
நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: எம்.உசேன், ஆ.முத்துக்குமார்
`` `வாங்க பேசலாம்'னு நானும் பாரதி பாஸ்கரும் சேர்ந்து சன் டி.வி-யில நிகழ்ச்சி நடத்துறோம். அதனால் நியூஸ்ல அப்டேட்டடாவே இருப்பேன். நீங்க எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லிடுவேன்னு நினைக்கிறேன்’’ என ஆர்வமாகிறார் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா.
``எனக்கு புத்தகம் கொடுத்து ஒரு வாரம் படிக்கச் சொல்லி பரீட்சை வெச்சாலே பார்டர்லதான் பாஸ் ஆவேன். இதுல எனக்குத் தெரியாத கேள்வியா தேடிப் பிடிச்சு சந்து பொந்துல இருந்து எல்லாம் கேள்வி கேட்பீங்களே...’’ எனக் கலாய்க்கிறார் நண்டு ஜெகன்.
``அண்ணா, கேள்வி கேளுங்க... பதில் தெரிஞ்சா சொல்றேன். தெரியலைன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்க இல்ல?’’ என சந்தேகமாகக் கேட்கிறார் தமிழர் முன்னேற்ற படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி.

``குறும்பு கேள்விகள்தானே? கேளுங்க... பதில் சொல்றேனானு பார்த்துடலாம்’’ - என்கிறார் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்.
`` `ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம்’ என தேர்தல் வாக்குறுதி தந்திருக்கும் முதலமைச்சர் வேட்பாளர் யார்?"
விடை: சீமான்.
ராஜா: `` `நாம் தமிழர்’ சீமான்தான். தமிழக கிராமங்களில் மாடுகளை தங்களது சொத்துக்களாத்தான் பார்ப்பாங்க. ஆனா, இதை ஒரு அரசு வேலை ஆக்குவோம்னு சொல்வதுதான் கொஞ்சம் கூடுதலோனு தோணுது.''
நண்டு ஜெகன்: ``ஹா... ஹா... யாரு ஜி இப்படிச் சொன்னது? செம காமெடியா இருக்கே. ஓகோ... நான்தான் பதில் சொல்லணுமா? இப்படிச் சொல்றார்னா அவர் சின்ன வயசுல கண்டிப்பாக ஆடு - மாடு மேய்ச்சவராத்தான் இருக்கணும். ஆமா, இந்த வேலைக்கு எப்படி ஆள் செலெக்ட் பண்ணுவாங்க? ஒரு மணி நேரத்துல யார் எவ்வளவு ஆட்டை ஓட்டுவாங்கனு போட்டிவெச்சு செலெக்ட் பண்ணுவாங்களோ? எதுக்கும் நான் எம்ப்ளாய்மென்ட்ல பதிவுபண்ணிவெச்சுக்கிறேன். எதிர்காலத்துல யூஸ் ஆகலாம்ஜி.''

.வீரலட்சுமி: சிரிக்கிறார்... ``ஆடு, மாடு மேய்க்கிறது எல்லாம் ஒரு வேலையாங்க? இவர் முதலமைச்சரா வந்தார்னா, படிச்சப் புள்ளைங்க எல்லாம் நல்ல வேலையை விட்டுட்டு ஆடு - மாடு மேய்க்க வேண்டியதுதான். கொஞ்சம் வளர்ச்சியை நோக்கியும் சீமான் அண்ணன் சிந்திக்கணும். வேற நல்ல வாக்குறுதிகள் கொடுங்க அண்ணா!’’
பாரதி கிருஷ்ணகுமார்: ``நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். ஆனால், அரசு ஊழியர்களை ஆடு - மாடு மாதிரி மேய்க்காமல் இருந்தால் சரி.’’
``இணைய சமநிலை காரணமாக ஃபேஸ்புக் தனது எந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது?’’
விடை: ஃப்ரீபேசிக்ஸ் எனப்படும் இலவச இணைய திட்டம்.
ராஜா: ``அட... அந்தத் திட்டம் வந்தால் ஃபேஸ்புக்குக்குத்தான் முன்னுரிமை அளிக்கும்படியா இருக்கும்னு சொல்லி, இந்தியாவின் ட்ராய் அமைப்பு அனுமதி தரலை. அந்தப் பேரு டக்குனு ஞாபகம் வரலை தம்பி. என்ன பேரு?''

நண்டு ஜெகன்: ``தேவையில்லாத அந்த நெட் நியூட்ராலிட்டிதானே? ஃபேஸ்புக் மார்க் நிறைய மார்க் வாங்குற மாதிரி யோசிக்கணும். எல்லா பசங்களும் இப்பவே பாடப் புத்தகம் படிக்கிறதை விட்டுட்டு ஃபேஸ்புக் முன்னாடியே உட்காந்திருக்காங்க. தலையைத் தட்டி படிக்கச் சொல்லவேண்டியிருக்கு. இதுல நெட் ஃப்ரீயா கொடுத்தா 24x7 ஃபேஸ்புக்லயேதான் இருப்பாங்க. `சரி... நீ ஃபேஸ்புக் வர்றது இல்லையா?’னு கேட்டுடாதீங்க’’ - சிரிக்கிறார்.
கி.வீரலட்சுமி: வெகுநேரம் யோசித்தவர்... ``என் ஃபேஸ்புக் பக்கத்தைத் தவிர, ஃபேஸ்புக் பத்தி வேற ஒண்ணும் எனக்குத் தெரியாது. நிறையப் பேர் அதுல எனக்கு செய்தி அனுப்பிட்டே இருக்காங்க. ஆனா, யாருக்குமே நான் பதில் அனுப்ப முடியலை. ஆமா, நீங்க என் ஃபேஸ்புக் நண்பரா?’’ என விசாரிக்கிறார்.
பாரதி கிருஷ்ணகுமார் `` நெட் நியூட்ராலிட்டிதானே. நான் சொன்னா சரியாத்தான் இருக்கும்.''
``மதுரை ஆதீனத்தின் முழுப் பெயர் என்ன?’’
விடை: மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம்
ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்.
ராஜா: `` `ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர்’னு ஆரம்பிக்கும். எப்போதும் ஆதீனங்களை முழுப் பெயருடன் அழைப்பதுதான் முறை. அதுதான் மரபு. அவர் முழுப் பேர் தெரியாது. நீங்க பதில் சொல்லுங்க தம்பி... நான் தெரிஞ்சுக்கிறேன்.’’
நண்டு ஜெகன்: ``தலையைச் சுத்தியும் ருத்திராட்சக் கொட்டைகளால ஹெல்மெட் போட்டிருப்பாரே... அவர்தானே ஆதீனம்? அவர் தலைதான் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. பேரு ஞாபகம் வரலையே. இதுக்குப் பதில், நித்தியானந்தாகிட்டயும் அவர் சிஷ்யைங்ககிட்டயும்தான் கேட்கணும். பேரும் இன்னும் சில எக்ஸ்ட்ரா தகவல்கள்கூட கிடைக்கலாம்’’ - சிரிக்கிறார்.
கி.வீரலட்சுமி: ``ஆதீனம், நித்தியானந்தாவுக்குப் பயந்துகிட்டு ஆளும் கட்சிக்கு கூஜா தூக்கிட்டிருக்கார். அவர் முழுப் பேரே `மதுரை ஆதீனம்'தானே?’’
பாரதி கிருஷ்ணகுமார்: யோசிக்கிறார்... `` `ஞானசம்பந்த... அருணகிரிநாத...’ அட... எனக்குப் பேரு தெரியுங்க. சரியா ஞாபகம் வர மாட்டேங்குது. ஆதீனம் ஒருகாலத்துல பத்திரிக்கை நிருபரா இருந்தவர். ஆதீனம் முழு பேர் `ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சார்ய சுவாமிகள்’னு நினைக்கிறேன். `வாழ்க்கையில மோசமான சூழ்நிலையை க்ளோசப்ல பார்த்தா துயரமா இருக்கும். அதுவே லாங் ஷாட்ல பார்த்தா காமெடியா இருக்கும்'னு ஆதீனம் சொல்வார். இது அவருக்கே பொருந்தும்.’’
``தி.மு.க-வுடன் கூட்டணியை அறிவிக்க தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் யார்?’’
விடை: குலாம் நபி ஆஸாத்.
ராஜா: ``குலாம் நபி ஆஸாத். இவரோடு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் இருந்தார். சரியா தம்பி? தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லாருமே தேர்தல் கால கூட்டணிதான் வைக்கிறாங்க. அது அந்தக் கட்சிகளுக்கு நன்மையே தவிர மக்களுக்கு அல்ல.’’
நண்டு ஜெகன்:``ஆமாங்க... மொட்டை தலையில ஒருத்தர் வாட்ட சாட்டமா இருப்பாரே... அவர்தானே? அவர் பேரு `அ'ல ஆரம்பிக்கும். (யோசிக்கிறார்) ஆங்... பிடிச்சுட்டேன். அமித் ஷா. பார்க்க நடிகர் சந்தான பாரதி மாதிரியே இருப்பார். காங்கிரஸ்காரங்கதான், `தி.மு.க கூட்டணியில் சேர்ந்துட்டோம்’னு சொல்றாங்க. ஆனா, தி.மு.க-வுல இருந்து ஒண்ணுமே பதில் சொல்லலையாமே. இந்தத் தேர்தலில் என்ன நடக்கும்னு ஒண்ணுமே புரியமாட்டேங்குதுஜி. ஒரே கன்ஃபியூஸிங் ஆஃப் தி ஃபிசிக்ஸ் அண்ட் கெமிஸ்டரி’’ என்றவரிடம் பதிலைச் சொன்னால், ``அய்யோ... இந்தப் பெயரை எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கேனு அடிச்சு விட்டேன். படிக்கிறவங்க நான் மக்குப் பையன்னு நினைக்கப் போறாங்க. பார்த்துப் பண்ணுங்கஜி.’’
கி.வீரலட்சுமி: ``அரவிந்தன்னு ஒருத்தர் வந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார். (யாருங்க அந்த அரவிந்தன்?) ஆனா, இப்ப தமிழக மக்கள் ஒரே கல்லில் ரெண்டு மாங்காயாக தி.மு.க-வையும் காங்கிரஸையும் அடிச்சு காலி பண்ணப்போறாங்க.’’

பாரதி கிருஷ்ணகுமார்: பட்டென... ``குலாம் நபி ஆஸாத். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஊழலில் பொருத்தமானவர்கள்தானே? அதுதான் கூட்டணி அமைச்சுட்டாங்க!’’