பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி!

  'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி!
News
'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி!

விக்னா சுரேஷ், ஓவியங்கள்: கண்ணா

``அம்மா, சாரு பேக்கு”  - உணவு மேஜையில் இருந்து மகள் கத்துகிறாள்.

“என்னடீ இது, மரியாதை இல்லாம? போகட்டும், எந்த சாரை பேக்குன்ற... கராத்தே மாஸ்டரா, செஸ் சாரா?”

``போம்மா, சாருன்னா ரசம். பேக்குன்னா வேணும். இது கன்னடம்!”

மகள் `கன்னடத்துப் பைங்கிளி’ எல்லாம் ஒன்றும் இல்லை. சமீபத்தில் கேட்டட் கம்யூனிட்டிக்குக் குடிபெயர்ந்திருக்கிறோம். ஆறு மாத அடுக்கு மாடி வாழ்க்கை அவளுக்கு நிறைய நண்பர்களையும் சில மொழிகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. எனக்கு இத்தனை வருடங்களில் தெலுங்கில் தெரிந்தது ‘ஜருகண்டி’யும், இந்தியில் ‘ரவானா ஹோகி’யும்தான். மகள், முதல் கட்டமாக வேற்றுமொழி பேசும் நடிகர்கள் பெயரையும், பிறகு அந்த மொழியையும் சுலபமாகக் கற்றுக்கொள்கிறாள்.

`கேட்டட் கம்யூனிட்டி' பற்றித்தான் இந்தக் கட்டுரை என்றாலும், அதற்கு அறிமுகம் எழுதினால், ` `அஞ்சலி’ படத்திலேயே இதெல்லாம் பார்த்தாச்சு' என தமிழர்கள் சண்டைக்கு வருவார்கள். மாநகரத்தின் சிறு சிறு சமூகம்போல இதைச் சொல்லலாம். பல அடுக்குமாடிக் கட்டடங்களை ஒன்றிணைத்து ஒரே குடியிருப்பு, உள்ளுக்குள் உடற்பயிற்சிக் கூடம், நீச்சல்குளம், நடைபாதை, குழந்தைகள் பார்க், 24 மணி நேர செக்யூரிட்டி, டென்னிஸ் கோர்ட் மற்றும் வாடகை அளவுக்கே தரவேண்டிய பராமரிப்புத் தொகை... இதுதான் கேட்டட் கம்யூனிட்டி.

  'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி!

இருநூறு, முந்நூறு குடும்பங்கள் ஒன்றாக வாழ்வதால் இங்கே காமெடிகளுக்குப் பஞ்சம் இல்லை. விஸ்வநாதன் ஆனந்தை சூப்பர் சிங்கரில் பாடவைத்து, அப்டமினில் பிளாக் பெல்ட்டைச் சுற்றிவிட்டு, ஓவியம் வரையவைக்கும் முயற்சியில் இருக்கும் அம்மாக்களுக்கு, `கேட்டட் கம்யூனிட்டி’ வரப்பிரசாதம். நூறு வீடுகள் இருக்கும் குடியிருப்பில் ஒரு பாட்டு மாமி இருப்பதற்கு 100 சதவிகிதமும், ஆர்ட் கிளாஸ் நடப்பதற்கு 99 சதவிகிதமும் வாய்ப்பு இருக்கிறது.

  'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி!

குழந்தையை ஜும்பா கிளாஸில் இருந்து முழுதாக உருவி எடுப்பதற்கு முன்பாக பாட்டு கிளாஸுக்குள் திணிக்கலாம்; கராத்தே உடையோடு செஸ் ஆட அனுப்பலாம்; ஸ்கேட்டிங் ஷூவோடு
கீ-போர்டு தூக்கிச்செல்வது தவறு ஒன்றும் இல்லையே என சமாதானம் செய்துகொள்ளலாம்; எந்த அம்மாவைப் பார்த்தாலும், `உங்க பையன் என்னலாம் கத்துக்கிறான்? எங்க பொண்ணுக்கு அபாக்கஸ் போக நேரமே இல்லை. ஆனா, வேதிக்-மேத்ஸ் தெரியும்' என கணக்கெடுப்பில் இறங்கி, நாம் சரியான பெற்றோராக இருக்கிறோமா என உறுதி செய்துகொள்ளலாம்.

விழாக்கள்தான் இன்னும் கோலாகலம். குறைந்தபட்ச சகிப்புத்தன்மையோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும்...கிறிஸ்துமஸ் கொண்டாடிய கையோடு பொங்கல் வைக்கலாம். பிரியாணியை ஒரு பிடி பிடிக்கலாம். கலைவிழாக்களில் பங்கேற்று, `பாரத விலாஸ்’ சிவாஜிபோல், ஒரு பக்கம் சிங், ஒரு பக்கம் அசாமி, ஒடிஷாக்காரர் கைகளைப் பிடித்து
மேலே தூக்கி, ‘இந்திய நாடு என் வீடு’ எனப் பாடலாம்; சுற்றுச்சுவருக்குள் மாரத்தான் ஓடலாம்; `இந்த வயதில் நடனம் ஆடினால் யார் பார்ப்பார்கள்?' என்ற கவலையைத் துறக்கலாம்;

  'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி!

கோலப்போட்டியில் பங்கேற்று, `எனக்கு கலர் அடிக்கத் தெரியும். ஆனா தரையில கஷ்டம்' எனலாம். இன்னும் மனிதர்களைப் பொறுத்து நிறைய ‘லாம்’களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

மாநகரத்துக்கு வந்த ஆரம்பத்தில், புதிய மனிதர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தாலே, `டப்பர்வேர், ஆம்வே ஆசாமியோ' என பயம்கொள்வேன். ஒரு மாதிரி பதிலுக்கு சிரித்த மாதிரியும் சிரிக்காத மாதிரியுமாக முகத்தை பேலன்ஸ் செய்துகொள்வேன். கேட்டட் கம்யூனிட்டியில் அவர்களுக்கும் சங்கடம் இல்லை; நமக்கும் இல்லை. வாட்ஸ்அப் குரூப் தொடங்கி, பொருட்களைச் சந்தைப்படுத்தினால், வேண்டும் என்கிறவர்கள் மட்டும் தொடர்புகொள்கிறார்கள். இன்னும், டெரக்கோட்டா நகை செய்பவர்கள், சுடிதார் வாங்கி விற்பவர்கள், விழாக்களுக்கு கேக், சாக்லேட் செய்பவர்கள் என கேட்டட் கம்யூனிட்டி வாட்ஸ்அப், ஃப்ளிப்கார்ட் போல் மாறுகிறது.

வீடு-ஆபீஸ்-வேலை... என ஒரு சுழலில் மாட்டிக்கொண்ட ஆண்களுக்கு, ஞாயிறு அன்று, `போய் நண்பர்களோடு விளையாடுங்கள்' எனச் சொன்னால், ஆரம்பத்தில் ஆளில்லாத ஷேர் ஆட்டோபோல் தயங்கித் தயங்கித்தான் போவார்கள். பிறகு, நாம் நினைத்தாலும் நிறுத்த முடியாத அளவு வாடிக்கை ஆகிவிடும். குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் அதன் பிறகு ஆண்கள் என நட்புவட்டம் அமைத்துக்கொள்ளும் வேகத்தை வரிசைப்படுத்தலாம். ஆனால், அதன் பிறகு உள்ளிருக்கும் அனைவரும் குழந்தைகள் ஆகிவிடுவதுதான் நட்பின் சுவாரஸ்யம்.

  'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி!

இத்தனை மனிதர்கள் இருக்கும் இடத்தில், ஊர் வம்பில் சீரியல் கதைகளை மிஞ்சும் சுவாரஸ்யத் துக்கும் பஞ்சம் இல்லை. ‘அந்தத் தாடி வெச்சு மொட்டைமாடியில் சிகரெட் ஊதுவானே… (இது ஒரு டெட்லி காம்பினேஷன். தாடி மீசையோடு, சிகரெட்டும் ஊதினால், பெரும்பாலான முதியவர்கள் அவர்கள் வீட்டுப் பெண்களை உங்கள் கண்ணில்படாமல் பார்த்துக்கொள்வார்கள்.) `ரேஷ்மி துணி காயப்போட மாடிக்கு வரும்போது எல்லாம் அவன் அங்க பேப்பர் படிக்கிறான்’. `எனக்கு என்னமோ, மாலா வீட்டுக்காரருக்கு வேலை இல்லைனுதான் தோணுது. மத்தியானம் மூணு மணிக்கு வேனில் இருந்து இறங்குற குழந்தையைக் கூப்பிட வர்றார்’ என்று எல்லாம் உலகமே காம்பவுண்டுக்குள் இருப்பதாக எண்ணிக்கொள்ளலாம்.

பால்கனியில் வந்துவிழும் உள்ளாடைகள், சரியாக நம் கார் அருகிலேயே கிரிக்கெட் விளையாடும் அறுந்தவால்கள், தப்பித்தவறி நேருக்குநேர் பார்க்க நேரிட்டால், காந்தியில் ஆரம்பித்து ராகுல் காந்தியில் முடிக்கக் காத்திருக்கும் பெருசுகள், அசோசியேஷன் மீட்டிங்கில் கழுத்தறுக்கும் ரூல்ஸ் ராமானுஜன்கள் என டைம்பாஸ் பண்ண ஏகப்பட்ட விஷயங்கள்.

  'கேட்’ டுக்குள் கன்னடத்து பைங்கிளி!

செக்யூரிட்டிகள்தான் கேட்டட் கம்யூனிட்டிக்கு கெத்து. ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்கள் என்றால், மிகைப்பட நடந்துகொண்டு நமக்கு கெட்டப்பெயர் வாங்கித்தந்துவிடுவார்கள். `எதுனா சாக்கு கிடைக்குமா?' எனக் கோபித்துக்கொள்ள காத்திருக்கும் உறவுகள், செக்யூரிட்டி கேட்கும் மூன்றாவது கேள்விக்கு ஆட்டோவைத் திருப்பச் சொல்லிவிடுகிறார்கள்.

கடந்த வாரம் தோழி ஒருத்தி போன் அடித்தாள். `விக்னா... உங்க கேட்டட் கம்யூனிட்டிக்கு வந்திடலாம்னு பார்க்கிறேன். இங்க பசங்களுக்குப் பொழுதேபோகலை. சதா டி.வி-யைப் பார்த்துட்டு இருக்குங்க. அங்கன்னா, நாலு பசங்களோட விளையாடலாம்; நீச்சல் கத்துக்கலாம்; அபாக்கஸ் கிளாஸ் எல்லாம் வேற நடக்குதாமே...’

ஆமாம்... தற்போது இக்கரைக்கு அக்கரை ஸ்விம்மிங் பூல்தானே!