Published:Updated:

மைல்ஸ் டு கோ - 1

மைல்ஸ் டு கோ
News
மைல்ஸ் டு கோ

படங்கள்: ஸ்டில் ராபர்ட்

அடர்ந்து இருள் படர்ந்து கிடக்குது காடு. செல்ல வேண்டும் பல காத தூரம்.' `மைல்ஸ் டு கோ... உன் வாழ்க்கையின் எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ மறக்கக் கூடாத மந்திரம் இது.

‘நீ கடக்கவேண்டியது வெகுதூரம்’னு ராபர்ட் ஃப்ராஸ்ட் சொன்ன இந்த வாக்கியம் ஒருத்தரை உற்சாகப்படுத்தலாம்; ஆறுதல்படுத்தலாம்; பாராட்டலாம். உன் உச்சத்தை உடனே தொட்டுடாதே... `தொட்டுட்டோம்’னு நினைப்பு வந்துட்டாக்கூட, அதுக்கு அப்புறம் வளர்ச்சி இல்லை’னு ஒருநாள் சொன்னார் என் டைரக்டர். உண்மைதான். உச்சிக்குச் சென்றுவிட்டால், எல்லா பக்கங்களும் சரிவுதான். அதான் எப்பவும் நான் எனக்கே சொல்லிக்கொள்கிற மந்திரம்...  ‘மைல்ஸ் டு கோ’!

சைதாப்பேட்டை பக்கம் பேர்ன்பேட்டை என்ற இடத்தில், ஓர் ஒண்டிக்குடித்தன ரூமில் இருந்து பள்ளிக்குப் போய் வந்தப்பவும் நான் வெற்றி மாறன்தான். வெனிஸ் உலகத் திரைப்பட விழாவில் ‘விசாரணை’ படத்துக்காக விருது வாங்கினப்பவும் அதே வெற்றி மாறன்தான். பேர்ன்பேட்டைக்கும் வெனிஸ் விழாவுக்கும் நடுவில் நான் கடந்த மைல்கள்தான் இதுவரையிலான என் வாழ்க்கை. அப்படி நான் நினைச்ச, நடந்த, நடந்து கடந்த, கடக்க விரும்பும் மைல்களைப் பத்தி பேசலாம். இந்த முன்-பின் காலப் பயணத்தைப் பிரிக்கிற புள்ளியா இப்போ கண் முன்னால் நிற்பது ‘விசாரணை’!  ஆரம்பம் தற்செயலா நடந்ததுதான். ஒருநாள் தனுஷிடம் ‘தியேட்டர்ல மூணே மூணு நாள் ஓடுற ஒரு படம் இருக்கு. தயாரிக்கிறீங்களா?’னு கேட்டேன். ‘உலகத்துல எந்த டைரக்டரும் ஒரு தயாரிப்பாளரிடம் இப்படிச் சொல்லியிருக்க மாட்டாங்க’னு சிரிச்ச தனுஷ், என் மீதுள்ள நம்பிக்கையில் கதையைக்கூட கேட்காமல் அங்கேயே `ஆரம்பிச்சிடலாம்'னு சொன்னார்.

அந்த அளவுக்கு ‘விசாரணை’ மேல் எனக்கு நம்பிக்கை வரக் காரணமான மனிதர் சந்திரகுமார். ‘விசாரணை’யின் மூலக்கதையான ‘லாக்கப்’ நாவலை எழுதியவர். இந்த நாவலை எங்க டைரக்டரிடம் வொர்க் பண்ணின ஞானசம்பந்தன் என்கிற தங்கவேலவன்தான் படம் பண்ணலாம்னு என்னிடம் கொண்டுவந்து தந்தார். இப்ப அவரும் படம் பண்ணப்போறார். ‘உங்கள் நாவலைப் படமாக்குறேன்’னு நான் சொன்னதும், ‘அன்னைக்கு நாங்க அழுத அழுகை, அந்த நாலு சுவர் தாண்டி வெளிய கேட்டுடாதானு ஏங்கினோம். நாளைக்கு இந்த உலகமே அதைக் கேட்கப்போகுது தோழர்’னு சந்திரகுமார் சொன்ன வலி நிறைந்த அந்த வார்த்தைகள்தான் இந்தப் படைப்பின் ஆதாரம்.  ‘விசாரணை’ படத்தை உலகத் திரைப்பட விழாக்களுக்காக எடுக்கணும்னு முடிவுபண்ணினேன். அதனால்தான் தனுஷிடம் அப்படிக் கேட்டேன். திரைப்பட விழாக்கள் கலையை, திறமையை வெளிக்காட்டும் தளம் மட்டுமே கிடையாது; மாற்று சினிமாவுக்கான மாற்றுச் சந்தையையும் கண்டுபிடிக்கிற இடம். அந்த மார்க்கெட் நோக்கித்தான் ‘விசாரணை’ படத்தைக் கொண்டுபோக நினைச்சேன். அப்ப என் மனசுல வந்த முதல் விழா, கேன்ஸ் திரைப்பட விழா.

கோடம்பாக்கத்தில் இருக்கிற எல்லா சினிமாக்காரனுக்குமே ஒரு கர்வம் இருக்கும். முக்குல நின்னு கடன் சொல்லி ஒன் பை டு டீ குடிச்சாலும் ‘நாங்கள்லாம்...’ங்கிற மிதப்புல எப்பவும் இருப்போம். ஆனா, கேன்ஸ் நகர வீதிகளில் பத்து நாட்கள் நடந்தாப் போதும்.... அந்தக் கர்வத்தை எல்லாம் அடிச்சு நொறுக்கிடும். `சினிமா என்கிற கடல்ல ஒரு துளியாக்கூட இருக்க நமக்குத் தகுதி இருக்கா?’னு ஒரு நிதானம் வந்துடும். அப்படி ஓர் ஊர்; அப்படி ஒரு விழா. `சினிமாவுக்காக தமிழன் என்ன வேணும்னாலும் செய்வான்’னு சொல்வாங்க. ஆனா, அந்த ஊர் மக்கள் முன்பு நாமெல்லாம் ஒண்ணுமே இல்லை. காலையில் 9 மணி ஷோ. அந்த தியேட்டர்ல 1,500 பேர் படம் பார்க்கலாம். 7:30 மணிக்கு கிளம்பிப் போறேன். அன்னைக்கு லேசா மழை. எனக்கு முன் 2,000 பேர் குடையோடு நிக்கிறாங்க. சினிமாவுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராயிருக்காங்க. அந்த ஊர் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் எல்லார்கிட்டயும் ஒரு ப்ளக்கார்டு இருக்கு. அதுல `வெளிய ரொம்பக் குளிரா இருக்கு.

ஒரு டிக்கெட் இருந்தா, நானும் உங்ககூட வந்து படம் பார்த்திடுவேன்’கிற வாசகங்கள். எக்ஸ்ட்ரா டிக்கெட்டைக்கூட ரசனையா கேட்கிறாங்க. சுத்தி எங்கே பார்த்தாலும் சினிமாதான். ஒரு ஹோட்டல்... `ஹில்டன்’னு நினைக்கிறேன். காரிடார்ல உட்காந்து சாப்பிடலாம். அங்கே ஒரு சேர்ல ஒரு நடிகையோட சிலை. அவங்க கேன்ஸ் வந்தபோது கடைசியா உட்கார்ந்து சாப்பிட்ட இடமாம் அது. அப்படி சினிமாவையும் சினிமாக்காரர்களையும் கொண்டாடுற இடம் கேன்ஸ். சினிமாவில் நானும் ஓர் அங்கமா இருக்கேன்னு பெருமையா உணரவெச்ச இடம். அந்தத் திரைப்பட விழாவுக்கு நம்ம படமும் போகணும் என்பதுதான் அப்போ எங்க கனவு.

மைல்ஸ் டு கோ - 1

`கேன்ஸ் பட விழாவுக்கு எந்த வெர்ஷனை அனுப்பலாம், எப்படி எடிட் பண்ணலாம்?’னு எடிட்டர் கிஷோரோட ஆபீஸ்ல பேசிட்டு இருந்தோம். அந்தச் சமயத்தில்தான் கிஷோர் மயங்கி விழுந்தார். ஹாஸ்பிட்டலுக்குத் தூக்கிட்டு ஓடினோம்.

அவரோட கடைசி மூச்சு, எண்ணம் எல்லாத்திலும் `விசாரணை' படம்தான் இருந்தது. ஒரு வாரப் போராட்டத்துக்குப் பிறகு, இனி அவர் இல்லை என்பதை ஜீரணிக்கவே எங்களுக்கு பல நாட்கள் ஆகிடுச்சு. அதுக்குள்ள கேன்ஸ் பட விழாவும் முடிஞ்சிருச்சு. அந்த வெர்ஷனை அனுராக் காஷ்யபுக்கு அனுப்பியிருந்தேன். அவர் படம் பார்த்துட்டு ‘இந்திய சினிமாவுக்கு ஒரு புதுத் திரைமொழி வரப்போகுது’ என்பதை இந்தப் படம் தெளிவா சொல்லுது’னு ‘விசாரணை’ படத்துக்குப் பெரிய மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தார். அவர்தான் வெனிஸ் திரைப்பட விழாவுக்கு டி.வி.டி அனுப்பச் சொன்னார். `நானே நேர்ல போய் கொடுக்கிறேன்’னு கிளம்பிப் போயிட் டேன். `அந்தத் தேர்வாளர் தனியாத்தான் படம் பார்ப்பார்’னு சொன்னாங்க. எக்ஸாம் எழுதிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிற ஒரு சின்னப் பையன் மனநிலையில் நான் வெளியே காத்திருந்தேன். பொண்ணு பார்த்துட்டுப் போய் `லெட்டர் போடுறோம்’னு சொல்வாங்களே...  அந்த மாதிரி `மெயில் அனுப்புறேன்’னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார் அந்த மனுஷன்.

எனக்கு பக்குனு ஆகிடுச்சு. அதுக்குள்ள சென்னையில் இருந்து உதவியாளர்கள் `என்ன ஆச்சு... என்ன ஆச்சு?’னு கேட்டுட்டே இருந்தாங்க. நானும் ‘அவ்ளோதான்டா... அடுத்த வேலையைப் பார்க்கலாம்’னு சொன்னேன். அடுத்த நாள் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பாளர் குனித் மோங்காவிடம் பேசினப்ப, ‘படம் கொஞ்சம் லெங்த்தா இருக்கு’னு தேர்வாளர் சொன்னதா சொன்னார். உடனே 140 நிமிஷம் இருந்த படத்தை 95 நிமிஷத்துக்குக் குறைச்சு திரும்ப அனுப்பினேன். தேர்வாளரும் அவர் டீமும் படம் பார்த்துட்டு ‘இது நல்லா இருக்கு’னு சொன்னாங்க. சில நாட்கள் கழிச்சு, அவர் கால் பண்ணி `வெற்றி... உங்க படம் நல்ல படம். ஆனா, முதல் லிஸ்ட்ல உங்க படம் வரலை. பார்த்துட்டுச் சொல்றோம்’னு சொன்னார். ‘விசாரணை’ படம் எடுத்ததுக்கான நோக்கமே போயிடும் போலிருக்கே’னு நான் பதறிப்போய் அனுராக்கிட்ட சொன்னேன்.  `கவலைப்படாதீங்க வெற்றி.

உங்க படம் நிச்சயம் வரும்’னார். பிறகு எல்லாத்தையும் மறந்துட்டு மனைவிகூட ஒருநாள் வெளியே போயிருந்தேன். ரொம்ப நாட்கள் கழிச்சு அவங்ககூட டின்னர். அப்ப ஒரு மெயில். `விசாரணை’ வெனிஸ் விழாவுக்கு செலெக்ட் ஆகிருக்கிறதா தகவல் அனுப்பியிருந்தாங்க. `வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவுக்குத் தேர்வான முதல் தமிழ் சினிமா இதுதாம்மா!’னு மனைவிகிட்ட என் சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிறேன். அந்த விழாவுக்கு சந்திரகுமாரையும் கூட்டிட்டுப்போயிருந்தேன். மனசுக்குள் ஓர் ஆத்ம திருப்தி. வெனிஸ்லயே படம் பார்த்த இயக்குநர் ஏ.எல்.விஜய் சென்னைக்கு வந்ததும் ஒரு பிரஸ்மீட் வெச்சு, `விசாரணை' படம் தனக்குள் ஏற்படுத்தின பாதிப்பைச் சொன்னார். அடுத்து, நான் மணிரத்னம் சாருக்கு படத்தைக் காட்டணும்னு ஆசைப்பட்டேன். அவர் படம் பார்த்துட்டு, ‘கமர்ஷியல் படம் பார்த்துடுவேன். ஆர்ட் படங்கள் கொஞ்சம் மெதுவா இருக்கும். அதனால, யோசிப்பேன். `விசாரணை' அந்தக் குறைகூட இல்லாத கம்ப்ளீட் சினிமா’னு பாராட்டினார். ரஜினி சார் பார்த்துட்டு, ‘உங்களுக்கு நான் என்ன செய்யணும் வெற்றி சொல்லுங்க?’னு அவ்ளோ சந்தோஷப்பட்டார். படம் வந்த பிறகு, பத்திரிகைகள் பாராட்டுறதைவிட, ரிலீஸுக்கு முன்னரே விமர்சனம் வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அது ஒரு குருட்டுத் தைரியம்தான். ஒருவேளை அவங்களுக்குப் பிடிக்காமப்போனா, பாதிப்பாகிடும். தைரியமா பிரஸ் ஷோ போட்டேன். அவங்களும் படத்தை மிகச் சரியா கொண்டுபோய் மக்களிடம் சேர்த்தாங்க.

‘பொல்லாதவன்’ கமர்ஷியல் கதை. ஓடிடும்னு தெரியும். அதே டீம் சேர்ந்து `ஆடுகளம்’ பண்ணும்போது பெரிய எதிர்பார்ப்பு, பெரிய ஓப்பனிங் இருக்கும்னு தெரியும். `விசாரணை' படத்துக்குத்தான் நான் கொஞ்சம் பயந்தேன். ஆனா, மக்கள் கொடுத்த அங்கீகாரம் ரொம்பப் பெருசு. முதல் காட்சியில் ஆரம்பிச்ச கைதட்டல்கள் தொடர்ந்து கேட்டுட்டே இருக்கு. இந்தியாவில் கலாபூர்வமான, உயர்ந்த ரசனை கொண்டவர்கள் தமிழ் ரசிகர்கள்தான்னு நினைக்கிறேன். இப்பதான் சினிமாவில் நான் என் முதல் அடியையே எடுத்துவெச்சிருக்கேன். இன்னும் போகவேண்டியது வெகு தூரம்னாலும் நான் இங்கு வந்து சேர்ந்த பாதையும் நீளமானது. இந்தச் சமயத்துல அந்த நீளமான பாதையும், ‘இவ்வளவு பேர் பாராட்டும்போது இதைக் கேட்டு மகிழ சார் இல்லையே’ங்கிற எண்ணமும் ஒரு புள்ளியில் குவியும்போது அந்த நாள் நினைவுக்கு வருது.

மைல்ஸ் டு கோ - 1

டிசம்பர் 26, 1997... சாலிகிராமம் ஸ்டேட் பேங்க் காலனி, மூணாவது தெரு. வீட்டின் முதல் மாடி. பெரிய பூட்ஸ், இன் பண்ணின சட்டை, நிறைய வளர்ந்த சுருள்சுருளான முடி. லயோலா மாணவன் என்ற பெருமிதம், நிறைய சினிமா பார்த்ததால் வந்த ‘எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவத்துடன், ‘எக்ஸ்க்யூஸ் மீ’னு சத்தமாக் கூப்பிடுறேன். ஓய்வா எதையோ வாசிச்சிட்டு இருந்தவர் தலையைத் தூக்கி, ‘என்ன வேணும் உனக்கு?’ங்கிற மாதிரி பார்த்தார். ‘ஹலோ மிஸ்டர் பாலுமகேந்திரா. மை நேம் இஸ் வெற்றி மாறன். ஃபாதர் ராஜநாயகம் ஆஸ்க்டு டு மீட் யூ.’ ‘வெளியில போ... நாளைக்கு வா பார்க்கலாம்.’ அன்னைக்கு அதட்டி மிரட்டி ஓடவைத் தவர்தான், பின்னாட்களில் என் கர்வத்தை நீக்குவார்; சினிமா போதிப்பார்; அப்பாவைப் போல் அரவணைப்பார்; முரண்படுவார்; என்னைக் கண்டு மிரள்வார்னு அப்போ எனக்குத் தெரியாது!

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan