பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“இந்தியாதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!”

“இந்தியாதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இந்தியாதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!”

ஈழத்தில் இருந்து ஒரு குரல்மு.நியாஸ் அகமது

`அவன் தணிந்த குரலில் கதைத்தான். வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு விட்டுக் கதைத் தான். அந்த இடைவெளிக்குள் அகப்பட்டு, அவஸ்தைப்பட்டு அவஸ்தைப்பட்டு வெளியே வந்தான். இரண்டு வார்த்தைகளுக்கு இடையிலான மெளனத்தில், என் மனம் நசிந்தது. இது ஒரு வலி... பட்டால் மட்டும் புரியும் வலி.’

- இவை, ஈழத் தமிழர் குணா கவியழகன் எழுதிய ‘நஞ்சுண்டகாடு’ நாவலில் வரும் வரிகள். அவருடனான உரையாடலும் இப்படித்தான் இருந்தது. `நஞ்சுண்டகாடு', `விடமேறிய கனவு', `அப்பால் ஒரு நிலம்' என மூன்று நாவல்களை எழுதியவர்; ஊடகவியலாளர். தன் நாவல்கள் மூலம் விடுதலைப் புலிகள் தரப்பையும் நேர்மையாக விமர்சனம் செய்பவர். இப்போது புலம்பெயர்ந்த தமிழர் என்ற அடையாளத்துடன் நெதர்லாந்தில் வசிக்கிறார். அவர் சென்னை வந்தபோது ஒரு முன்பகலில் சந்தித்து உரையாடியதில் இருந்து...

``புலம்பெயர் ஈழத் தமிழரான உங்களை, எது எழுத்தின் பக்கம் திருப்பியது?’’

``எனக்கு இலக்கியம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. வன்னி யுத்தத்துக்கு பிறகு நான் அமெரிக்காவின், `ஆசிய மறுசீராக்கல் கொள்கை’ குறித்து ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதினேன். அதன் நீட்சியாக வேண்டுமானால் என் முதல் இலக்கிய நூலான ‘நஞ்சுண்டகாடு’ நாவலைச் சொல்லலாம். யோசித்தால், அதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. என் நாவல்கள் என் வலிகளுக்கான வடிகால். அதை எனக்கான உளச் சிகிச்சையாக நினைக்கிறேன். போர் தந்த வலிகளில் இருந்து மீள, எனக்கு எழுத்து நல்ல சிகிச்சையாக இருக்கிறது. அந்தச் சுய சிகிச்சையே நாவலாக உருமாறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், நான் எழுதப்போகும் ஒரு முக்கியமான நாவலுக்கான பயிற்சியே இந்த மூன்று நாவல்களும்.''

“இந்தியாதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!”

`` `நஞ்சுண்டகாடு' நாவலில் விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனங்களை முன்வைத்திருந்தீர்கள் இல்லையா?’’

``ஆம்... நான் எழுதுவது என்று முடிவெடுத்ததுமே ஒரு விஷயத்தில் திடமாக இருந்தேன்... அது சமரசமற்றதாக இருக்க வேண்டும் என்பதுதான். அதனால் புலிகள் செய்த பிழைகளையும் நான் விமர்சனம் செய்திருந்தேன். இந்தக் காரணத்தால் நான் எதிர்கொண்ட விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஆனால், என் எழுத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறேன்.’’

``முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் தவிர்க்கப்பட்டி ருப்பதற்கான சாத்தியங்கள் உண்டா?’’

``ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். ஈழ மக்கள் என்றுமே போரை விரும்பியது இல்லை. உலக நாடுகளின் ராஜதந்திர விளையாட்டில் ஈழம் சிக்கிச் சின்னாபின்னம் ஆனது. இந்தப் போரை விரும்பியது சீனா. அது சிங்கள அரசுக்குத் துணை நின்றது. நியாயமாக சீனாவின் அரசியல் எதிரிகளான இந்தியாவும் அமெரிக்காவும் புலிகளின் பக்கம் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. சீனாவின் பிடி இலங்கையில் இறுகக் கூடாது என்று இந்தியா நினைத்தது. அதனால் அது இலங்கை அரசின் பக்கம் நின்றது; நிற்கிறது. ஆசியா கண்டத்தில் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. அதுவும் இந்தியாவின் நிலைப்பாட்டையே ஆதரிக்கிறது. ஆனால், புலிகள் தோற்கடிக்கப் படவேண்டும் என்று மட்டும்தான் அமெரிக்கா விரும்பியது. அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாக இருந்தது.''

`` `இந்தியாவின் இனப் பகைதான் இந்த இனப் படுகொலைக்கு இந்தியா துணை நின்றதற்குக் காரணம்' என இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் சொல்கிறார்களே?’’

``இல்லை... இந்தியா துணை நின்றதற்குக் காரணம் புவிசார் அரசியல் மட்டுமே!’’

``அப்படியானால்... இது புலிகளின் ராஜதந்திரத் தோல்வி எனக் கூறலாமா?’’

``இது அவர்களின் ராஜதந்திரத் தோல்வி மட்டும் அல்ல. முள்ளிவாய்க்கால், அனைத்து நாகரிகச் சமூகங்களின் தோல்வி. போரில், போர் குற்றம் நடந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் போரே குற்றம்தான். அமைதி உடன்பாட்டில் இருக்கும் ஒரு சமூகத்தின் மீது போரைத் திணித்தது யார், இது மோசமான முன்னுதாரணம் அல்லவா? இனி எந்தப் போராட்ட இயக்கமாவது, இவர்கள் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை நம்புமா?’’

`` அந்தச் சமயத்தில் காங்கிரஸ் அல்லாத வேறு கட்சி இந்திய அரசின் அதிகாரத்தில் இருந்திருந்தால், இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டிருக்காது என்று சொல்லலாமா?’’

``நிச்சயம் இல்லை... இது இந்தியாவின் நிலைப்பாடு!’’

``புலிகள் பலமுறை இந்தியாவுடன் நேசக் கரம் நீட்டியும், இந்தியா அவர்களை நம்ப மறுக்க காரணமாக, நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?’’

``ஆரம்பத்தில் சில தவறுகள் நடந்தன. அப்போது புலிகள் அரசியல் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆனால், பிறகு அவர்கள் இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆனால், இந்தியாவோ, புலிகளின் தனி ஈழக் கோரிக்கையை, அகண்ட தமிழ்த் தேச பேரரசுக்கான கோரிக்கையாகப் பார்த்தது. அதனால், அவர்கள் அதை ஆதரிக்கவில்லை; அதை முன்னெடுத்த புலிகளையும் ஆதரிக்கவில்லை. இப்போதும் நாங்கள் இந்தியாவையே நம்புகிறோம். இந்தியா இல்லாமல் ஒரு தீர்வு  இல்லை.’’

``ஒரு காலத்தில் எம்.ஜி.ஆரின் முயற்சியால், இந்தியா ஒரு தீர்வை முன்வைத்தது. இலங்கையின் வடகிழக்கை ஒன்றிணைத்து, தனி மாகாணமாக்கி, அதற்கு பிரபாகரனை முதலமைச்சர் ஆக்குவது என்ற அந்தத் தீர்வை ஏற்றுக்கொண்டிருந்தால், இந்த அழிவைத் தவிர்த்தருக்கலாம்  என்ற கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?’’

``நிச்சயம். நான் ராஜதந்திரத் தோல்வி எனக் குறிப்பிட்டது இதைத்தான். அப்போது அதை  ஏற்றுக்கொண்டிருந்தால், நாங்கள் அரசியல் செய்வதற்கு, எங்கள் கோரிக்கைகளை அனைத்து சமூக மக்களிடமும் எடுத்துச்செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும். அதை மறுத்ததன் மூலம், அந்த வாய்ப்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. புலிகள் போர் வெற்றியில்தான் அதிகம் கவனம் செலுத்தினார்கள். அரசியல் தளத்தில் கவனம்செலுத்தத் தவறிவிட்டார்கள். இரண்டிலும் கவனம்செலுத்தியிருந்தால், பல தோல்விகளைத் தவிர்த்திருக்கலாம்.’’

``சரி... இப்போது ஈழ மக்களுக்கு எது தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?’’

``வடகிழக்கை இணைப்பது. போலீஸ், வருவாய் போன்ற அதிகாரங்களை மையப்படுத்தாமல் பகிர்ந்து அளிப்பது. கிட்டத்தட்ட  இந்தியாவில் உள்ள மாநில அமைப்பைப்போல.''

“இந்தியாதான் பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறது!”

`தனி ஈழக் கோரிக்கையை முன்னிறுத்தி மீண்டும் அங்கு போர் மூள வாய்ப்பு உள்ளதா?’’

``நிச்சயமாக இல்லை. எந்தக் காலத்திலும் போர் மூள வாய்ப்பே இல்லை. ஆனால், போர் மட்டுமே முடிந்துவிட்டது; போராட்டங்கள் முடியவில்லை. தன்னாட்சி உரிமைக்கான அரசியல் போராட்டங்கள் தொடரும். அங்கு உள்ள தமிழ் மக்களும் அரசியல் விழிப்புஉணர்வுடன் இருக்கிறார்கள். தங்களது கூட்டு உரிமைக்காக இன்னும் போராடிவருகிறார்கள். அதனால்தான் தமிழ்த்தேசியக் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறுகின்றன.’’

``உங்கள் கோரிக்கையை ஏற்க ராஜபக்‌ஷே முன்வந்தால் அவரை ஆதிரிப்பீர்களா?’’

``நிச்சயமாக.’’

``என்ன...?!’’

``ஆம்... போர் எதிரி, அரசியல் எதிரியாக இருக்கவேண்டியது இல்லை. இதற்கு நம் கண் முன்னால் இருக்கும் உதாரணம் ஜப்பான். இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், அவர்கள் கூட்டுச்சேர்ந்தது, அவர்கள் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்காவுடன்.’

``போர் நடந்தபோது, தமிழக மக்கள் மீதும், ஈழ ஆதரவு தலைவர்கள் மீதும், போராளிகளின் பார்வை எப்படி இருந்தது?’’

``நாங்கள் தமிழக மக்களை மட்டுமே முழுமையாக நம்பினோம்; தலைவர்களை அல்ல. எங்களுக்கு தலைவர்களின் நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு தமிழக அரசியலைத் தாண்டித்தான், ஈழம் எல்லாம். அதற்காக எங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அதையும் நாங்கள் உணர்ந்தே இருந்தோம். அரசியல் தலைவர்களுக்கு ஈழ மக்கள்மீது உண்மையான கரிசனம் இருந்திருந் தால், இங்கு அகதி முகாமில் இருக்கும் ஈழ மக்களுக்கும் அவர்கள் ஆதரவு கரம் நீண்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லையே.’’

``வேறு எப்படி உங்கள் லட்சியங்களை அடைவது சாத்தியம் என நினைக்கிறீர்கள்?’’

``எங்கள் படகுக்கு நாங்கள்தான் துடுப்பு போட வேண்டும். எங்கள் பிள்ளையை நாங்கள்தான் பெற்றெடுக்க வேண்டும்.’’

``ஈழ எழுத்தாளர்களிடம் கேட்கப்படும் வழக்கமான கேள்வியோடு இந்தப் பேட்டியை முடித்துக் கொள்ளலாம். பிரபாகரன் இன்னும் உயிரோடு இருகிறாரா?’’

``இந்தச் சந்தேகத்தைக் கிளப்புவதே இந்திய அரசு என்றுதான் நினைக்கிறேன். அவரின் தியாகம் முக்கியமானது. `பிரபாகரன் இறந்து விட்டார்’ என போரை நடத்திய இலங்கை அரசே சொல்லிவிட்டது. இவர்கள் இப்படி ஒரு சந்தேகத்தைக் கிளப்பக் காரணம், `பிரபாகரன் இறந்துவிட்டார்’ என்று அவர்கள் அறிவித்தால், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டியிருக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தண்டனைவாசிகள் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும். அதை இந்தியா விரும்பவில்லை. இவற்றைத் தவிர்க்கவே இந்திய அரசு ஒரு குழப்ப நிலையை உண்டாக்கி, பிரபாகரனை உயிருடன் வைத்திருக்க முயற்சிக் கிறது என நினைக்கிறேன். இந்திய அரசின் ராஜ தந்திரத்துக்கு, இங்கு உள்ள தமிழ் ஈழத் தலைவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ பலிகடா ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!’’