
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்
அஞ்ஞானச் சிறுகதை - உடோப்பியா
``ரொம்ப சிம்பிள். தொடர்ந்து ஒரு நெகட்டிவ் விஷுவல் பார்த்தீங்கன்னா, அதோட பாசிட்டிவ் விஷுவல் உங்கள் மூளையில் பதிஞ்சிடும். அப்படியே கண்களைச் சிமிட்டி வெள்ளைச் சுவர்ல பாருங்க... அந்த உருவம் தெரியும்’’ என்றான் ஆர்யா.
``ம்ம்...’’ என்றான் உடோப்பியாவின் தலைவன்.
``அதே டெக்னிக்தான். ஆனா கொஞ்சம் ஹைடெக்கா பண்ணியிருக்கோம்’’ என்று நிறுத்தியவன், தலைவனின் பக்கத்தில் வந்தான்.

``இன்னைக்கு நம்ம நாட்டுல மொபைல் யூஸ் பண்றவங்க எட்டு கோடிப் பேர். இது உடோப்பியாவின் மக்கள் தொகையில் 80 சதவிகிதம். நான் டெவலப் பண்ணியிருக்கிற இந்த சீக்ரெட் ஆப், அந்த மொபைல்களில் ஆட்டோமேட்டிக்கா இன்ஸ்டால் ஆகிடும். எப்போ அவங்க மொபைலை ஆன் பண்ணிப்பார்க்கிறாங்களோ... அப்போல்லாம் உங்க கட்சி சின்னத்தின் நெகட்டிவ் ஷேடு அவங்களுக்கே தெரியாமல் அவங்க மூளையில பதிஞ்சிட்டே இருக்கும். ஓட்டு போடும்போது உங்க சின்னத்தைத் தவிர வேற எதுவும் அவங்க கண்களுக்குத் தெரியாது.’’
``பிரில்லியன்ட்’’ என்றான் தலைவன்.
``முதல்ல உங்ககிட்ட இருந்தே இதை டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம்’’ என்ற ஆர்யா, தலைவனின் மொபைலை ஒளிர்த்து அவரிடம் நீட்டினான். சின்னம் எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை.
``நீங்க சாதாரணமா மொபைல்ல மெசேஜ், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்... இதுல ஏதாவது ஒண்ணு பார்த்தாலே போதும். உங்களுக்குத் தெரியாம சின்னம் மூளையில் பதிய ஆரம்பிச்சிடும்’’ என்றான்.
தலைவன் மெசேஜை ஸ்க்ரோல் பண்ணியபடி பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென உளவுத்துறை அதிகாரியிடம் இருந்து வந்த மெசேஜ் மின்னியது... `தலைவரே, அந்த ஆர்யா எதிர் அணியிடம் ஏற்கெனவே காசு வாங்கிவிட்டானாம்’ - அதிர்ந்த தலைவன் மொபைலை அணைத்துவிட்டு நிமிர்ந்து கண்களைச் சிமிட்டினான்.

எதிர் அணியின் சின்னம் கண்களுக்குள் தெரிவதைக் கண்டான்!
நாஸ்டால்ஜியா நோட் - ஆடுபுலி ஆட்டம்

முன்னர் எல்லாம் அரச மரத்தடி, ஆலமரத்தடி என பெருசுகள் உட்கார்ந்து ஊர்க் கதைகள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நம் குலசொத்தான சினிமா, அரட்டை அரசியல்தான் சப்ஜெக்ட். `நம்ம சிவாஜி மவன்கூட குஷ்பூனு ஒரு புள்ள நடிச்சிருக்குப்பா’, `நரசிம்மராவாம் அட சிரிக்கவே மாட்டாராம்பா’ போன்றவை... சில உதாரணங்கள். அங்கே இளவட்டங்கள் ஆடு - புலி ஆடிக்கொண்டே தாவணிகளைப் பற்றி பேசுவதால், வேடிக்கை பார்க்கும் என்னைப் போன்ற சிறுவர்களைத் துரத்துவார்கள். அடிப்படை நுட்பம் தெரிந்துவிட்டதால், பிறகு நாங்களே சாக்பீஸ் அல்லது செங்கல்லால் கோடு வரைந்து ஆட ஆரம்பித்துவிட்டோம்.
ஆடு-புலி ஆட்டம், தமிழர்களின் திண்ணை வியூக விளையாட்டுக்களில் ஒன்று. சங்க இலக்கியத்தில்கூட `வங்கா வரிப்பாறை’ என இதைக் குறிப்பிடுவதாகப் படித்தேன். சிறுபாடு விளையாட்டு வகையைச் சேர்ந்தது. உட்கார்ந்து ஆடும் ஆட்ட வகைதான் சிறுபாடாம். மூன்று புலிகளும் 15 ஆடுகளும்கொண்ட இந்த விளையாட்டை, செஸ்ஸைவிட சுவராஸ்யமாக விளையாடியிருக்கிறோம். ஆடாக இருந்து புலியை நகரவிடாமல் கட்டிப்போடுவது பெருமிதம். ஆடு - மாடுகள் மேய்த்துத் திரிந்த முல்லை நில மக்கள், மேய்ச்சலுக்கு இடையிலான ஓய்வுவேளைகளில்தான் இந்த மாதிரியான விளையாட்டுக்களை உருவாக்கியிருப்பார்கள் என யூகிக்கிறேன். விளையாட்டுக்களில்கூட ஆடுகள் மாடுகள் என்று தங்கள் வாழ்வியலைக் கோத்திருக்கிறார்கள். இன்று நாம் சப்வேயில் சர்ஃபிங் பண்ணுகிறோம். ஆங்ரிபேர்டை அழித்து பாயின்ட் சேர்க்கிறோம் என்று சம்பந்தம் இல்லாமல் மொபைலில் மேய்கிறோம். நம்மை ஆடுகளாக்கிவிட்டார்கள்!
நானோ ஹிஸ்டரி - முகமூடி
`Give a man a mask and he'll tell you the truth’ - இது ஆஸ்கர் ஒயில்டின் புகழ்பெற்ற ஒரு பன்ச் டயலாக். முதல் முகமூடியை மனிதன் எதற்காக அணிந்திருப்பான் என்பது மானுடவியலாளர்களின் தீர்க்கப்படாத கேள்விகளில் ஒன்று. கடவுள் சார்ந்த சடங்குகளில், வேட்டையாடுதலின்போது மறைந்துகொள்ள... என பல யூகங்கள் இருக்கின்றன. 9,000 வருடங்கள் பழமையான முகமூடி ஒன்று பாரீஸின் இஸ்ரேல் மியூஸியத்தில் இருக்கிறது.

முகமூடிக்கும் நாடகத்துக்குமான தொடர்பு உலகெங்கும் நிகழ்த்து கலை (Performing arts) வரலாற்றுடன் பிணைந்துகிடக்கிறது. நம் ஊர் தெருக்கூத்து, கதகளி போன்றவற்றில் தனியாக முகமூடி இல்லை என்றாலும், எக்ஸ்ட்ரா சங்கதிகளுடன் மேக் அப் எல்லாம் போட்டு, முகத்தையே முகமூடிபோல ஆக்குவதைப் பார்க்கிறோம். ஆப்பிரிக்கன் முகமூடிகள் அழகியலிலும் வடிவிலும் புகழ்பெற்றவை. `Guy Fawkes mask’ புகழ்பெற்றது. `V for vendetta’ படத்தில் பார்த்திருப்பீர்கள். சமூக அநீதிகளுக்கு எதிராக மக்களைக் காக்கும் சூப்பர் ஹீரோக்கள் பெரும்பாலும் முகமூடி அணிந்திருப்பதை காமிக்ஸ்களில், சினிமாக்களில் பார்க்கிறோம். ஏன் அவர்கள் நேரடியான தங்கள் சொந்த முகத்துடன் வருவது இல்லை? சிஸ்டம்தான் காரணம். இன்று அனானிமஸாக இணையங்களில் பலர் வலம்வருவது இந்த சூப்பர் ஹீரோ உளவியல்தான். நேரடியாக சிஸ்டத்துடன் மோத முடியாதபோது இப்படி முகமூடி தேவைப்படுகிறது. `அந்நியன்’ க்ளைமாக்ஸில் விக்ரமை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்
ஆனால் இந்த சிஸ்டத்தைச் செயலாக்கும் (பெரும்பாலான) அரசியல்வாதிகளுக்கு, தனியாக முகமூடிகள் தேவைப்படுவது இல்லை. முகமே மூடிதான்!
விஷுவல் கார்னர் - ஆழ்கடல் சிற்பங்கள்

`நமக்கு எல்லாம் மால், தியேட்டர், பீச் தவிர வேறு கொண்டாட்டங்கள் இல்லை. சென்னையில் எல்லாம் ஓவிய, சிற்பக் கண்காட்சிகளுக்கு மக்கள் குடும்பத்தோடு வருவது இல்லை’ எனக் குறைபட்டுக்கொண்டான் ஓர் ஓவிய நண்பன். தரை மீது வைக்கும் சிற்பக் கண்காட்சிக்கே நம் மக்கள் போவது இல்லை ஆனால், மேற்கு இந்தியாவைச் சேர்ந்த சிற்பி ஜேசன் (Jason deCaires Taylor) கடலுக்கு அடியில் ஒரு சிற்பக் கண்காட்சியை நிரந்தரமாக வைத்திருக்கிறார். அங்கே ஸ்கூபா டைவிங் அடித்து பார்வையாளர்கள் பார்க்கப் போகிறார்கள்.
2006-ம் ஆண்டு ஜேசனால் ஆரம்பிக்கப்பட்டது உலகின் முதல் கடல் அடி சிற்பப் பூங்கா. லண்டனில் ஓவியமும் சிற்பமும் கற்ற ஜேசன், பிறகு முழுநேரமாக ஸ்கூபா டைவிங் டீச்சர் ஆனார். ஆழ்கடல் புகைப்படக் கலைஞராகவும் இருந்த ஜேசனுக்கு, `கடலுக்கு அடியில் ஒரு சிற்பக் கண்காட்சி நடத்தினால் என்ன?’ என்று தோன்ற, அதன் விளைவே இந்தப் பூங்கா.

`கடல் அடியில் பவளப் பாறைகளுக்கும் கடல் தாவரங்களுக்கும் மீன்களுக்கும் இடையே இருக்கும் என் சிற்பங்கள், தரை மீதான வாழ்க்கைக்கும் தண்ணீர் அடி வாழ்வுக்கும் இடையிலான ஒரு வகையான உணர்வு பாலமாக இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் எனது படைப்புகளின் மீது பாசி வளர்கிறது. மீன்கள் முட்டையிடுகின்றன. இயற்கையின் நீர்மைக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட எனது படைப்புகளின் கன்ட்ரோல், பிறகு என்னிடம் இல்லை. இது எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று ஒரு நேர்காணலில் சொன்னார் ஜேசன்.

நல்ல படைப்புகளை ஆழமான படைப்பு என்று பாராட்டுவோம். ஜேசனின் படைப்புகள் உண்மையிலேயே ’ஆழமானவை'!
கொலாஜ் - ஊர் சந்தை
`நகரத்தில்... கிராமம் செய்வோம்’ என்னும் அழைப்பில் செம்மை நண்பர்கள் சென்னை தக்கர்பாபா வித்யாலயா பள்ளியில், `ஊர் சந்தை’ என்னும் நிகழ்வை, மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நடத்துகிறார்கள். தானியங்கள், கனிகள், உணவுப்பண்டங்கள் முதல் கைவினைப்பொருட்கள் வரை விற்கப்படுகின்றன. கூடவே மரபு விளையாட்டுக்கள். அப்படியே கிராமத்துச் சந்தை வடிவம். நானும் என் மனைவியும் எங்கள் நாஞ்சில் நாட்டு உணவான, `தெரளி அப்பம்’ அவித்து எடுத்துச் சென்று சுடச் சுட விற்றது புது அனுபவம்.

பெரும் நிறுவனங்கள் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை மக்களிடம் விளம்பரங்கள் வழியாகத் திணித்துக்கொண்டிருக்கும் வேளையில், இ.எம்.ஐ-களுக்கு இடையில் கடனாளிகளாக வாழும் வாழ்க்கைக்கு மாற்றாக, தற்சார்பு வாழ்க்கையை நோக்கி மக்களைத் திருப்ப, சொந்தக் காலில் நிற்கலாம் என்ற நம்பிக்கையை ஊட்ட இந்த மாதிரியான நிகழ்வுகள் தேவையாக இருக்கின்றன.
நண்பர் செந்தமிழன் செம்மையின் மைய ஈர்ப்பு விசை. ஒருகாலத்தில் முழுநேர ஊடகவியலாளராக இருந்தவர். இன்று தற்சார்பு வாழ்வியல் வழிகாட்டியாக, பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். தஞ்சாவூர் ஆச்சாம்பட்டியில் செம்மை வனம் என்னும் இயற்கை வேளாண் பண்ணையை நடத்துகிறார். நூற்றுக்கணக்கான நண்பர்கள், குடும்பங்கள், குழந்தைகள் செம்மையின் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள். வேர்களை இழந்து, அடையாளங்கள் அற்று தவிக்கும் நகர வாழ்க்கையில், இந்த மாதிரியான நிகழ்வுகள் ஒரு மாற்றாகத் தெரிகின்றன.
நம் மரபின் விதைகளை, அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கைப்பிடி மண் இவர்களைப் போன்றவர்களிடம்தான் இருக்கிறது!