மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 30

கலைடாஸ்கோப் - 30
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 30

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கலைடாஸ்கோப் - 30``ஃப்ரம் பிளானெட் எர்த். இவன்தான் கடைசி மனிதன். கன்ஃபார்ம்'' என்றார் சோல்ஜர். அராகா கிரகத்தின் பிரசிடென்ட் ஆச்சர்யமாகப் பார்த்தார்.

``மயக்கநிலையில் இருக்கான். ஹார்ட் பீட் ஸ்லோவா இருக்கு'' என்றார் சர்ஜன்.

``இந்த சிப் மட்டும்தான் இவனிடம் இருந்தது. நமக்குப் பரிச்சயம் இல்லாத ஏதோ இதில் இருக்கிறது. பட், சம்திங் ரிலேட் டு சவுண்டு'' என்றார் ஒரு சோல்ஜர்.

``ஹார்ட் பீட் இன்னும் குறைந்துவிட்டது சார்'' என்றார் பின்னால் இருந்த சர்ஜன்.

மிதந்து வந்த கணினியில் அந்த சிப்பைப் பொருத்தினார் பிரசிடென்ட். இயந்திர சிணுங்கல்களின் முடிவில், மானிட்டர் ஒளிர்பச்சையில் எழுத்துக்களைக் காட்டியது.

`இந்த சிப்பில் இருப்பது இசை. பிளானெட் எர்த்துக்கே உரிய பிரத்யேக வடிவம்' என்றது கணினி.

``இசை... அப்படி என்றால்?'' - புருவம் நெளிய கணினியிடம் வினவினார் பிரசிடென்ட்.

`நமது பிளானெட்டில் இருப்பதுபோல ஒலிகள்தான். ஆனால், அதை பூமியில் மனிதன் விதவிதமாக கம்போஸ் செய்திருக்கிறான். அதுவே இசை.'

``எந்த மனிதன் உருவாக்கினான்?'' என்றான்.

`பலர். ஆனால், இந்தக் குறிப்பிட்ட சிப்பில் இருக்கும் இசை, ஒரே ஒரு மனிதன் உருவாக்கியது என அனலைஸில் தெரிகிறது’ என்றது கணினி.

``நான் கேட்க முடியுமா?''

கலைடாஸ்கோப் - 30

கலிஃபோர்னியம் ஸ்பீக்கர்கள், மெள்ள இசைக்க ஆரம்பித்தன.

``சார், இந்த மனிதனின் ஹார்ட் பீட் இசைக்கு ஏற்ப அதிகரிக்கிறது'' எனக் கத்தினார் சர்ஜன்.

பிரசிடென்ட் வியந்தபடி திரும்பி, மனிதனைப் பார்த்தார். அவன் இமைகளுக்குள் கருவிழிகள் சுழல்வதைக் கண்டார்.

``டெல் மீ, கடைசி மனிதனின் இதயத்துடிப்பையும் உயிப்பிக்கும் இந்த இசையை உருவாக்கிய மனிதன் யார்?'' எனக் கத்தினார் பிரசிடென்ட்.

`வில் ட்ரை டு ரீடு ஹிஸ் நேம். ஏதோ ஐந்து தமிழ் எழுத்துக்கள். ஸ்டார்ட் வித் `இ' ’ என்றது கணினி!

கலைடாஸ்கோப் - 30

பலூன்

மின்னியல், மின்காந்தவியல் போன்ற துறைகளில் சாதனைகள் படைத்தவர் மைக்கேல் ஃபாரடே (Michael Faraday). 1824-ம் ஆண்டில் தனது ஆய்வுகளுக்காக இரண்டு ரப்பர் ஷீட்டுகளை ஓரத்தில் இணைத்து, ஹைட்ரஜனை நிரப்பும் பையை உருவாக்குவதே அவர் நோக்கம். அவரே எதிர்பார்க்காத மாதிரி அது காற்றில் மிதக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. ஹைட்ரஜனும் மெள்ள மெள்ள லீக்காகி காணாமல்போனது. தன் நோக்கம் நிறைவேறவில்லை எனக் கடுப்பானார் ஃபாரடே. `உலகக் குழந்தைகளுக்குக் குதூகலத்தைக் கொடுக்கும் பலூனைத்தான் கண்டுபிடித்திருக்கிறேன்’ என்பதை அவர் அன்று அறியவில்லை.

1847-ம் ஆண்டில் பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளரும் ரப்பர் தயாரிப்பாளருமான தாமஸ் ஹேன்காக்தான் பலூனுக்கு ஒரு மார்க்கெட் இருப்பதை உணர்ந்து, தயாரிக்க ஆரம்பித்தார். பலூன்களில் முடிச்சிட்டு உருவங்களை உருவாக்குவது பலூன் ஆர்ட்டாக வளர்ந்தது. இரண்டு நூற்றாண்டுகளில் உலகின் மூலைமுடுக்கு எல்லாம் பலூன்கள் பறந்துகொண்டிருப்பது வரலாறு.

பலூன்களை ஏன் கொண்டாட்டங்களில் பயன்படுத்துகிறோம்? `குறைந்த செலவில் கலர்ஃபுல்லான சூழலை உருவாக்குவது மட்டும் அல்ல, காற்றில் பறக்கும் வஸ்துகளைப் பார்ப்பதில் மனிதர்களுக்குள் இருக்கும் ஆர்வமும்தான்' என்கிறார்கள். பலூன்கள், வெறும் விளையாட்டுத்தனமான பொழுதுபோக்குச் சாதனம் மட்டும் அல்ல; ராணுவம் முதல் இன்றைய தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் வரை பலவற்றுக்கும் பயன்படுகின்றன. கூகுள்கூட `புராஜெக்ட் லூன்' என்னும் பெயரில் பலூன்களைப் பறக்கவிட்டு, இணையத்தை இணைக்கும் நுட்பத்தைச்செய்யும் முயற்சியில் சர்ச்சையில் இருக்கிறது!

கலைடாஸ்கோப் - 30

பனைநார் கட்டில்

`புதுமணத் தம்பதி பயன்படுத்திய பனைமரக் கட்டில் உடைந்தால், பெருசுகள் சந்தோஷப்படுவார்கள்' என உடன்குடியைச் சேர்ந்த கட்டில் செய்பவர் ஒரு பேட்டியில் சொன்னார். நமது பெருசுகள் எவற்றுக்கு எல்லாம் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள் என்ற வியப்போடு, நான் சிறுவயதில் பார்த்த பனைமரக் கட்டில்களை நினைத்துப்பார்க்கிறேன். உடைந்த கட்டில்களைப் பார்த்தது இல்லை என்பது உப தகவல்.

பனை ஓலைகளின் மட்டைகளில் இருந்து உரித்த நாரை, தண்ணீரில் ஊறவைத்து பக்குவப்படுத்தி, பனைமரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சட்டகங்களில் வொயர்போலப் பின்னி, கட்டிலை உருவாக்குவார்கள். அதன் வழவழப்பு, கோடை வெயிலுக்குக் குளுமையாகவும், குளிருக்கு வெம்மையாகவும் இருக்கும். இந்த நார்க்கட்டில்களின் இண்டு இடுக்குகளில் இல்லறம் நடத்தும் மூட்டைப்பூச்சிகளை அழிக்க, அவ்வப்போது கட்டிலுக்கு வெந்நீர் குளியலும் கொடுப்பது உண்டு.

பனைநார் கட்டிலை முற்றத்தில் போட்டு காற்றோட்டமாகக் கதை பேசிக்கொண்டும், இரவில் வெற்றிலையை மென்றுகொண்டும் கட்டிலில் நிம்மதியாகத் தூங்கினார்கள் பெரியவர்கள். அடுத்த தலைமுறை, சுகருக்கும் பி.பி-க்கும் மாத்திரை போட்டுக்கொண்டு சிந்தெட்டிக் மெத்தையில் தூக்கம் வராமல் புரள்கிறது. `இழந்தது பனைமரக் கட்டில்களை மட்டும் அல்ல, பனைமரம்போல் இருந்த உறுதியான வாழ்க்கைமுறையையும்தான்' எனத் தோன்றுகிறது!

கலைடாஸ்கோப் - 30

மறைவாய்ச் சொன்ன கதைகள்

கட்டில் உடைவதை, போகிறபோக்கில் சொன்ன ஊர்க்காரரைப் பார்த்ததும் எனக்கு கி.ரா ஞாபகம் வந்தது. எங்கள் ஊர் படிப்பகத்தில் அப்போது வந்துகொண்டிருந்த `தாய்’ இதழில் கி.ரா-வின் `இந்த’ மாதிரியான கதைகளை அம்புலிமாமாவுக்குள் மறைத்துவைத்து படித்திருக்கிறேன். பிறகு, கி.ரா-வும் கழனியூரனும் தொகுத்து `மறைவாய்ச் சொன்ன கதைகள்' என நாட்டுப்புறப் பாலியல் கதைகள் தொகுப்பாக உயிர்மையில் வரும்போது, நான்தான் அட்டை வடிவமைப்பேன் என்பது அன்று எனக்குத் தெரியாது.

`முட்டுவென் கொல்... தாக்குவென் கொல்?' என, காமத்தை ஒரு பெண்ணின் மொழியில் தீவிர மாகப் பேசிய நமது சமூகம், பிறகு பாலியலைப் பேசாப் பொருளாக்கியது எப்போது எனத் தெரியவில்லை. ஆனால், அது மேற்பரப்பில்தான் என நினைக்கிறேன். அடி ஆழத்தில் `மறைவாய்ச் சொல்லும் கதை’களின் வழியே அது பாலியலைக் கொண்டாடிக்கொண்டும் இருந்தது. அதன் புதிர்களையும் புனிதத்தையும் நக்கலும் நையாண்டியுமாக `அவிழ்த்து’க்கொண்டிருந்தது என்றே தோன்றுகிறது.

இன்று `மறைவாய்' என்பதன் அர்த்தத்தை உடைத்துவிட்டது இணையம். ஆயிரக்கணக்கான A-ங்கில ஜோக்குகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், நம்மூர் நாட்டுப்புறப் பாலியல் கதைகளுக் குள் கிடக்கும் `வர்க்க, வர்ண, பால்’ பேதங்களுக்கு எதிரான நுட்பமான கலகம், இணைய ஜோக்குகளில் இருக்கிறதா என்றால் `இல்லை' என `மெக்ஸிகோ சலவைக்கல்’லின் மீது அடித்து சத்தியம் செய்வேன்!

கலைடாஸ்கோப் - 30

பார்க்காமல் கட்டிய வீடு

`சில `ஏக்கர்’ வயலை விற்றுப் படிக்கவைத்தார் அப்பா;

லோன் போட்டு `ஸ்கொயர் ஃபீட்டில்’ வீடு வாங்குகிறான் மகன்' என, என் நண்பன் நக்கலாகச் சொல்வான். அதிலும் வீட்டை ஆகாயத்தில் கட்டிவிட்டு, விளம்பரத்தில் `சீ வியூ' எனப் போட்டிருப்பார்கள்.

வீடு உண்டு... ஆனால், நிலம் இல்லை என்பது விசித்திரம்.

ஒருமுறை `பிரெஞ்சு மாடல் வில்லா’ என விளம்பரம் செய்ய, நான் வேலைசெய்த விளம்பர நிறுவனத்தை அணுகியது ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம். பிரான்ஸில் காற்று, நீர், நிலத்தை கணக்கில் எடுத்தே கட்டடங்களைக் கட்டுவார்கள். `சென்னைக்கு எதுக்கு பிரெஞ்சு மாடல்?' என நினைத்துக்கொண்டேன். காந்தியின் பொருளாதாரக் கணக்குப்படி வீடு கட்டுவதுகூட அந்தந்தச் சூழலில் என்ன கிடைக்குமோ அதை வைத்துதான் கட்டவேண்டும் என்பதே. காந்தியனான லாரி பேக்கர் (Laurie baker) அதைத்தான் நம் ஊரில் செய்தார்.

படத்தில் இருக்கும் வீட்டைப் பார்த்ததும், ஏதோ இம்ப்ரெஷனிச (Impressionism) ஓவியம் என முதலில் நினைத்துவிட்டேன். அமெரிக்காவின் சான் கேப்ரியல் மலைப்பிரதேசத்துக்கு `மிக மிக அருகில்’ உள்ள ஓர் அசல் வீடு. அங்கே கிடைத்த கற்களையும் மரங்களையும் கொண்டு கட்டிய வீடு. கட்டியவர், கண்பார்வையற்ற ஒரு ஆர்க்கிடெக்ட் என்பதை உங்களைப்போல என்னாலும் நம்ப முடியவில்லை.

எல்மர் ரீவிஸ் (Elmer Reavis) என்கிற இயந்திர வியாபாரிக்கு, சான் கேப்ரியல் மலைப்பிரதேசத்தில் வீடு கட்ட ஆசை.

கலைடாஸ்கோப் - 30

1912-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை தன் கண்பார்வையைப் படிப்படியாக இழந்தவர், வீடு பற்றிய கனவை இழக்கவில்லை. 1922-ம் ஆண்டில் சான் கேப்ரியலில் நிலம் வாங்கிய எல்மர், தனி ஒரு மனிதனாக அந்த வீட்டை 1924-ம் ஆண்டு கட்டி முடித்தார். மின்வேலை, பெயின்டிங் போன்ற சில வேலைகளுக்கு மட்டுமே உதவியாளர்களை வைத்திருந்த எல்மர், பெரும்பாலான வேலைகளை `அவர் ஒருவரே’ செய்தார் என வியக்கிறார்கள் விமர்சகர்கள்.

`தான் இசையமைத்த இசையைக் கேட்க முடியாத பீத்தோவனைப்போல, இந்தக் கலைநயமான வீட்டை உருவாக்கிய எல்மரும் இதைப் பார்த்தது இல்லை' என இந்த வீடு விற்பனைக்கு வந்தபோது எழுதினார்கள்.

சாதாரணமாகக் கட்டினாலே `பார்த்துப் பார்த்து கட்டிய வீடு' என்போம். எல்மரின் வீட்டை என்னவென்று சொல்வது?