மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை - 33

நெடுஞ்சாலை வாழ்க்கை - 33
பிரீமியம் ஸ்டோரி
News
நெடுஞ்சாலை வாழ்க்கை - 33

ஜன்னலோர சமையலறை!தொடர் பயணம் கா.பாலமுருகன் படங்கள்: ரமேஷ் கந்தசாமி

காஷ்மீர் நோக்கிய பயணத்தின் இரண்டாம் நாள் அதிகாலை; கர்நாடகாவில் ஹாஸ்பேட் தாண்டி இயற்கை உபாதைக்காக லாரியை நிறுத்திவிட்டு இறங்கிய டிரைவர் மணி, கரடியைக் கண்டு ஓடிவந்து லாரியில் ஏறினார். மிகவும் பயந்து போயிருந்தார். எனக்கும் படபடப்பாக இருந்தது. பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்ற ஆசுவாசம் இருந்தாலும், கண நேரத்தில் ஏற்பட்ட பதற்றம் அதிகாலை நேரத்திலும் வியர்த்தது.

லாரியை நிறுத்தியிருந்த அந்தப் பகுதி, கரடிகள் சரணாலயம் அருகே இருக்கிறது. எனவே, கரடி ஒன்றும் அங்கு அதிசயம் அல்ல... மணிதான் கொஞ்சம் அஜாக்கிரைதையாக இருந்துவிட்டார். உடனே லாரியைக் கிளப்பினார் மணி. இருள் பிரியாத காலைப் பொழுதில் பதற்றம் தணிந்த பிறகு, கேலியும் கிண்டலுமாகப் பயணம் தொடர்ந்தது.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 33

துங்கபத்ரா அணை கடந்து டீக்கடை ஒன்றில் நிறுத்தி பல்தேய்த்து டீ குடித்தோம். “இன்னும் மூணு மணி நேரம் போனோம்னா, அலமாட்டி டேம். அதைத் தாண்டினா ஒரு வாய்க்கால் இருக்கு. அங்கே தண்ணீர் பிடிச்சு சமையல் செய்யலாம்’’ என்றார் மணி. மீண்டும் லாரியில் ஏறினோம். முதல் நாள் இரவு ஹிரியூரில் வாங்கிய மளிகைப் பொருட்களைப் பிரித்து, சமையலுக்கான காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தார் பரமேஸ்வரன். அலமாட்டி அணை கடந்து சில கிலோ மீட்டர்கள் தாண்டியதும் நிட்கண்டி என்ற ஊரில் சாலையின் குறுக்கே சென்ற வாய்க்காலைக் கடக்கும் குடிநீர் பைப்பில் இருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. அதைப் பிடித்துச் செல்ல நிட்கண்டி ஊரைச் சேர்ந்தவர்கள் முண்டியடித்துக் ்கொண்டிருந்தார்கள். லாரியை ஓரங்கட்டிவிட்டு நீர் பிடிக்கும் கேன், குடம் ஆகியவற்றைச் சுத்தம் செய்துவிட்டு, அடித்துப் பிடித்து நாமும் தண்ணீர் பிடித்தோம். பரபரவென சமையல் ஆரம்பமானது. நால்வர் அமர்ந்திருந்த கேபின், சற்று நேரத்தில்  சமையலறை ஆனது. சாம்பார், ரசம், சாதம் செய்து முடித்ததும் ஒரு பிடி பிடித்துவிட்டுக் கிளம்பினோம்.

கர்நாடகா மாநிலத்தின் விஜயபுரா, ஜால்கி ஆகிய ஊர்களைத் தாண்டினால், பீமா ஆறு. ஆற்றின் அக்கரை மஹாராஷ்ட்ரா மாநிலம். பொதுவாக, லாரிகள் சோலாப்பூர் வழியாகச் செல்லாமல், ஜால்கி என்ற ஊரில் இருந்து இடப்பக்கம் பிரியும் கிராமச் சாலையில் சென்று பண்டரிபுரம் வழியாக சோலாப்பூர் - புனே நெடுஞ்சாலையில் இருக்கும் தீம்பூர்னி என்ற ஊரை அடையும். இதுதான் இவர்களுக்குச் சுலபமான வழி. காரணம், சோலாப்பூர் ஆர்.டி.ஓ-விடம் அபராதம் செலுத்தாமல் தப்பிக்க முடியாது என்பதுதான். கிராமத்து வழியாகத்தான் செல்லப்போகிறோம் என்று மணியும் நம்மிடம் சொல்லியிருந்தார். ஜால்கியை அடைந்தபோது மாலையாகிவிட்டது. இடதுபக்கச் சாலையில் திருப்ப முயற்சித்த போது, போலீஸார் வழிமறித்தனர். ‘நேராகச் செல்’ என சிக்னல் காட்டவும் என்னவென்று புரியாமல் கொஞ்சம் தாண்டிப்போய் லாரியை ஓரங்கட்டினார் மணி. அந்தச் சாலையில் வாகனம் கவிழ்ந்து போக்குவரத்து நெரிசல் ஆகிவிட்டது. போக்குவரத்து சீராக இன்னும் 4 மணி நேரம் ஆகும் என்று தகவல் சொன்னார், அங்கிருந்த வேறொரு லாரி டிரைவர். என்ன செய்வது என பரமேஸ்வரனுடன் ஆலோசனை செய்தார் மணி. 4 மணி நேரம் காத்திருந்தால், திருட்டு ஏரியாவான தீம்பூர்னி - அஹமத்நகர் சாலையில் செல்ல முடியாது. இரவு தீம்பூர்னியில் தங்க வேண்டி வரும். எனவே, சோலாப்பூர் வழியாகச் சென்றுவிடலாம்.

ஆர்.டி.ஓ பிரச்னையைச் சந்திக்கலாம் என முடிவெடுத்து புறப்பட்டது லாரி.

கர்நாடகா - மஹாராஷ்ட்ரா  எல்லையான பீமா நதி ஆழத்தில் ஓடிக்கொண்டிருந்தது. நதியைத் தாண்டி சோலாப்பூர் நெருங்கியபோது, மாநில செக்போஸ்ட் வந்தது. இங்கே கிளியரன்ஸ் சீல் வாங்கிக்கொண்டுதான் பயணத்தைத் தொடர வேண்டும். எங்களை இறங்கி செக்போஸ்ட் தாண்டி நிற்குமாறு கூறிவிட்டு, பேப்பர்களை எடுத்துக்கொண்டு இறங்கினார் மணி. லாரியின் மொத்த எடையில் 1 டன் அதிகமாக இருந்தது. ‘எப்படியும் 4,000 ரூபாய் வரை ஃபைன் கட்ட வேண்டும்’ எனப் புலம்பிக்கொண்டே சென்றார். டோல்பூத் போல அமைக்கப்பட்டிருந்த அந்த நவீன செக்போஸ்ட்டில், நமது லாரி எடை போடும் வரிசையில் நின்றது. செக்போஸ்ட்டை நாங்கள் நடந்து கடக்கும்போது, எடை போடும் இடத்தில் நான்கு ஐந்து பேர் லாரியின் பம்பரைப் பிடித்து மேல் நோக்கித் தூக்குவதுபோல தாங்கிப் பிடித்ததைக் கண்டோம்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 33

அடுத்த பத்தாவது நிமிடத்தில் நமது லாரியும் செக்போஸ்ட்டைக் கடந்து வந்தது. முகம் முழுக்க புன்னகையோடு இருந்தார் மணி. என்ன ஆச்சு? என்றதும்  ‘‘நல்ல வேளை... நாலாயிரம் போக வேண்டியது, நானூறு ரூபாயோட முடிஞ்சு போச்சு. பிரச்னையில்லாம தப்பிச்சாச்சு!’’ என்றார். என்ன நடந்திருக்கும் என ஊகித்துச் சொன்னதும் பலமாகச் சிரித்தனர் இருவரும்.

செக்போஸ்ட் தாண்டி சோலாப்பூர் நகர எல்லைக்கு முன்பாகவே இருந்த பைபாஸ் சாலையில் திரும்பினோம். பெயர்தான் பைபாஸ் சாலை. ஆனால், அது பழைய கிராமச் சாலை. அதை அப்படியேதான் வைத்திருந்தார்கள். மேடும் பள்ளமுமாக இருந்த அதில் ஊர்ந்து தள்ளாடியபடி புனே பைபாஸ் சாலையில் ஏறியபோது, இருட்டத் துவங்கியது. தீம்பூர்னி அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. எந்த இடத்தை இருட்டுவதற்குள் கடக்க வேண்டும் என்று நினைத்தோமோ, அந்த இடத்தை இரவில்தான் எட்டினோம். தீம்பூர்னி என்ற ஊரின் நெடுஞ்சாலையில் இருந்து வலப்பக்கம் அஹமத்நகர் நோக்கிப் பிரியும் முகல் பைபாஸ் என அழைக்கப்படும் இந்தச் சாலை, இரவுப் பயணத்துக்கு உகந்தது அல்ல. கொலைகளும் கொள்ளைகளும் அதிகம் நடக்கும் பகுதி.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 33

தமிழக லாரிகள் இருக்கின்றனவா எனப் பார்த்தவர், சில லாரிகள் நிற்பதைப் பார்த்து ஓரங்கட்டினார். அதில் இரண்டு லாரிகள் சிறிது நேரத்தில் கிளம்ப இருப்பதாகச் சொல்லவும், அவர்களுடன் இணைந்துகொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தார் மணி. இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டுக் கிளம்பினோம். மூன்று லாரிகளும் அணிவகுத்துக் கிளம்பின.

இந்தச் சாலை நமக்கு ஏற்கெனவே பழக்கமானதுதான். முந்தைய டெல்லிப் பயணத்தின்போது, இதேபோல இரவில் கடக்க வேண்டிய சூழல் வந்தது. அப்போது இந்தச் சாலையில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களையும் நமக்குச் சொல்லியிருந்தனர், நாம் பயணித்த லாரியின் டிரைவர் களான சரவணனும் சேட்டும். மீண்டும் அதே சாலையில் அதே இரவுப் பயணம். நேற்றிரவு 2 மணி நேரம் மட்டும்தான் தூங்கியிருப்பேன். இன்றைக்கும் தூங்க முடியாது என்பது மட்டும் புரிந்தது!

- (நெடுஞ்சாலை நீளும்)