மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுபவங்கள் பேசுகின்றன!

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200 ஓவியங்கள்:ராமமூர்த்தி

இன்விடேஷன்... இன்ஃபர்மேஷன்!

வெளியூரில் பணிபுரியும் தோழி, சமீபத்தில் எங்கள் ஊருக்கு வந்தபோது என்னைச் சந்தித்தாள். அப்போது சற்றுத் தயங்கித் தயங்கி, ‘`உன் தங்கச்சியை கொஞ்சம் கண்டிச்சு வை... அவள் எவனோ ஒரு பையன் கூட  சுத்தறதை அடிக்கடி பார்க்கிறேன்... நாளைக்கு ஏதாவது பிரச்னை ஆகிடப்போவுது..!’’ என்று அக்கறையாகச் சொல்ல, நான் அதிர்ந்து போனேன். இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமான என் தங்கையையும் அவள் கணவரையும் பார்த்துவிட்டுத்தான் அவள் அப்படிச் சொல்கிறாள் என்பது புரிந்தது. என் தங்கையின் கல்யாண அழைப்பிதழை அவளுக்கு அனுப்ப நினைத்தும், எனது அதிகப்படியான அலைச்சல் மற்றும் சோம்பல் காரணமாக, அழைப்பிதழ் அனுப்பாமலே விட்டுவிட நேர்ந்தது. அதனால் ஏற்பட்ட குழப்பம் இது.  என் தங்கைக்கு திருமணமான விஷயத்தை எடுத்துச் சொன்னதும், தோழி தன் பேச்சுக்காக மிகவும் வருத்தப்பட்டாள்.

அனுபவங்கள் பேசுகின்றன!

வீட்டில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும் போது... நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்களை தவறாமல் அனுப்பி வையுங்கள். இன்விடேஷனாக மட்டுமல்லாமல், அது இன்ஃபர்மேஷனாக அமைந்து வீண் குழப்பங்களைத் தவிர்க்கும்!

- ஆர்.வசந்தி, போளூர்

`தாட்பூட்’ தலைமை ஆசிரியர்!

அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் என் தோழியை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தபோது மிகவும் வருத்தமாக இருந்தாள். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ‘’ஆண்களும், பெண்களும் படிக்கும் எங்கள் பள்ளிக்கூடத்துக்கு பணியிட மாறுதலில் தலைமை ஆசிரியராக ஒரு ஆண் வந்திருக்கிறார். அனைத்து ஆசிரியர்களும் காலை - மதியம் - மாலை என மூன்று வேளையும் அவருக்கு `வணக்கம்’ சொல்லவைப்பதும், தனது அறைக்கு அழைத்து நீண்ட நேரம் நிற்கவைத்து பேசிக்கொண்டு இருப்பதும், தற்செயல் விடுப்பு எடுத்தால் `தொலைச்சிப்புடுவேன்’, `காலி பண்ணிடுவேன்’ என மிரட்டுவதும், மாணவ - மாணவிகளுக்கு முன் வகுப்பறையில் ஆசிரியர்களை திட்டுவதுமாக இருக்கிறார். இதனால் ஆசிரியர்கள் வேதனைக்கு ஆளாகி இருக்கிறார்கள்” என்றாள்.

அனுபவங்கள் பேசுகின்றன!

மன உளைச்சல், பயம்... இவற்றை வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்த முடியும்? தமிழக பள்ளிக் கல்வித்துறை இதுபோன்ற தலைமை ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சியை வழங்க முன்வருமா?!

- ஆர்.காவ்யா, தஞ்சாவூர்

கலங்கவைத்த கல்நெஞ்சங்கள்!

என்னுடைய பாட்டி கழுத்துவலியால் அவதிப்பட்டதால், பிஸியோதெரபி செய்ய  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பாட்டிக்கு பிஸியோதெரபி சிகிச்சை தரப்படும் சமயத்தில் மற்றவர்களுடன் காத்திருந்தேன். அப்போது அறுபது வயது மதிக்கத்தக்க  ஒரு நபர் என்னிடம் பேச்சுக் கொடுக்க, நான் பாட்டிக்குத் துணையாக வந்ததைக் கூறினேன். அந்தப் பெரியவர், கலங்கிய கண்களுடன், ‘’ஐம்பது வயசானதுமே செத்துடணும். அதுக்கு மேல் வாழக் கூடாது!” என்றார். நான் அதிர்ந்துபோய் ``ஏன் இப்படி சொல்றீங்க?’’ என்று கேட்டதற்கு அவர், ‘`நான் ஒரு விவசாயி. உடம்புல வலு இருக்கற வரை விவசாயம் பண்ணேன். இப்ப என்னால முடியலை. மூணு மாசமா கைவலி தாங்க முடியல. எனக்கு இரண்டு மகன்கள்; இருவருக்கும் கல்யாணமாகிவிட்டது. என் மனைவி இறந்துவிட்டாள். ஹாஸ்பிடலுக்கு வரும்போது `யாராவது துணைக்கு வாங்க’னு கூப்பிட்டா, ஒருத்தரும் வரலை. மருமகள்கள் பகல் முழுவதும் சீரியல் பார்க்கின்றனர். யாரும் என்னை மதிப்பதில்லை’’ என்றார்.

அனுபவங்கள் பேசுகின்றன!

தாங்களும் வருங்கால வயோதிகர்களே என்பதை உணராமல், கல்நெஞ்சுடன் இருப்பவர்களை என்ன சொல்லி நொந்துகொள்வது..!

- லதா நாராயணன், சென்னை-116

வாழ நினைத்தால் வாழலாம்!

சமீபத்தில் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு காலையில் பக்கத்து அப்பார்ட்மென்ட்டில் வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டவரை பார்த்து ஆச்சர்யமடைந்தேன்... அவர் ஒரு திருநங்கை.

அதுபற்றி விசாரித்தபோது, தினமும் கடை கடையாக ஏறி இறங்கி காசு வசூல் பண்ண மனம் இடம் தரவில்லையாம். `வேலை பார்த்து கௌரவமாகப் பிழைக்கலாமே’ என்று எண்ணி, அதை ஒருவரிடம் கூறியபோது, அப்பார்ட்மென்ட், கடைகளின் வாசலை பெருக்கி சுத்தம் செய்யும் வேலையை அவர் வாங்கி கொடுத்தாராம். சில வீடுகளில், கார் கழுவுதல், செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளையும் செய்து சம்பளம் வாங்கி, சேமிக்கிறாராம்.

அனுபவங்கள் பேசுகின்றன!

திருநங்கை மீது அக்கறைகொண்டு கௌரவமாக வாழ வழிவகை செய்த அந்த நல்ல மனதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

- எஸ்.சிவசித்ரா, சென்னை-64