பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

தலைமுறை சாயல் 

வழக்கம்போல் எதையேனும் மறந்து

அவசரமாக வீடு திரும்புகையிலும்

மனைவியுடனான முன்கோபச் சண்டையின்போதும்

சிரித்துக்கொண்டே சொல்வார் அம்மா

அப்படியே அப்பாவைப்போல் இருக்கிறேனென்று.

சமயங்களில் தாத்தாவைப் பார்ப்பது,

வயதாகிவிட்ட அப்பாவைப் பார்ப்பதுபோல இருக்கிறது.

நாளை முதல் பள்ளி செல்லவிருக்கும்

என் சிறுவயது மகனைக் காணும்போதெல்லாம் குழந்தையாகிவிட்ட அப்பாவையும் தாத்தாவையும்

ஒருசேரக் காண்பதுபோலிருக்கிறது.

இப்படி போலிருக்கிறது என்பதில்தான்

எல்லாமும் இருக்கிறதுபோல.

 - தர்மராஜ் பெரியசாமி

ஜொலிக்கும் புன்னகை

தொங்கும் நிழலை இழுத்து

வழியும் வெயிலைத் துடைத்து

சுங்கச்சாவடிப் பேருந்துகளைத்

துரத்திக் கூவி விற்கிறாள்

பாலித்தீன் பையில் நட்டமாய் நிற்கும்

நறுக்கிய வெள்ளரிக்காய்களை.

காசை நீட்டியவனுக்கு

காரப்பொடி தடவுவதற்குள்

பேருந்து நகர்ந்தது.

மீண்டும் துரத்தியோடினாள்

பேருந்து ஜன்னலை.

காசை நீட்டியவனுக்கு

வெள்ளரிக்காய் சுவைத்தது.

வெள்ளரிக்காரிக்கும்

புன்னகை ஜொலித்தது.

 - பச்சோந்தி

கேள்வி

யாதும் ஊரே

யாவரும் கேளிர்

எப்படி வந்தது சேரி

 - வாலிதாசன்

சிறுமியும்... குழந்தையும்...

ஆடு மேய்க்கும் சிறுமி

தடவிப்பார்க்கிறாள்

கம்பளிப் போர்வையை.

விளக்கு ஒளிர்ந்ததும்

அமைதியானது

அழுத குழந்தை.

டே.துளசிராஜா

சொல்வனம்

அங்குசம்

அங்குசத்தைக் கண்டாலே கொஞ்சம்

பயம்தான் அந்த யானைக்கு.

மெல்லிய மடல்களை அதன் கூர்மை

பதம்பார்த்த வடுக்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

சுயமறியா யானையின் தூக்கத்தில்

இப்போதெல்லாம் கானகக் கனவுகள்.

பாகன் அருகிலில்லா சமயம்

தரையில் கிடந்த அங்குசத்தை

அச்சத்தோடே தடவிப்பார்த்தது.

அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில்

அதைவைத்தே விளையாடவும் செய்கிறது

பாகன் அறியாவண்ணம்.

தும்பிக்கையில் இலகுவாகப் பிடித்து

காற்றில் சுழற்றிப்பார்க்கிறது.

இப்போது அங்குசம் கையாளக்

கற்றுக்கொண்டுவிட்டது யானை

இனி பாவம்தான்

சின்னக் காதுகளுடைய அந்தப் பாகன்.

 - சுந்தர் தர்ஷன்