
பு.விவேக் ஆனந்த்
எட்டு வருடங்களுக்கு முன்னர் ஹிதேந்திரன் தொடங்கிவைத்த தொடர் ஓட்டம் இது. ஒரு விபத்தில்

மூளைச்சாவு அடைந்த தங்கள் மகன் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை, தானம் செய்தார்கள் அவரது பெற்றோர்.
ஒரு ஜோதியில் இருந்து ஒளிபெற்று சுடர்விடும் பல நூறு ஜோதிகளைப்போல ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளைப் பெற்று வேறு பலர் உயிர்த் தெழுந்தனர். இன்று, உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
749 பேர் உடல் உறுப்பு தானம்செய்து, அவற்றின் மூலம் 4,028 பேர் பலன் பெற்றிருக்கிறார்கள். `இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ எனச் சொல்லப்படும் சென்னையில், ஒவ்வொரு நாளும் உடல் உறுப்பு அறுவைசிகிச்சைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் சென்னையை நோக்கி வருகிறார்கள். மருத்துவச் சுற்றுலா வருமானத்தில் கூடுதல் வருவாய் ஈட்டும் நகரமாக சென்னை உருவெடுத்துவருகிறது. அதேநேரம் மூளைச்சாவு மரணம், உடல் உறுப்பு தானம் என்பதை ஒட்டி ஏராளமான சர்ச்சைகளும் சுற்றிவருகின்றன.
ஹிதேந்திரன் மரணத்துக்குப் பிறகு உறுப்பு தானம் குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்து வருகிறது என்பது ஒரு வெளிப்படையான உண்மை என்றாலும், திடீரென இது ஓர் உச்சத்தை நோக்கிச் செல்வதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்க முடியுமா? `தானம்' எனச் சொல்வது உறுப்புகளைத் தருவோரைக் குறிக்கிறது. ஆனால், உறுப்புகளைப் பெறுவோருக்கு அது தானம் அல்ல. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வோர் உறுப்புக்கும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு தொகையை, லட்சங்களில் செலவழிக்கின்றனர். உறுப்புகளைப் பொறுத்து, அறுவைசிகிச்சை நடக்கும் மருத்துவமனையைப் பொறுத்து, உறுப்புகள் தேவைப்படும் அவசரத்தைப் பொறுத்து இந்த ரேட் மாறும்.

விபத்தில் அடிபட்ட ஒருவரை, அவரது உறவினர்கள் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துக் கவனிக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். சிகிச்சைக்காக தங்கள் கையிருப்புப் பணம் முழுவதையும் கரைக் கின்றனர். கடன் வாங்கி, செலவுசெய்கின்றனர். ஒரு கட்டத்தில் என்ன செலவுசெய்தாலும் இனி இவர் பிழைக்கப்போவது இல்லை என்ற நிலை வரும்போது, `வேற வழி இல்லை, இவன்தான் வாழ முடியலை. இவன் மூலமா வேற யாரோ சிலர் வாழட்டும்' என முடிவு எடுத்து, உறுப்பு தானம் செய்ய முன்வருகின்றனர். இந்த முடிவை எட்டும்போது அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் நொடித்துப்போயிருக்கின்றனர்.
தங்கள் அன்புக்குரியவரின் உடல் உறுப்புகளை அவர்கள் தானம் செய்தபோதிலும், அதை யாரோ சிலருக்கு லட்சங்களில் பணம் பெற்றுக் கொண்டுதான் பொருத்தப்போகிறார்கள். யாரோ ஒரு மனிதரின் உடலை முதலீடாகக்கொண்டு, அவரது உடல் உறுப்புகளை வேறு சிலருக்குப் பொருத்துவதன் மூலம் லட்சங்களில் சம்பாதிக்கும் மருத்துவமனைகள், அதில் ஒரு பகுதியை, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்குத் தருவோம் என நினைப்பது இல்லை. உண்மையில் இது வெளிப்படையாகப் பேசவும் விவாதிக்கவும் தடுமாற்றம் தரும் பிரச்னை. ஓர் உயிரை விலை பேச முடியுமா? அப்படி முடியும் எனில், இது ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரலாம். ஒருவரின் உறுப்புகளில் இருந்து பொருளீட்ட முடியும் என்ற நிலை வருமானால், இது அச்சமூட்டும் பரிமாணங்களை எடுக்கலாம். இவை எல்லாமே இப்படி நிகழக்கூடும் என்ற சாத்தியங்கள்தான். `இப்படித்தான் நடக்கிறது' எனச் சொல்லவில்லை. எனினும், இந்தச் சாத்தியங்களை நாம் புறக்கணிக்கக் கூடாது.
இந்தப் பின்னணியில் மூளைச்சாவு, உடல் உறுப்பு தானம் என்பதை அணுகலாம். மூளைச்சாவும் மரணத்துக்கு இணையானதே. ஒருவர் மூளைச்சாவு அடைந்த பிறகு, செயற்கை ஆக்சிஜன் உடனடியாகக் கிடைக்கவில்லை எனில், சில மணி நேரங்களில் இறந்துவிடுவார். மூளைக்கு ஆக்சிஜன் செல்லாததால் இதயம் மெள்ளச் செயல் இழக்கும். அந்த `கிரேஸ் நேரத்தை'ப் பயன்படுத்தித்தான், ஒருவர் உடலில் இருந்து உறுப்புகளை எடுத்து இன்னொருவருக்குப் பொருத்துகிறார்கள். ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என வெறுமனே ஒரு டாக்டர் அறிவித்துவிட முடியாது. அதற்கு சில விதிகள் உண்டு. நான்கு பேர் கொண்ட மருத்துவக் குழு, ஆறு மணி நேர இடைவெளியில் இரண்டுமுறை பிரத்யேகப் பரிசோதனைகளைச் செய்து அறிக்கை தர வேண்டும். நான்கில் ஒருவர், பரிசோதனை முடிவில் திருப்தி அடையவில்லை என்றாலும்கூட, மீண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை நடைபெறும். இறுதியில் சம்பந்தப்பட்டவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என உறுதிசெய்யப்பட்டால், அவரது குடும்பத்தினர் விருப்பப்பட்டால், உடல் உறுப்புகளைத் தானம் செய்யலாம். இதுவே பொதுவில் பின்பற்றவேண்டிய விதிமுறை.
தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையம்தான், மூளைச்சாவு அடைந்து உறுப்புகளைத் தானம் செய்பவர் களையும், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களையும் ஒருங்கிணைக்கிறது. அரசு, தனியார் என எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும், அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், இந்த ஆணையம் வழியாகத்தான் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படும்.
அரசு மருத்துவமனையானாலும் தனியார் மருத்துவமனையானாலும் `சீனியாரிட்டி மற்றும் நோயின் தன்மை’ அடிப்படையில்தான் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். சீனியாரிட்டியில் உறுப்பு கிடைத்தாலும் உடல்நிலை மற்றும் ரத்த வகை பொருந்திப்போக வேண்டும். உதாரணமாக `பி நெகட்டிவ்’ ரத்த வகை கொண்ட ஒரு நபரின் சிறுநீரகம் தானமாகக் கிடைக்கிறது எனில், அதைக் காத்திருப்போர் பட்டியலில் `பி நெகட்டிவ்’ ரத்த வகை கொண்ட நபருக்குத்தான் பொருத்த முடியும். அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் பட்டியலில் இருக்கும் அடுத்த `பி நெகட்டிவ்’ ரத்த வகை நபருக்குப் பொருத்தப்படும். இந்த நடைமுறை யில், வசதி படைத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது என்பது அடிக்கடி எழுப்பப்படும் புகார். இது குறித்து, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையச் செயலாளர், மருத்துவர் அமலோற்பவநாதனிடம் கேட்டேன்...
``அரசு மருத்துவமனையில் ஒரு நபர் மூளைச்சாவு அடைந்தால், அவரது உறுப்புகள் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் நபர் களுக்குப் பொருத்துவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்படும். ஒருவேளை அந்தச் சமயத்தில் யாருக்கும் பொருந்தவில்லை எனில், அந்த உறுப்பு தனியார் மருத்துவமனைக்குச் செல்லும். நம் மாநிலத்தில் பொருந்தவில்லை எனில் வெளிமாநிலம் செல்லும். இந்த முடிவுகள் எல்லாமே தனி நெட்வொர்க் மூலம் சில மணி நேரங்களில் உடனடியாக எடுக்கப்படும். ஒருவேளை மூளைச்சாவு அடைந்த நபர் தனியார் மருத்துவ மனையில் இருந்தால், அவரின் இரண்டு சிறுநீரகங் களில் ஒன்று, அந்த மருத்துவமனையின் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை.

உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு நபர் மூளைச்சாவு அடைகிறார் எனில், உறுப்புகள் அவரது உடலில் இருந்து எடுக்கப்படும்போது கண்கள் அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளும், தோல் பதப்படுத்தப் பட்டு ஒரு மாதத்துக்குள்ளும், கல்லீரல் 8 மணி நேரத்துக்குள்ளும், சிறுநீரகம் 12 மணி நேரத்துக்குள்ளும், இதயம் 3 மணி நேரத்துக்குள்ளும் இன்னொரு நபருக்குப் பொருத்தப்பட வேண்டும்.
மதுரையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உறுப்புகளைத் தானம் செய்ய உறவினர்கள் முடிவெடுத்தால், அந்த நபருக்குச் செயற்கை சுவாசம் கொடுத்து இதயம் பாதுகாக்கப்படும். ஒருவேளை மதுரை மருத்துவமனைகளில் இதய மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருப்பவர் களில் எவருக்கும் அந்த நபரின் இதயம் பொருந் தாதபட்சத்தில், உடனடியாக அருகில் இருக்கும் திருச்சி போன்ற ஏதாவது ஓர் ஊரில் தகுதியான நபர் இருந்தால், அவருக்குப் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக முடுக்கிவிடப்படும். சிறுநீரகம், கல்லீரல் ஆகிய மற்ற உறுப்புகள் மதுரையில் இருக்கும் நபர்களுக்கே பொருந்தினால், அங்கேயே அறுவைசிகிச்சை செய்யப்படும்.
எப்போதுமே ஒரு நபரிடம் இருந்து எடுக்கப்படும் உறுப்புகள் இன்னொரு நபருக்கு அப்படியே பொருத்தப்படாது. ஒவ்வொரு பிரத்யேக உறுப்புக்கும் யார் வெயிட்டிங் லிஸ்ட்டில் முன்னணியில் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் முன்னுரிமை. அரசு மருத்துவமனைகளில் இதுவரை நூற்றுக்கணக்கான உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாகச் செய்யப் பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முற்றிலும் இலவசம். அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளும் இலவசம். தனியார் மருத்துவமனைகளில் ஒவ்வோர் உறுப்புக்கும் ஏற்றவாறு சிகிச்சைச் செலவு வசூலிக்கப்படுகிறது. அரசு மருத்துமனையோ, தனியார் மருத்துவ மனையோ, மனித உயிர் முக்கியம். உடல் உறுப்பு கிடைக்காமல் யாரும் இறக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம்'' என்கிறார் அமலோற்பவநாதன்.
ஆனால், உடல் உறுப்பு தானத்தின் அதிகபட்ச பலன், தனியார் மருத்துவமனைகளுக்கே சென்றுசேர்கிறது என்பது வெளிப்படையான உண்மை. தமிழ்நாடு அளவில் சென்னையில் உள்ள எம்.எம்.சி., ஸ்டான்லி, கீழ்பாக்கம் மருத்துவமனை ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அங்கும்கூட கல்லீரல், கண், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளுக்கான அறுவைசிகிச்சைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. இதயம், நுரையீரல், கணையம், தோல், தசைநார், தசை சவ்வு, இதய வால்வுகள் ஆகிய உறுப்புகள் தனியார் மருத்துவ மனைகளில்தான் பொருத்தப்படுகின்றன. சுமார் 40-க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான அனுமதியைப் பெற்றிருக்கின்றன.
தமிழ்நாட்டில் நடைபெறும் உடல் உறுப்பு தானத்தில் 20 சதவிகித உடல் உறுப்புகள் மட்டுமே ஏழை மக்களுக்குக் கிடைக்கின்றன. அரசு, உறுப்பு தான அறுவைசிகிச்சைக்கான விழிப்புஉணர்வு பிரசாரத்தில் கவனம் செலுத்தும் அளவுக்கு, அந்தச் சிகிச்சையைச் செய்யும் அளவுக்கு அரசு மருத்துவ மனைகளை மேம்படுத்தவில்லை. அதைச் செய்யும் போதுதான் உண்மையாகவே சாதாரண ஏழை எளிய மக்களும் இதில் பயன்பெறுவார்கள்.
மூளைச்சாவை எப்படி உறுதிசெய்வது?
ரூபேஷ் குமார்
- நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்

``ஒருவர் எதனால் மூளைச்சாவு அடைந்துள்ளார் என்பது பரிசோதிக்கப்படும். கோமாவில் இருப்பவர் களுக்குத் தனி ஸ்கோர் உண்டு. அந்த ஸ்கோரைப் பொறுத்து ஒருவர் உயிர்பிழைக்க வாய்ப்பு இருக்கிறதா என அறியலாம். கோமா ஸ்கோர் மூன்று எனில், அந்த நபர் உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லை. எனினும் அந்த நபர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிசெய்வதற்கு நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு சான்று அளிக்க வேண்டும். மூளைச்சாவு அடைந்த நபர் எந்த மருத்துவமனையில் இருக்கிறாரோ, அந்த மருத்துவமனை மேனேஜ்மென்டில் இருக்கும் ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்த நபருக்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர், மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவமனையில் இருக்கும் மற்றொரு மருத்துவர்... ஆகியோர் முன்னிலையில் நரம்பியல் நிபுணர் அல்லது நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மூளைச்சாவு அடைந்த நபரைப் பரிசோதிப்பார். ஏழு முக்கியப் பரிசோதனைகள் செய்துதான் ஒருவர் மூளைச்சாவு அடைந்திருக்கிறாரா... இல்லையா என்பது முடிவு செய்யப்படும்!’’

என்ன செய்ய வேண்டும்?

உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக உறுப்புகளைப் பெற விரும்புவோர், போலி மருத்துவமனை களிடமோ, முறையாகப் பயிற்சி பெறாத மருத்துவர்களிடமோ சிக்கிவிடக் கூடாது. உடல் உறுப்பு தேவை எனில் முதலில் அரசிடம் பதிவுசெய்ய வேண்டும். இதற்கான பிரத்யேக இணையதளத்துக்கு சென்று (www.dmrhs.org) எந்த எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, குறிப்பிட்ட எந்த உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ய அனுமதி உண்டு என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப மருத்துவமனைகளை அணுகவும்!