
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

`` `ஸ்பேஸ் டெப்ரிஸ்'னு சொல்வாங்க... அதாவது, நமது பூமியின் ஆர்பிட்டைச் சுற்றியிருக்கும் குப்பைகள். மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலோகக் கழிவுகள்” என்ற வெங்கட்ராம், காபியை உறிஞ்சிக் குடித்தபடி ரங்கராஜனைப் பார்த்தார்.
“ஆமா... ஒரு சென்டிமீட்டர் உடைந்த சில்லுகள் முதல் செயலிழந்த சாட்டிலைட்கள் வரை என வான்வெளிக் கழிவுகள் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் ரங்கராஜன்.
“பரவாயில்லையே... உனக்குச் சம்பந்தமே இல்லைன்னாலும், இதெல்லாம்கூடத் தெரிஞ்சுவெச்சிருக்கே. ஹா... ஹா...” எனச் சிரித்தார் வெங்கட்ராம். ரங்கராஜனும் சிரித்துக்கொண்டே காபியை உதட்டுக்குக் கொண்டுபோனார்.
``எங்க கம்பெனியின் திட்டம், அந்தக் கழிவுகளைச் சுத்தம் செய்றதுதான். அதற்கான ரோபோக்களை வடிவமைச்சுட்டு இருக்கோம். அவை வான்வெளியில் மிதந்தபடி, மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கழிவுகளை அகற்றும்.”
ரங்கராஜன், தன் நண்பனை வியப்பாகப் பார்த்தார்.
``எந்த மாதிரி சீதோஷ்ண நிலையையும் தாங்கும்படியாக அதை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இந்திய அறிவியல் உலகில் அது ஒரு மைல்கல்லாக இருக்கும்” என்று அகல வாயால் பெருமையாகச் சிரித்தார் வெங்கட்ராம். மொபைல் சிணுங்கியது.
``ஹலோ சொல்லுங்க சார்... கூப்பிட்டிருந்தீங்களா?” என்றது எதிர்முனையில் டிரைவர் மாணிக்கத்தின் குரல்.
“மாணிக்கம்... வீட்டுல கழிவுநீர்த் தொட்டி அடச்சிருக்குதாம். ரெண்டு பேரைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போ. அர்ஜென்ட். பணத்தை, வீட்டுல அம்மாகிட்ட வாங்கிக்கோ” என்றபடி மொபைலை அழுத்திய வெங்கட்ராம், ரங்கராஜனைப் பார்த்து “எங்கே விட்டேன்..?” என்றார்

“விண்வெளியைச் சுத்தம்செய்யும் ரோபோ, இந்திய அறிவியல் உலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும்” என்றார் ரங்கராஜன்!

சூரிய ஒளியில் லென்ஸைக் காட்டி, ஃபிலிம் துண்டுகளால் படம் ஓட்டியது ஞாபகம் இருக்கிறதா? நாஸ்டால்ஜியா நோட்டை, விஷுவல் கார்னரில் எழுதுகிறேன் என நினைக்கிறீர்களா? ஓவியர் ஜோர்டான் மேங்க்-ஓசான் (Jordan Mang-osan) வரைவதைப் பார்த்ததும் இந்தச் சிறுவயது ஞாபகம் வந்தது.
ஃபிலிம் காட்டி போரடிக்கும்போது, அதே லென்ஸை வைத்து சூரிய ஒளியை ஊசிமுனை அளவுக்கு பேப்பரில் குவித்தால் பேப்பர் தீப்பற்றிக்கொள்ளும். நாம் அனைவரும் வளர்ந்த பிறகு, அப்படிச் செய்வதை விட்டுவிட்டோம். ஆனால், ஜோர்டான் இன்னும் விடவில்லை. அவர் லென்ஸை வைத்து சூரிய ஒளியால் ஓவியம் வரைகிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மவுன்ட் ப்ரோவின்ஸ் எனும் மலைப்பகுதியைச் சேர்ந்த ஜோர்டான், மென்மையான மரப்பலகையின் மீது லென்ஸினால் சூரிய ஒளியைக் குவிக்கிறார். லேசர்போல கூர்மையாக விழும் சூரிய ஒளியினால் பலகையின் மேல்பகுதி கோடாகக் கருகுகிறது. இப்படி, கருகும் புள்ளிகளாலும் கோடுகளாலும் இந்த வித்தியாசமான ஓவியங்களை வரைகிறார்.
இப்படி மென்பலகையில் கருகச்செய்து ஓவியம் வரைவதை `பைரோகிராஃபி' (Pyrography) என்பார்கள். சூடான உலோகம் அல்லது லேசரால்தான் அதைச் செய்வது வழக்கம். நம் ஊரில் ஃபேமிலி போட்டோவெல்லாம்கூட அப்படி வரைந்து தருகிறார்கள். ஆனால், இப்படி சூரிய ஒளியில் சுடச்சுட ஓவியம் வரைவது புதுசு.
அடுக்கடுக்கான மலை வயல்கள், தனது மலைப்பகுதி மக்கள், கலாசாரம்... என மவுன்ட் ப்ரோவின்ஸ்தான் தனது ஓவியங்களுக்கு இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லும் ஜோர்டான், தன் ஓவியங்களை `சோலார் டிராயிங்' (Solar Drawing) என்கிறார். ஜோர்டானின் ஓவியங்களை, சுருக்கமாக ‘சுட்ட படம்’ என்பேன்!

சூழலியலாளர் நக்கீரன் எழுதிய `காடோடி' நாவலை வாசிக்கும்போது, அதில் சில இடங்களில் அட்டை பற்றிய விளக்கத்தைப் படித்ததும் எனக்கு வயநாடு ஞாபகம் வந்தது.
ஓவியக் கல்லூரியின் கடைசி வருடத்தில் வொய்ல்டு லைஃப் போட்டோகிராஃபி என, நான் உள்பட நான்கு நண்பர்கள் வயநாட்டுக்குச் சென்றோம். `அப்பப்பாறை' என்னும் இடத்தில் காட்டு இலாகா அதிகாரியைச் சந்தித்தபோது, மாணவர்கள் என்பதால் உணவும், ஃபாரஸ்ட் அலுவலகத்தில் தங்க இடமும் கொடுத்தார். காட்டை மிகவும் நேசிக்கும் அந்த அதிகாரியின் பெயர் வினோத்.
காட்டை நன்கு அறிந்த ஒரு பழங்குடி இளைஞருடன் எங்களை அனுப்பினார். அட்டைகள் கடிக்கும் என்பதால், ஒரு கலவையைக் கொடுத்து கால்களில் பூசிக்கொள்ளச் சொன்னார் அந்த இளைஞர்.
மூக்குப்பொடியை எண்ணெயில் குழைத்த ஒரு கலவை. ஆனால், அதையும் மீறி அந்த அட்டைப்பூச்சிகள் கடித்தன. `அட்டைப்பூச்சி' என்றா சொன்னேன்? தவறு... தவறு. அவை பூச்சி இனம் அல்ல; உண்மையில் புழு (Annelida). வயநாடு போன்ற காடுகளில் உள்ளவை; ரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் வகையைச் சேர்ந்தவை. கடிப்பதே தெரியாது. காரணம், கடிக்கும் விலங்கின் மீது `ஹிருடின்' (Hirudin) என்னும் வேதிப்பொருளை முதலில் செலுத்திவிடும். வலி தெரியாது. தனது எடையைவிட எட்டு மடங்கு ரத்தத்தை ஒரே நேரத்தில் உறிஞ்சும். ஒருகாலத்தில் நோயாளிகளின் ரத்தத்தை எடுக்க அட்டைகளைப் பயன்படுத்துவார்களாம். (ஜெயமோகனின் `வெண்கடல்' சிறுகதை ஞாபகம் வருகிறது) கடித்தால், வேலை முடிகிற வரை விடாது. லேசாக நெருப்பு காட்டினால் சுருண்டு விழும்.
அட்டைகளிடம் கடிவாங்கி கடுப்பான எங்களைப் பார்த்து வினோத் சொன்னார், “கோடைகாலத்தில் காய்ந்து, மட்கி, புதர்களுக்குள் கிடக்கும் அட்டைகள், மழையினால் உயிர்த்தெழுந்து வருவதைப்போல பெருகும் மாயம் அற்புதம். சூழலியலின் சமநிலைக்கு அட்டைகள் மிக முக்கியமானவை. எனக்கு ஓர் அட்டையின் நல்ல புகைப்படத்தை எடுத்துக்கொடுக்க முடியுமா? பெரிதாக ப்ளோஅப் செய்து, அலுவலகத்தில் மாட்ட வேண்டும்” என்றார். கொடுத்தோம்.
தலைவர்களின் புகைப்படங்களுடன் அந்த அட்டையின் பெரிய புகைப்படமும் அலுவலகச் சுவரில் இருப்பதை கற்பனை செய்கிறேன்!

`ஒரு குடம் தண்ணி ஊத்தினா, ஒரு பூதான் பூக்குமா?' என `இன்றைய டிஸ்கவரி சேனல்’ சிறுவர்கள் லாஜிக்காகக் கேட்கக்கூடும். நாங்கள் அன்று இப்படிக் கேட்டது இல்லை. குழந்தைகளிடம் இருக்கவேண்டிய அப்பாவித்தனம் இருந்தது.
குழந்தைகள் அதிமூளைகொண்ட புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்கிற `நவீனப் பேய்', பெற்றோர்களின் மண்டையில் ஏறாத காலம். அதனால், நாங்கள் எந்தக் கேள்வியையும் கேட்காமல் `ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்... ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்ததாம்...' என விளையாடியிருக்கிறோம்.
பள்ளிவிட்டு வந்தால், அந்தி சாயும் வரை முற்றங்களில் சிறுவர் - சிறுமியர் பேதம் இல்லாமல் `மாலை முழுவதும் விளையாட்டு’ என வழக்கப் படுத்திக்கொண்டிருந்தோம். அதன் பிறகுதான் அதிகக் கனம் இல்லாத புத்தகப் பையை எடுப்போம்.
இந்த விளையாட்டு, இரு பாலரும் சேர்ந்து ஆடும் ஓர் ஆட்டம். இரண்டு சிறார்கள், தங்கள் கைகளை கோபுரம்போலக் கோத்துக்கொண்டு நிற்பார்கள். மீதம் உள்ளவர்கள், ரயில் வண்டிபோல வரிசையாக `ஒரு குடம் தண்ணி…' எனப் பாடிக்கொண்டே அந்தக் கை கோபுரத்துக்குள் நுழைந்து வெளியேறுவோம். பாடல் முடியும் இடத்தில் நுழைபவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.
அவர்களை விடுவிக்க `இம்புட்டுப் பணம் தர்றேன், விடுடா...' எனப் பாடுவார்கள். அந்தப் பணத்தின் மதிப்பு, அடுத்த அடுத்த வரிகளில் கைகளால் உயர்ந்துகொண்டே போகும். பிடிபட்டவர்களிடம் மனைவி பெயரையோ, கணவன் பெயரையோ கேலியாகக் கேட்டு, கூட்டமாகச் சிரித்து விடுதலைசெய்வார்கள். நக்கலும் நையாண்டியுமான விளையாட்டு.
இன்றைய மாலைகளில் டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், எக்ஸ்ட்ரா ஸ்டடி என, குழந்தைகள் மாட்டிக்கொள்கிறார்கள். `எம்புட்டுக் கொடுத்தால்...' விடுவார்களோ பெற்றோர்கள்!

1888-ம் ஆண்டில் ஜான் ஜெ.லவ்டு என்பவரால் முதல் பால்பாயின்ட் பேனா கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் உபயோகித்த மை அவ்வப்போது கெட்டியாகி மக்கர் பண்ணும். ஆனாலும், காகிதம் மட்டும் அல்லாமல் தோல், மரம் போன்ற பொருட்களில் ஏதேனும் எழுத, அதைவிட்டால் வேறு வழி இல்லை.
ஹங்கேரியன் செய்தித்தாள் ஆசிரியர் லாசோ பைரோவுக்கு, ‘ஃபவுன்டெய்ன் பேனாக்களின் மீது கடுப்பு வர, காரணம் இருந்தது. ஃபவுன்டெய்ன் பேனாவில் அடிக்கடி இங்க் அடைக்க வேண்டும். சில நேரங்களில் அது ஒழுகி, சட்டைப்பையில் மேப் போட்டது. பால்பாயின்ட் பேனாவையே உபயோகிக்கலாம் என்றால், அதில் மை கொடுமை. சரியான மையைக் கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த பைரோ, தன் வேதியியல் சகோதரன் ஜியோர்ஜியைச் சேர்த்துக்கொண்டு புது மையையும், கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்ட பால்பாயின்ட் பேனாவையும் உருவாக்கி பேடன்ட் வாங்கினார். ஹிட்லரின் காலம். நாஜிகளிடம் இருந்து தப்பிக்க அர்ஜென்டினா சென்ற பைரோ, அங்கு கடையைப் போட்டார்.
அங்கு இருந்து சில சாம்பிள்களை வாங்கிச் சென்ற அமெரிக்காவின் பிசினஸ்மேன் மில்டன் ரீனால்ட்ஸ், அமெரிக்கா திரும்பியதும் ஆரம்பித்ததுதான் ரீனால்ட்ஸ் பேனா கம்பெனி. பேனாவை வைத்து காப்பி அடிப்போம்; இவர் பேனாவையே காப்பி அடித்திருக்கிறார். 1945-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி, நியூயார்க்கின் கிம்பெல்ஸ் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பால்பாயின்ட் பேனாவை அறிமுகப்படுத்தினார். அன்று 5,000 பேர் கடையை மொய்க்க, ஒரே நாளில் 10,000 பேனாக்கள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.
பிறகு, உலகம் முழுக்க வியாபாரிகள் புதுப்புது பேனாக்கள் மற்றும் விசித்திரமான விளம்பர வாசகங்களுடன் விற்பனைக்காகக் கிளம்பி வந்திருக் கிறார்கள். சில உதாரணங்கள்... `எங்கள் பேனாவை, இரண்டு கைகளாலும் எழுதலாம்; எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம்' போன்றவை.
`ஒரு நல்ல பால்பாயின்ட் பேனாவினால் இரண்டு மைலுக்குக் கோடு போட முடியும்' எனப் படித்தேன். யாரும் போட்டுப்பார்க்கப்போவது இல்லை என்னும் நம்பிக்கையில் சொன்னார்களோ என்னமோ?