பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

•   சிரஞ்சீவி நடிக்கும் ‘கத்தி’ ரீமேக், பவன் கல்யாண் நடிக்கும் ‘வேதாளம்’ ரீமேக், ராம் சரண் நடிக்கும் ‘தனி ஒருவன்’ ரீமேக், அல்லு அர்ஜுனின் புதிய படம் என சிரஞ்சீவி குடும்பத்தின் மொத்தப் படங்களுக்கும் ஒரே நாயகி ரகுல் ப்ரீத் சிங். கொஞ்சம் சம்பளம், நிறைய கிளாமர் என்ற ரகுலின் ஃபார்முலா பிடித்துப்போக, குவிந்துகொண்டே இருக்கிறதாம் படங்கள். கிளாமர் கிராமர்!

இன்பாக்ஸ்

•   ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தன் வீட்டைப் பாதுகாக்க, 16 பாடிகார்டுகளை நியமித்திருக்கிறார். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்கிறீர்களா? திடீரென இப்படி நியமிக்கக் காரணம், தினமும் மார்க்குக்கு ஃபேக் ஐடிகளிடம் இருந்து, கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றனவாம். ஆன்லைன் வழியாக தினமும் வரும் மிரட்டல்களோடு, ஃபேஸ்புக்கால் பிரேக் அப், விவாகரத்து போன்ற சொந்தப் பிரச்னைகளுக்கு ஆளானவர்கள் விடுக்கும் மிரட்டல்களும் சேர்ந்துவர, உஷாராகி, பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கிறர் மார்க். பிளாக் பண்ணுங்க ப்ரோ!

•   தெலுங்கில், `யார் அதிக பட்ஜெட்டுக்கு செட் போட்டு படம் எடுக்கிறார்கள்?’ என்ற போட்டாபோட்டி தொடங்கியிருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர்-ன் அடுத்தப் படம் `ஜனதா கேரேஜ்'. படத்தை இயக்குவது, மகேஷ்பாபுவை வைத்து, `ஸ்ரீமந்துடு' மெகா ஹிட் கொடுத்த கொரடலா சிவா. இந்தப் படத்தில் வருகிற ஒரு கேரேஜை, மூன்று கோடி ரூபாயில் செட் போட்டிருக்கிறார்கள். இந்த செட்டில் நிறுத்தி வைக்க விலை உயர்ந்த கார்களையும் சில கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள். `அல்லு அர்ஜூன் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் `சரைனோடு' படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக ஒன்றரை கோடி ரூபாயில் செட் போட்டார் என்பதற்காகத்தான், ஜூனியர் என்.டி.ஆர் இப்படி ஒரு செட்டைப் போடுகிறார்’ எனக் கிசுகிசுக்கிறது டோலிவுட். செட்டு செட்டா அடிக்கிறாய்ங்க.

•   சிக்கலில் சிக்கியிருக்கிறார் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார். 2011-13 காலகட்டத்தில் `ஒழுங்காக வரி செலுத்தவில்லை’ எனச் சொல்லி, அவரது 310 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியிருக்கிறது பிரேசில் நீதிமன்றம். முடக்கப்பட்ட சொத்துக்களில் அவரது சொகுசுப் படகும் விமானமும் அடக்கம்! வரி கட்டுங்கஜி... வாழ்க்கை நல்லா இருக்கும்!

•   28 ஆண்டுகளுக்குப் பிறகு தன் டிகிரி சர்டிஃபிகேட்டை வாங்கியிருக்கிறார் ஷாரூக் கான். டெல்லி பல்கலைக்கழகத்தில் 1988-ம் ஆண்டு எக்கனாமிக்ஸ் முடித்தார் ஷாரூக் கான். ஆனால், நடிப்பு ஆர்வத்தில் இருந்தவர் படிப்பை முடித்தும் சான்றிதழ் பெறவே இல்லை. சமீபத்தில் `ஃபேன்' பட புரொமோஷனுக்காக டெல்லி பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது அவரின் டிகிரி சான்றிதழைக் கொடுத்தது பல்கலைக்கழகம். `இந்த இடத்தில் என் குழந்தைகள் இருந்திருக்க வேண்டும். அவர்களை அழைத்துக்கொண்டு கல்லூரியின் அத்தனை மூலைகளுக்கும் போய் வர ஆசைப்படுகிறேன்' என எமோஷனல் ஆனார் ஷாரூக். ஷாரூக் கான் பி.ஏ.

இன்பாக்ஸ்

•   `என்னதான் விதவிதமான காஸ்ட்யூம்கள் இருந்தாலும், சேலை கட்டும்போது இருக்கிற சந்தோஷம் வருமா?’ எனக் கேட்கிறார் நடிகை வித்யா பாலன். தற்போது வித்யா எங்கு சென்றாலும் பாரம்பர்யமான சேலைகள்தான் காஸ்ட்யூம். `எதுவும் விளம்பரமா?’ எனக் கேட்டால், `எனக்கு இந்த உடை மிகவும் பிடித்திருக்கிறது. புடவை கட்டும்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன். என்னைப் பார்த்து இன்னும் நிறையப் பெண்கள் புடவைகளுக்கு மாறுகிறார்கள். மற்றபடி இதில் எந்த விளம்பரமும் இல்லை’ என்கிறார் வித்யா. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு!

•   `` `சென்னையை மறந்து, புனே வீரனாகிவிட்டேன்’ என்று நான் சொன்னால் அது பொய். 8 வருடங்களாக சென்னை அணியில்  உணர்வுபூர்வமாக இணைந்திருந்தேன். `புதிய அணிக்கு விளையாடுவது உற்சாகம் அளிக்கிறது’ என்று சொன்னால், சென்னை ரசிகர்கள் எங்கள் மீது காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் மதிப்பு அளிக்காததுபோல இருக்கும். சென்னையை மறக்க முடியாது என்றாலும் ஒரு விளையாட்டு வீரனாக புனே அணிக்கு எனது முழுப் பங்களிப்பை வழங்குவேன்' என ஃபீல் ஆகியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் தோனி. ஐ.பி.எல்-ல் சென்னை இல்லாததால் இந்த ஆண்டு புனே அணிக்காக விளையாடுகிறார் தோனி! விசில் போடு!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

•   மைதானத்தில் மட்டும் அல்ல, மைக் பிடித்தாலும் அதிரடியில் இறங்கிவிடுகிறார் கோஹ்லி. சமீபத்தில் வெளிநாட்டு வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்துகொண்டார். அங்கே இருந்த பத்திரிகையாளர் ஒருவர், அனுஷ்கா ஷர்மா உடனான பிரேக்அப் பற்றி மறைமுகமாகக் கேட்க நினைத்து, `உறவுகள் பத்தி என்ன பாஸ் நினைக்கிறீங்க?' எனக் குசும்பாகக் கேட்க, கோஹ்லி `அதை ஏங்க எங்கிட்ட வந்து கேட்கிறீங்க, என்னைப் பார்த்தா ரிலேஷன்ஷிப் கவுன்சிலர் மாதிரி இருக்கா?' என பதிலடி கொடுத்தார். ஓயாத அந்த வேதாள நிருபர், `இந்த காஸ்ட்லி வாட்ச்சை பாலிவுட்ல யாருக்கு கிஃப்ட் பண்ணுவீங்க?' எனக் கொக்கியைப்போட, கோஹ்லி `நான் ஏன் பாலிவுட்காரங்களுக்கு கிஃப்ட் கொடுக்கணும்? எனக்குக் குடும்பம் இருக்கு. முதல்ல அவங்களுக்குத்தான் கொடுப்பேன்' என ஒரே போடாகப் போட்டார். நீ நடத்து கோஹ்லி!

இன்பாக்ஸ்

•   இந்தி பாடலாசரியர் சமீர் அஞ்சன், யாரும் தொட முடியாத கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இதுவரை 650 படங்களில் 3,524 பாடல்கள் எழுதி முடித்திருக்கிறார் இந்தக் கவிதை மன்னர். கின்னஸில் இதுவரை இப்படி ஒரு கேட்டகரியே கிடையாதாம். இவருக்காகவே `அதிகப் பாடல்களை எழுதிய கவிஞர்’ என்ற பிரிவைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இன்பாக்ஸ்

1983-ம் ஆண்டில் தன் முதல் பாடலை எழுதியவர் 33 ஆண்டுகளில் இந்தச் சாதனையை எட்டிப்பிடித்திருக்கிறார். `குச் குச் ஹோத்தா ஹை’ பாடல்கூட சமீரின் கைவண்ணம்தான். ஆல் இண்டியா கவிப் பேரரசுக்கு ஆல் த பெஸ்ட்!