
News
கவிதை: மணி சண்முகம்
குடும்பம் என்னை ராணுவத்தில் பணியமர்த்தியது
ராணுவம் என்னை
பனிச் சிகரத்தில் பணியமர்த்தியது
பனிச் சிகரமோ
என்னைத் தனக்குள்ளாகவே
பனியமர்த்திக்கொண்டது.
என் மிடுக்கைக் கண்டு
எதிரிகள் பயந்தோடியபோது
அகமகிழ்ந்து நின்றவன் நான்.

அன்று தேசத்தின் பாதுகாப்புக்காக
தமது பாதுகாப்பினையே
துச்சமென மதித்தவர்களுள்
நான் ஒருவனாக இருந்தேன்.
இன்றோ
சிகரங்கள் சரிந்து விழலாம்
நான் அங்கேயேதான் இருப்பேன் என்பதை
மலைகளுக்கு உணர்த்திச்செல்பவனாக இருக்கிறேன்.
என் சவப்பெட்டியைப் போத்தியிருக்கும்
தேசியக் கொடியின் கதகதப்பின் காரணமாக
போய்விட்டது குளிர்தான்
உயிர் அல்ல.
என் தேசத்தின் மீது
ஆணையிட்டுச் சொல்கிறேன்...
ஏஞ் சியாச்சின்
சரிந்தது உனது பனிதான்
எனது வீரம் அல்ல.