மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 27

கலைடாஸ்கோப் - 27
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 27

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

ஐஸ் க்யூப்ஸ்

``சொல்லாமல் மறைத்த காதலின் நினைவுகள் எல்லாம், சப் கான்ஷியஸ் மைண்டின் அடி ஆழத்தில் தண்ணீர் மாதிரி தேங்கிவிடும்; வாழ்க்கை முழுக்க, உள்ளே தளும்பிக்கொண்டே தொந்தரவு செய்யும். அதில் இருந்து தப்பிக்கத்தான் இந்த டெக்னாலஜி” என்றான் மைண்ட் இன்ஜினீயரிங் துறை ஆராய்ச்சியாளன் இந்திரன்.

கலைடாஸ்கோப் - 27

``அந்த நினைவுகளின் மாயத் தண்ணீரை ஐஸ் க்யூப்களாக மாற்றி, சேமிக்கப்போகிறோம். அதுதான் இந்த புராஜெக்ட்டின் திட்டம். மனிதகுலத்துக்கே இது ஒரு வரப்பிரசாதம்” என்றவன் கலைந்த முடி, உறக்கம் இல்லாத கண்களுடன் சிரித்தான்.

தன் வெளிறிய லேபின் நூற்றுக்கணக்கான ஃப்ரீஸர்களை, பழைய யுனிவர்ஸிட்டி நண்பர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு ஃப்ரீஸரும் சீல் செய்யப்பட்டு யார் யாருடையது எனப் பெயர் எழுதப்பட்டிருந்தது. எல்லோரும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நின்றனர்.

“என்ன விளையாட்டு இது... இறந்துபோன நினைவுகளை எதற்குச் சேமிக்க வேண்டும்?” என்றாள் சௌமியா. அதே பழைய துடுக்கு; அதே உதாசீனம்.
``நினைவுகளுக்கு மரணம் இல்லை” என இந்திரன் புன்னகைத்தான்.

சட்டென ஒரு ஃப்ரீஸரில் இருந்து ஐஸ் க்யூப் உருகி, ஒரு கோடாக மார்பிள் தரையில் வழிந்து வந்து, சௌமியாவின் பாதங்களைச் சுற்றி ஜில்லிட்டுப் படர்ந்தது. அந்த ஃப்ரீஸரின் மீது எழுதியிருந்த பெயரைக் கவனித்தாள்...

அது இந்திரன்.

முத்தம்

முத்தத்தையும் காதலையும் `பிரிக்க’ முடியாதுதான். ஆனால், முத்தத்தை வெறும் ஆண் - பெண் காதலோடு மட்டும் குறுக்கிவிட முடியாது. முத்தத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் மானுடவியலாளர்கள் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. முத்தத்தை அறிவியலாக மட்டுமே பார்க்கும் இத்தாலியன் அறிஞர் Cesare Lombroso போன்றவர்கள் ஒப்புக்கொள்ளும் முத்த அறிவியல் என்னவென்றால், ஆதிகாலத்தில் இருந்து அம்மாக்கள், குழந்தைகளுக்கு வாயில் இருந்து வாய்க்கு உணவூட்டும் பழக்கத்தில் இருந்தே முத்தம் தோன்றியிருக்கக்கூடும் என்பது. பறவைகள் அலகினால் குஞ்சுகளுக்கு உணவூட்டுவது ஞாபகம் வருகிறதா?

கலைடாஸ்கோப் - 27

ஆனால், இந்த லிப் டு லிப் ரொமான்ட்டிக் முத்தம் எங்கே தோன்றியது? சிம்பன்ஸி போன்ற விலங்குகள் முத்தமிட்டுக்கொள்வதை அவதானித்த சார்லஸ் டார்வின், `அவை வெறும் ரொமான்ட்டிக் முத்தங்கள் மட்டுமே அல்ல’ என்கிறார். `சண்டையிட்டுக்கொண்ட பின்னர் சமாதானம் செய்ய, நட்பை வெளிப்படுத்த என நிறையக் காரணங்கள். மனிதர்களுக்கும் அவை இயல்பே. ஆனால், ரொமான்ட்டிக்காக லிப் டு லிப் முத்தம் என்பது எல்லா நாடுகளிலும் இல்லை. Fuegian பழங்குடிகளிடம் அந்தப் பழக்கம் இல்லை’ என உதாரணம் காட்டினார்.

ஆகக் கடைசியில் பார்த்தால், Vaughn Bryant போன்ற மானுடவியலாளர்கள் ரொமான்ட்டிக் முத்தம் தோன்றிய இடமாக இந்தியாவைத்தான் கைகாட்டி ஆச்சர்யப்படவைக்கிறார்கள்.

``அலெக்ஸாண்டர் கி.மு 326-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவுக்குச் சென்று திரும்பியபோதுதான் ஐரோப்பாவில் இந்த லிப் டு லிப் முத்தம் அறிமுகம் ஆனது” என்கிறார் Bryant. உடலை ஆலயமாக, காதலையும் காமத்தையும் தெய்வீகமாகக் கொண்டாடிய, காமசூத்ரா எழுதிய, நம் ஆட்கள்தான் முத்தச் சத்தத்திலும் முன்னோடிகள். ஆனால், அவர்களின் வாரிசுகள்தான் சினிமாக்களில் முத்தத்தைப் பூங்கொத்தால் மறைத்த வரலாற்றுக் குற்றத்தையும் செய்தார்கள்!

ஆட்டோகிராஃப்

பள்ளி - கல்லூரி இறுதி ஆண்டுகளில், கையில் ஒரு ஆட்டோகிராஃப் நோட்டுடன் பிரிவுத்துயர் முகங்களில் படர, வாசகங்களும் கையெழுத்தும் எழுதி வாங்கியதும் கொடுத்ததும் ஞாபகம் இருக்கிறதா? நட்புதான் பிரதான காரணம் என்றாலும், சில ரொமான்ட்டிக் பரிமாறல்களும் மௌனமாக அரங்கேறும்.

கலைடாஸ்கோப் - 27

`இதயம்’ முரளி போல வருடம் முழுக்க சைலன்டாக ஒன்வேயில் காதலை ஓட்டிப்பார்த்துக்கொண்டிருந்த சில ஜீவன்கள், ஆட்டோகிராஃப் போடும் அன்றேனும் ரகசியக் காதலி/காதலன் தாமாக வந்து, நோட்டை வாங்கி ஏதாவது கிறுக்கிக் கொடுக்க மாட்டார்களா என ஏங்குவார்கள். அதிலும் அவர்கள் ஆள் தெரியாத்தனமாக நோட்டை நீட்டினால், அதில் எழுதுவதற்கு என ஏதாவது வார இதழில் வந்த மொக்கைக் கவிதைகளை, மனதில் நகலெடுத்து வைத்திருப்பார்கள்.

கண்களில் பிரிவாற்றாமையை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்ததுபோல பாவனை. `ரயில் பெட்டிகள்கூடப் பிரியலாம். தண்டவாளங்கள் பிரிவது இல்லை’ போன்ற நவீன படிமங்கள்...

படித்ததும் ரகசியக் காதலி `வாவ்’ என ஃபீல் பண்ணும்போது ஏதோ ஃபைனல் எக்ஸாமில் பாஸான மாதிரி பரவசம் உண்டாகும். ஆனால், சிலர் அதற்கு எல்லாம் அசர மாட்டார்கள். கண்டுகொள்ளாமல் நோட்டை அடுத்தடுத்த ஆட்களிடம் நீட்டி, பார்க்கிங்கில் டோக்கன் வாங்கும் பாவனையில் போய்க்கொண்டே இருப்பார்கள். `என்னைப் பார்த்து ஒரு மேகம்... ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்’ கதையாக, நம்ம ஆளும் ரகசியமாகக் கண்ணீர் மல்கியபடி அன்றைய நாளை மென்று விழுங்குவான்.

வரையத் தெரிந்த சில வம்பன்கள் ரவிவர்மா ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி ஏதாவது ரோஜாப் பூ, இணைக் கிளிகள் என வரைந்து கொடுத்து மற்றவரை பொறாமையில் புழுங்கச் செய்வதும் உண்டு. இப்படி ஆய கலைகள் அறுபத்து நான்கையும் பிரயோகித்து ஆட்டோகிராஃபை தங்கள் இதயத்தின் இ.சி.ஜி கிராஃப்போல போட்டுக்காட்ட முயல்வார்கள். ஆனால், அடுத்த நாளில் இருந்து தொடர்புகொள்ள தொலைபேசி, கணினி என எந்தச் சாதனமும் இல்லாத காலம். அட்ரஸ் வாங்குவதோடு சரி. ஐந்து - பத்து வருடங்களுக்குப் பிறகு, குழந்தை-குட்டி சகிதம் சந்தித்துக்கொண்டால்தான் உண்டு.
இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு ஆட்டோகிராஃப் வாங்கும் பழக்கம் உண்டா எனத் தெரியவில்லை. வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் டக்கென ரிக்வெஸ்ட் கொடுத்து ரிலேஷன்ஷிப்பை மெயின்டெயின் பண்ண முடியும் அல்லவா?

கலைக் காதல்

கலைடாஸ்கோப் - 27
கலைடாஸ்கோப் - 27

நானோ ஹிஸ்டரியில் முத்தத்தை ஆபரேஷன் பண்ணிப் பார்த்ததில், அதன் ரொமான்ட்டிக் தன்மை போய்விட்டதுபோல தோன்றுகிறதா? `அனுபவிக்கணும்... ஆராயக் கூடாது’ என கமல்ஹாசன் ஒரு படத்தில் சொல்லியிருப்பார் (அவர் சொன்னது பழமொழியை). ஆகவே, பிரபல ஓவியர்கள் முத்தத்தை எப்படி தங்கள் படைப்புகளில் வெளிப்படுத்தியிருக் கிறார்கள் எனத் தேடினேன். க்ளிம்ட் (Gustav Klimt) முதல் பேங்க்சி (Banksy) வரை விதவிதமாக வரைந்திருக்கிறார்கள்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! 

அலைகள் ஓய்வதில்லை

காதலில் கெமிஸ்டரி என்பது, சினிமா புரொமோஷன்களின் உபயத்தில் அடிக்கடி காதில் விழுகிறது. `ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் அப்படி ஒரு கெமிஸ்டரி!' என பில்ட்அப் கொடுப்பார்கள். காதலில் கெமிஸ்டரியின் பங்கு என்பது டோபமைன் முதல் செரோடோனின் வரை பல ஹார்மோன்களின் விளையாட்டு என்பதை ஏற்கெனவே படித்திருப்பீர்கள். விடுங்கள். காதலில் பிசிக்ஸும் அப்ளை ஆகிறது தெரியுமா? அதுவும் குவான்டம் பிசிக்ஸ்.

கலைடாஸ்கோப் - 27

காதலில் குவான்டம் இயற்பியலின் இடம் என்ன என, பல இயற்பியல் அறிஞர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் ஆசாமியான கிறிஸ்டோபர் ஹிராடா (Christopher Hirata) போன்றோர் காதலைவிட குழப்பமான ஈகுவேஷன்களைக் கொடுத்து மிரட்டுகிறார்கள். குவான்டம் இயற்பியலில் முக்கியமானது, எலெக்ட்ரான்கள் துகள்களாவும் இருக்கும் அலைகளாகவும் இருக்கும் என்கிற தியரி. அண்டத்தில் உள்ள எல்லாம் அலைகளாகவும் இருக்கின்றன, அண்டம் உள்பட. இதில் மனிதர்களும் விதிவிலக்கு அல்ல.

இந்த அலைகளுக்கும் மனித நடத்தைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது எனும்போது இந்த அலைகள் காதலிலும் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன என குவான்டம் ஆசாமிகளின் தரப்பை எளிமையாக விளங்கிக்கொள்ளலாம். குறுந்தொகையில் புலவர் தேவகுலத்தார் பாடிய `நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆர் அளவின்றே…' என்னும் காதல் குறித்த பாடலில் அகலமான, நீளமான, ஆழமான என்றெல்லாம் அவர் குறிப்பு உணர்த்துவது இந்த அலைகளைத்தானா என அவரே வந்து சொன்னால்தான் உண்டு. 

கலைடாஸ்கோப் - 27

குணால் கே தாஸ் என்கிற நம் ஊர் பிசிக்ஸ் புரொஃபசர் `குவான்டம் மெக்கானிக்ஸ் இன் லவ்' என்னும் கட்டுரையில் சில உதாரணங்களைத் தருகிறார். ``இசையில் ஒரே ரசனை உள்ளவர்களுடைய அலைகளின் கிராஃப் ஒரே மாதிரியாக இருக்கும். அவர்களுடைய அலைகளின் ஏற்ற இறக்கங்களைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது அவர்களின் உறவில் ஸ்ட்ராங்கான ஒரு தன்மை இருக்க வாய்ப்பு அதிகம்’’ என்கிறார். இப்படி எல்லாவற்றுக்கும் அலைகளைப் படம் வரைந்து பாடம் எடுக்கிறார்.
 
இவ்வளவு சுற்றிவளைத்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது அல்ல. நம் ஆட்கள் சிம்பிளாக `வேவ்லெங்த் செட்டாகல மச்சி' என்று போகிற போக்கில் குவான்டம் பிசிக்ஸைப் போட்டு உடைப்பதைப் பார்த்த(கேட்ட)தில்லையா நீங்கள்?