Published:Updated:

உயிர் பிழை - 28

உயிர் பிழை
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் பிழை

மருத்துவர் கு.சிவராமன்

மீபமாக மரணத்தின் தரம் (Quality of death) குறித்த ஆய்வுகள் நிறையவே ஆராயப்பட்டு வருகின்றன. `மரணத்தின் தரம்’ எனும் வார்த்தைகளே கொஞ்சம் சிக்கலாகவும் அச்சமூட்டுவதாகவும் இருக்கிறதே எனப் பதறலாம். எப்படி ஒவ்வொரு நோயிலும் வாழ்வின் தரம் (Quality of Life) ஆராயப்பட்டு வருகிறதோ, அதேபோல் மரணத்தின் தரமும் வெகுவாக ஆராயப்படுகிறது. ஆம், அதுதான் நிதர்சனம். அப்படித்தான் உரையாடியாக வேண்டும்.

Palliative Chemotherapy என்கிற பெயரில் வாழ்வின் விளிம்பில் இருக்கும், முற்றிலும் பரவி நிற்கும் எல்லா புற்றுநோயருக்கும் `கொஞ்சமேனும் பலன் அளிக்கக்கூடும்’ எனக் கணித்து, வீரியமான மருந்துகளை வழங்குவது பற்றிய சர்ச்சை வளர்ந்த நாடுகளில் வெகுவாக நடக்கிறது.

`கடைசி முயற்சியாக, இப்படி வீரிய ரசாயன மருந்துகளை எடுக்காதவர்களின் இறுதிக் காலத்தையும்... ஒன்றோ இரண்டோ தடவை இந்தச் சிகிச்சை எடுப்போரின் இறுதிக் காலத்தையும் ஒப்பிடும்போது, மருந்து எடுத்துக்கொள்ளாதவரின் வாழ்வின், மரணத்தின் தரம் சிறப்பாகவே உள்ளது; குறைந்தபட்சம் அதிக துன்பமும் வலியும் இல்லாமல் இறுதி நாட்கள் இருந்தன; இந்தக் கடைசி நிமிட உயர் மருந்துகள் தேவை இல்லை’ என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

அறம் சார்ந்த மருத்துவரின் முடிவு மட்டுமே அந்த இடத்தில் மருந்துகளின் அவசியத்தைத் தீர்மானிக்க முடியும். `கூகுள்ல போட்டிருக்கே...’ எனும் கேள்வி மருத்துவருக்கு எரிச்சலூட்டும். `குடும்பத்தோடு அமர்ந்து பேசலாமா?’ என அழைத்து எளிமையாகப் புரியும் மொழியில் நோயின் நிலையை, பாரபட்சம் இல்லாமல் விளக்கி, அடுத்த நிலைப்பாட்டை எடுப்பது மட்டும்தான் அறம்சார் அறிவியலின் வழி. ஏனென்றால், அவரோடு சேர்ந்து எல்லாவற்றையும் இழந்து கண்ணீரோடு நிற்கும் மனிதர்களின் மன அழுத்தம் இங்கே அதிகம். உலகம் எங்கும் உள்ள பாரம்பர்ய அனுபவங்களை, அனுபவ மருத்துவத்தைக் கொஞ்சம் இங்கேயாவது உதாசீனப்படுத்தாமல் உற்றுப்பார்க்கலாம்.

உயிர் பிழை - 28

கூட்டாக இந்தச் சிக்கலுக்கு வழி தேடலாம் என  நாமும் தொடர்ந்து `ஆறாம் திணை' காலத்தில் இருந்து அறைகூவல் விட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். `உயிர் பிழை’ படிக்கும் பல நவீன மருத்துவர்களும் பல பாரம்பர்ய மருத்துவர்களும் பொதுவெளியில் சந்திக்கும்போது தங்கள் கரிசனத்தை,  அனுபவத்தை நிறையப் பகிர்வது உண்டு.   `நாட்பட்ட நாவின் புண் இது. Premalignant Status என்போம். உங்களோட மூலிகைப் பொடியால் இதன் புற்று வரவைத் தள்ளிப்போட முடியுமா... ஆராய்ந்து பார்க்கலாமா?' என்ற கேள்வியை `உயிர் பிழை' உருவாக்கியிருக்கிறது. ஆறு கீமோ, சர்ஜரி, ரேடியேஷன் இத்தனைக்கும் பிறகும் Retroperitoneum-ல் புதிதாக ஒன்று முளைக்கிறது. பழையதன் நீட்சியா... புது சார்கோமாவா... எனத் தெரியவில்லை. மூலிகையில் Natural killer cells வளர்த்தெடுக்கும் வாய்ப்பு ஏதும் இருக்கிறதா எனும் ஆய்வுப் புள்ளியை வைக்கும் நவீன ஆய்வாளர்கள் அதிகரித்துள்ளனர். இது மாதிரியான அத்தனை பகிர்தலிலும், சவால்களுக் கான விடைகள் பட்டவர்த்தனமாகத் தெரிவது கூட்டுச் சிகிச்சையிலும் கூட்டு ஆய்விலும் மட்டுமே. ஆனாலும் அரசின் பார்வையும் முனைப்புகளும் பேச்சைத் தாண்டி இதில் பெரிதாக இருந்ததே இல்லை.

கடந்த மாதம் மும்பையில் முதன்முதலாக அரசின் துணையோடு, பல்துறை உயர் மருத்துவர்கள் துணையோடு, வெவ்வேறு பாரம்பர்ய இந்திய மருத்துவத்தின் உயர் அதிகாரிகள்,  `கூட்டாக இந்த நோயை எப்படி அணுகலாம்?’ என்ற கருத்தரங்கை நடத்தினார்கள். மும்பையைச் சார்ந்த Life Science World எனும் முக்கிய இணையவழி மருத்துவப் பத்திரிகை இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.  நவீன மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா, ஹோமியோபதி, நேச்சுரோபதி... என அனைத்துத் துறைகளின் மருத்துவர்களும் விவாதித்ததில் விளைந்த புரிதல் ஒன்றுதான்.

இந்தப் புற்றுக்கு இந்த மாத்திரை எனப் படைக்கும் காலம் வெகுதொலைவில்தான் உள்ளது. ஆனால், `காற்றைப் பிடிக்கும் கணக் கறிவாளனுக்கு, கூற்றை உதைக்கும் குரியதுவாமே' என திருமூலர் சொன்னது மாதிரி, `காற்றைப் பிடித்து ஆளும் மூச்சுப்பயிற்சியில் தொடங்கி, மனதின் ஓட்டத்தையும், உடலின் ஆதார சக்தியை ஒருமிக்கும் சுதர்சன கிரியா முதலான தியானப்பயிற்சியும் செய்து, உடற்பயிற்சி, சித்த மருத்துவத்தின் வர்மம், தொக்கணம், ஆயுர்வேதத்தின் பஞ்சகர்மா, சித்த- ஆயுர்வேத-ஹோமியோபதி மருந்துகளின் தேர்ந்த சரியான கூட்டு சிகிச்சையும், Graviola இலைக் கஷாயமோ, Green tea தேநீரோ, Broccoli கூட்டுக்கறியோ சேர்த்து எந்தப் புற்றையும் கட்டுப்படுத்தலாம் அல்லது குறைந்தபட்சம் குறைந்த செலவில் நோயாளியின் வாழ்வியல் தரத்தையேனும் உயர்த்தலாம்’ என்ற செய்தி அங்கே இன்னும் திடமாகக் கிடைத்தது.

அதே அரங்கில், நவீன புற்றுநோய் சிகிச்சையில் பெரும் ஆளுமையில் உள்ள TATA Cancer Hospital - ன் பெரு மருத்துவர் ஒருவர் கலந்து விவாதிக்கும்போது தொடர்ந்து வலியுறுத்தியது, Evidence based medication. தெள்ளத்தெளிவாகச் சான்று இல்லாமல், ஒருங்கிணைப்பது வெகுசிரமம் என்பதுதான், மீண்டும் மீண்டும் அவர் முன்வைத்த விவாதம். வருத்தமான விஷயம் என்னவென்றால், நாம் பெரிதும் முடங்கிப்போவது இந்தப் புள்ளியில்தான். உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள அனுபவத்தையோ, பாரம்பர்யச் சான்றுகளையோ, நவீனம் எதிர்பார்க்கும் சான்றாக மாற்றுவது இன்றளவில் மிகக் கடினமான விஷயம். 

நிலவேம்பு கஷாயம், `சிக்குன்குன்யா மற்றும் டெங்கு ஆகியவற்றை எப்படிக் குணமாக்குகிறது?’ என்பதை சோதனைக்குழாயில், எலியில், குரங்கில் கடைசியாக மனிதனில் எல்லாம் ஆராய்ச்சி செய்து அதைக் கொண்டுவந்திருக்க நினைத்திருந் தால், இன்றைக்கு மாணிக்கம் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்தவைத்துக் காத்திருக்கும் ராமசாமியின் மூட்டுவலிக்கோ, ஜுரத்துக்கோ இது பயனுக்கு வந்திருக்காது. இன்னும் 20 வருடங்கள் கழித்து அட்லாண்டாவில் இயங்கும் ஒரு பெரு மருத்துவ நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற மாலிக்யூலாக இந்தியச் சந்தைக்குள் நுழைந்திருக்கும். அப்போது அதன் விலை ஒரு குப்பி, இரண்டு மூன்று ஆயிரம் ஆகியிருக்கக்கூடும்.

1960-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டுக்குள் 35,000 தாவரங்களின் சத்தைப் பிரித்தெடுத்து, அதை எலியில், செல் வகைகளில், ரத்தப்புற்று நோய்க்கு ஆராய்ந்து இன்றைக்கு பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் டாக்சால் மருந்து பசிபிக் யூ மரமான Taxus brevifolia-வில் இருந்து கண்டறியப்பட்டது. அதே வழிமுறை, இன்றைக்கு சாத்தியம் இல்லாதது. `கி.மு - கி.பி மாதிரி உலகச்சந்தை `கா.மு - கா.பி' என மாறிவிட்டது. அதாவது `காட் ஒப்பந்தத்துக்கு முன்’, `காட் ஒப்பந்தத்துக்குப் பின்’. நம் ஊர் சங்கு புஷ்பத்தில் இருந்தோ, ஆகாசக் கருடன் கிழங்கில் இருந்தோ டாக்சால் படைத்த மாதிரி ஆராய பணபலம் பொருந்திய சத்தான கம்பெனிகளும், காப்புரிமைகளும் விடாது. சிறு பாரம்பர்ய மருந்துகள் புதிய வலுவான சான்றுகள் (evidences)-ஐ படைத்துவிடக் கூடாது என அவை தன் இரும்புக்கரங்களால், காப்புரிமைக் கயிற்றை இறுக்குகின்றன.

ரொம்பச் சாதாரணமானதுதான் விக்கல். கருவில் இருக்கும் குழந்தைக்குக்கூட விக்கல் வருவது உண்டாம். விக்கலுக்கான காரணம் என்ன என இன்னும்கூட மருத்துவ உலகுக்கு மிகத் துல்லியமாகத் தெரியாது. விக்கல் மட்டும் அல்ல, `கொட்டாவி ஏன் வருகிறது... அதுவும் பக்கத்தில் இருப்பவன் கொட்டாவிவிட்டால் அது ஏன் நம்மையும் பற்றிக்கொள்கிறது?’ - இதை இன்றைய நவீன அறிவியலால்கூடத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. 90 மில்லியன் விந்தணுக்களில் எந்த அணு சினைமுட்டையை உடைத்து கருமுட்டையாக்குகிறது... என்ற அறிவியல் இன்னும் யாராலும் அறியப்படாத உண்மை; அறியப்படாத பல மில்லியன் மரபுப் பழக்கம்.

 அப்படியான மரபுப் பழக்கங்களில் சிலதான் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது, வேப்பங்குழையை அம்மை நோய்க்குத் தடவுவது, கீழாநெல்லியை மஞ்சள்காமாலைக்கு மோரில் கொடுப்பது, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை சனிக் கிழமை தேய்த்துக் குளிப்பது, சித்திரமூல வேரை புற்றுக்குச் சொன்னது. இவற்றுக்கு எல்லாம் நவீன மொழியில் சான்று வரும்வரை சந்தேகித்துக் கொண்டே இருந்தால் இழப்பு பெரிதினும் பெரிதுதான்.

`சான்று வேண்டும்... சான்று வேண்டும்... அதுவரை ஒருங்கிணையவே முடியாது. உன் மருந்தும் என் மருந்தும் ஒன்றோடு ஒன்று கலந்தால் பிரச்னை வந்துவிடும்’ என்ற பயமுறுத்தலை கொஞ்சம் விலக்கி ஓரம்வைக்க வேண்டிய காலம் இது. பாதுகாப்பை (Bio safety) மட்டும் உறுதிசெய்துவிட்டு ஏராளமாகக் கொட்டிக்கிடக்கும் பாரம்பர்ய அனுபவங்களை, எந்தப் புள்ளியிலாவது எங்கேனும் பயன்படுமா... என ஒருங்கிணைக்க யோசித்தே ஆக வேண்டும்.

தமிழ்நாட்டில் மட்டும் புதிதாக ஐந்து புற்று நோய் மருத்துவமனைகள் வர இருக்கின்றனவாம். புதிதாகப் பிறக்கப்போகும் புற்றுநோய் மருத்துவ மனையிலாவது இந்த ஒருங்கிணைந்த நலச் சிந்தனையோட்டம் இருக்குமா? இருந்தால் மட்டுமே அது சாமானியனின் சங்கை நெறிக்கும் புற்றுக்கு, சகாய விலையில் வழிகாட்டும்.

சீனப் புரட்சியாளர் மா சே துங் ஆட்சிக்கு வந்ததும் சொன்னது இதுதான்... `ஒரு யதார்த்தவாதியாக இந்த மரபு, பாரம்பர்யம் இவற்றின்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், சாமானியன் நலவாழ்வைச் சிந்திக்கும்போது பெருவாரியான மக்கள் பயன்படுத்திவரும் சீன மருத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும்; ஆராய வேண்டும் என்று மட்டும் உறுதியாக இருக்கிறேன்.’

அந்த நலச் சிந்தனைதான் சீன மூலிகை மருத்துவத்துக்குப் பெரும் உலகச் சந்தையை, கூடவே யூயூ து-வுக்கு நோபல் பரிசையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

- உயிர்ப்போம்...

எது ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை?

எல்லா துறை சார்ந்த விற்பன்னரிடமும் ஓடியாடி மருந்து வாங்கி ஒரு கலக்கு கலக்கி கூட்டாஞ்சோறு போல் சாப்பிடுவதற்குப் பேர் ஒருங்கிணைந்த சிகிச்சை அல்ல. ஒருங்கிணைந்த சிகிச்சை எடுக்க நோயாளி கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

1. பெரும்பாலான நவீன மருத்துவர்கள் மாற்று மருத்துவ முறையை நம்ப, முயற்சிசெய்துபார்க்க, அனுமதிக்கத் தயாராக இல்லை. அவர்கள் சொல்லும் காரணம் Evidence இல்லை என்பதுதான். பெரும்பாலான பாரம்பர்ய மருத்துவர்கள், இந்த நோய்க்குக் கூட்டாக மருத்துவம் செய்ய வழி அறியாமல் தயங்கி நிற்கின்றனர்.

2. நோயின் சரியான கணிப்பையும் தீவிரத்தையும் நவீன அறிவியலின் துணையுடன், புற்றுநோய் சிறப்பு மருத்துவரின் துணைகொண்டு அறிந்துகொள்ள வேண்டும்.

3. கூடவே, அனைத்துப் புற்றுநோயருமே தகுதியான, அறம் சார்ந்து சிந்திக்கும் அனுபவமிக்க பாரம்பர்ய சித்த - ஆயுர்வேத - ஹோமியோபதி மருத்துவர்களில் யாராவது ஒருவரின் ஆலோசனையைக் கண்டிப்பாகப் பெற வேண்டும்.

உயிர் பிழை - 28

4. யாராவது ஒரு மருத்துவரின் நீடித்த ஆலோசனையின் கீழ் ஒருங்கிணைந்த சிகிச்சைக்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். எப்போது என்ன சிகிச்சை, முதலில் அறுவை சிகிச்சையா அல்லது முதலில் கீமோ கொடுத்து, இடையே அறுவை சிகிச்சையா... மூன்று வார கீமோவுக்கு இடைக்காலத்தில் பாரம்பர்ய மருத்துவங்களைக் கூட்டாகச் செய்யலாமா... போன்ற முடிவுகளை சம்பந்தப்பட்ட மருத்துவர் எடுத்து, நோயாளியை வழிநடத்த வேண்டும்.

5. கீமோ பயனளிக்காது, அறுவைசிகிச்சையில் பயன் இல்லை என்றபோது, முழுமையாக Quality of life-ஐ செம்மையாக்கும் முயற்சியை எடுத்தாலே போதும். அங்கே பாரம்பர்ய சிகிச்சையுடன், தேவைக்கு ஏற்றபடி வலி முதலான துன்பங்களுக்குத் தீவிர நிலைகளில் அவ்வப்போது நவீன மருந்துகளை,
குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

6.சிகிச்சையின் எல்லா கட்டங்களிலும் உணவு, யோகா, அக்குபஞ்சர், தியானம் முதலான பயிற்சிகளை, அதற்கு எனப் படித்து தேர்ந்த, அனுபவமிக்க, அறச்சிந்தனையுள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி ஒருங்கிணைக்கலாம்.

7.`எங்கிட்ட வந்துட்டு அங்க போகவே கூடாது. எந்த டெஸ்ட்டும் எடுக்கக் கூடாது. ஐந்து நாட்களில் அறவே நோயை ஒழிக்கிறேன். ஐம்பதாயிரம் ஆகும்; பல ஆயிரம் புற்றுநோயாளிகளை அறவே குணப்படுத்தியிருக்கிறேன்’ எனப் பொய் சொல்லும் கூட்டமும் மருத்துவர் எனும் போர்வையில் இங்கே நிறைய உண்டு. அவர்களிடம் சிக்கிவிடவே கூடாது.

8.கூட்டுச் சிகிச்சை, நோயை வலுவிழக்கச் செய்யும்... நோயாளியின் நலம் வலுக்கச் செய்யும்!