
மருதன்
`தேசப்பற்று என்பது தொல்லை தரும் ஒரு விஷயம்' என்றார் இந்தியாவின் தேசியகீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர். ஏன்? ‘தேசப்பற்று இருக்கும் இடத்தில் `தேசவிரோதிகள்' என சிலர் அடையாளப் படுத்தப்படுவார்கள். அவர்கள் கருணையுடன் நடத்தப்பட மாட்டார்கள்’ என வாதிட்டார் தாகூர்.
இன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்குமுறையை அவர் காண நேர்ந்தால், `மிகச் சரியாக இதைத்தான் நான் அன்றே எச்சரித்தேன்' என வருந்தியிருப்பார். அந்த வருத்தம் கரைவதற்குள் கையோடு அவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருப்பார்கள்!
இந்தியாவின் மதிப்புமிக்க பல்கலைக்கழகமான ஜே.என்.யு., இன்று வேட்டைக்காடாக மாறியுள்ளது. மாணவர்களும் பேராசிரியர்களும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை, திடீரென தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்தது டெல்லி போலீஸ். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னையா குமார், தேசவிரோதமாகப் பேசினார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அவரது பேச்சில் தேசவிரோத அம்சங்கள் எதுவும் இல்லை எனப் பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், பாட்டியாலா நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் பா.ஜ.க சார்பு வழக்குரைஞர்களால் கன்னையா குமார் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
பேராசிரியர்களும் பத்திரிகையாளர்களும்கூட தாக்குதலில் இருந்து தப்பவில்லை. உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் தாக்குதலில் இரண்டு குரல்கள் முக்கியமானவை.
முதலாவது, பாகிஸ்தானில் இருந்து வெளி வந்திருக்கும் மாணவர்களின் குரல். `டெமாக்ரடிக் ஸ்டூடன்ட்ஸ் அலையன்ஸ்' எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கூட்டாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். ‘சிந்திப்பதற்கும் முரண்படுவதற்கும் புதிய விஷயங்களை ஆராய்வதற்கும் சுதந்திரம் இருந்தால்தான் அதைக் கல்விக்கூடம் என்றே அழைக்க முடியும்; அறிவை வளர்த்தெடுக்கும் ஜே.என்.யு போன்ற ஓர் இடத்தில் அரசு தலையீடு செய்வது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது’ என்கிறது இந்த அறிக்கை.
ஜே.என்.யு-வின் முக்கியத்துவம் பாகிஸ்தான் மாணவர்களுக்குத்தான் தெரியும். காரணம், தங்கள் நாட்டிலும் ஜே.என்.யு போன்ற ஒரு பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்பது அவர்களின் கனவு. பாகிஸ்தானில் முரண் பாடுகளுக்கு இடம் இல்லை. அங்கு அரசியலில் மதமும், மதத்தில் அரசியலும் பிரிக்கவியலாதபடி ஒன்றாகக் கலந்திருப்பதால், ஜனநாயகத்துக்கு இடம் இல்லை. அரசை விமர்சிப்பவர்கள் தேசத்துரோகிகள் அல்லது இந்திய ஆதர வாளர்கள். இந்த நிலையை மாணவர் அமைப்பு களால் மாற்ற முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை.

ஆனால், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமுலா முதல் ஜே.என்.யு-வின் கன்னையா குமார் வரையிலான நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டும் சங்கடமான உண்மை, நாம் பாகிஸ்தானைப் பின்பற்றத் தொடங்கிவிட்டோம் என்பதுதான். அரசோடு முரண்படும் ஒரு மாணவரை பாகிஸ்தான் எப்படிக் கையாளுமோ, அப்படியே இந்தியாவும் கையாளத் தொடங்கியிருக்கிறது. இந்திய ஆதரவாளர் என பாகிஸ்தான் முத்திரை குத்துவதைப்போலவே பாகிஸ்தான் ஆதரவாளர் என நாமும் முத்திரை குத்தத் தொடங்கிவிட்டோம். காலனிய தேசத் துரோகச் சட்டத்தை ஐ.சி.யு-வில் வைத்துக் காப்பாற்றிவருகிறோம்.
நாம் கவனிக்கவேண்டிய இரண்டாவது முக்கியமான குரல், பா.ஜ.க ஆதரவு மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) மாணவர்கள் மூவருடையது. இந்த அமைப்பின் புகாரின் பேரில்தான் ரோஹித் வெமுலா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கன்னையா குமார் மீதும் இவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ஏ.பி.வி.பி அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ள இந்த மூவரும் (பிரதீப் நார்வல், ராகுல் யாதவ், அன்கித் ஹன்ஸ்) அதற்குக் கூறியுள்ள காரணங்கள் முக்கியமானவை. ‘ஜே.என்.யு விவகாரத்தை அரசு கையாண்ட முறை சரி அல்ல. இடதுசாரிகளை ஒட்டுமொத்தமாக தேசவிரோதிகள் எனக் கருதி அவர்களையும் அவர்களுடைய சித்தாந்தங் களையும் ஒடுக்குவது ஏற்கத்தக்கதல்ல’ என வெளிப்படையாக தங்கள் அமைப்பின் மீதே குற்றம் சுமத்துகிறார்கள். மூவரில் ஒருவரான பிரதீப் நார்வல், பிரதமர் மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ‘நான் கிராமப் புறத்தைச் சேர்ந்தவன். நான் ஜே.என்.யு-வில் இணைந்தபோது, `இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனம் இதுதான்' என என் அம்மாவிடம் பெருமையாகச் சொன்னேன். இப்போது வெளிவரும் செய்திகளைப் பார்த்துவிட்டு, `இதைப் பற்றியா அப்படி எல்லாம் சொன்னாய்?' என என் அம்மா கேட்கிறார். அவருக்கு என்ன பதில் சொல்வது என எனக்குத் தெரியவில்லை’ என்கிறார்.
பாகிஸ்தான் மாணவர்களும், ஏ.பி.வி.பி மாணவர்களும் ஜே.என்.யு விவகாரத்தில் ஒரே புள்ளியில் திரண்டிருப்பது உண்மையிலேயே ஆச்சர்யமானது. `அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது தவறு என ஒரு மாணவர் சொல்லக் கூடாதா? காஷ்மீரிகளுக்கு இந்தியா துரோகம் செய்துவருகிறது என வாதிட உரிமை இல்லையா? அரசின் போக்கு தவறாக இருக்கும்போது, அதை உரக்கச் சொல்லிச் சுட்டிக்காட்டுவது தேசத் துரோகக் குற்றமா? எனில், எது தேசப்பற்று? அரசின் தவறான போக்கைச் சகித்துக்கொண்டு சும்மா இருப்பதா?' என்பது மாணவர்கள் எழுப்பும் தார்மிகக் கேள்விகள்.
உண்மையில் ரோஹித் வெமுலா, கன்னையா குமார் இருவரை மையப்படுத்திய பிரச்னைகளும், ஆரம்பத்தில் மிகச் சிறியவை; ஒரு பல்கலைக்கழக வளாகத்துக்குள் பேசித் தீர்க்கக்கூடியவை. எதற்காக அரசு மூக்கை நுழைத்து இதைப் பெரிதாக்குகிறது? எதற்காக ஏ.பி.வி.பி-யை அரசு ஆதரிக்கிறது? ஏ.பி.வி.பி அல்லாத பிற அமைப்பு களில் உள்ள மாணவர்களையும் பேராசிரியர் களையும் எதற்காக ஒடுக்குகிறது? காரணம் இருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் பீகாரில் பா.ஜ.க தோல்வி அடைந்தது. டிசம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சி.பி.ஐ ரெய்டு, எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியது. பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை எதிர்பார்த்த இலக்கை அடைய வில்லை. ரோஹித் வெமுலாவின் தற்கொலை, பா.ஜ.க-வுக்கு மிகப் பரவலான அளவில் கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. சாமானிய மக்கள் மட்டும் அல்ல, நரேந்திரமோடியை உயர்த்திப்பிடித்த நடுத்தர வர்க்கமும் தொழில்முனைவோரும்கூட நம்பிக்கை இழந்துவிட்டனர். இழந்துகொண்டிருக்கும் செல் வாக்கைத் தூக்கி நிறுத்த, இந்து தேசியவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறது மோடி அரசு. இதைக்கொண்டு ஒரே நேரத்தில் பிரச்னையின் கவனத்தைத் திசை மாற்றவும் முடியும்; இந்துத்துவக் கூட்டத்தின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும். இந்தத் திட்டத்துக்குப் பலியானவர் கன்னையா குமாரும் ஜே.என்.யு பல்கலைக்கழகமும்தான்.
மாதம் 3,000 ரூபாய் சம்பளம் வாங்கும் அங்கன்வாடி தொழிலாளரின் மகனான கன்னையா குமாரின் தேசபக்தியைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கி, அவரை ஒரு தேசவிரோதியாக உருமாற்றியதன் மூலம் மாறுபட்ட சிந்தனையோட்டம்கொண்ட மாணவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்த விரும்புகிறது மோடி அரசு.
அதற்கான காரணத்தை சென்ற ஆண்டு இதே பிப்ரவரி மாதம் நான் ஜே.என்.யு சென்றிருந்தபோது கண்கூடாகக் கண்டேன். ஒரு மாலை நேரம், புரட்சிகர மார்க்சிய இயக்கத்தைச் சார்ந்திருக்கும் வரவரராவ் ஓர் அரங்கில் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றிக் கொண்டிருந்தார். மற்றோர் அரங்கில் ஒரு விவாதத்தில் கலந்துகொள்வதற்காக சுப்பிரமணியன் சுவாமி வந்திருந்தார். ஒரு வகுப்பறையின் முகப்பில் நேருவும் பகத்சிங்கும் சே குவேராவும் இடம்பெற்றிருந்தனர். `நக்ஸல்பாரி போராட்டம் வாழ்க' என்றது ஒரு சுவரொட்டி. அருகில் உள்ள ஒரு பெரிய மரத்தில் தொங்கிய பதாகையில் விவேகானந்தரின் வாசகங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன.
இதுதான் ஜே.என்.யு. இதை அப்படியே நீட்டித்துப் பெரிதாக்கினால், இதுதான் இன்றைய இந்தியா. ஆனால், இந்த வேற்றுமையை மோடி அரசு விரும்பவில்லை. தேசம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும் ஒரு மதத்தை, ஒரு சித்தாந்தத்தை, ஓர் அரசியலைத் திணிக்க விரும்புகிறது மோடி அரசு.
`அப்படி இந்தியாவை மாற்ற முடியாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்கிறது ஜே.என்.யு.
`இந்தியாவுக்கு இந்துத்துவம் பொருத்தமான சித்தாந்தம் அல்ல' என ஜே.என்.யு-வின் பேராசிரியர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள். அதனாலேயே இந்துத்துவத்தின் முதன்மையான எதிரியாக ஜே.என்.யு திகழ்கிறது.
உலகம் தழுவிய அளவில் ஜே.என்.யு-வின் செல்வாக்கு விரிந்திருப்பதையும் அந்த மாபெரும் ஆலமரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு புது விழுது உற்பத்தியாகிக்கொண்டிருப்பதையும் ஆளும் அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஜே.என்.யு-வுக்குச் சரிசமானமாக நின்று அறிவுபூர்வமாகவும் தர்க்கரீதியிலும் வாதிட்டு தன் நிலைப்பாட்டை நிலைநிறுத்தும் வலு அதற்கு இல்லை. அதனால் குறுக்குவழியில் எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்தி ஆலமரத்தை வெட்டிச் சாய்க்க மோடி அரசு முயன்றுவருகிறது. `ஜே.என்.யு-வை மூட வேண்டும்' என்ற முழக்கம் திட்டமிட்டு முன்னிறுத்தப்படுவது அதனால்தான். ஆனால், ஜே.என்.யு என்ற அறிவின் சுடரை ஒருபோதும் அணைத்துவிட முடியாது என்பதே கடந்த காலம் உணர்த்தும் உண்மை.
``எங்கள் போராட்டம் வெல்லும்!''
ஜே.என்.யு-போராட்டக் களத்தில் முன்னணியில் இருக்கும் அபராஜிதாவிடம் பேசினோம். இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மகள். ஜே.என்.யு-வில் எம்.ஏ பொலிட்டிகல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு மாணவி.

``நாடு முழுவதும் எதிர் கருத்துக்களுக்கு எதிராக நடந்துவரும் கொடூரமான தாக்குதல்கள் அனைத்துக்கும் பின்னால் பாரதிய ஜனதா கட்சியும் அதன் பாசிச அங்கங்களும்தான் இருக்கின்றன.
ஜே.என்.யு-வில், தூக்கு தண்டனைக்கு எதிரான நிகழ்ச்சிக்கும் ‘கோர்ட்’ என்ற மராட்டியத் திரைப்படத்தின் திரையிடலுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா, `முஸாஃபர் நகர் பக்கி ஹை' என்ற திரைப்படத்தைத் திரையிட முயன்றதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதை அங்கு தட்டிக்கேட்ட ரோஹித் வெமுலா உள்பட பலர், பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இங்கு கன்னையா குமார் உள்பட 25 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு ரோஹித் வெமுலா தற்கொலைக்குத் தூண்டப்பட்டார். இங்கு கன்னையா குமார் உள்பட 8 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு புகார் கொடுத்தவர், பா.ஜ.க-வைச் சேர்ந்த செகந்தராபாத் எம்.பி-யும் மத்திய இணை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா. இங்கு புகார் கொடுத்தவர் பா.ஜ.க-வைச் சேர்ந்த மேற்கு டெல்லி எம்.பி மகேஷ் கிரி. ஆக, இதுபோன்ற அடக்குமுறைகளைத் திட்டம்போட்டு அவர்கள் செயல்படுத்துகின்றனர். இதன்மூலம் எதிர் கருத்துக்கொண்டவர்களை ஒடுக்க நினைக்கின்றனர்.
கலையும் அரசியல்தான்; கல்வியும் அரசியல்தான். எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அதானியும் அம்பானியும் வர்த்தகத்தை அரசியல் ஆக்கலாம். பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா அரசாங்கமும் அரசியலை வர்த்தகம் ஆக்கலாம். நாங்கள் கல்லூரியில் அரசியல் பேசக் கூடாதா? இந்த வளாகத்துக்குள் அரசியல் இருக்கக் கூடாது என்றால், அகில பாரதிய வித்யா பரிஷத் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறது? மாணவர்கள் அரசியல் பேசக் கூடாது என்பது பைத்தியக்காரத்தனமான குரல். மேலும், கல்லூரிக்கு வெளியில் எழும் எதிர்க்குரல்களை இவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர்? கல்புர்கியும் பன்சாரேவும் தபோல்கரும் இந்தக் கல்லூரிக்குள் இருந்தா பகுத்தறிவு பேசினார்கள், அரசியல் பேசினார்கள்? அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களுடைய வழி, அதிகார அராஜகம். அதை எதிர்கொள்ளும் எங்கள் வழி, வீரம்மிக்க போராட்டம். எங்கள் போராட்டமே வெல்லும்!''
- ஜோ.ஸ்டாலின்