பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

விகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்

விகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்

விகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்

விகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்

மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் (சிறுகதைகள்) - தமிழ்மகன்,

வெளியீடு: உயிர்மை பதிப்பகம், பக்கங்கள்: 160, விலை: ரூ. 135. 

விகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்

வாசகர்களை எளிதாக ஈர்த்துவிடும் வசீகரம் கொண்டவை தமிழ்மகனின் சிறுகதைகள். `மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்’ தொகுப்பில் இருக்கும் 25 கதைகளும் அப்படிப்பட்டவைதான். வெவ்வேறு கதைக்களன்களோடு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. செருப்பை இரவல் கொடுத்துவிட்டுத் திருப்பிக் கேட்க முடியாமல் தவிக்கும் மாணவன், பாம்பு பிடிப்பவன், ஓட்டலில் நடக்கும் ஊழலைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டவன், பாலியல் குற்றச்சாட்டில் தலைமறைவாகும் சுவாமிஜி, மருத்துவமனையில் தன் உயிரை விடுவதற்காகத் தவிக்கும்(!) நோயாளி... என கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. தான் அனுபவித்ததை, உணர்ந்ததை, நெகிழ்ந்ததை, உருகியதை எல்லாம் சிறுகதைகளாக வடித்திருக்கிறார் தமிழ்மகன்.

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள் (கட்டுரைகள்) - ஜெ.டால்பாய்ஸ் வீலர் - தமிழில்: க.ஜெயராமன், வெளியீடு: சந்தியா பதிப்பகம் - பக்கங்கள்: 416, விலை: ரூ 325.

விகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்

17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் இந்தியச் சூழலின் அறமற்ற நிலையை ஆவணங்கள் வழியாகப் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம். பிரிட்டிஷ்  முடியாட்சியின் நிழலாக இந்தியாவை நிர்வாகம் செய்பவர்களின் கோரமுகங் களையும், மொகலாய ஆட்சியின் கொடுங்கோன்மையையும் காட்சிப்படுத்திக்கொண்டே நகர்கின்றன ஆவணங்கள். உதாரணங்களாக... தனக்கு முன் ஆட மறுத்த நடன மாதுவை தர்பாரில் எல்லோர் முன்பும் சிரச்சேதம் செய்த அலகாபாத் கவர்னர், மூக்கையும் மேலுதட்டையும் மட்டும் வெட்டும் மைசூர் அரசர்களின் கொடூரத் தண்டனை வகை, குழந்தைகளை முதலைக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, வரிப்பணம் கட்டாத ஜமீன்தாரின் பெரிய உள்ளாடைகளுக்குள் பசியோடு இருக்கும் பூனையை விடுவது... என முடியாட்சியின் ரத்தப் படலம் விரிகிறது. இந்த ஆவணங்களை எழுதிய ஜெ.டால்பாய்ஸ் வீலர், இங்கிலாந்தில் பிறந்தவர்; சென்னை பிரசிடென்ஸி கல்லூரியின் தத்துவவியல் துறை பேராசிரி யராகப் பணியாற்றியவர். மொகலாய - ஆங்கில ஆட்சியின் கோரத்தைப் பதிவாக்கியதன் வழியாக இந்தப் புத்தகம் மறைமுகமாக நமக்கு உணர்த்துவது... ஜனநாயகம் எவ்வளவுதான் பணக்காரர்களைப் பார்த்துப் பல்லிளித்தாலும், சாமான்யருக்கு தன் கடைக்கண் பார்வையையாவது வழங்கி ஆதரவாக இருக்கிறது. அதற்காகவாவது ஜனநாயகத்தை விடாது பற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத்தான். ஆங்கில வழி ஆவணத்தை, தமிழில் நெருக்கமாக மொழிபெயர்த்திருக்கிறார் க.ஜெயராமன்!

காடோடி (நாவல்) - நக்கீரன், வெளியீடு: அடையாளம், பக்கங்கள்: 340, விலை: ரூ 270.

விகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்

தென்கிழக்கு ஆசியாவில் பல அரியவகை உயிரினங்கள் வாழும் போர்னியோ காட்டை, பன்னாட்டு வணிக அரசியல் எப்படி அழிக்கிறது என்பதை வலியோடு பேசும் நாவல் `காடோடி’. ஓர் உல்லாசப் பயணியைப்போல காட்டுக்குள் நுழையும் கதைசொல்லி, அந்தக் காட்டை நிர்மூலமாக்கும் ஒரு நிறுவனத்தின் ஊழியனாக வேலை செய்கிறான். இடையில் சில சம்பவங்கள், சில மனிதர்களுடனான சந்திப்புகள் மூலம் காட்டின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறான். காடு என்பது மரங்களின் தொகுதி மட்டும் அல்ல... மண், புல், பூச்சி, விலங்குகள், பறவைகள், நீர்நிலைகள், பழங்குடிகள்... என பல உயிர்களின் தொகுதி வாழ்கிற உலகம் அது. காடு அழியும்போது அவையும் அழிகின்றன என்பதை உணர்கிறான். காட்டின் தாய்மரம் வெட்டி சாய்க்கப்பட்ட பிறகு தொடர்ந்து பல அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இயற்கை சீற்றம்கொள்ளத் தொடங்குகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் நாவலின் கதைச் சுருக்கம். கதைசொல்லிக்கும் காட்டின் ஆன்மாவாக வரும் பிலியவ் என்கிற பழங்குடி முதியவருக்கும் நடக்கும் உரையாடல்கள் நம் மனசாட்சியை உலுக்குகின்றன.

சூழலியல் சார்ந்த பார்வையுடனும் நுட்பமான தகவல் செறிவுடனும் தமிழில் வந்திருக்கும் காடு சார்ந்த முதல் நாவல் இது. காட்டில் வாழ்கிற மக்களின் உணவு, உடை, மொழி, பழக்கவழக்கங்கள், கொண்டாட்டம், துக்கம், இசைக்கருவிகள் என ஒரு மானுடவியல் ஆய்வாளனுக்கே உரிய அக்கறையோடு பதிவுசெய்திருக்கிறார் நாவலாசிரியர். பழங்குடிகள் சார்ந்த, அவர்கள் முன்வைக்கிற கதைகளை மட்டுமே தனியே தொகுக்கலாம். காட்டை மட்டும் பேசாமல் ஆழமான நட்பு, சாத்தியமற்ற காதல், எதிர்பாராத துரோகம், காமம், தந்தைமை... என மனித உணர்வுகளின் உலகத்தையும் விவரிக்கிறது நாவல். ஒரு மழைக்காடு அழிவதற்கு சாட்சியமாக இருந்த தனது உண்மையான அனுபவத்தை, புனைவு கலந்து எழுதியிருக்கிறார் நக்கீரன். ஒரு நாவலாக மட்டும் அல்லாமல் சூழலியல், மானுடவியல் நோக்கில் எழுதப்பட்ட மிக முக்கிய ஆவணமாக இருப்பதே `காடோடி’ நாவலின் முக்கியத்துவம்!

மாயி-சான் - ஹிரோஷிமாவின் வானம்பாடி (மொழிபெயர்ப்பு சிறார் நாவல்), தோசி மாருகி, தமிழில்: கொ.மா.கோ.இளங்கோ, வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், பக்கங்கள்: 48, விலை: ரூ 35.

விகடன் சாய்ஸ் - புத்தக விமர்சனம்

1945-ம் ஆண்டு, ஹிரோஷிமா மீது, அமெரிக்கா போட்ட அணுகுண்டின் பெயர் ‘குட்டிப் பையன்’. இதில், 20,000 போர் வீரர்கள் தொடங்கி, 70,000-ல் இருந்து 1,46,000 அப்பாவிக் குடிமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதில் பல்லாயிரக்கணக்கான சிறார்களும் அடக்கம். பல்வேறு நோய்த் தொற்றுகள், உடல் குறைபாடுகள்... என உயிர்பிழைத்தவர்களின் சந்ததியை அந்தக் குண்டின் கதிர்வீச்சு இன்றைக்கும் தாக்குகிறது. இதைப் பின்புலமாக வைத்து, ஜப்பானிய எழுத்தாளர் தோசி மாருகி எழுதியிருக்கும் சிறுவர் நாவல் ‘மாயி-சான்.’  சிறுமி மாயி-சானுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு என்றால் உயிர். அம்மா சுடச்சுட அவித்துக் கொடுத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை கையில் எடுக்கும்போது விழுகிறது அணுகுண்டு. மாயி சானும், அவள் அம்மாவும் அப்பாவும் தப்பித்தார்களா என்பதே கதை. போரின் முகம் எப்போதுமே கோரமானது... முக்கியமாக அப்பாவி மக்களுக்கு!  இந்தப் பேருண்மையை சிறார்களுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதியிருக்கிறார் தோசி மாருகி. தமிழில் அழகுபட மொழிபெயர்த்திருக்கிறார் கொ.மா.கோ.இளங்கோ.