போதுமா தேவி... நம்ம கூட்டம் பெரிதல்லவா? எல்லோருக்கும் எடுத்துச்சொல்லி, இனி இந்தப் பக்தர்களிடம் நாம் சிக்கிச் சீரழியக் கூடாது. பக்தர்கள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றினால்தான் நல்லது'' என்றார் கருப்பண்ணசாமி.

``ஆமாம் கருப்பண்ணரே! பக்தர்களால் நம்மவர்களுக்கு ஏற்பட்டுவரும் சீரழிவு களையட்டும், எத்தர்கள் ஏமாளிகளை ஏய்க்க நம்மைக் கருவியாகக்கொள்வதையும் விளக்கமாகக் கூறி, நமது நண்பர்களுக்கும் இனி இப்படிப்பட்ட இடைஞ்சல் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ளத்தான் வேண்டும். நாம் இதற்கெல்லாம் ஒரு தனி மாநாடு கூட்டிவிடவேண்டியதுதான். இனி பொறுக்க முடியாது. நான் வரவேற்புக் கழகத்துக்குத் தலைமை தாங்கிவிடுகிறேன். திறப்பு விழா நீ நடத்திவிடு. தலைமைக்கு யாரை அழைக்கலாம்?” என்று தேவியார் ஆர்வத்துடன் கேட்டார்.

``யாரை அழைக்கலாம்?” என்று கருப்பண்ணசாமியும் யோசிக்கலானார்.

இந்தக் கதையை அண்ணா 1951-ம் ஆண்டில் எழுதியிருக்கிறார். திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து ஒட்டுமாஞ்செடியாக தி.மு.க-வைத் தோற்றுவித்து, `ஆரியமாயை' நூலை எழுதி அது தடைசெய்யப்பட்டு, சிறைவாசம் அனுபவித்து, திராவிட நாடு பிரிவினை முழக்கத்தை எழுப்பி, சென்னையில் தி.மு.க-வின் முதல் மாநாட்டை டிசம்பரில் நடத்திய பரபரப்பான அந்த 1951-ம் ஆண்டில் இந்தக் கதையை அண்ணா எழுதியிருக்கிறார்.

அரசியல் பணிகள் அவருடைய காலத்தை அதிகமாக எடுத்துக்கொண்ட சமயத்திலும், விடாமல் சிறுகதை எழுதியிருக்கிறார் அண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சிறுகதை எழுதத் தொடங்கிய காலம் தமிழ்ச் சிறுகதை அதன் வண்ணங்களோடும் வனப்புகளோடும் முகிழ்த்து வந்த ஒரு காலம். ஆகவே, அண்ணாவுக்குச் சிறுகதை வடிவம் பற்றிய தன்னுணர்வு நிச்சயமாக இருந்திருக்கிறது எனலாம். பிற மணிக்கொடி எழுத்துக்காரர்களைப்போல உரத்த குரலைத் தவிர்த்து உள்ளடங்கிய மொழியில் அகத்தின் போக்கைக் கதையாக்கும் லட்சியம் அண்ணாவுக்கு இல்லை. கதை, நாடகம், மேடைப்பேச்சு, சினிமா என எல்லா ஊடகங்களையும் தன் அரசியல் லட்சியத்துக்கு சேவைசெய்யும் கருவிகளாக மாற்றும் அவசியம் அண்ணாவுக்கு இருந்தது.

ஆகவே, சிறுகதையின் வடிவ நேர்த்தி, சொல்வதைவிடச் சொல்லாமல் விடவேண்டியதன் அவசியம், வார்த்தைச் சிக்கனம் போன்ற அம்சங்களைவிட வாசகருக்கு தன் கருத்து போய்ச் சேர வேண்டும் என்ற அக்கறையே அவருடைய சிறுகதையின் அடிநாதமாக இருக்கும். மன ஓட்டங்களைவிட சம்பவங்களை அடுக்கிச் சென்று தான் வலியுறுத்த நினைத்த கருத்தை நோக்கி வாசகரை அழைத்துச் செல்வதில் அவருடைய ஒவ்வொரு சிறுகதையும் வெற்றிபெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய கதைகளில் மிகச்சிறந்த கதையாக எல்லோரும் பேசுவது `செவ்வாழை' என்ற கதையைத்தான்.

``செங்கோடன், அந்தச் செவ்வாழைக் கன்றைத் தன் செல்லப்பிள்ளைபோல் வளர்த்துவந்தான். இருட்டும் நேரம் வீடு திரும்பினாலும்கூட, வயலில் அவன் பட்ட கஷ்டத்தைக்கூடப் பொருட்படுத்தாமல், கொல்லைப்புறம் சென்று செவ்வாழைக் கன்றைப் பார்த்துவிட்டு, தண்ணீர் போதுமானபடி பாய்ச்சப்பட்டிருக்கிறதா எனக் கவனித்துவிட்டுத்தான் தன் நான்கு குழந்தைகளிடமும் பேசுவான். அவ்வளவு பிரேமையுடன் அந்தச் செவ்வாழையை அவன் வளர்த்துவந்தான். கன்று வளர வளர, அவன் களிப்பும் வளர்ந்தது. செவ்வாழைக்கு நீர் பாய்ச்சும்போதும், கல் மண்ணைக் கிளறிவிடும்போதும், அவன் கண்கள் பூரிப்படையும் மகிழ்ச்சியால். `கரியனிடம் அவனுடைய முதல் பையன் காட்டியதைவிட அதிகமான அன்பும் அக்கறையும் காட்டுகிறாரே!' என்று ஆச்சர்யம், சற்று பொறாமைகூட ஏற்பட்டது குப்பிக்கு” என்று செவ்வாழை கதை தொடங்குகிறது.

அப்பா சொல்வதை நான்கு பிள்ளைகளும் ஆமோதிப்பார்கள். அதுமட்டுமா, பக்கத்துக் குடிசை, எதிர்க்குடிசைகளிலே உள்ள குழந்தைகளிடம் எல்லாம் இதே பெருமையைத்தான் பேசிக்கொள்வார்கள். உழவர் வீட்டுப்பிள்ளைகள், வேறே எதைப் பற்றிப் பேசிக்கொள்ள முடியும்? அப்பா வாங்கிய புதிய மோட்டரைப் பற்றியா, அம்மாவின் வைரத் தோடு பற்றியா, அண்ணன் வாங்கி வந்த ரேடியோவைப் பற்றியா எதைப் பற்றிப் பேச முடியும்? செவ்வாழைக் கன்றுதான் அவர்களுக்கு மோட்டார், ரேடியோ, வைரமாலை, சகலமும்!

மூத்த பயல் கரியன், ``செவ்வாழைக் குலை தள்ளியதும் ஒரு சீப்புப் பழம் எனக்குத்தான்" என்று சொல்வான்.

``ஒண்ணுகூட எனக்குத் தர மாட்டாயாடா? நான் உனக்கு மாம்பழம் தந்திருக்கிறேன்? கவனமிருக்கட்டும். வறுத்த வேர்க்கடலை கொடுத்திருக்கிறேன் கவனமிருக்கட்டும்" என்று எதிர்க்குடிசை எல்லப்பன் கூறுவான்.

கரியனின் தங்கை காமாட்சியோ, கண்ணைச் சிமிட்டிக்கொண்டே ``உனக்கு ஒரு சீப்புன்னா, எனக்கு ரெண்டு தெரியுமா? அம்மாவைக் கேட்டு ஒரு சீப்பு, அப்பாவைக் கேட்டு ஒரு சீப்பு" என்று குறும்பாகப் பேசுவாள்.

மூன்றவாது பையன் முத்து, ``சீப்புக் கணக்குப் போட்டுக்கிட்டு ஏமாந்துபோகாதீங்க. ஆமா... பழமாவதற்குள்ளே யாரார் என்னென்ன செய்துவிடுவாங்களோ, யாரு கண்டாங்க!" என்பான். வெறும் வேடிக்கைக்காக அல்ல, திருடியாவது மற்றவர்களைவிட அதிகப்படியான பழங்களைத் தின்றே தீர்த்துவிடுவது என்று தீர்மானித்தேவிட்டான். செங்கோடனின் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்தது செவ்வாழை.

செங்கோடன், பண்ணை பரந்தாம முதலியாரிடம் கூலியாக இருப்பவர். காலம் முழுவதும் அங்கே உழைத்தாலும் அதன் பலன் ஏதும் அவருக்குக் கிட்டுவதில்லை. ஆனால், இந்தச் செவ்வாழை அவருடைய சொந்த உழைப்பில் வளர்க்கப்பட்டு, அதன் முழுப்பலனையும் தனக்கே தன் குடும்பத்துக்கே தரப்போகிறது என்ற மகிழ்ச்சியுடன் இருந்தார். அவரது குடும்பமே செவ்வாழை குலைதள்ளும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

``செவ்வாழை, குலை தள்ளிற்று. செங்கோடனின் நடையிலேயே ஒரு புது முறுக்கு ஏற்பட்டுவிட்டது. நிமிர்ந்து பார்ப்பான் குலையைப் பெருமையுடன்.

பண்ணை பரந்தாம முதலியார், தமது மருமகப்பெண் முத்துவிஜயாவின் பொன்னிற மேனியை அழகுப்படுத்திய வைரமாலையைக்கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்க மாட்டார். செங்கோடனின் கண்களுக்கு அந்தச் செவ்வாழைக் குலை, முத்துவிஜயாவின் வைரமாலையைவிட விலைமதிப்புள்ளதாகத்தான் தோன்றிற்று. குலை முற்ற முற்ற செங்கோடனின் குழந்தைகளின் ஆவலும் சச்சரவும் பங்குத் தகராறும், அப்பாவிடமோ அம்மாவிடமோ `அப்பீல்' செய்வதும் ஓங்கி வளரலாயிற்று.”

ஆனால், என்ன கொடுமை? பண்ணையாரின் மருமகளின் பிறந்த நாளைக்குப் பூஜை செய்ய செவ்வாழைப்பழம் தேவை என்று அந்தக் குலையை பண்ணையார் வீட்டுக்குக் கொடுக்கவேண்டிய நிலை வந்துவிடுகிறது.

``செங்கோடன் குடிசை, அன்று பிணம் விழுந்த இடம் போலாயிற்று. இரவு நெடுநேரத்துக்குப் பிறகுதான் செங்கோடனுக்குத் துணிவு பிறந்தது வீட்டுக்கு வர! அழுது அலுத்துத் தூங்கிவிட்ட குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்களிலே, குபுகுபுவென நீர் கிளம்பிற்று. துடைத்துக்கொண்டு, படுத்துப் புரண்டான். அவன் மனதிலே ஆயிரம் எண்ணங்கள். செவ்வாழையை, செல்லப்பிள்ளைபோல் வளர்த்து என்ன பலன்?”

இந்த இடத்தில் கதையை முடித்தாலே போதும் எல்லாம் வாசகருக்குப் புரிந்துவிடும். ஆனால் அண்ணா, அத்துடன் விட மாட்டார். எல்லா கதைகளிலுமே இப்படித்தான். இன்னும் தெளிவாக, இன்னும் விளக்கமாக, வாசகருக்கு எந்தச் சந்தேகமும் இல்லாமல் கதையும் கருத்தும் புரிந்துவிட வேண்டும் என்கிற துடிப்பே கதையை இன்னும் இழுக்கச் சொல்லும். இழுத்து முடிக்கிறார் அண்ணா.

நான்கு நாள்கள் சமாதானம் சொல்லியும், குழந்தைகளின் குமுறல் ஓயவில்லை. கரியன் ஒரே பிடிவாதம் செய்தான், ஒரு பழம் வேண்டுமென்று. குப்பி, ஒரு காலணாவை எடுத்துக் கொடுத்தனுப்பினாள் பழம் வாங்கிக்கொள்ளச் சொல்லி. பறந்தோடினான் கரியன். கடையிலே செவ்வாழைச் சீப்பு, அழகாகத் தொங்கிக்கொண்டிருந்தது. கணக்குப்பிள்ளை, பண்ணை வீட்டிலே இருந்து நான்கு சீப்பை முதலிலேயே தீர்த்துவிட்டான். அவன் விற்றான் கடைக்காரனுக்கு. அதன் எதிரே, ஏக்கத்துடன் நின்றான் கரியன்.

``பழம், ஒரு அணாடா பயலே. காலணாவுக்கு செவ்வாழை கிடைக்குமா... போடா" என்று விரட்டினான் கடைக்காரன். கரியன் அறிவானா, பாவம். தன் கொல்லையிலே இருந்த செவ்வாழை இப்போது கடையில் கொலு வீற்றிருக்கிறது என்ற விந்தையை! பாவம், எத்தனையோ நாள் அந்தச் சிறுவன் தண்ணீர் பாய்ச்சினான், பழம் கிடைக்குமென்று! பழம் இருக்கிறது; கரியனுக்கு எட்டாத இடத்தில்! விசாரத்தோடு வீட்டுக்கு வந்தான் வறுத்த கடலையை வாங்கிக் கொரித்துக்கொண்டே. செங்கோடன் கொல்லைப்புறத்திலிருந்து வெளியே வந்தான் வாழைமரத்தண்டுடன்.

``ஏம்பா, இதுவும் பண்ணை வீட்டுக்கா?" என்று கேட்டான் கரியன்.

``இல்லைடா கண்ணு! நம்ம பார்வதி பாட்டி செத்துப்போயிட்டா. அந்தப் பாடையிலே கட்ட'' என்றான் செங்கோடன்.

அலங்காரப் பாடையிலே, செவ்வாழையின் தண்டு!

பாடையைச் சுற்றி அழுகுரல்!

கரியனும் மற்ற குழந்தைகளும் பின்பக்கம்.

கரியன் பெருமையாகப் பாடையைக் காட்டிச் சொன்னான். ``எங்க வீட்டுச் செவ்வாழையடா" என்று.

``எங்க கொல்லையிலே இருந்த செவ்வாழைக் குலையை, பண்ணை வீட்டுக்குக் கொடுத்துவிட்டோம். மரத்தை வெட்டி `பாடை'யிலே கட்டிவிட்டோம்" என்றான் கரியன்.

பாவம் சிறுவன்தானே!

அவன் என்ன கண்டான், செங்கோடனின் செவ்வாழை, தொழிலாளர் உலகிலே சர்வ சாதாரணச் சம்பவம் என்பதை.”

அண்ணாவின் கதைகளில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகள், பகுத்தறிவுப் பிரசாரம், பெண்ணடிமைத்தன எதிர்ப்பு போன்ற அன்றைய கொதிநிலைப் பிரச்னைகள் பாடுபொருளாக ஆகியிருந்தன. இந்தச் செவ்வாழை கதை மலையாளக் கவிஞர் சங்கம்புழாவின் கவிதையான `வாழைக்குலை'யைத் தழுவி எழுதப்பட்டது என்ற கருத்தும் இலக்கிய உலகில் உண்டு. ஆனாலும் என்ன? அண்ணாவின் சிறுகதை எழுத்தின் சகல லட்சணங்களும் பொருந்திய கதையாக அது வந்திருப்பது உண்மை.

அண்ணாவின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பிற இந்திய மொழிகளுக்குச் சென்றால் மிக முக்கியமான சமூகச் சீர்திருத்தக் கதைகளாக வரவேற்பு பெறும் எனத் தோன்றுகிறது. தமிழ்ச் சமூக வாழ்வின் கொந்தளிப்பான காலகட்டத்தின் பிரச்னைகளை எந்தவித மூடாக்கும் இல்லாமல் பேசும் கதைகள் இவை.

பூம்புகார் பிரசுரம், டாக்டர் அண்ணா பரிமளம் (அண்ணாவின் வளர்ப்பு மகன்) தொகுக்கப்பட்ட 108 சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள்முருகன் தேர்ந்தெடுத்த 14 கதைகளை `தீட்டுத்துணி' என்ற தொகுப்பாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அண்ணாவின் கதைகளில் ஆகச்சிறந்த கதைகள் என பெருமாள்முருகன் மதிப்பிடுவது, ராஜபார்ட் ரங்கதுரை, சுமார் சுப்பையா, உபகாரி உலகநாதன் ஆகிய மூன்று கதைகளை.

``மணி என்ன இருக்கும், நீ புறப்பட்டபோது?”

``சுமார் 11 மணி இருக்கும்ங்க…”

``எவ்வளவு தூரம் நீ போன இடம்?”

``இருக்குமுங்களே, மூணு மைல் சுமாருக்கு.”

``இப்ப மணி என்ன?”

``சுமார், 1 மணின்னு நினைக்கிறேனுங்க.”

முதலாளிக்குக் கோபத்தை அதற்குமேல் அடக்கிக்கொள்ள முடியவில்லை. ``யார்யா சுத்த மண்டூகமா இருக்கிறே. எதுக்குக் கேட்டாலும், என்ன கேட்டாலும் `சுமார்... சுமார்!' இதுதானா பதில். திட்டவட்டமான ஒரு பதில், பட்டு வெட்டினபடி கரெக்டான பதில் வருதா உன் வாயிலே இருந்து. தலை நரைச்சுட்டுது. பார்த்தா பரிதாபமாகவும் இருக்குது. ஆனா, உன்னோட போக்கு கொஞ்சம்கூட சரியா, திருப்தியா, தரமா இல்லையே!”

``என்ன வயசாவுதய்யா உனக்கு?”

``சுமார் ஐம்பத்திரண்டுங்க.”

இப்படித் தொடங்கும் முதல் பக்கத்திலேயே `சுமார்' சுப்பையா கதாபாத்திரத்தைக் கச்சிதமாக அறிமுகம் செய்துவிடுகிறார் அண்ணா.

சுப்பையாவுக்கு இந்த `சுமார்' என்ற பதம் கூடவே வருவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, முதலாளியிடம் ஒருமுறை மாட்டிக்கொண்டபோது, ``சரியா தெரிஞ்சா சொல்லணும். இல்லாட்டி சுமாரா இப்படின்னு சொல்லணும்'' என்று அவர்தான் ஆணையிட்டிருந்தார். இன்னொரு காரணம், உண்மையே பேச வேண்டும். எதையும் சரியாகத் தெரிந்துகொண்டு பேச வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறை சுப்பையாவுக்கு. ``நமக்கென்ன தெரியும், நமக்கெங்கே தெரியப்போகுது!' என்ற எண்ணம் வேறு.

இந்த சுமார் பின் இணைப்பால் சுப்பையா வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்னைகளைச் சந்திப்பதை சுவைபடவும் சுப்பையாவின் பார்வையில் துக்கத்துடனும் கதை சொல்லப்படுகிறது. மற்ற கதைகளில் இருக்கும் பொழிப்புரைகள் இந்தக் கதையில் இல்லை.

பொதுவாக அண்ணா போன்ற லட்சியவாதிகள் எழுதும் கதைகளில் கதாபாத்திரங்கள் காவியங்களில் வருவதுபோல கறுப்பு-வெள்ளையில் பிசிறில்லாமல் ஆசிரியரின் கருத்தைச் சுமக்கும் வாகனங்களாகப் படைக்கப்படுவது இயல்பு. அதே பாணியில் அண்ணாவின் கதாபாத்திரங்களும் அப்படியே கருத்தாளர்களாகப் படைக்கப்பட்டிருப்பார்கள். அறிமுகப் பக்கத்திலேயே அவர்கள் கச்சிதமாக அறிமுகமும் செய்யப்பட்டுவிடுவார்கள்.

``சமூக சேவகி சாரு பாலாவுக்கு சளி, ஜுரம், சாந்தி பவனம் அல்லோலகல்லோலப்பட்டது. இன்கம்டாக்ஸ் ஆபீஸர் கோதண்டராம ஐயருடைய ஏக புத்திரி சாருபாலா அமர்க்களமாகத்தானே இருக்கும். அதிலும் சாரு பாலா, சமூக சேவை செய்து பிரபலமடைந்துகொண்டிருக்கும் குமாரி. முகிலுக்கு இணையான குழல். அழகு குழுவியிருந்த வட்ட நிலவு முகம். பிறை நெற்றி. பேசும் கண்கள். துடிக்கும் அதரம். அங்கம் தங்கம். நடை நாட்டியம். பேச்சோ கீதம். வயது இருபத்திரெண்டு. படிப்பு இன்டர். அலங்கார மூக்குக்கண்ணாடி. கையில் அலங்காரப் பை. அதியலங்கார பூட்ஸ். வைரத் தோடு. கையில் ரிஸ்ட் வாட்ச். கழுத்தில் மெல்லிய சங்கலி. எப்போதும் புன்னகை. எவரிடமும் இன்முகம். சாரு பாலா அந்த நகரில் ஒரு காட்சியாகிவிடாமல் இருக்க முடியுமா?'' (ப,87) என்று சமூக சேவகி சாரு பாலாவையும்,

``ஏதோ எனக்கென்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர்! நான் ஒன்றும் அலைந்து திரியவேண்டிய அவசியமில்லை. நிம்மதியாக வாழ, எனக்கு வசதி இருக்கிறது. ஆண்டவன் அப்படி ஒன்றும் என்னை உழைத்து உருகுலையும்படியான நிலையிலே விட்டுவைக்கவில்லை. வாழ்வதற்காக வதைபடு என்று என் தலையில் ஒன்றும் எழுதியில்லை'' என்று கூறினார் ஓய்வூர் மிட்டாதார் ஒயிலானந்த பூபதி, கொஞ்சம் கோபத்துடன் - என்று பூபதி பாத்திரத்தை `பூபதியின் ஒரு நாள் அலுவல்' கதையிலும் அறிமுகம் செய்திருப்பது எடுத்துக்காட்டு.

நவீன சிறுகதைகளில் காணப்படும் யதார்த்தம் அண்ணாவின் கதைகளில் காண முடியாதது. அதன் காரணமாகவே இந்தக் கதைகள் வாசக மனதின் அக உலகில் சென்று ரசாயன மாற்றங்கள் விளைவிக்கும் சக்தியற்றவை ஆகிவிடுகின்றன.

நாம் மேலே குறிப்பிட்ட `கருப்பண்ணசாமி யோசிக்கிறார்' கதையில், பக்தர்கள் எல்லோருமே பொய்யர்கள்; தங்கள் பித்தலாட்டங்களை மறைக்கவே சாமி கும்பிடுகிறார்கள் எனச் சித்திரித்து, தன் லட்சியத்தை நோக்கி நகர்கிறது. கலைஞரின் `பராசக்தி’ படத்தில்கூட இதேபோன்ற நிலைதான். பக்தியின் பேரால் கபட நாடகம் ஆடுபவர்களை முன்வைத்தே பகுத்தறிவுப் பிரசாரம் செய்யப்படுவது இத்தகைய ஆளுமைகளின் பாணியாக இருந்துள்ளது. தங்கள் வாழ்வின் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண முடியாமல் கடவுளிடம் சரணடைபவர்கள்தானே ஏராளம். அவர்களை மனமாற்றம் செய்யத்தக்க அளவுக்கான வாதங்களை பகுத்தறிவுக் கதைகள் வைக்கவில்லை. ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாகவும் இதயமில்லாத இந்த உலகத்தின் இதயமாகவும் ஒரு பாத்திரம் கடவுளுக்கு எளிய மக்களின் வாழ்வில் இருக்கிறதே, அந்தப் பிரதேசத்தில் இந்தக் கதைகள் நுழையவில்லை.

1909-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்து 3-2-1969 அன்று காலமான அண்ணா, தமிழக அரசியலில் பெரும் எழுச்சியையும் மாற்றத்தையும் கொண்டுவந்தவர். 1-3-1967 முதல் இறக்கும் வரை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றியவர். கறை படியாத நேர்மையான முதலமைச்சர் எனப் பெயர்பெற்றவர். அவருடைய மரணத்தின்போது துக்கம் தாளாமல் அவரைக் காண லட்சோபலட்ச மக்கள் ரயிலேறி வந்து விபத்திலும் இறந்துபோனவர்கள் ஏராளம்.

அவருடைய `வேலைக்காரி', `ஓர் இரவு' போன்ற நாடகங்களும் திரைப்படங்களும் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற படைப்புகள்.

தமிழ்ச் சிறுகதையிலும் இந்த வகை எழுத்துக்கான அடையாளமாக அண்ணாவின் கதைகள் திகழ்கின்றன. சிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது.