முந்தைய பாகங்கள்:
பாகம்1- வ.வே.சு.ஐயர்
பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன்
பாகம்-5- மௌனி
பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி
பாகம்- 8 - பி.எஸ்.ராமையா
பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா
பாகம்-11- சி.சு.செல்லப்பா
புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மெளனி, பி.எஸ்.ராமையா, பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), ந.சிதம்பரசுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், எம்.வி.வெங்கட்ராம் ஆகியோர் `மணிக்கொடி'யில் அவரவர் ஆற்றலையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் `மணிக்கொடி எழுத்தாளர்கள்' எனக் குறிப்பிடலாயினர். இப்படி ஒரு வரியை ரொம்ப காலமாக நாம் வாசித்துக்கொண்டிருக்கிறோம். ஆம், இந்தப் பட்டியலில் தவறாமல் இடம்பெறும் ஆளுமைகளில் ஒருவர்தான் ந.சிதம்பரசுப்பிரமணியன்.
இவர்களில் மூன்றுவிதமான தன்மைகள்கொண்டவர்கள் இருந்தனர். மணிக்கொடி பத்திரிகையின் முதல் இதழின் தலையங்கத்தில் எழுதியதுபோல,
பாரதி பாடியது மணிக்கொடி
காந்தி ஏந்தியது மணிக்கொடி
காங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி
சுதந்திரப் போராட்ட வீரர்களை
உற்சாகமூட்டியது இம்மணிக்கொடி
என்று காந்தி மகான் என்னும் ஆற்றல்மிகு காந்தத்தால் இழுக்கப்பட்டு, நேரடியாக காங்கிரஸின் சத்தியாக்கிரகங்களில் பங்கேற்று, அடி உதை பட்டு, சிறை சென்றும் மணிக்கொடியை உயர்த்திப் பிடித்தவர்கள் ஒருவகை. மணிக்கொடியை நிறுவிய வ.ரா, கு.ஸ்ரீனிவாசன் பிறகு ஆசிரியப் பொறுப்பேற்ற பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா ஆகியோர் இந்த வகையினர். நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும் சகபயணிகளாக நடந்து கலையை மட்டும் வற்புறுத்திய வகையினராக புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தி, மௌனி போன்றோரைக் குறிப்பிடலாம். இந்த வகையினர் பொருளாதாரரீதியில் (மௌனியைத் தவிர) மிகுந்த கஷ்டஜீவனம் நடத்திவந்தவர்கள்.
அப்படியான கஷ்டங்கள் ஏதுமின்றி வசதியான குடும்பப் பின்னணியுடன் நின்று நிதானமாகக் கதைகள் எழுதியவர்கள் என ந.சிதம்பரசுப்பிரமணியனையும் சிட்டியையும் குறிப்பிடுவார்கள். இலக்கியச் சிந்தனைக்காக ந.சிதம்பரசுப்பிரமணியனை அறிமுகம் செய்து நூல் எழுதிய எழுத்தாளர் மாலன் கூறுகிறார்...
"அன்றாட வாழ்வுக்கே எழுத்தாளர்கள் தத்தளித்துக்கொண்டிருந்த ஒருகாலத்தில், அவர் ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்து சொந்தமாக வீடு கட்டியிருந்தார். மகளுக்கு ஆபட்ஸ்பரி மாளிகையில் கல்யாணம் நடத்தினார். மற்றவர்கள் எல்லோரும் எழுத்தையே முழுநேரத் தொழிலாகக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், படிப்புக்கு மதிப்பும், சமூகத்தில் அந்தஸ்தும், கைநிறைய சம்பளமும் அதிகாரமும் தரும் ஒரு வேலையில் அவர் இருந்தார்."
குடும்பப் பரம்பரையாக அவர் பெற்றிருந்த இசைஞானம், வேதாந்த அறிவு, சம்ஸ்கிருதப் பயிற்சி, இலக்கிய வாசிப்பு போன்றவை அவருடைய எழுத்துக்கு உதவி செய்தன. அவருடைய அன்றாட வாழ்க்கை பற்றி சி.சு.செல்லப்பா கூறுவதாக மாலன் குறிப்பிடுவது...
"அவர் ஒரு 'சிஸ்டமாட்டிக்’ வாழ்க்கையை வகுத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் நுங்கம்பாக்கத்தில் இருந்த லிட்ரரி சொஸைட்டி நூலகத்துக்குப் போவார். இரண்டு, மூன்று மணி நேரம் அங்கே செலவிடுவார். திரும்பி வந்து கோயம்புத்தூர் கிருஷ்ணையர் ஹோட்டலுக்குச் செல்வது வழக்கம். தரமான ருசியான சிற்றுண்டிக்கு அந்த உணவகம் பெயர்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை கட்டாயம் சினிமாவுக்குப் போக வேண்டும்"
அவரைப் பற்றி அவரே எழுதிய வரிகள் மிக முக்கியமானவை. ந.சிதம்பரசுப்பிரமணியன் தன்னுடைய `மண்ணில் தெரியுது வானம்' நாவல் முன்னுரையில் எழுதுகிறார்.
`1933-34ல் சென்னைக்கு நிரந்தரமாக வந்த பிறகு, எழுத்தாளர்களுடனும் பத்திரிகையாளர்களுடனும் தொடர்புகொண்ட காலத்து மகாத்மாவின் கருத்துகளிலும் வாழ்ந்த வழிமுறைகளிலும் என் மனதைப் பறிகொடுக்க ஆரம்பித்தேன். அப்போது என்னை எழுத்து உலகுக்குள் இழுத்துச் சென்ற நண்பர்கள் சிறந்த தேசபக்தர்கள், காந்தி பக்தர்கள், சிறைக்குச் சென்றவர்கள், அடி வாங்கியவர்கள், வாழ்க்கை வசதியை வேண்டாம் என்று உதறியவர்கள், வறுமையையும் கஷ்டத்தையும் விரும்பி மேற்கொண்ட தியாகிகள், முக்கியமாக, தி.ஜ.ர., வ.ரா., கு.ஸ்ரீனிவாசன், சொக்கலிங்கம், சங்கு சுப்பிரமணியன், ஏ.என்.சிவராமன், பி.எஸ்.ராமையா, ரா.நா. போன்றோர் அரசியல் நெருப்பில் முக்குளித்துப் பத்திரிகைக்கு வந்தவர்கள். இவர்கள் அன்போடும் ஆதரவோடும் தங்கள் சங்கப்பலகையில் இடம்கொடுத்து என்னைச் சேர்த்துக்கொண்டார்கள். இவர்களிடம் தினம்தோறும் திருவல்லிக்கேணி கடற்கரையில் நான் கேட்டதும் கற்றதும் என்னை உருவாக்கின. அந்த அனுபவங்கள், நான் மறக்க முடியாதவை; என் இதயப் பொக்கிஷத்தில் வைத்து நிரந்தரமாகப் போற்றப்படுபவை.”
ஆனாலும் 1929-ல் காந்திஜியின் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்கப் போன இவரை, அவரது தாயார் `வேண்டாம்' எனச் சொன்னதால் போகாமல் இருந்துவிட்டார். தன்னுடைய தாயார், தன்னுடைய தந்தையார், காந்தி ஜி, தியாகையர் ஆகியோரின் தாக்கத்தில் உருவானதுதான் அவரது குணச்சித்திரம். 'காந்திஜி மீதும் தியாகய்யர் மீதும் என்னையும் என் character-ஐயும் உருவாக்கியவர்கள் என்ற மதிப்பு உண்டு' என்று அவரே எழுதுகிறார்.
30-11-1912ம் ஆண்டில் பிறந்த ந.சிதம்பரசுப்பிரமணியன், 1933-ம் ஆண்டில் சென்னையில் நிரந்தரமாகக் குடியேறினார். வாஹினி ஸ்டுடியோவில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் 25 வருடங்கள் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்தார். 1977-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காலமானார். மணிக்கொடி பி.எஸ்.ராமையாவின் பொறுப்பில் அவ்வளவும் சிறுகதைகள் என வரத் தொடங்கிய ஐந்தாவது இதழில் ந.சிதம்பரசுப்பிரமணியனின் முதல் சிறுகதை 'வாழ்வின் முடிவு' வெளியானது. சக்ரவாகம், சூர்யகாந்தி, வருஷப் பிறப்புக் கதைகள் ஆகிய தொகுப்புகளாக அவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டன. இந்தத் தொகுப்புகள் எவையும் இன்று அச்சில் இல்லை. நூலகங்களில்தான் தேடிப் படிக்கவேண்டிய நிலை. அவருடைய 'இதயநாதம்' நாவலை சந்தியா பதிப்பகம் 2012-ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.
சங்கீதத்தின் மீது அவர்கொண்ட ஈடுபாட்டை `இதயநாதம்' நாவல் எடுத்துக்காட்டுகிறது. அதன் முன்னுரையில் அவரே எழுதுகிறார்,
`சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால், என்னுடைய முன்னோர்களுக்குச் சரியான வாரிசாக நான் ஏற்படவில்லை. என் குடும்பத்தில் எனக்கு முன்னே பிறந்திருந்த சங்கீதச் சிம்மங்களுக்குப் பின்னால் வருவதற்குக் கொஞ்சமேனும் யோக்யதை இல்லாதவன். இருந்தாலும் ரத்தத்தில் ஊறியிருக்கும் பரம்பரைச் சங்கீத வாசனை, நான் லௌகீகமுறைப்படி எந்தத் தொழில் செய்துகொண்டிருந்தாலும் இதயத்தை சங்கீதத்திலேயே நாடவைத்தது. நாதத்தை முறைப்படி உபாசிக்காத நான், நாதயோகிகளை உபாசிக்கலானேன். அந்த முயற்சியின் பயன்தான் இந்தப் புத்தகம்.
ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள், தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற நாதப்பிரம்மங்களைப் பற்றியும் மஹாவைத்தியநாத சிவன் போன்ற சங்கீத உபாஸகர்களைப் பற்றியும் கேட்டு, என் இதயம் ஒரு நாதோபாசகனைப் பற்றி எழுதத் தூண்டியது. அநேக சங்கீதப் பெரியோர்களைப் பார்த்தும் கேட்டும், அவர்கள் பட்ட சிரமங்களையும், அவர்கள் செய்திருக்கும் தபஸையும் அறிந்ததிலிருந்து, ஒரு நாதயோகியைக் கதாநாயகனாக வைத்து எழுத வேண்டும் என்ற ஆசை வெகுநாள்களாக இருந்துவந்தது. அதன் விளைவே இந்தப் புத்தகம்.
வாழ்க்கையிலே சில சங்கீதப் பெரியார்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சிலவற்றைப் போன்று தொகுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். காளிதாசன் சொல்லியிருப்பதுபோல, `நாதயோகம் எங்கே... நான் எங்கே?' இருந்தாலும் ஆசை வெட்கமறியாது என்ற முறையில் இதை எழுதியிருக்கிறேன்.'
நா.சுப்பிரமணியன் அவர்கள் அவ்வப்போது வெளியிடும் சிபாரிசுப் பட்டியலில் தவறாது இடம்பெறும் நாவலாக `இதயநாதம்' இருக்கும். அவர் நம்பிய, அவரைப் பாதித்த, அவரை ஆட்கொண்ட மூன்று விஷயங்கள் என காந்தியம், சங்கீதம், அத்வைதம் ஆகியவற்றைக் கூறலாம். இந்த மூன்றுக்கும் தன்னுடைய எழுத்துகளில் உரிய இடம் அளித்துவிட்டார். இந்த மூன்றுக்கும் அப்பால் அவருக்கு இந்திய வாழ்வின் பாரம்பர்யம் அது புனிதம் எனக் கொண்டாடும் அநேக அம்சங்களின் மீதும் விமர்சனமே இல்லாத ஆழ்ந்த மரியாதை உண்டு. அவருடைய எல்லாக் கதைகளிலும் இதை நாம் காண முடிகிறது.
நீண்ட முன்னுரை ஆகிவிட்டது. இனி அவரது சிறுகதைகளுக்குள் போய்விடலாம்.
``ஊர்வலம், மூலை திரும்பிற்று. பேண்டு கோஷ்டியர் `தாரிணி தெலுஸுகொண்டி...' என்ற கீர்த்தனையை முடித்துவிட்டு நிறுத்திக்கொண்டார்கள். நாகஸ்வரக்காரர் வாசஸ்பதியை எடுத்து நாதத்தின் இனிமையைப் பிழிய ஆரம்பித்தார். பெரிய இடத்து கல்யாணம். புஷ்பம் மாத்திரம் ரூபாய் 500-க்கு வாங்கியிருந்தார்கள். விமானம் மாதிரி புஷ்பத்தால் அலங்கரிக்கப்பட்ட காரிலே, பெண்ணும் மாப்பிள்ளையும் அலங்காரமாக வீற்றிருந்தார்கள். கார் மெதுவாக வந்துகொண்டிருந்தது. மல்லிகையின் மணம் இரண்டு பர்லாங்கு தூரம் வீசியது.
வாழ்க்கைச் சிக்கலில் அகப்பட்டுக்கொள்ளாத ஞானியைப்போல நாகராஜன் கூட்டத்தில் நுழைந்து கலந்துகொள்ளாமல் மத்தாப்புக்காரர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான். ஆனால், அவன் மனம் உலகத்திலிருந்து விடுபட்டு சூன்யமாகிவிடவில்லை. அவன் மனமும் கண்களும் காருக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு பெண்ணின் இரு கருவிழி வட்டங்களைத் தேடிக்கொண்டிருந்தன. அவனைக் கேட்டால் `பிரம்மம் சூன்யமன்று. அந்த இரு வட்டங்களே' என்றிருப்பான்.
``அவள் யார்?” அது அவனுக்குத் தெரியாது. அன்று சாயந்திரம்தான் ஊருக்கு வந்தான். ஊர்வலம் மூலை திரும்பியபோது, தற்செயலாகத் திரும்பிய அவன் கண்கள் அவளிடத்தில் சிக்கிக்கொண்டு வெளியே வர மறுத்துவிட்டன. அவளைக் கவனித்துக்கொண்டு வந்தான். அவன் சங்கோசி. கூர்ந்து கவனிப்பதை யாராவது பார்த்துவிடப்போகிறார்கள் என்ற பயம் வேறு. அவளே அவனைக் கவனித்துவிட்டாலும் ஆபத்து. ஒளிந்து ஒளிந்து கவனித்து வந்தான் அவன்.
``அடேயப்பா! என்ன பொல்லாத்தனம் அவளுக்கு? மாப்பிள்ளையை எப்படிக் கிண்டல் பண்ணிக்கொண்டு வருகிறாள்! நாகராஜனுக்கு மாப்பிள்ளை அத்தான் முறை. அவனுக்குத் தெரிந்தவரையில், அவள் பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கும் பெண்ணாகத் தோன்றவில்லை. பெண்வீட்டுக்காரியாகத்தான் இருக்க வேண்டும். என்ன தைரியம்! என்ன துணிச்சல்! பெண் கைகாரி!''
அவளுக்கு 15 வயதுதான் இருக்கும். நிச்சயமாகக் கல்யாணம் ஆகியிருக்க முடியாது. இந்தக் காலத்தில் இன்னும் எவ்வளவோ நாள்கழித்துக் கல்யாணம் செய்கிறார்கள். நல்ல சிவப்பு. கடைசல் பிடித்து எடுத்த மூக்கு. அழகான காது. உணர்ச்சி நிறைந்த உதடு. பட்டுப்போன்ற சரீரம். பரந்த கண்களைக்கொண்டதால் கண்ணின் கீழே மையிட்டது போன்ற ஒரு கறுப்பு. பேசும் விழிகள்.
அவள் மாதிரி குறும்புத்தனமும் துறுதுறுப்பும் படைத்த சிறுமி வேறு ஒருத்தியும் இல்லை. ஒரு தலைவிபோல் மற்றவர்களை ஆட்டிவைத்துக்கொண்டே வந்தாள். அவளுடைய பரிகாசப் பார்வை, குறும்புச் சிரிப்பு இரண்டும் நாகராஜன் மனத்தைப் பிளந்துகொண்டு சென்றன.
இப்படியே போய்க்கொண்டிருக்கும் கதையில் திருப்புமுனையாக மணி அண்ணா வருகிறார். இவர்தான் இந்தக் கல்யாணத்தைப் பேசி முடித்தவர். அவர், நாகராஜனுக்கும் ஒரு பெண் தயாராக இருப்பதாகக் கூறுகிறார். நாகராஜனின் அப்பாவிடமும் அந்தப் பெண் பற்றிக் கூறுகிறார். அந்தப் பெண் யார் எனக் கேட்கும்போது, ``சரிதாண்டாப்பா, பெண்ணைப் பார்க்கணும் நீ, அதுதானே? பார்த்தால் அவ்வளவுதான். இங்கே வாயேன், காண்பிக்கிறேன்” என்று சொல்லி, அவன் மறுப்பதையும் கேட்காமல் இழுத்துக்கொண்டு பெண்கள் பக்கம் போனார்.
அவனை மயக்கிய மோகினி, காரின் பக்கத்திலேயே வந்துகொண்டிருந்தாள். அவள் முன்னே அவனைக் கொண்டுபோய் நிறுத்தினார் மணி அண்ணா. ``இவன் புருஷன், அவள் மனைவி!” என்று சுட்டிக்காட்டிவிட்டு, ``நான் சொன்னது சரிதானே?” என்று கேட்டார். நாகராஜனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. சந்தோஷமும் திடுக்கிடச் செய்கிறதல்லவா எதிர்பாராமல் வரும்போது?
நாகஸ்வரக்காரர் அப்போது வாசித்துக்கொண்டிருந்த `ஹிந்தோளம்' எந்த இன்ப உலகத்தைச் சிருஷ்டி செய்துகொண்டிருந்ததோ, அதில் அவன் மனம் திரிந்துகொண்டிருந்தது. ஆனால், கதையின் இரண்டாது திருப்புமுனையாக நாகராஜனின் தகப்பனார் எதிரே வந்துகொண்டிருந்தார்.
``பையனுக்கு பூரண சம்மதம். ஜாதகம் பொருந்தினால் முடித்துவிடவேண்டியதுதான்'' என்று மணி அண்ணா ஆரம்பிக்கவும் ``பையனுக்கு அந்தப் பெண் பிராப்தி இல்லை” என்றார் தகப்பனார். நாகராஜனுக்குத் திடுக்கிட்டது.``ஜாதகம் பார்த்தேன். பெண்ணுக்கு அங்காரக தோஷம். அதை முன்பே சொல்லியிருக்கக் கூடாதா? எட்டாம் இடத்திலே இருக்கு. பையனுக்குத் துளிகூடச் செவ்வாய் தோஷம் கிடையாது” என்றார் அப்பா.
``நல்ல பொருத்தம். ஆனால், முடி எங்கே போட்டிருக்கோ?” என்று தலையை ஆட்டினார் மணி அண்ணா.
``ஜாதகமாவது மண்ணாங்கட்டியாவது'' என, நாகராஜனுக்கு ஆத்திரமாக வந்தது. ஆனால், அப்போது அவன் சண்டைபோடவில்லை. சண்டைபோடுவது அவன் இயல்பன்று. யாருடன் சண்டைபோடுவது?
நாகராஜனுக்கு மனம் வெறுத்திருந்தது. அந்தப் பாட்டோ மேலும் மேலும் அவனைப் புண்படுத்தி வந்தது. இது என்னடா தொந்தரவு... ``சரி! நாழிகைதான் ஆகிவிட்டதே, தூங்கவாவது போகலாம்'' என்று முணுமுணுத்துக்கொண்டு ஒதுங்கினான். நினைவை மறக்கத் தூக்கம்தானே மருந்து. நாகஸ்வர வாத்தியம் முடிந்தது. பேண்டு கோஷ்டியர் `நாடகமே உலகம்...' என்ற பாட்டை வாசித்துக்கொண்டு போயினர். ஊர்வலம், மற்றொரு மூலை திரும்பிற்று.
ந.சிதம்பரசுப்பிரமணியனின் எல்லா முத்திரைகளும் பதிந்த கதை இது எனலாம். `கதையை எங்கே ஆரம்பித்து எங்கே முடிக்கணுமோ அதைக் கச்சிதமாகக் கையாளத் தெரிந்தவர்' என எல்லோரும் குறிப்பிடுவார்கள். உண்மைதான். மண ஊர்வலம் ஒரு தெருவிலிருந்து அடுத்த தெரு திரும்புவதற்குள் கதையை முடிக்கிறார். 1930-40களில் 15 வயதுக் குழந்தைகளைப் பார்த்துக் காதல்கொள்வது சாதாரணமாகவும் இயல்பாகவும் இருத்ததுபோலும். மௌனியும் 13 வயதுக்குழந்தை மீது மையல் கொள்பவனைப் பற்றி `அழியாச்சுடர்' கதையில் எழுதினார். இந்தக் கதையில் ந.சி-யும் 15 வயதுச் சிறுமி மீதே நாயகனை மையல்கொள்ளவைக்கிறார். `ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் குழந்தைதானே!' என்று நமக்கு இன்று இதை வாசிக்க சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது. பால்ய விவாகம் என்கிற பாரம்பர்யத்திலிருந்து 15 வயதுப்பெண் என்றாவது வந்தார்களே என்று ஆற்றுப்படுத்திக்கொள்ளவேண்டியதுதான்.
இது மாதிரி ஒரு கதையை புதுமைப்பித்தனோ மணிக்கொடி எழுத்தாளர்கள் வேறு யாருமே தொட்டிருந்தால், நிச்சயம் கதையில் செவ்வாய் தோஷத்துக்கு எதிரான ஒரு மீறல் இருந்திருக்கும்; சாடல் இருந்திருக்கும்; விமர்சனமோ விவாதமோ இருந்திருக்கும். ஆனால், இந்தக் கதையில் கதாநாயகனைத் `தூங்கப் போ, அதுதான் மருந்து' என்று அனுப்புகிறார் ந.சிதம்பரசுப்பிரமணியன். அவர் காலத்து எழுத்தாளர்கள் எவரையும்விட பிற்போக்கான சடங்குகள் சாத்திரங்களுக்கு அடிபணிந்துபோய்விடுகிறவராகவே அவர் படைப்புகள் வழி அவரை நாம் அடையாளம் காண்கிறோம்.
`ரகுபதியின் அவஸ்தை’ என்கிற கதையில் வீண் தற்பெருமைகொள்ளும் கதாபாத்திரமான கதை நாயகன் ரகுபதி, தன் மனைவி சரஸ்வதி பற்றியும் தற்பெருமைகொள்கிறான்.
``மற்றெல்லாவற்றையும்போலவே ரகுபதிக்கு மிகவும் பெருமை தரக்கூடியவள்தான் சரஸ்வதி. ரகுபதி அதிர்ஷ்டசாலி என்பதற்கு பலமான அத்தாட்சி அவள். சரஸ்வதி நல்ல அழகி. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்திருக்கிறாள். கர்நாடக (பாட்டிகளின்) அநாகரிகத்துக்கும், புதிய (பேத்திகளின்) அநாகரிகத்துக்கும் நடுவேயுள்ள நாகரிகத்தைப் பின்பற்றுபவள் . ஆங்கிலம் படித்தவளாக இருந்தாலும் அவளைப் பார்த்தால் `சினிமா ஸ்டார்’ மாதிரி இராது. குடும்பப்பெண் மாதிரிதான் இருக்கும். அவள் குடும்பப்பெண்தானே!”
இந்த வர்ணனைக்குள் ஒளிந்திருக்கும் பத்தாம்பசலி மனதை நம்மால் எளிதாக அடையாளம் காண முடியும். சரஸ்வதி, வீணை வாசிப்பதில் ஈடுஇணையற்றவளாக இருந்தாள்.
``அவள் மற்ற பெண்களைப்போல திருப்பித் திருப்பி ஒப்பிக்கும் `கிராமபோன் ரெக்கார்டு’ அல்ல. அவளுடைய சங்கீதத்தில் கற்பனையும் ஜீவனும் ததும்பி நிற்கும். அவள் வீணையின் நரம்பைச் சிறிது அசைத்துக்கொண்டிருந்தாலே கேட்கிறவன் நரம்பும் அசையும். அழுத்தத்தோடும் பிகுவோடும் ஸ்வரங்களை கமகம் கொடுத்து வாசிப்பது பிரமிக்கச் செய்யக்கூடியதாகயிருக்கும்.''
அவனுடைய தற்பெருமைகளின் பட்டியலில் அவளுடைய வீணை வாசிப்பும் சேர்ந்தது. அதை இன்னும் பெரிதாக்கி அனுபவிக்க ஆசைப்படுகிறான். வித்வத் சபையில் நடக்கும் சங்கீதப் போட்டியில் அவளைக் கலந்துகொள்ளச் செய்கிறான். அவள் ஜெயித்து மெடல் வாங்கப்போவது நிச்சயம். அப்போது ஜனங்கள் பிரமித்து நிற்கப்போவதை கற்பனைசெய்து புளகாங்கிதம் அடைகிறான். சிநேகிதர்கள் தன்னைச் சூழ்ந்துகொண்டு வியப்போடு தன்னைப் போற்றி வாழ்த்தப்போவதை எண்ணி பெருமைகொள்கிறான்.
ஆனால், நடந்ததோ வேறு. அவள் வாசிப்பில் சபையே கட்டுண்டு கிடந்ததும் பிரமித்ததும் உண்மைதான். ஆனால், அவள் பாடிக்கொண்டிருந்தபோது இரண்டு பேர் பேசிக்கொள்வதைக் கேட்கிறான். ``பெண்கள்தான் பாட வேண்டுமப்பா. அப்போதுதான் சரீரமும் சாரீரமும் இனிமையாயிருக்கும். பார்றேன், குஷியாயிருக்கு” என்று சரீரத்தையோ சாரீரத்தையோ வியந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேசியவனின் நண்பன் அந்த வார்த்தைகளை ஆமோதித்து விகாரமான ஒரு புன்னகை செய்தான்.
சரஸ்வதியின் `உடைமையாளனாகிய' ரகுபதிக்கு ஆத்திரம் பொங்கிவிடுகிறது. சபையில் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லோரும் அவளையே பார்ப்பதுபோல அவனுக்குத் தோன்றுகிறது. எல்லோர் மீதும் கோபம் கோபமாக வருகிறது. கச்சேரி முடிந்து அவளை எல்லோரும் பாராட்டுகிறார்கள். அவன் காதில் அது ஏதும் விழவில்லை. அவளை இழுத்துக்கொண்டு வீடு வந்து சேருகிறான். அவளை `வெட்கம்கெட்ட கழுதை!' எனத் திட்டுகிறான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. `இனிமேல் வீணையைத் தொட்டால் கையை அடுப்பிலே வைத்துவிடுவேன்' என்று கத்துகிறான்.
ஆண் மனதின் ஆதிக்க மனோபாவமும் கீழ்த்தரமும் கதையில் அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் முடிப்பில் ஒரு வரி, ஒரு வார்த்தை விமர்சனம் இல்லை... கதை இப்படி முடிகிறது, ``அவன் புருஷன், கணவன் எஜமான், கஷ்டப்படவோ, கஷ்டப்படுத்தவோ எல்லாவற்றுக்கும் அவனுக்கு உரிமை உண்டல்லவா! ஆயிரம் வருஷங்களாக மனைவி அடைந்த அனுபவம் அது.” வெறும் புலம்பலாகக் கதை முடிகிறது. இதுதான் ந.சிதம்பரசுப்பிரமணியனின் முத்திரை. அவரைப் பற்றி இலக்கியச் சிந்தனையில் கட்டுரை வாசித்த எழுத்தாளர் மாலன் குறிப்பிடுவதுபோல,
``மணிக்கொடி என்ற புரட்சிக்காரர்களிடையே கு.ப.ரா ஓர் ஆராய்ச்சியாளர். பிச்சமூர்த்தி ஒரு தத்துவஞானி. புதுமைப்பித்தன் ஒரு கலகக்காரர் என்றால், சிதம்பரசுப்பிரமணியன் ஒரு பழைமைவாதி.”
அவர் காலத்திய பிற படைப்பாளிகளில் சொந்த வாழ்வில் பழைமைவாதிகளாக இருந்த பலரும் அவரை `பெரிய கலைஞர்' என்று கொண்டாடியதாகக்கொள்ளலாம். கற்பனாவாதக் காந்தியவாதியான எழுத்தாளர் நா.பார்த்தசாரதி, ந.சிதம்பரசுப்பிரமணியனுக்கு 1957-ல் எழுதிய கடிதம் ஒரு சான்று:
`பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக்கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெய்விக உணர்ச்சி அடியேனுக்கு உங்கள் சிறுகதைகளைப் படிக்கும்போது உண்டாகிறது. காவிரி போன்ற ஒரு புண்ணிய நதியில் நீராட இறங்கும்போதோ, சிதம்பரம் கோயிலைப் போன்ற பேராலயத்தினுள் நுழையும்போதோ எத்தகைய சாந்தமும் தூய்மையும் மிகுந்த எண்ணங்கள் உண்டாகுமோ, அந்த எண்ணங்கள் உங்கள் கதைகளைப் படிக்கத் தொடங்கும்போதே எனக்கு உண்டாகிவிடுகின்றன.'
இத்துடன் இந்தக் கட்டுரையை முடித்தால் அது ந.சிதம்பரசுப்பிரமணியனுக்கு நியாயம் செய்வதாகாது. பழைமைவாதி என்று மட்டுமே அவரை முத்திரை குத்தி முடிக்க முடியாது. சி.சு.செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்புக்கு ந.சிதம்பரசுப்பிரமணியன் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டதுபோல `மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவற்றைக் கடந்து மனித இதயத்தின் ஆழத்தைக் கண்டு அந்த அனுபவத்தை பிறருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை. மின்னல்போல விநாடிக்கு விநாடி தோன்றி மறையும் அனுபவங்களை நிரந்தரமாக்குகிறது கலை' என நம்பியவர் அவர்.
`கொல்லைப்புறக் கோழி' என்று அவரது கதை ஒன்று. அந்தக் கதையின் சாராம்சம் இது.
தோட்டம் போட்டுச் செடி வளர்ப்பதிலே அந்தத் தம்பதிக்கு ப்ரியம். வீட்டின் கொல்லைப்புறத்தில் பூமியைச் சுத்தம்செய்து, மண்ணைக் கொத்தி பாத்திகள் போட்டு, ஒரு பக்கம் கீரையும் கொத்தமல்லியும் விதைத்து, கிணற்று நீரும் குளித்த ஜலமும் பாத்திகளுக்குப் போய் சேரும்வண்ணம் வாய்க்கால் வெட்டிச் செடிகள் முளைக்க ஆசையுடன் காத்திருக்கிறார்கள்.
வீட்டுக்குப் பின்புறம் ஒரு சேரி. கூலியாள்களின் குடிசை.
ஒருநாள் பயிர்க்குழிகளைப் பார்வையிடச் சென்ற தம்பதிக்குத் தூக்கிவாரிப்போடுகிறது. கொத்துமல்லித் தளிர்கள் இறைந்து கிடக்கின்றன. கீரைப்பாத்தி உருச்சிதைந்து கிடக்கிறது. யுத்தக்களத்தில் கிடக்கும் பிணங்களைப்போலச் சிறு சிறு துண்டுகள் சிதறிக்கிடக்கின்றன. எல்லாம் பின்புறத்துச் சேரிக் கோழியின் வேலை. மனைவிக்குக் கண்ணீர் ததும்புகிறது. கோழியைச் சித்ரவதை செய்து அனுப்ப வேண்டும் என்ற ஆத்திரம் வருகிறது. ஆனால், கோழியோ கொக்கரித்து அங்குமிங்கும் பறக்கிறது. தினமும் இதே தொல்லைதான். வடாம் பிழிந்து உலர்த்தியிருந்தால் களேபரம். அப்பளத்துக்கு உலர்த்திய உளுத்தம் பருப்பில் எச்சம் இடுதல்.
சேரிக்காரர்களாலும் கோழியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டிப்போட்டாலும் அறுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறது..
ஒருநாள் இதற்கெல்லாம் ஒரு முடிவு நெருங்குகிறது. சேரியில் கோயிலுக்குக் கோழியைப் பொங்கலிடத் தீர்மானிக்கிறார்கள். கோழியைப் பிடிக்கப்போனால் அது இங்கும் அங்கும் தாவுகிறது. பறந்துபோய் குட்டிச்சுவரில் உட்காருகிறது. கடைசியில் யாராலும் பிடிக்க முடியாமல், வேப்பமர உச்சியில் போய் அமர்ந்துவிடுகிறது.
கோழியைப் பிடிக்க யோசனைகள் சொல்லியபடி பின்னால் நகரும் கணவன், கைப்பிடிச்சுவர் இல்லாத கிணற்றில் விழ இருக்கிறான். மனைவியின் குரலும் உயிராசையின் எச்சரிக்கையும் சரியான சமயத்தில் விழாமல் காப்பாற்றுகிறது. அந்தப் பதற்றமான நிமிடத்தில், கோழியின் உயிராசை அவனுக்குப் புரிகிறது. தன்னைப்போலவே கோழிக்கும் சாக விருப்பமில்லை. பயமுண்டு எனப் புரிகிறது. எந்தக் கோழி தோட்டத்தைச் சிதைத்ததோ, எந்தக் கோழியால் தினசரி ரகளையோ, எந்தக் கோழியைச் சித்ரவதை செய்ய வேண்டும் என விரும்பினானோ அந்தக் கோழி கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறான். சுயநலம் மிகுந்த மனிதனிலிருந்து கருணை பொழியும் புத்தன் ஒருவன் பிறக்கிறான்.”
இப்படிக் கதைகளும் ந.சிதம்பரசுப்பிரமணியனின் இன்னோர் உலகமாக இருக்கின்றன. மனிதனுக்குள்ளிருந்து மிருகம் வெளியேறி கருணைமிக்க புதிய மனிதன் உயிர்பெற்றெழுவதைக் கதையாக்கியவராகவும் அவர் அறியப்படுகிறார். ஆகவே, பழைமைவாதியாக அடையாளம் பெற்றவர் என்றாலும் வாழ்வின் நித்தியமான அம்சங்களைப் பேசியவர் என்ற முறையிலும் வடிவநேர்த்தியுடன் சிறுகதை உருவம், அழகியல் பற்றிய பிரக்ஞையுடன் எழுதியவர் என்ற வகையிலும் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ந.சிதம்பரசுப்பிரமணியனுக்கு நிச்சயம் இடம் உண்டு.