
தீர்ப்பு நாள்

தேர்தல் கூட்டணி பேரங்கள் களைகட்டிவிட்டன. எந்தக் கட்சி எந்தப் பக்கம் என்ற இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. அதை முடிவுசெய்ய, கட்சிகள் நடத்தும் ரகசிய பேரத்தின் கூச்சல் நாலா பக்கங்களும் கேட்கிறது. கொள்கை, கோட்பாடு, எதன் பொருட்டு தாங்கள் இணைகிறோம் என்பதை மக்களுக்கு அறிவிக்கவேண்டிய கடமை... என ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அம்சங்களை மிக வெளிப்படையாகக் கைகழுவிவிட்டனர்.
இந்திய தேர்தல் வரலாற்றில் கூட்டணிகள் புதிது அல்ல. பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்ட வரலாறு நமக்குத் தெரியும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, ஒரு நோக்கம் என இருப்பதால், தேர்தல் நேரத்தில் ஒரு ‘குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின்’ அடிப்படையில் இணைவார்கள். சில அம்சங்களில் விட்டுக்கொடுப்பது, சிலவற்றில் இணைந்து செயல்படுவது என்ற கூட்டணி நெறி, அதில் இருக்கும். அப்படி விட்டுக்கொடுக்க முடியாத அம்சங்கள் வரும்போது கூட்டணிகள் உடையும். இது, இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ‘குறைந்தபட்ச பொது செயல்திட்டம்’ என்ற பெயர் அளவுக்கான அறிவிப்புகூட பலரிடம் இல்லை. அவர்களின் குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது, அதிகபட்ச ஸீட்டுக்களைப் பெறுவதுதான். அதனால்தான் ‘பேர வலிமை’ என்ற சொல்லை மிகவும் வெளிப்படையாக எந்தக் கூச்சமும் இல்லாமல் பயன்படுத்துகின்றனர்.
ஒரு கட்சி, ஒரே நேரத்தில் இருவேறு கூட்டணிகளில் சேர்வதற்குப் பேரம் பேசுகிறது. இரு தரப்பிலும், அந்தக் கட்சியை எப்போது வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். இவை எல்லாம் வெளிப்படையாக, ஊடகங்களின் வழியே மக்கள் பார்க்கும்விதமாக நடக்கின்றன என்றால், இவர்களுக்கு கொள்கை என்ற ஒன்று இருக்கிறதா?
ஜனநாயகத்தில் மக்கள்தான் பிரதானம். மக்கள் நலனின் பெயரால் அதிகாரத்தை அடையத் துடிக்கும் அரசியல் கட்சிகள், மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். ஆனால் நடப்பது என்ன? இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை காது கூசும் அளவுக்குத் திட்டித்தீர்த்துவிட்டு, இப்போது தேர்தலுக்காகக் கூட்டணி சேர்கிறார்கள். ‘மக்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியிருக்குமே’ என்ற தயக்கமோ, தடுமாற்றமோ, கூச்சமோ சிறிதும் இல்லை. அந்த அளவுக்கு சந்தர்ப்பவாதத்தில் ஊறித் திளைத்திருக்கிறார்கள்.
ஆனால் மக்களோ, நினைத்துப்பார்க்க முடியாத சமூக, பொருளாதாரப் பிரச்னைகளால் சூழப்பட்டுள்ளனர். பல லட்சம் மக்களின் வாழ்வை, உயிரை, பொருளாதாரத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் டாஸ்மாக் மது, ஒவ்வொரு நாளும் சூறையாடப்படும் இயற்கை வளங்கள், நாளுக்குநாள் அதிகரிக்கும் விலைவாசி, வாழ்வைச் சுமையாக்கும் கல்விக்கட்டணக் கொள்ளை, சீரழிந்துகிடக்கும் அரசு மருத்துவமனைகள், அரசுத் துறைகள் அனைத்திலும் புரையோடிப்போயிருக்கும் ஊழல்...என, தீர்க்கப்படவேண்டிய மக்கள் பிரச்னைகள் ஏராளம்... ஏராளம்.
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகளின் பரபரப்பும், கூட்டணியை முடிவுசெய்யும் அவசரமும் கூடியிருக்கின்றன. இந்தத் துரிதச் செயல்பாடுகளில் துளியும் மக்கள் நலன் தென்படவில்லை என்பதை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நெருங்கி வருகிறது தீர்ப்பு நாள்!