
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்
“இதுதான் சார் நீங்க கேட்ட மாந்திரீகத் தட்டு.
நீலர் பழங்குடிகளோடது” என்றான் மியூஸியம் பணியாளன் பழனி.
வில்லியம்ஸ் கண்ணாடிக் கூண்டுகளுக்குள் இருந்த தட்டைப் பார்த்தான். இரண்டு அடி ஆரம் உள்ள சுடுமண் தட்டு. தெய்வங்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன... என பல சுடுமண் உருவங்கள் தட்டில் உறைந்து நின்றன.

`அபாரம். இந்த நீலர் இனம் ஒரு ஆள்கூட இல்லாம அழிஞ்சுபோச்சு' - இணையத்தில் படித்ததை மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
“ஆமாம் சார். ஹில் ஸ்டேஷன்ஸ், டீ எஸ்டேட், பல மலைநகரங்கள் அவர்கள் மரணத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கு” என்றான் பழனி.
வில்லியம்ஸ் சங்கடமாகப் புன்னகைத்தான். `அசாத்திய திறமைகொண்ட பழங்குடிகள். மிகவும் நுண்ணுணர்வு கொண்டவர்கள்' என தன் ஆந்த்ரோபாலஜிஸ்ட் நண்பன் சொன்னது ஞாபகம் வந்தது.
“உண்மைதான் சார்... அசாத்தியத் திறமையானவங்க” - தூசியைத் தட்டினான் பழனி.
வில்லியம்ஸ் கண்ணாடிக் கூண்டில் சின்ன விரிசலைக் கவனித்தான்.
“ஆமா சார்... ரெண்டு, மூணு தடவை தட்டைத் திருடுறதுக்கு யாரோ ட்ரை பண்ணினாங்க. அதுல லேசா டேமேஜ் ஆகிருச்சு.”
`அப்படி என்ன இந்தத் தட்டில் விசேஷம்?' என உள்ளுக்குள் நினைத்தான்.
“என்ன சார்... இப்படி நினைச்சுட்டீங்க. இந்தத் தட்டுதான் நீலர்களுக்குப் பலமே.”
`அது எப்படி?’ எனக் கேட்க வாய் எடுத்தான் வில்லியம்ஸ்.

“அது அப்படித்தான்... இந்தத் தட்டு இருந்தா ஒரு நீலன் மத்தவங்க நினைக்கிறதைக்கூட காதில் துல்லியமாகக் கேட்க முடியும்” எனப் புன்னகைத்தான் பழனி!

சமீபத்திய மலையாளப் படம் `சார்லி’ பார்த்தேன். பொதுவாக `சார்லி’யை `அன்னையும் ரசூலும்’, `பிரேமம்’ அளவுக்கு தமிழ் இளைஞர்கள் கொண்டாடவில்லை. பின்னது இரண்டும் கிட்டத்தட்ட நம் தமிழ் மக்களுக்கு பழக்கமான தமிழ் சினிமாக்களைப் போலவே இருந்ததும் காரணமாக இருக்கலாம். சார்லியில் சின்னச் சின்ன உப கதாபாத்திரங்களுக்கு என கதைகள் இருந்தன. திரைக்கதையின் ஊடே நல்ல சில சிறுகதைகளைப் படிப்பதுபோல இருந்தது. காரணம், மலையாளத்தின் இளம்தலைமுறை சிறுகதை ஆசிரியர் உன்னி ஆர் திரைக்கதையில் வேலை செய்ததும் என நினைக்கிறேன். நான் சொல்லவந்தது இந்த சினிமாவைப் பற்றி அல்ல... இந்த சினிமாவில் வரும் ஒருவித `பொஹிமியன்’ மனநிலை பற்றி.
முக்கியக் கதாபாத்திரங்களான சார்லியும் டெசாவும், அடிப்படையில் பொஹிமியன் லைஃப்ஸ்டைலில் ஒருவித நாடோடி மனப்பான்மையில் திரிபவர்கள். பொஹிமியன் வாழ்க்கைமுறை என்பது, 19-ம் நூற்றாண்டில் மேற்கில் உருவான ஒரு வாழ்க்கைமுறை. திருமணம், குடும்பம், சமூகம், அரசியல் என்ற எல்லாவகையான சிஸ்டம்களுக்கும் எதிரான மனநிலை கொண்டவர்கள். அதிகார மனோபாவத்தை மறுப்பது, கட்டுப்பாடு இல்லாத கொண்டாட்டமான, அன்பும் காதலும் நிரம்பிய ஒரு பயணமாக வாழ்க்கையைப் பார்ப்பது, பணமே இல்லாமல் கிடைத்ததைப் புசிப்பது, திறந்தவெளியில் வசிப்பது போன்றவை. ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ மனோபாவம்.
வழக்கம்போல ஓவியர்கள், இசைஞர்கள், எழுத்தாளர்கள் என கலைஞர்கள்தான் இதை வரித்துக்கொண்டவர்கள். ஏழ்மையின் காரணமாக மட்டுமே நாடோடிகளாக வாழ்வது என்று இல்லாமல் இதை ரசனையான வாழ்க்கைமுறையாகவே பார்த்தார்கள். அதனால்தான் அவர்களுடைய நாடோடி வாழ்க்கையிலும் ஒருவித அழகியல் பிரதானமாக இருக்கும். அவர்கள் உடை போன்றவற்றில் அது பிரதிபலிக்கவும் செய்யும்.
இன்று பொஹிமியன் வாழ்முறை என்பது, ஒரு ஃபேஷன் ஸ்டேட்டஸாகச் சுருங்கிவிட்டது. அதனால் ஃபேஷன் டிசைன் உலகில் இன்று பொஹிமியன் ஸ்டைல் உடைகளை, கோடிகளில் வடிவமைத்து மாடல்கள் கேட்வாக் செய்கிறார்கள். இது பொஹிமியன் சிந்தாந்தத்துக்கு அடிப்படையில் எதிரானது. சே குவேரா நவீன இளைஞர்களின் டிஷர்ட் பிராண்ட் ஆனது போன்ற முரண்நகை இது!

சீனர்கள், ஜப்பானியர்கள் தங்கள் தாய்மொழி மீது விடாப்பிடியாகப் பற்றுடன் இருக்கிறார்கள். டு குன் என்னும் ஓவியரின் பெர்சனல் வெப்சைட்டைத் தேடிப்பிடித்தால், குச்சி குச்சியாக சீன எழுத்துக்கள் மட்டும் பரவிக்கிடக்கின்றன. கூகுளின் உதவியுடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால், குழப்பமே மிஞ்சியது. ஆனால், அவரது ஓவியங்களுக்கு மொழிபெயர்ப்பு தேவை இல்லை. அதுதான் காட்சி மொழியின் தனித்துவம். அது மொழிகளுக்கு அப்பால் இருக்கிறது.
சீன ஓவியர் டு குன் (Du kun) வரையும் எண்ணெய்ச் சாய சித்திரங்கள் (Oil paint) ஆச்சர்யப்படுத்தும்விதமாக இருக்கின்றன. முதல் பார்வைக்கு டிஜிட்டல் சித்திரம் என ஏமாந்தேன். குன், ராக் மியூஸிக் காதலன். சீனாவின் பிரபலமான ராக் ஸ்டார்களை தங்கள் ஊர் பாரம்பர்யக் கட்டடங்களின், பிரத்யேக மலைகளின், இயற்கையின் வடிவங்களைப் பயன்படுத்தி போர்ட்ரெயிட்டுகள் வரைகிறார்.

சீன ராக் ஸ்டார்கள் பற்றி தெரிந்தவர்களுக்கு இன்னும் சுவராஸ்யமாக இருக்கலாம். நான் அந்த ஓவியங்களின் நுணுக்கமான டீட்டெயிலுக்காக இணையத்தில் தேடித்தேடிப் பார்த்தேன். கணினியில் ஜூம்செய்து பார்த்தால், அந்த டீட்டெயில்கள் இன்னும் நுட்பமாக அருகில் வருகின்றன. நேரம் கிடைக்கும்போது கூகுளில் artist du kun எனத் தட்டிப்பாருங்கள்.

`அன்புள்ள…’ என ஆரம்பித்து, எழுத்தாளர்களைத் தவிர வேறு யாருக்காவது கடிதம் எழுதுகிறோமா எனக் கேட்டால், `இல்லை' என்பதே பதிலாக இருக்கிறது. `ஹாய்’ எனச் சுருக்கமாக மெசேஜிலோ மெயிலிலோ முடித்துவிடுகிறோம். செல்போன் புரட்சிக்கு முந்திய 90-களின் கடைசி வரை நான், வான் நீல வண்ண இன்லேண்ட் காகிதத்தில் கடிதம் எழுதிய தலைமுறைக்காரன். `What is Inland Letter?’ என யாஹூவில் யாரோ ஓர் இளைய தலைமுறை கேள்வியே கேட்டிருக்கிறது என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். என்னைப்போல ஒருவன், அதற்கு மாய்ந்து மாய்ந்து பதிலும் எழுதியிருப்பதைப் பார்த்தேன்.
அன்று சில்லறை கொடுத்தால் பெட்டிக்கடையிலேயே கிடைக்கும் இன்லேண்ட் லெட்டர்கள். சிலர் போஸ்ட் ஆபீஸ் பக்கம் போனால், மொத்தமாகவும் வாங்கி வைத்துக்கொள்வார்கள். கடிதங்கள் எழுதுவது ஒரு கலை. எனக்கு எழுத்து மீது ஆர்வம் வர, கடிதங்கள் எழுதியதும் ஒரு காரணம் என்பேன். `இங்கு நான் நலம். அங்கு நீங்கள் அனைவரும் நலமா?’ போன்ற குடும்பச் சமாசாரங்கள், `உன்னைப் பார்க்காமல் தூக்கம் வர மாட்டேன்’ என்கிறது போன்ற க்ளிஷே காதல் வசனங்கள்... என மனித உணர்வுகளைக் கொத்திக்கொண்டு பறந்த நீலப்பறவைகள் அவை.
விரிந்த சிறகைப்போல மூன்று பக்கங்களையும் மடித்து ஒட்டும் பேப்பர் ஒரு செ.மீ நீளத்துக்கு இருக்கும். அதிலும் விடாமல் இடம், வலம், மேல், கீழ் என நுணுக்கி நுணுக்கி எழுதுவோம். பிறகு முகவரி எழுதி போஸ்ட் பாக்ஸின் `அட’ எனத் திறந்திருக்கும் வாயில் போடவேண்டும். இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும், மூன்றாவது நாள் போய் சேர்ந்துவிடும். `நலமா?’ என்ற கேள்விக்கு `நலம்’ என பதிலைப் பார்க்க ஒரு வாரம் ஆகிவிடும். இன்று போன் ரிங் ஆகி உடனே எடுக்காவிட்டால், பி.பி எகிறுகிறது. தொழில்நுட்பம், காலத்தை மட்டும் அல்ல... நம் பொறுமையையும் சுருங்கிப்போக வைத்துவிட்டதா?

`லியோனார்டோ டா வின்சிதான் கத்தரிக்கோலை முதலில் வரைந்தவர். அதனால் அவர்தான் அதன் கண்டுபிடிப்பாளர்’ எனச் சொல்கிறது ஒரு குரூப். `எதற்கு... மோனாலிசாவுக்கு முடி வெட்டவா?’ என்கிறார்கள் எதிர் குரூப். காரணம் இருக்கிறது. `கத்தரிக்கோலின் வரலாறு எகிப்தில் ஆரம்பிக்கிறது’ என்கிறார்கள் அவர்கள்.
கத்தரிக்கோலை ஆங்கிலத்தில் `சிசர்ஸ்’ எனச் சொல்கிறார்கள் (தமிழில் மட்டும் யார் கத்தரிக்கோல் என்கிறார்களாம்). அதுவும் 20 செ.மீ நீளம் தாண்டினால், shears என்கிறார்கள். இந்த ஷியர் டைப் கத்தரிக்கோல்களைத்தான் கி.மு 1500-ல் எகிப்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை கி.பி 100 வாக்கில் ரோமன்கள் வடிவத்தில் கொஞ்சம் மெருகேற்றி இருக்கிறார்கள். பின்னால் 16, 17 நூற்றாண்டுகளில், உலகில் பல இடங்களில் கத்தரிக்கோல்கள் உற்பத்தி் செய்யும் தொழில்கள் பெருகியுள்ளன. தொழிற்புரட்சி ஒரு காரணம்.
பெரும்பாலும் வலது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கான கத்தரிகளே தயாரிக்கப்படுகின்றன. இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு என கொஞ்சமே கொஞ்சம் உற்பத்தி செய்வார்களாம். நம் ஊரில் அப்படிக் கிடைக்கிறதா எனத் தெரியவில்லை. எனக்கு இடது கைப் பழக்கமும் இல்லை.
`கத்தரிக்கோலில் இத்தனை வகை இருக்கிறதா?’ எனத் தேடியபோது பிரமிப்பாக இருந்தது. ஒவ்வொன்றும் சிறிய நுட்பமான வேறுபாடுகள். உதாரணம் துணி வெட்டும் கத்தரியின் இரண்டு பிளேடுகளும் ஒரே போன்ற கூர்மையுடன் இருக்காது.
சிசர்ஸ் வகைகள் பற்றி இன்னும் நீளமாக எழுதலாம். பிறகு எடிட் செய்ய எனக்கே ஒரு கத்தரி தேவைப்படும் என்பதால் இங்கே நிறுத்துகிறேன்!