பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஸ்வேதா ஜெயித்த கதை!

ஸ்வேதா ஜெயித்த கதை!
News
ஸ்வேதா ஜெயித்த கதை!

நரிக்குறவர் டு இன்ஜினீயர்சி.ஆனந்தகுமார், படங்கள்: தே.தீட்ஷித், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ரிக்குறவப் பெண் என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? வெற்றிலை மெல்லும் வாய், கழுத்து நிறைய பாசிமணிகள், கை நிறைய வளையல்கள், அழுக்கான உடலில் அரைப்பாவாடை, இடுப்பில் ஒரு கைக்குழந்தை... என நம் மனதில் தோன்றும் சித்திரத்தை அடியோடு மாற்றிப்போடுகிறார் ஸ்வேதா.  நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மாடர்ன் பெண்ணான ஸ்வேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி. ஆனால், இது மட்டும் அல்ல அவரது பெருமை. பொறியியல் படித்து கேம்பஸ் இன்டர்வியூவில் கை நிறையச் சம்பளத்துடன் கிடைத்த வேலையை, தன் சமூக மக்களின் நலனுக்கு உழைப்பதற்காக உதறித் தள்ளியிருக்கிறார். திருச்சி - தஞ்சாவூர் சாலையில் உள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஸ்வேதாவின் பேச்சில் அத்தனை பக்குவம். 

ஸ்வேதா ஜெயித்த கதை!

``முதல் நாள் கல்லூரி வாசலில் போய் இறங்கியதை  என்னால் மறக்கவே முடியாது. அம்மா, அப்பா, தாத்தானு குடும்பத்தோடு காரில்தான் போய் இறங்கினோம். எங்க தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். தோளில் துப்பாக்கியைத்  தொங்கவிட்டுக்கிட்டு, தலையில் முண்டாசு கட்டிய தாத்தா என்னை ஆசீர்வாதம் பண்ணினார். எல்லாரும் வெச்ச கண் வாங்காம வேடிக்கை பார்த்தாங்க. அவங்களுக்கு எல்லாம் அது வடிவேல் பட காமெடி; ஆனால், எனக்கு வாழ்க்கை'' - அட்டகாசமாக ஆரம்பிக்கிறார் ஸ்வேதா.

``அப்பா மகேந்திரன், ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியால் 12-ம் வகுப்பு வரை படிச்சவர். அம்மாவும் 10-ம் வகுப்பு வரை படிச்சிருக்காங்க. நான் இன்ஜினீயரிங் பட்டதாரியாக இவங்கதான் முழுக் காரணம். ஆனால், பள்ளியில் நான் சந்திச்ச அவமானங்கள் எக்கச்சக்கம்.

ஸ்வேதா ஜெயித்த கதை!

நான் மூணாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பையன், `குறத்தி...குறத்தி’னு கிண்டல் பண்ணினான். அதை வீட்டில் சொல்லாம, ஸ்கூலுக்கும் போகாம பத்து நாட்களுக்கும் மேல வீட்டுலயே இருந்தேன். விஷயம் தெரிஞ்சு எங்க அம்மா ஸ்கூலுக்கு அழைச்சிட்டு வந்து சிஸ்டர்ஸ் கிட்ட பேசி என்னை மறுபடியும் அனுப்பிவெச்சாங்க.  இருந்தாலும் அந்தச் சம்பவம் என் மனசுக்குள்ள ஒரு பயத்தை உருவாக்கிருச்சு. ஸ்கூல் வேன்ல மற்ற பிள்ளைங்ககூடப் பேசவே பயமா இருக்கும். ஒருநாள் என்னை `டொம்பச்சி, டொம்பச்சி'னு ஒரு பையன் சொன்னான். அப்படினா என்னனுகூட எனக்குத் தெரியாது. அம்மாகிட்ட கேட்டப்போ, தஞ்சாவூர் பக்கம் எங்க சமூக மக்களை இப்படித்தான் கூப்பிடு வாங்கனு சொன்னாங்க.

நான் படிப்பைப் பாதியில் நிறுத்திடக் கூடாதுங்கிறதுல மட்டும் அம்மா விடாப்பிடியாக இருந்தாங்க. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இருந்தே, எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க, ஊர்க்காரங்க நெருக்கடி குடுத்தாங்க. அம்மாவும் அப்பாவும் ஊர்ல எங்க சமூகத்துல நடக்கிற நிறைய இளம் வயது திருமணங்களை நிறுத்தி, பிள்ளைகளைப் படிக்க வைக்கச் சொல்லி, பல காலமா போராடிக்கிட்டு இருக்கிறவங்க. அதனால அதுக்குப் பழிவாங்கிறதுக்காக எனக்கு தாலிக்கட்டி விட்டுடுறேன்னு பல பேர் சுத்துனாங்க. இதுக்குப் பயந்து அம்மா, என்னை திருச்சி ஃபிலோமினாஸ் ஸ்கூல் ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டுட்டாங்க. `ஊருக்குப் போனா, கல்யாணம் பண்ணிவெச்சிடுவாங்க'னு நானும் பயந்து படிக்க ஆரம்பிச்சேன். கூடவே பள்ளி கலைநிகழ்ச்சிகளில் பரதநாட்டியமும் ஆடுவேன். எங்க அம்மாவுக்கு பரதநாட்டியம் தெரியும். அதனால எனக்கும் அதுல ஆர்வம். பாட்டும் நடனமும் எங்க சமூக மக்களின் ரத்தத்துலேயே கலந்திருக்கு. ஒருகட்டத்துல கல்ச்சுரல் நிகழ்ச்சினா,  நான்தான் முதல் ஆளா நிற்பேன். பாட்மின்டனும் நல்லா விளையாடுவேன். மாவட்ட அளவில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன்.

ஸ்கூல் முடிச்சு, திருச்சி எம்.ஏ.எம் இன்ஜினீயரிங் காலேஜ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஸீட் கிடைச்சது. உள்ளே நுழைஞ்ச முதல் நாள்லயே நான் நரிக்குறவப் பெண்ங்கிற விஷயம் ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் தெரிஞ்சுடுச்சு. ஆனா அவங்களோட வித்தியாசமான பார்வை, ஒதுங்கிப்போறது, கிண்டல் பண்றது எதையும் நான் கண்டுக்கவே இல்லை. நம்ம நோக்கம் படிக்கிறது, அதை விட்டுறக் கூடாதுனு கவனமா படிச்சேன். ஆனால், இன்னைக்கு என்னைப் புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட்டா இருக்கிறதும் அதே ஃப்ரெண்ட்ஸ் தான்'' என நெகிழ்கிறார் ஸ்வேதா.
கடந்த ஆண்டு பொறியியல் படிப்பை முடித்த ஸ்வேதாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் சண்டிகர் மாநிலத்தில் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வேலைக்குச் செல்வது இல்லை என முடிவு எடுத்துவிட்டார் ஸ்வேதா.

ஸ்வேதா ஜெயித்த கதை!

``நான் வேலைக்குப் போனா, என் வாழ்க்கை மட்டும்தான் நல்லா இருக்கும். ஆனா, எங்க சமூக மக்கள் இன்னமும் மோசமான நிலைமையில தான் இருக்காங்க. பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறதே இல்லை. இந்த நிலைமையை மாத்தணும்னா நான் இங்கே இருக்கணும். என்னை ஒரு இன்ஸ்பிரேஷனா நினைச்சு மற்ற பிள்ளைகளும் படிப்பாங்க'' என்கிறார் ஸ்வேதா.
இவரது இந்தத் தெளிவும் சமூக நோக்கும் இவரது பெற்றோர்களிடம் இருந்து வந்தது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்துவரும் ஸ்வேதாவின் அப்பா மகேந்திரன், பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ்... இவர்கள் வழிகாட்டிய முற்போக்கு அரசியல் அறிந்தவர்; அவர்களின் கொள்கைகளைப் படித்தவர்.

``எல்லாத்தையும் படிச்சு, `இந்தச் சமுதாயத்தை தலைகீழா மாத்தணும்'னு வெறி வரும். வீட்டுக்கு வந்தா, கஞ்சிக்குக்கூட வழி இருக்காது. காமராஜர் காலத்துல எங்க மக்களுக்கு திருச்சி பெல் நிறுவனம் பக்கத்துல இடம் கொடுத்தாங்க. பிறகு அந்த இடத்துல தொழிற்சாலை வருதுனு சொல்லி, தேவராயநேரிக்கு மாத்தினாங்க. அப்போ திருச்சி மாவட்ட கலெக்ட்டராக இருந்த ஆர்.எஸ்.மலையப்பன்தான், இடம்கொடுத்து குடியிருப்பு கட்ட வழிசெஞ்சு கொடுத்தார். அவர்தான் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துல பல இடங்கள்ல எங்க மக்களுக்காக இடம் ஒதுக்கி வாழ வழிசெஞ்சார். கூடவே, தன் சொந்த முயற்சியில, எங்க பிள்ளைகளைப் படிக்கவெச்சார். ஆனா, அதை எல்லாம் பயன்படுத்திக்கிற விழிப்புஉணர்வு இல்லாத எங்க மக்கள், அவர் ஏற்படுத்திக்கொடுத்த குடியிருப்புகளை விட்டு அடுத்த நாளே ஓடிவந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கு. அவர் நினைவா, திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எங்க மக்கள் வசிக்கிற பல ஊர்களுக்கு `மலையப்பன் நகர்'னு  பெயர் வெச்சிருக்காங்க.

எத்தனை தடவை பள்ளிக்கு அனுப்பினாலும் மறுபடியும் பாசிமணி விற்க ஓடிவந்திடுவாங்க. இந்த நிலைமையை மாத்தாம எதுவும் பண்ண முடியாதுனு புரிஞ்சுது. 25 வருஷங்களுக்கு முன்னால, `திருவள்ளுவர் குருகுலம்'கிற பேரில் ஒரு உண்டு உறைவிடப் பள்ளி ஆரம்பிச்சோம். வெறும் பள்ளின்னா யாரும் வர மாட்டாங்க. பாசி, ஊசி விற்க ஊர் ஊரா போகும்போது பிள்ளைங்களையும் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அதனால, `நீங்க வியாபாரத்துக்குப் போங்க, பிள்ளைங்களை இங்கே அனுப்பிவைங்க.

தங்கவெச்சு, சாப்பாடு போட்டு படிப்பு சொல்லித் தர்றோம்'னு சொல்லி வரச் சொன்னோம். ஊர் ஊரா போய் பிள்ளைகளை அழைச்சிட்டு வந்தா அடுத்தநாளே ஓடிப் போயிடுவாங்க. நாங்க போனாலே, `பிள்ளை பிடிக்கிறவர் வர்றார்'னு பிள்ளைகளை ஒளிச்சுவெச்சவங்களும் உண்டு. இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுத்தான் எங்க ஜனங்களுக்குக் கல்வியைத் தரவேண்டி இருக்கு. எங்க உண்டு உறைவிடப் பள்ளியில இப்போ 150 பிள்ளைங்க படிக்கிறாங்க. இதுல 52 பிள்ளைகள் இங்கேயே தங்கிருக்காங்க. அரசின் உதவியோடு  ஸ்கூல் நடக்குது'' என்கிறார் மகேந்திரன்.

ஸ்வேதா ஜெயித்த கதை!

ஸ்வேதாவின் அம்மாவும் இதே தெளிவுடன் பேசுகிறார்...

``என்னோட அப்பா ஊர் ஆத்தூர் பக்கம். எங்க தாத்தா செஞ்சேரியன், அப்பவே முற்போக்கு சிந்தனையோடு இருப்பார். ஊர்ல இருந்தா படிக்க விடமாட்டாங்கனு, என்னை சென்னைக்கு அனுப்பி படிக்கவெச்சார். அங்கேதான் நான் 10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சேன்;  பரத நாட்டியமும் கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்குப் பிறகு நானும் இவரும் சேர்ந்து எப்படியாவது எங்க சமூகப் பிள்ளைங்களை ஒரு படியாவது மேலே கொண்டுவரணும்னு வேலை செய்றோம். எங்க சமூகத்துல நிறையப் பிள்ளைங்க பெத்துக்குவாங்க. நாங்க ரெண்டு பிள்ளைகளுக்கு மேல பெத்துக்கக் கூடாதுனு முடிவு எடுத்து நிறுத்திக்கிட்டோம். பொண்ணு ஸ்வேதாவையும், மகன் அருணையும் கான்வென்ட்ல படிக்கச் சேர்த்துவிட்டேன். இதுக்காக நாங்க பட்ட சிரமம் கொஞ்சநஞ்சமல்ல.

இப்பவே இந்தப் பகுதி தீவு போலதான் இருக்கு. 20 வருஷங்களுக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும்? யோசிச்சுப் பாருங்க. பஸ் வசதி எதுவும் இருக்காது. இங்கே இருந்து ஸ்கூல் 16 கி.மீ தூரம். இந்தப் பக்கமா லாரி -வேன் வந்தா கெஞ்சிக் கூத்தாடி நிறுத்தி ஏறி ஸ்கூல்ல கொண்டுபோய் விடுவேன். கூடப் படிக்கிற பசங்க, பிள்ளைகளைக் கேலி பண்ணுவாங்களே, அதுக்கு பயந்து படிக்காம போயிடுவாங்களேனு பயந்து, சாயங்காலம் வரைக்கும் ஸ்கூல் வாசல்லயே உட்கார்ந்து பாசி கோத்துட்டு  இருப்பேன்''  என அவர் விவரிப்பது, தன் பிள்ளை களுக்கு அறிவின் வாசலைத் திறந்துவிடத் துடித்த ஒரு தாயின் அசாத்தியமான கதை.

தன் அப்பா நடத்துகிற நரிக்குறவர் உண்டு உறைவிடப் பள்ளியில், காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணிக்கு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து இருக்கிறார் ஸ்வேதா.

``ஒருவேளை அந்த வேலை கிடைக்கலைன்னா ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படிக்க ஆரம்பிப்பேன்'' என்கிற ஸ்வேதா, ``எங்க சமூக மக்களுக்கு படிப்புல ஆர்வம் இல்லைங்கிறது உண்மைதான். அதையும் மீறி பலபேர் இப்போ தங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கணும்னு நினைக்கிறாங்க. ஆனா பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பினா, `டொம்பன், காக்கா குருவி, ஊசிபாசினு கிண்டல் பண்ணுவாங்க'னு பயப்படுறாங்க. இது மாறணும்; ஒவ்வொருத்தரும் எங்களை சக மனுஷங்களா மதிக்கணும்'' என்கிறார் ஸ்வேதா.