மருந்துக்கடையில் பணியைத் தொடங்கியவர். மிதிவண்டியில் புத்தகம் விற்றவர், பதிப்பாளர், பாடகர், சிற்றிதழ் ஆசிரியர், புதிதாக வரும் இளைஞர்களுக்கு வழிகாட்டுபவர் என்று பன்முகத்தன்மைவாய்ந்த பரிசல்.சிவ.செந்தில்நாதன் கடந்துவந்த துயர்மிகு பாதைகள் சொற்களுக்குள் அடக்க முடியாதவை. எப்போதும் எளிமையானவர், கொஞ்சம் கோபக்காரர். எல்லாம் இழந்து நிர்கதியான சூழல்களையெல்லாம் நிர்மூலமாக்கி மேலெழும் ஆளுமைமிக்கவர். கோபாலபுரம், அனகாபுத்தூர், எல்டாம்ஸ் சாலை, மந்தைவெளி எனப் புத்தகங்களைத் தூக்கிச் சுமந்தவர் தற்போது இருப்பது திருவல்லிக்கேணியில். பார்த்தசாரதி கோயிலின் மேற்குவாசலுக்கு எதிர்புறம் உள்ள பரிசல் புத்தகக் கடையின் முதல்மாடியின் சிறுவெளிச்சத்தில் அவரிடம் உரையாடியதிலிருந்து...
பிறந்த ஊர், குடும்பம் பற்றி...
பூர்வீகம் பொன்னமராவதி அருகிலுள்ள வேந்தன்பட்டி. பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு. படித்தது ஒரத்தநாடு அரசுப்பள்ளியில் (முத்தம்மாள் சத்திரம் சரபோஜி மன்னர் கட்டினதாகச் சொல்வாங்க). பள்ளிச் சுவரே பெரிய உயரமான மதில்சுவர்களால் கட்டப்பட்டிருக்கும். அங்கேதான் ஒன்பதாவது வரை படித்தேன். நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நாலைந்து லாரி மூலம் அப்பா நெல் வியாபாரம் செய்தார். வியாபாரம் நொடிந்துபோனதால் எல்லாம் பறிபோன நிலையில் சொந்த ஊருக்கே வந்துட்டோம். அம்மா வள்ளியம்மை. அண்ணன் வைத்தியநாதன், தங்கச்சி மாரியம்மாள். தம்பி ராஜா கொஞ்சநாளைக்கு முன்னர் இறந்துவிட்டான். திருமணத்திற்குப் பிறகு மனைவி மகள், மகனுடன் வசிக்கிறேன்.
பரிசல் பெயர்க்காரணம் என்ன?
ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கடத்துவதுபோன்று ஒரு பெயர் வைக்கணும் என்று நினைத்தேன். தூது, அஞ்சல், தந்தி இதுபோன்று இல்லாமல் கொஞ்சம் கலைநயத்துடன் தேடினேன். அப்புறம் தூக்கணாங்குருவி, நெல் என்று பல்வேறு பெயர்களை யோசித்து, கடைசியில் பரிசல் என்ற பெயரை வைத்தேன். ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பயணிப்பதைப்போல, நம் கருத்தை பிறருக்குக் கடத்தும் விதமாகத்தான் பரிசலைப் பார்க்கிறேன்.
சென்னைக்கு எப்படி, எப்போது வந்தீர்கள்? அதன் ஆரம்பகால அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்...
சொந்தக்காரங்க சென்னையில் இருந்ததால் வேலைதேடி அப்பா சென்னைக்கு வந்துவிட்டார். அவர் வந்த சமயத்தில்தான் வடபழனி நூறடி சாலை வந்தது. அங்கே உள்ள பெரியார் சாலையில்தான் ஒரு குடிசை வீட்டில் அப்பா தங்கியிருந்தார். பிறகு அம்மா நாங்கள் உட்பட அனைவரையும் அழைத்துவந்து அந்த வீட்டில்தான் வாழ்ந்தோம். ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு படிக்கவில்லை. மருந்துக்கடையில் வேலைசெய்ய ஆரம்பித்து தொடர்ந்து வேலைசெய்யப் பிடிக்காமல் வீட்டுக்கு வந்துட்டேன். பிறகு மறுபடியும் ஜி.என் செட்டி ரோட்டில் கண்ணதாசன் சிலைக்கு எதிரில் உள்ள நந்தி மெடிக்கலில் சொந்தக்காரர் மூலமா வேலைக்குச் சேர்ந்தேன். சைக்கிள் மூலம் மருந்து விற்கும்போது ஓரளவுக்குச் சென்னையைச் சுற்ற ஆரம்பித்தேன்.
கலைகளின் மீது எப்படி ஆர்வம் வந்தது?
பொன்னமராவதியில் உள்ள பள்ளியில் படிக்கும்போது பூச்சொரிதல் விழா நடைபெறும். அங்கே சமூக நாடகங்கள் எல்லாம் போடுவாங்க. புராணக் கதைகள் மட்டுமல்லாமல் ஆசிரியர்களும் மாணவர்களும் சொந்தமாக எழுதி நடிப்பாங்க. அதை மிக ஆர்வமாகப் பார்த்து வளர்ந்த என் மாணவப் பருவம்தான் காரணம்.
சென்னைப் பெருவெள்ளத்தில் உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் இழந்தீர்கள். பிறகு அதிலிருந்து எப்படி மீண்டுவந்தீர்கள்?
வெள்ளம் வந்த சமயத்தில் அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தின் மூலம் சென்னையிலுள்ள பல்வேறு இடங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். செல்போன் டவர் பழுதடைந்த நிலையில் அனகாபுத்தூருக்குத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஐந்தாறு நாள்கள் கழித்து அப்பா, அம்மா தொடர்புகொண்டு, `தம்பி, நம்ம வீடு தண்ணீரில் மூழ்கிப்போச்சு, புத்தகங்கள் என்ன ஆச்சுன்னு தெரியலை. வந்து பாரு’ என்றனர். இங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் நண்பரோடு சென்றேன். பம்மல் வரைதான் வண்டியில் செல்லமுடிந்தது. தண்ணீர் ஆறுபோல போனதால் அதைத்தாண்டி வண்டியில் செல்ல முடியவில்லை. எனவே, நடந்துசென்றோம். இடுப்பளவு தண்ணீரில் சென்று பார்த்தால் வீட்டின் கதவைத் திறக்கமுடியவில்லை. ஒருவாரம் கழித்து மீண்டும் சென்று பார்த்தபோது ஒரு வீடு மூழ்கும் அளவுக்கு நீர் சென்ற தடம் சுவரில் இருந்தது. ஜன்னலைத் திறந்து பார்த்தேன். கதவைத் திறக்க முடியாத அளவுக்குப் புத்தங்கள் சரிந்துவிழுந்துகிடந்தன. மேலிருந்த புத்தகங்களை எடுத்துவிட்டு ஓர் ஆள் போகும் அளவுக்குக் கதவைத் திறந்து பார்த்தால் புத்தகங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியிருந்தன.
ஒரு லாரி அளவுக்கு இருந்த புத்தகங்களைக் காயவைக்க பலவகையில் முயற்சி செய்தோம். புத்தகங்களைக் காயவைக்கும் பணிகளில் மொழியே தெரியாத மாணவர்கள், சிறுவர்கள் இருபது நாள்கள் என்னுடன் வேலை செய்தனர். ரோடெல்லாம் காயவைத்தோம். காயவைக்க பதினைந்தாயிரம் செலவானது. அதனால் ஒருபயனும் இல்லை. சரின்னு எட்டாயிரம் ரூபாய்க்கு எடைக்குப் போட்டுட்டு திரும்பிவந்தோம். அதைக்கேள்விப்பட்டு ஐ.டி துறையில் பணிபுரியும் சரவண ராஜா என்பவர் மூன்று மணிநேர டாக்குமென்ட்ரி எடுத்து, அதை யு-டியூபில் பதிவுசெய்தார். அதைப்பார்த்துதான் பலபேரிடமிருந்து உதவிகள் வந்தன. பணம் வாங்கலாமா, வேண்டாமா என்கிற சந்தேகம் வந்தபோது ச.தமிழ்ச்செல்வன்தான், `இந்த உதவிகள் உங்களுக்காக இல்லை. நீங்கள் இழந்த புத்தகங்களுக்காக’ என்று கூறினார். அதன்பின் குறைவான நபர்களிடமிருந்து மட்டும் உதவிகளைப் பெற்றுக்கொண்டேன். இயக்குநர் பா.இரஞ்சித், மணிவண்ணன் பார்த்தசாரதி, ஐ.டி துறையில் பணிபுரியும் தினேஷ் மற்றும் பல நண்பர்களும் உதவிசெய்தனர். இந்த உதவிகளால்தான் மீண்டு, எல்டாம்ஸ் சாலையில் இருந்த அமுதன் வீட்டின் ஒருபகுதியில் மீண்டும் புத்தகக் கடை ஆரம்பித்தேன்.
பதிப்புத்துறையும், நூல் விற்பனையும் வணிகமயமாகிப் போன சூழ்நிலையில் வண்டியில் வீடுவீடாக, ஒவ்வொரு கல்வி நிறுவனமாகச் சென்று நூல்களை கொடுத்துவருவது ஏன்?
அடிப்படையில் நான் ஒரு த.மு.எ.ச.காரன். அங்கே படித்த அரசியல் சார்ந்த நூல்கள் காரணமாக இருக்கலாம். சேவை என்று போலியாகச் சொல்லமுடியாது, செய்யும் வேலையில் இது ஒரு தொழில்தான். தொழிலில் நாம் நேர்மையாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். லாபம் மட்டும் முக்கிய நோக்கமாக இல்லாமல் செயல்பட வேண்டும். குறிப்பாக மாணர்வகளைச் சென்று சேரவேண்டும். அவர்களுக்குப் பிற நூல்கள் எளிதாகக் கிடைக்கிறது. ஆனால், ஆய்வு நூல்களுக்கு ரொம்ப சிரமப்படுகிறார்கள். ஒரு சில ஆசிரியர்களுக்கும் அது தெரியாமல் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு ஆய்வுசார்ந்து என்ன தேவையோ, அதுமாதிரியான நூல்களைக் கொண்டுபோய் சேர்க்கணும். மாணவர்களின் மத்தியில்தான் நாம் வேலைசெய்துகொண்டிருக்கிறோம். அவர்களும் நமக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஆய்வேடு தரமாக வருவதில் நமக்கும் பேர்தானே. ஆய்வு, நாடகம், சினிமா உட்பட பலவற்றிலும் ஒரு ஆலோசனைகூறி வழிநடத்துபவராக இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் விருப்பங்களைப்போல் பக்கத்தில் இருப்பவர்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சிதானே. இது ஒரு சின்ன ஆசைதான். அதற்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.
சமீபகாலமாக தீவிர இலக்கியவாதிகள் பதிப்பகம் தொடங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? தற்போதைய பதிப்புச் சூழல் பற்றி?
இது புதிது இல்லை. சிசு.செல்லப்பாவே இதை நடத்தியிருக்கிறார். அப்போது பதிப்புத் துறையை வருமானம் தரும் தொழிலாக யாரும் பார்க்கவில்லை. பதிப்பாளர் இருப்பார், எழுத்தாளர் புத்தகம் கொடுத்தால் போடுவார்கள். ஏதோ ராயல்டி என்று கொடுப்பார்கள். அது சின்ன அளவில் நடந்துகொண்டிருந்தது. ஒருகட்டத்துக்கும் மேல் விரிவாகியிருக்கிறது. மேலும், பெட்டிக்கடையில் பாக்கெட் போட்டு ஊறுகாயைப் போல் தொங்கவிடுவது எல்லாம், கடந்த பத்து பதினைந்து வருடங்களாகத்தான் நடக்கிறது. இதெல்லாம் ஊதிப்பெருக்கின விசயம்தான். நிஜம் என்பது வேறொன்றாகத்தான் இருக்கிறது.
கடல்புரத்தில், ஜே.ஜே சில குறிப்புகள், மோகமுள் வந்த காலகட்டத்தில் ஒரே புத்தகத்தை பத்து இருபதுபேர் மாற்றிமாற்றிப் படிப்பார்கள். குறைந்த வாசகர்கள் இருந்தாலும் தமிழ்நாடு முழுக்க அதைப்பற்றி பேசுவார்கள். இப்போது இயந்திரம் வதவதவென்று அடித்துத்தள்ளுகிறது. புத்தகம் என்பது நியூஸ் பேப்பராக மாறிவிட்டது. அது புத்தகமா, இல்லையா என்பதை வாசகர்தான் முடிவுபண்ண வேண்டும். இப்போது தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. பி.ஓ.டி பிரின்ட் வந்திருக்கிறது. ஒரு புத்தகமும் அடிக்கலாம், ஆயிரம் புத்தகமும் அடிக்கலாம். அதனால் பத்து புத்தகம் அடித்துவிட்டு, பத்தாயிரம் புத்தகம் விற்றதாகவும் சொல்லலாம். ஆனால், பத்தாயிரம் புத்தகங்களுக்கு ராயல்டி கொடுத்தார்களா என்றால், அதுமட்டும் இருக்காது. எல்லாமே மாயையாக இருக்கிறது.
எல்லாப் பதிப்பகமும் ஒரு கட்டம்வரை நேர்மையாக இருந்ததற்குக் காரணம் நூலகத்துறை. ஆறேழு வருடத்திற்கு முன்பு வரை நூலக ஆணையாக சில நூல்களை எடுத்துக்கொள்வார்கள். அப்போது ஓரளவு பதிப்பகமும் கொஞ்சம் செழிப்பாக இருந்தது. பிறகு நூலகத்துறையிலும் ஊழல் நுழைந்துவிட்டது. லஞ்சம் கொடுத்துதான் நூலக ஆணை வாங்கும் நிலைமை வந்தது. முற்போக்கு பேசுபவர்களும் இப்படித்தான் வாங்குகிறார்கள். இப்போது நூலக ஆணையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதை பத்திரிகையிலும் எழுதிவிட்டார்கள். மேற்கொண்டு கேட்க யாருமில்லை. நூலகத்துறையைச் சீர்படுத்தாமல் பதிப்புத் துறை செயல்பட முடியாது. பதிப்புத்துறையை நம்பி அச்சுக்கோப்பவர், பிழைதிருத்துநர், லேஅவுட் டிசைனர், பிரின்ட்டர் என ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும்தான் ஒரு புத்தகம் வெளிவர காரணமாக இருக்கிறார்கள். எழுத்தாளர் மட்டுமே காரணம் கிடையாது. இவர்கள் எல்லாருடைய உழைப்பினால்தான் ஒரு பதிப்பகம் செயல்படுகிறது. அதில் சில நல்ல விற்பனையையும், சில நொடிந்துபோயும் உள்ளன. இதில் என்ன ஒரு வசதியென்றால், `பத்து காப்பியைப் போட்டு நானும் பதிப்பகம் நடத்துறேன்’னு சொல்லிக்கலாம். அது வசதியா, வாய்ப்பா என்பது போகப்போகத்தான் தெரியும்.
உங்கள் பரிசல் பதிப்பக நூல்கள் விருது எதுவும் பெற்றுள்ளனவா?
பரிசல் பதிப்பகத்தில் வந்த நான்கு நூல்கள் விருது வாங்கியுள்ளன. கே.அய்யப்ப பணிக்கர் எழுதி ந.மனோகரன் மொழிபெயர்த்த 'இந்திய இலக்கியக் கோட்பாடுகள்' நூலுக்கு நல்லி திசையெட்டும் என்கிற மொழிபெயர்ப்புக்கான விருது கிடைத்தது. ப.இளமாறன் இலக்கணம் பற்றிய எழுதிய நூலுக்கும், வெ.பிரகாஷ் எழுதிய 'திணை உணர்வும் பொருளும்' என்கிற ஆய்வு நூல்களுக்கு மத்திய அரசு செம்மொழி விருது வழங்கி கௌரவித்துள்ளது. இன்னொரு மத்திய அரசு விருதான 'யுவ புரஸ்கர்' விருது வீரபாண்டியன் எழுதிய 'பருக்கை' நாவலுக்குக் கிடைத்தது. இருபத்தைந்து வயதுள்ள இளைஞன் தனக்கு ஏற்பட்ட ஹாஸ்டல் வாழ்க்கையின் அனுபவங்களைக்கொண்டு எழுதப்பட்ட முக்கியமான பதிவு. அதற்குள் அரசியல் சார்ந்த சில சிக்கல்கள் இருந்தாலும், தமிழ்ச் சூழலில் விவாதிக்கப்படவேண்டிய முக்கியமான நூல்.
சைக்கிளிலேயே சென்று புத்தகங்களை விற்ற அனுபவங்களில் மறக்கமுடியாதது ஏதேனும் உண்டா?
காலையில் ஒரு பட்டியலை எடுத்துக்கொண்டு சைக்கிளில் கிளம்புவேன். எம்.எம்.டி.ஏ வில் உள்ள என் வீட்டிலிருந்து சென்னைப் பல்கலைக்கழகம் வரும் வழியில் யார்யாரெல்லாம் இருக்கிறார்களோ, வரிசையாக அவர்களைப் பார்த்து நூல் கொடுப்பேன். சிலர் வாங்குவார்கள். அவர்களில் சிலர் தேநீர் கொடுப்பார்கள், சிலர் சாப்பாடு போடுவார்கள். அப்படியே திருவான்மியூரில் இருக்கும் ஞாநி வீட்டிற்குப் போவேன். காலையில் சென்றால் மாலையில்தான் திரும்புவேன். காலப்போக்கில் ஞாநியும் நானும் சொந்தக்காரர்களைப் போல் ஆகிவிட்டோம். இதுபோல் புத்தகம் வாங்கின வாசகர்கள் பலரும் சொந்தக்காரர்களாக மாறிப்போனார்கள். ஒருமுறை புத்தக் காட்சியில் ஒரு பெரும்பட்டியலை என் மேசைமீது வைத்து, `சார் இந்தப் புத்தகங்கள் எல்லாம் வேணும்’ என்று ஒரு பெண் கேட்டார். `ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கிய அந்த புத்தகங்களை யாரும்மா படிப்பார்கள்?’ என்று கேட்டதும் `நான்தான் சார்’ என்று சொன்னார். `நீங்க என்ன வேலை செய்யுறீங்க’ என்றதும், `டீக்கடை வைத்திருக்கிறேன்’னு சொன்னாங்க.
எந்த மாதிரியான சூழலில் பனுவல் புத்தக நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்தீர்கள்?
நூலக ஆணை நின்றபிறகு பெரும் சரிவைச் சந்திக்க நேர்ந்தது. பனுவல் புத்தக நிலையத்திற்கு உங்களைப்போல் ஒருவர் பணிக்குத் தேவை என்று கூற எனக்கும் சரி என்று பட்டது. பின் வெறும் புத்தக விற்பனையாக மட்டும் இல்லாமல் சிறு அறையில் நூல் விமர்சனம், திரையிடல், கலந்துரையாடல் என்று இருந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னேன். அவர்கள் சம்மதம் தெரிவிக்கவே பனுவலில் சேர்ந்தேன்.
'மக்கள் திரைப்பட இயக்கம்', படப்பெட்டி உருவான பின்புலமும் தேவையும் என்ன?
எனக்கு இலக்கியத்தின்மீது ஆர்வம் இருந்தாலும் ஆய்வுகளில்தான் ஈர்ப்பு அதிகம். எனவே, அதுசார்ந்த நூல்களைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். ஞாநி மூலமாக சென்னை மெஸ் விஜயகுமார் நண்பரானார். எல்.ஐ.சி பக்கத்தில் சென்னை மெஸ்ஸில் நடைபெற்ற ஞாநியின் நாடக ஒத்திகைகளைப் பார்ப்பேன். பிறகு, விஜயகுமாரிடம் `மாதத்தில் ஒருமுறை சனிக்கிழமை இங்கே படம் போடலாமா’ என்றேன். தாராளமா செய்யலாம் என்றார். `சி.டி மட்டும் நான் ரெடி பண்ணுறேன். டி.வி, DVD பிளேயர் நீங்க ரெடிபண்ணுங்க ஆரம்பித்துவிடலாம்’ என்று முடிவானது. திரையிடும் நாளில் சாப்பாட்டு மேசைகளை ஓரம்கட்டிவிட்டு கமகம சாம்பிராணி வாசத்தில் திரையிடல் ஆரம்பமாகும். தேநீர் ஏற்பாடுகளையெல்லாம் அவரே செய்துகொடுப்பார். அத்திரையிடலில் நூறுபேராவது பங்குபெறுவார்கள். அதை ஏன் ஆரம்பித்தோம் என்றால் ஃபிலிம் சேம்பரில் மெம்பரா இருந்தவர்கள் மட்டுமே படம்பார்க்க முடியும் என்ற சூழல் இருந்தது. மெம்பர் அல்லாதவர்கள் என்ன செய்வோம் என்றால் கூட்டம் முடிந்தபிறகு கால்படம், அரைப்படம் ஓடியபின் உள்ளே சென்று பார்ப்போம். இந்த நிராகரிப்பு, அவமானத்தால்தான் சரி நாம ஏதாவது செய்வோம் என்று நினைத்து `மக்கள் திரைப்பட இயக்கம்' என்று ஆரம்பித்து டி.வி யில் படம்போட ஆரம்பித்தோம். அந்த அனுபவத்தில்தான் 'படப்பெட்டி' என்கிற இதழ் ஆரம்பித்தோம்.
உங்கள் வாசிப்பனுபவத்தில் முக்கியமான நூல்கள்?
வால்கா முதல் கங்கைவரை, காட்டின் உரிமை, கடல்புரத்தில், புதுமைப்பித்தன் கதைகள், கந்தர்வன் கதைகள், எஸ்.வீ.ஆர், வ,கீதா இருவரும் சேர்ந்து மொழிபெயர்த்த அரசியல் கவிதைகள், தமிழில் விக்ரமாதித்யன் கவிதைகள். அவர் கவிதையில் எளிமையாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால், எளிமையில்லை. அதில் உள்ள சந்த நயமும் அழகும் பிடிக்கும். மேலும் தேவதேவன் கவிதைகளும்.
ஏற்கெனவே பல சிற்றிதழ் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ்ச்சூழலில் 'இடைவெளி' சிற்றிதழ் கொண்டுவர என்ன காரணம்?
'இடைவெளி' முழுக்க முழுக்க தொன்னூறுகளுக்குப் பிறகு உள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் இதழாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை மூன்று இதழ்கள்தான் வந்துள்ளன. இடைவெளிக்கான மூன்று இதழ்களிலே வாசகப்பரப்பில் ஒரு மெல்லிய அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது. புதிய படைப்பாளிகளையும் புதிய வாசகர்களையும் உருவாக்குவதற்கான வேலையை இந்த இதழ் தொடங்கும் என்று நம்புகிறேன். மணிக்கொடி, கணையாழி எழுத்தாளர்களைப்போல இடைவெளி எழுத்தாளர்கள் என்று சொல்லும் அளவுக்கு எங்கள் செயல்பாடுகள் இருக்கும். அதற்கான பயணத்தை, வடிவத்தை அதுவே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் என்று நினைக்கிறேன்.
மற்ற இதழ்களிலிருந்து இடைவெளி எதில் தனித்து இருப்பதாய் நினைக்கிறீர்கள்?
தனிமனிதனின் ஆளுமை வார்ப்பாக கொண்டுவர வேண்டும் என்று இல்லாமல், உரையாடல் நிகழ்த்த விரும்புகிறோம். இலக்கியச்சூழல் என்பது விவாதமற்ற சவநிலைக்குப் போய்விட்டது, இல்லையா? எல்லாரும் பேசுகிறார்கள், நிறைய மேடைகள் இருக்கின்றன, மைக் இருக்கிறது, யூ-டியூப்ல எல்லாம் பதிவாகிறது, பேச்சு நடக்கிறது. ஆனால், இலக்கியம், அரசியல், கருத்தியல் குறித்த விவாதங்கள் நடக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டியதுள்ளது. அந்த உரையாடலை உண்டாக்கும் இடமாகத்தான் இடைவெளியைப் பார்க்கிறோம்.