மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.200

`இல்லை’ மயமான ‘தொல்லை’ மையம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

மீபத்தில் ஒரு நாள் மருத்துவரின் அறிவுரைப்படி பரிசோதனைகளுக்காக சென்னையின் மையப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பரிசோதனைக் கூடத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு, பரிசோதனைக்கு வந்திருந்தவர்கள் அமர போதுமான இருக்கைகள் இல்லை. சிலர் நின்றுகொண்டே இருந்தார்கள். எனக்கு `அப்டமன் ஸ்கேன்’ முடிந்தவுடன் ``சிறுநீர் கழித்துவிட்டு வாருங்கள் எம்ப்டி பிளாடரில் (empty bladder) மறுபடியும் ஒரு பரிசோதனை செய்ய வேண்டும்’’ என்று கூறினார்கள்.

கழிவறைக்கு சென்றால் அங்கே டாய்லெட் ஸீட்டுக்கு கவர் இல்லை; ஹேண்ட் ஷவர் இல்லை; ஹேண்ட் வாஷ் லிக்விட் இல்லை; டிஷ்யூ பேப்பர் இல்லை. இப்படி ‘இல்லை’கள்தான் நிறைய இருந்தன. மேலும் கழிவறையும் மிகச் சாதாரண முறையிலேயே பராமரிக்கப்பட்டிருந்தது. இவை எல்லாவற்றையும்  தெரிவிப்பதற்கு புகார் பெட்டி உள்ளதா என்று கேட்டேன். அதுவும் இல்லையாம்! ``ஒரு மருத்துவப் பரிசோதனைக் கூடத்தில்... அதுவும், கர்ப்பிணிப் பெண்களும் அதிகமாக வரும் இடத்தில் இப்படி இருக்கிறதே!’’ என்று கேட்டால், திருப்திகரமான பதில் இல்லை!

இனிமேலாவது கவனிப்பார்களா?!

- ஸ்ரீமதி எஸ்.குமார், நுங்கம்பாக்கம்

பிஞ்சு மனதைப் பிழியலாமா..?

அனுபவங்கள் பேசுகின்றன!

ன் பேத்தி ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி படிக்கிறாள். அந்தப் பள்ளியில் கலைநிகழ்ச்சி நடைபெற இருந்ததால், சிறுமிகளை டான்ஸ் பிராக்டீஸ் செய்ய அழைத்திருக்கிறார்கள். என் பேத்தியும் ஆசையாக சென்றுள்ளாள். ஆனால், ஆசிரியைகள் ‘’கறுப்பாக இருக்கிறாய். அதனால் நீ வேண்டாம்’’ என கூறிவிட்டார்களாம். வீட்டுக்கு வந்த அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

சின்னக் குழந்தைகளை கறுப்பு, சிவப்பு என பிரித்துப் பார்ப்பது  சரியா? இதனால் குழந்தைகள் மனம் பாதிக்கப்பட்டு, தாழ்வு மனப்பான்மையை சுமப்பார்களே..! பள்ளி நிர்வாகிகள் இது போன்ற விஷயங்களைக் கவனித்து, பிஞ்சு நெஞ்சங்கள் புண்ணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

- சு.கண்ணகி, வேலூர்

ஆதாரம் முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

அனுபவங்கள் பேசுகின்றன!

மாதாந்தர மளிகை சாமான்  லிஸ்ட்டை கடையில் கொடுத்துவிட்டு, பொருட்களை டெலிவரி செய்யும்போது அவற்றை சரிபார்த்து, பையனிடம் அவற்றுக்குண்டான பணத்தை கொடுத்துவிடுவேன். சென்ற மாதம் ஒரு நாள் கடைப்பையன் வந்து ``நவம்பர் மாதம் நீங்கள் வாங்கிய மளிகை சாமான்களுக்கு பணம் கொடுக்கவில்லை’’ என்றான். ``எங்களுக்கு யாரிடமும் கடன் வைக்கும் வழக்கமேயில்லை. நாங்கள் கொடுத்துவிட்டோம்’’ என்று சொல்லியும் அவன் நம்பாமல் நிற்க, நாங்கள் செய்வதறியாது திகைத்துப் போனோம்.

பொதுவாக, யாரிடம் பணம் கொடுத்தாலும் அந்த பில்லின் பின்புறம் `பணம் பெற்றுக்கொண்டோம்’ என்று சம்பந்தப்பட்டவரிடம் கையெழுத்து வாங்கிவிடுவேன். வீட்டில் தேடிப் பார்த்ததில் நவம்பர் மாத  பில்லின் பின்புறம், `பணம் பெற்றுக்கொண்டேன்’ என்று அந்த பையன் கையெழுத்துப் போட்டு கொடுத்திருந்தான். அதைக் காண்பித்தவுடன் வந்தவன் மேலும் பேசாமல் சென்றுவிட்டான்.

ஆகவே தோழிகளே... எந்தப் பொருள் வாங்கினாலும், பணம் கொடுக்கும்போது கையெழுத்து வாங்கிகொள்வது நல்லது.

- விஜயா, சென்னை-11

மனம் கவர்ந்த மருந்தகம்!

அனுபவங்கள் பேசுகின்றன!

ண்மையில் ஒரு மருந்துக் கடைக்கு மருந்து வாங்க சென்றேன். கடையில் ஓனர் இல்லை; வேலை செய்யும் நபர்தான் இருந்தார். மருந்துச் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு, ‘’இதில் உள்ள  4 மருந்துகளில், ஒரு மாத்திரையின் பெயர், அளவு சரியாகத் தெரியவில்லை. முதலாளிக்கு போன் செய்கிறேன்... அவர் வந்துவிடட்டும்’’ என்றவர், என்னை உட்காரச் சொன்னார். போன் செய்த பத்தாவது நிமிடத்திலேயே முதலாளி வந்து, மாத்திரையை எடுத்துக் கொடுத்தார். மாத்திரையின் விலையும் குறைவுதான். எனக்கு மனத்திருப்தியாக இருந்தது.

மாத்திரை கொடுப்பதில் அலட்சியம் காட்டாமல், பொறுப்பாக நடந்துகொண்ட தொழிலாளியையும், நோயாளியின் நலனில் அக்கறைகொண்டு உடனடியாக வந்த முதலாளியையும் மனதார பாராட்டிவிட்டு வந்தேன்.

- ஏ.உமாராணி, தர்மபுரி