
ஆ.விஜயானந்த், படம்: தி.ஹரிஹரன், ஓவியம்: ஹாசிப்கான்
ஜனவரி 19, அதிகாலையிலேயே குமார், சரவணன், வேல்முருகன் இவர்களுடன் விஜயகுமாரும் வேலைக்குக் கிளம்பினார். வேலை என்றால் நாம் எல்லோரும் பார்ப்பதைப் போன்ற சராசரி வேலை அல்ல... ஓர் உணவகத்தின் செப்டிக் டேங்கில் அடைப்பு. அதைச் சுத்தப்படுத்த, உடம்பில் கயிறு கட்டிக்கொண்டு உள்ளே இறங்க வேண்டும். எந்தவிதப் பாதுகாப்பு கருவிகளும் கிடையாது. ஒருநாள் வேலை, ஆளுக்கு 600 ரூபாய் சம்பளம். வீட்டில் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினார் விஜயகுமார்.
ஊர் எங்கும் கிளைபரப்பியிருக்கும் மிகப் பெரிய பிரியாணிக் கடை அது. அந்த செப்டிக் டேங்க் 15 அடி நீளமும் 10 அடி ஆழமும்கொண்டது. ஒருவழிப் பாதைதான். உள்ளே இறங்கினால், அதே வழியில்தான் வெளியேற முடியும். முதலில் உள்ளே இருந்த கழிவுநீரை ஒரு லாரியில் நிரப்பினர். அதுவே 10 ஆயிரம் லிட்டர் இருக்கும். பிறகு விஜயகுமார் ஒரு கயிற்றைக் கட்டி இறங்க, உள்ளே கும்மிருட்டு. ஒரு கையால் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, காலால் செப்டிக் டேங்கின் சுவரைச் சுத்தம்செய்துகொண்டிருந்தார் விஜயகுமார்.
அதே சமயத்தில் சரவணன், குமார், வேல்முருகன் மூவரும் கயிற்றைக் கட்டிக்கொண்டு உள்ளே இறங்கினார்கள். அவர்களும் ஒரு கையால் கயிற்றைப் பிடித்துக்கொண்டு காலால் சாக்கடை நீரைக் கிளறியும் வாரியும் சுத்தம்செய்யத் தொடங்கினர். கிளறக் கிளற சகிக்கமுடியாத பெரும் துர்நாற்றம் வீசியது. எத்தனையோ சாக்கடைகளைச் சுத்தம்செய்தவர்கள்தான். ஆனால், அது மிகமோசமான துர்நாற்றம். விஜயகுமாருக்கு மயக்கம் வருகிறது. வெளியே வந்துவிடத் துடித்து கைகளை மேலே நீட்ட, காப்பாற்றத்தான் ஆள் இல்லை.

உள்ளே அந்த விஷவாயு வேல்முருகனைத் தாக்க அவர் அப்படியே விழுகிறார். அவரைக் காப்பாற்று வதற்காக கயிற்றை விட்டுவிட்டு குமாரும் வேல்முருகனும் சாக்கடை நீரின் தரையில் குதிக்க... அவர்களும் மயங்கிச் சரிகின்றனர். தன் சகாக்கள் மூவர் மயங்கிச் சரிவதை, அரை மயக்க நிலையில் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் விஜயகுமார் பார்க்கிறார். தாக்கியது விஷவாயு என்பதை யூகிக்க, அவருக்கு அதிக நேரம் ஆகவில்லை. பெருங்குரல் எடுத்து உதவிக்காகக் கதறுகிறார். சத்தம் கேட்டு ஹோட்டலில் வேலை பார்க்கும் சிலர் ஓடிவர... ஹோட்டலின் டெலிவரி பாய் ராஜேஷ், உள்ளே இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் அவரும் உள்ளே விழுந்துவிடுகிறார். பிறகு மற்றவர்கள் ஓடிவர... அந்த வாழ்வா, சாவா போராட்டத்தில் உயிருடன் மீட்கப்பட்டது விஜயகுமார் மட்டுமே. செப்டிக் டேங்க் சுத்தம்செய்ய வந்த நான்கு பேரில் மூன்று பேர் அந்தச் சாக்கடைக் கழிவு நீருக்குள்ளேயே மூச்சுத் திணறிச் செத்துப்போனார்கள். காப்பாற்ற வந்த ராஜேஷும் உயிர் இழந்தார்.
இந்தக் கொடும் துன்ப நிகழ்வின் எஞ்சியிருக்கும் சாட்சி விஜயகுமார் மட்டும்தான். விஷவாயு தாக்குதலில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட விஜயகுமார், எழுந்து நடமாடக்கூட முடியாமல் உடல்நிலை மோசமாகி, முடங்கிக்கிடக்கிறார். முன்னர் நடந்த ஒரு விபத்தில், தன் நான்கு விரல்களையும் இழந்த மாற்றுத்திறனாளி இவர். தனியார் ஹோட்டல் விபத்து அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. சென்னை, கண்ணகி நகர் குடியிருப்பில் வசித்துவரும் விஜயகுமாரைச் சந்தித்தால், பேசும்போதே குரல் உடைந்து அழுகிறார்...
``இனி என்னங்க இருக்கு. எல்லாம் போச்சு. தெருவுல நடக்கும்போதுகூட ஒரு காலை இழுத்துக்கிட்டேதான் நடக்கவேண்டியிருக்கு. மூணு வேளை சோத்துக்கே கஷ்டப்படுறோம். எனக்கு அண்ணன், தம்பி இருக்காங்க. அவங்க யாரும் உதவிபண்ற நிலையில் இல்லை. என் பொண்டாட்டி, வீட்டு வேலைக்குப் போயிட்டிருந்தா. இப்ப என்னால நடக்கக்கூட முடியலைன்னதும் என்கூடவே இருக்கா. இன்னும் மூணு மாசத்துக்கு வேலைக்குப் போகக் கூடாதுனு டாக்டர் சொல்லிட்டார். அதுவரைக்கும் எப்படி சோறு சாப்பிடுறது?'' - கேட்கும்போதே குரல் கசிகிறது.
``முன்னால அடையாறுல குடியிருந்தோம். அங்கே ஒரு மரக் கடையில வேலை பார்த்துட்டு இருக்கும்போது மரம் அறுக்குற மிஷின்ல கை சிக்கி, நாலு விரல்களும் போச்சு. அப்பதான் நான் அம்முவை லவ் பண்ண ஆரம்பிச்சு ஆறு மாசங்கள் ஆகியிருந்தது. கல்யாணம் பேசி முடிச்சிருந்தோம். `என்ன நடந்தாலும் இவர்கூடத்தான் இருப்பேன்'னு உறுதியா இருந்தா. கல்யாணமும் பண்ணிக்கிட்டோம். விரல் துண்டான பிறகும் அதே கடையில ஆறு மாசங்கள் சின்னச் சின்ன வேலைகள் செஞ்சேன்.
அந்த நேரத்துல எங்களை கண்ணகி நகருக்கு விரட்டியடிச்சாங்க. அங்க எந்த வேலையும் கிடைக்கலை. ஏதாவது வேலை செஞ்சு பொழைச்சே ஆக வேண்டிய கட்டாயம். இந்தக் கையை வெச்சிக்கிட்டு யார் வேலை கொடுப்பா? அப்பத்தான் கழிவுநீர் க்ளீன் பண்ணப்போற மெட்ரோ லாரி வண்டியில கிளீனர் வேலை இருக்குனு சொன்னாங்க. தினமும் போக ஆரம்பிச்சேன். சாக்கடைக்குள்ள இறங்கிச் சுத்தம் பண்றதையும் அங்கதான் கத்துக்கிட்டேன். காலையில நாலு மணிக்கே அந்த ஆபீஸ் போயிடணும். அப்பத்தான் அங்கிருந்து கிளம்புற லாரியில ஏற முடியும். அதுக்குப் பெரிய சண்டையே நடக்கும். ஒரு நாளுக்கு 300 ரூபாய் கிடைக்கும். வேலை இல்லாத நேரத்துல தனியார் ஆஸ்பிட்டல், வீடு, ஹோட்டல்னு செப்டிக் டேங்க் கிளீன் பண்ற வேலைக்குக் கூப்பிடுவாங்க. அப்படிப்போனா ஒரு நாளுக்கு 600 ரூபாய் வரைக்கும் கிடைக்கும்.

இங்க பக்கத்துல குமார், அவர் அண்ணன் சரவணன், அவங்க சொந்தக்காரர் முருகன் எல்லாரும் செப்டிக் டேங்க் கிளீன் பண்ற வேலைதான் செய்யுறாங்க. நிறைய வேலைகள் வரும்போது என்னையும் கூட்டிட்டுப்போவாங்க. அப்படித்தான் அன்னைக்கும் போனேன் '' - பேச முடியாமல் திணறுகிறார்.
``இந்த அஞ்சு வருஷத்துல பல வீடுகள்ல செப்டிக் டேங்க் சுத்தம் பண்ணியிருக்கேன். தெருவுல இருக்கிற மேன் ஹோல்ல தன்னந்தனி ஆளா இறங்கிச் சுத்தம் பண்ணியிருக்கேன். ஒவ்வொரு தடவையும் உயிரைக் கையில் பிடிச்சிக்கிட்டுத்தான் இறங்குவோம். கெட்ட நாத்தம் குடலைப் புரட்டும். பாண்ட்ஸ் பவுடரை கர்சீஃப்ல கொட்டி, மூக்கோடு சேர்த்துக் கட்டிக்குவோம். இந்த ஒத்தக் கையை வெச்சுக்கிட்டுத்தான் எல்லா வேலைகளையும் பார்ப்பேன். அப்பல்லாம் எந்தப் பிரச்னையும் வந்தது இல்லை. இந்த ஹோட்டல்ல எல்லாமே ரொம்ப மோசமா இருந்தது.
அங்கே இருக்கிற டாய்லெட்டுக்குள்ளதான் ஆடு, கோழியை அறுக்கறாங்க. அதோட ரத்தம், கழிவு, மிச்சம் மீதி எல்லாம் அந்த டாய்லெட் ஓட்டையிலேயே போற மாதிரி வெச்சிருக்காங்க. பொதுவா, செப்டிக் டேங்க்ல இருக்கிற கேஸ் எல்லாம், ஒரு கட்டத்துல முட்டை ஷேப்ல உள்ளேயே தேங்கிக் கிடக்கும். உள்ள கால் வெச்சுக் கிளறும்போது டொப் டொப்னு வெடிக்கும். அதுல இருந்து கெட்ட கேஸ் வெளிவரும். அது ரொம்ப ஆபத்தானது. பாண்ட்ஸ் பவுடர் துணிதான் அப்போ இருக்கிற ஒரே ஒரு சேஃப்டி. ஆனா, இந்த ஹோட்டல் செப்டிக் டேங்க்ல இருந்த கேஸில் இருந்து, சொல்ல முடியாத அளவுக்குத் துர்நாத்தம் வந்தது. அத்தனையும் ஆடு, கோழியோட மிச்ச மீதி இறைச்சி, மீந்துபோன கெட்டுப்போன பிரியாணி வேற. இப்ப நினைச்சாலும் தாங்க முடியலை.

1993-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் இறந்துபோன துப்புரவு தொழிலாளர்கள் - 153 பேர்.
இவர்களில் இழப்பீடு கிடைக்கப் பெற்றவர்கள் - 27 பேர்.
பாதாளச் சாக்கடைகளில் விழுந்து இறந்துபோகும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசு தரவேண்டிய இழப்பீடு - 10 லட்சம் ரூபாய்.
மனிதர்களே மலம் அள்ளுவது மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆண்டு - 1993.
மனிதர்களே மலம் அள்ளுவது மாநில அரசால் தடைசெய்யப்பட்ட ஆண்டு - 2015, மார்ச் 15.
தமிழகப் பாதாளச் சாக்கடைகளில் விழுந்து இறந்துபோகும் தொழிலாளர்களில் சென்னையில் மட்டுமே இறப்பவர்கள் - 40 சதவிகிதம்.
இந்தியாவில் உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை - 1,82,505 பேர்
கடந்த 30 மாதங்களில் தமிழ்நாட்டில் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி விஷவாயு தாக்கி இறந்துபோனவர்களின் எண்ணிக்கை - 30 பேர்.
தமிழ்நாடு அரசு கணக்கின்படி மாநிலத்தில் உள்ள மலம் அள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை - 979 பேர். (இது, இந்திய அளவில் இரண்டாவது இடம்).
நான் ஆஸ்பத்திரியில இருந்த பத்து நாட்கள்ல ஒருநாள்கூட ஹோட்டல்காரங்க யாரும் வந்து எட்டிப் பார்க்கலை; எந்த உதவியும் செய்யலை. செப்டிக் டேங்க் உள்ளே விழுந்ததால என்னால எழுந்து நடமாடக்கூட முடியலை. உதவினு யார்கிட்டயும் போய் நிக்க முடியலை. நிறையக் கழிவுத்தண்ணி வாய்க்குள் போய், நுரையீரல்ல ஓட்டை விழுந்துருச்சு. எதுக்கு உயிர் வாழணும்னு விரக்தியா இருக்கு. ரெண்டு குழந்தைங்க முகங்களைப் பார்த்துட்டு உயிரோடு இருக்கேன். அவங்க எதிர்காலம்தான் ரொம்பப் பயமுறுத்துது'' என்றவர் பேசப் பேச அப்படியே உறைந்து போகிறார். அவரைத் தேற்றுகிறார் அவரது மனைவி அம்மு.
``ரெண்டு பேர் சம்பாரிச்சாத்தான் வீட்டு செலவைச் சமாளிக்க முடியும்னு, அடையாறுல வீட்டு வேலைக்குப் போனேன். ஏதோ கிடைக்கும். இப்ப பத்து நாளா இவரால எழுந்து நடக்கக்கூட முடியலை. இவரை இப்படியே போட்டுட்டு வேலைக்குப் போக மனசு வரலை. பக்கத்து வீடுகள்ல ரேஷன் அரிசி வாங்குறவங்க எங்களுக்குக் கொடுத்து உதவி பண்றாங்க. அது ஒண்ணுதான் இப்போதைக்கு... இவரோட மருந்து செலவுக்குக்கூட பணம் இல்லை. இறந்து போனவங்க குடும்பத்துக்கு பத்து லட்சம் வரைக்கும் பணம் கொடுத்தாங்க. எங்க குடும்பத்தை எட்டிக்கூடப் பார்க்கலை. செத்துப் போனாத்தான் பணம் தருவாங்களா? இப்படி உயிரோடவெச்சு சாகடிச்சுட்டாங்களே, நாங்க எங்கே போய் நிக்கிறது?'' என விம்மி அழுகிறார் அம்மு!