மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 31

கலைடாஸ்கோப் - 31
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 31

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

``பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகளைவிட, மண்புழுக்களை அழிப்பதுதான் எங்கள் திட்டம்” - கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்த கப்பலின் மேல் தளத்தில் நின்றபடி சொல்லிக்கொண்டிருந்தான் நார்மன்.
நாதன் புன்னகைத்தபடி கரையைப் பார்த்தான். நார்மனின் சக ஆய்வாளன்.

“இந்த நிலத்தின் வளம் அதன் வேளாண்மையில் இருக்கிறது. மண்புழுக்களை அழிப்பதன் வழியே வேளாண்மையை அழிக்கலாம். அதன் வழியாக இந்த நிலத்தை...” என்று கப்பலில் இருந்து கரையை கைகாட்டி சிரித்தான் நார்மன்.

கப்பல் மெள்ள நகர ஆரம்பித்தது.

கலைடாஸ்கோப் - 31

“நமது பல வருட உழைப்பில் இன்று இந்த நிலத்தில் எங்கேயும் மண்புழுவைப் பார்க்க முடியாது. முற்றிலுமாக அழித்துவிட்டோம். எஞ்சியவை இந்த மண்புழுக்கள்தான்” - தன் கையில் இருக்கும் சிறு கண்ணாடிப் புட்டியைத் தூக்கிக் காட்டினான்.

புட்டிக்குள் ஒரு பிடி மண்ணில் சில மண்புழுக்கள் நெளிந்துகொண்டிருந்தன.

“இவையும் இன்று நம்முடன் நமது தேசத்துக்குப் பயணமாகின்றன... பாஸ்போர்ட், விசா இல்லாமல்...” என்று கண்களை இடுக்கியபடி சிரித்தான் நாதன்.

கப்பல், கரையைவிட்டு அகன்று மேற்கு நோக்கி செல்லத் தொடங்கியது. விலகிச் செல்லும் நிலத்தைப் பார்த்தபடி நின்றான் நாதன்.

“பல்லுயிர்களின் கண்ணியை அறுப்பதே நமது நீண்டகாலத் திட்டம். அதில் ஒரு முக்கியமான கண்ணி இந்த மண்புழுக்கள். இந்த நிலத்தின் பலமே இந்தப் பல்லுயிர்களின் பெருக்கமும் இணக்கமும்தான்” என்ற நார்மன், சட்டென வந்த ஒரு பறவை அந்தப் புட்டியை கால்களால் கவ்விக்கொண்டு பறப்பதைக் கண்டு பேச்சற்று நின்றான்.

“ஆம்... அந்தப் பல்லுயிர்கள், ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை” என்று வாக்கியத்தை முடித்தபடி திரும்பினான் நாதன்.

கலைடாஸ்கோப் - 31

பறவை, கிழக்குப் பக்கமாக நிலத்தை நோக்கிப் பறப்பதை அப்போதுதான் பார்த்தான்!

கலைடாஸ்கோப் - 31

ங்கள் குழந்தைத்தனத்தைத் தொலைத்த நாள் எது எனச் சொல்ல முடியுமா? `மயிலிறகு, குட்டி போடாது என்பதை அறிந்த நாள்தான் அது' என்று நிச்சயம் சொல்வேன்.

எனக்கு மொத்தமாக மயிலிறகு கிடைத்தது இல்லை. மினுமினுக்கும் மயிலிறகின் ஒன்று இரண்டு இழைகள்தான் சில்லறையாகக் கிடைக்கும். வகுப்பிலோ பக்கத்து வீட்டுப் பிள்ளைகளிடமோ கெஞ்சி வாங்கிய அவற்றை, `குட்டி போடும்' என்ற நப்பாசையில் புத்தகத்தில் புதைத்துவைத்து தினமும் விரித்துப் பார்ப்பதுதான் வேலையாக இருந்தது. அந்தக் காத்திருப்பின் கடுந்தவம் பல நாட்களுக்கு நீண்டு சென்றாலும் நம்பிக்கை இழந்தது இல்லை.

மயிலிறகு, குட்டி போடும் என்பதை யார் ஆரம்பித்துவைத்தது எனத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பழக்கம் குழந்தைகளிடம் பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்திருக்கிறது என யூகிக்கிறேன். எழுத்தாளர் பிரபஞ்சன் சின்னஞ்சிறு விஷயங்களைக்கூட சுவாரஸ்யமாக எழுதுபவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தன் வரலாற்றுத்தன்மையுடன் எழுதிய ஒரு கட்டுரைத் தொகுப்பின் தலைப்பே `மயிலிறகு குட்டி போட்டது’ என்பதுதான். எல்லோரும் தங்கள் பால்யத்தை கொஞ்சம் நிதானமாகப் புரட்டிப்பார்த்தால், ஏதேனும் ஒரு பக்கத்தில் மயிலிறகு ஒன்று ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்கலாம். கூடவே அரைக்கால் டவுசர் அணிந்த ஒரு சிறுவனையோ அல்லது பாவாடை அணிந்த ஒரு சிறுமியையோ!

கலைடாஸ்கோப் - 31

ஐஸ்க்ரீம் கோன்களைக் கடித்துச் சாப்பிடலாம் என்பதை சின்ன வயதில் முதன்முறையாகப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. சாப்பாட்டை உண்டு முடித்ததும் தட்டையே கடித்துச் சாப்பிடுவதுபோன்ற ஆச்சர்யம் கொடுத்தது அது. ஐஸ்க்ரீமின் வரலாறு, இரண்டாம் நூற்றாண்டிலேயே ஆரம்பிக்கிறது. 15-ம் நூற்றாண்டில் இந்தியாவில் முகலாயர்கள் இந்துகுஷ் மலையில் இருந்து ரிலே ரேஸ்போல (உருகிப்போகும் முன்) குதிரைகளில் ஐஸை எடுத்து வந்து பாலும் பழங்களும் கலந்து சர்பத் போல கிட்டத்தட்ட ஐஸ்க்ரீம் சாப்பிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் அறியமுடிகிறது. ஆனால், ஐஸ்க்ரீம் கோன் எப்போது கண்டுபிடித்தார்கள் எனத் தேடினேன்.

1904-ம் ஆண்டு அமெரிக்காவின் மிசிசிபி நதிக்கரை நகரமான செயின்ட் லூயிஸில் ஒரு பொருட்காட்சி நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துபோகும் அந்தக் கண்காட்சியில் ஒரு கடையில் ஐஸ்க்ரீமும் குளிரக் குளிர விற்று தீர்ந்திருக்கிறது. ஆனால், ஐஸ்க்ரீம் கிண்ணங்கள்தான் பற்றாக்குறையாக இருக்கிறது. இதைக் கவனிக்கிறார் பக்கத்தில் வாஃபில் (waffles) உலர் பிஸ்கட்டுகளை விற்றுக்கொண்டிருந்த எர்னெஸ்ட் ஹாம்வி என்கிற சிரியாவைச் சேர்ந்த வியாபாரி. வாஃபிலைக் கோனாகச் சுருட்டி, அதில் ஐஸ்க்ரீமை நிரப்பிக் கொடுக்க ஐஸ்க்ரீம்காரருக்குப் பரிந்துரைக்கிறார். இதுதான் கோன் பிறந்த கதை.

ஆனால், குழந்தைகள் ஐஸ்க்ரீம் கோனுக்காக அடித்துக்கொள்வதைப்போல, இதைக் கண்டுபிடித்தது தாங்கள்தான் என கப்பாஸ் சகோதரர்கள் (Kabbaz Brothers) முதல் டேவிட் அவேயு (David Avayou) வரை அடித்துக்கொண்டது தனிக்கதை. கோனுக்காக அடித்துக்கொண்ட கோமான்கள்!

கலைடாஸ்கோப் - 31

மயிலிறகைப் பற்றி யோசித்ததும், மென்பொருள் துறையில் வேலைபார்க்கும் நண்பர் உமாநாத் ஞாபகம் வந்தார். அவருக்குப் பிடித்த `மென்பொருள்’ சிறார்களின் மனம் எனத் தோன்றுகிறது. `விழியன்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான கதைகள் எழுதுபவர் எனச் சொன்னால் உங்களுக்குத் தெரியும். இவருடைய `மாகடிகாரம்' என்னும் நாவல், விகடனின் சிறுவர் இலக்கியத்துக்கான விருது பெற்றது.

இவருடைய வாட்ஸ்அப் அக்கவுன்ட்டை நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் மொய்க்கிறார்கள். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பெரும்பாலும் சிறுவர்களுக்கான கதைகளையே அதில் பகிர்கிறார். சிறார் நாவல்களை அத்தியாயம் அத்தியாயமாக வெளியிடுகிறார். அவரின் படைப்புகளை அவ்வப்போது ஆடியோ ஃபைல்களாகவும் பகிர்ந்து, குழந்தைகளைக் குஷிப்படுத்துகிறார்.

கதைசொல்லிகள் இல்லாமல்போன இன்றைய வாழ்க்கைமுறையில், இவர் வாட்ஸ்அப் வழியாகப் பகிரும் குழந்தைக் கதைகள் மூலமாக பெற்றோர்களை கதைசொல்லிகளாக உருமாற்றுகிறார். அறிவியலையும், வாழ்வியலையும், இயற்கையையும் பற்றிய நுட்பமான பதிவுகளை மிக எளிய கதைகள் வழியாகக் கடத்தும் மாயாஜாலம் விழியனுக்கு வாய்த்திருக்கிறது.

அவருடைய ஒரு கதையில் ஓவியா என்ற சிறுமி மயிலிறகை புத்தகத்தில் மறைத்துவைத்து `குட்டி போடுமா?' என, பகலிலும் இரவிலும் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். அவள் அம்மா ஒருநாள் `அந்தப் புத்தகத்தை வீட்டில் வைத்துவிட்டுப் போ, குட்டி போடுதான்னு பார்க்கிறேன்' என்கிறார். ஓவியா, மாலையில் வந்து நோட்டைத் திறந்துபார்க்கும்போது அது இரண்டு குட்டிகள் போட்டிருந்தது என்று முடிகிறது கதை.

இதற்கு நீங்கள் சந்தோஷப்பட்டால் நீங்களும் உங்கள் குழந்தைக்கு ஒரு கதைசொல்லி. `அம்மாதான் மயிலிறகை புத்தகத்தில் வைத்திருப்பாளோ?' என பெருமூளையால் சந்தேகப்பட்டால், மாதத் தவணைகள், சென்னைக்கு மிக அருகில் நிலத்தில் முதலீடு என்று முழுநேர முற்றிய மெச்சூரிட்டியை அடைந்துவிட்டீர்கள் என்று அறிக.

புத்தக மூட்டைக்கும் முட்டாள் பெட்டிக்கும் நடுவே நசுங்கும் இன்றைய சிறார்களுக்கு, தானே ஒரு கதைசொல்லியாக மட்டும் இருக்காமல், பெற்றோர்களையும் வாட்ஸ்அப் வழியாக கதைசொல்லிகளாக மாற்றும் ரசவாதம் விழியனுக்குத் தெரிந்திருக்கிறது. அவரை குழந்தைகளின் சார்பாக, செல்லமாக `வாழும் வாண்டு மாமா' என்பேன்!

ஒளிச்சித்திரம்

கலைடாஸ்கோப் - 31

நமது பாரம்பர்ய சிற்பக் கலைஞர்கள், நிர்வாணத்தை மூடிமறைக்கவில்லை. கொண்டாடப்படவேண்டிய இயற்கையின் படைப்பாகத்தான் தேகத்தைப் பார்த்தார்கள். கோயில் தூண்கள் முதல் தேர்களின் வடிவமைப்பு வரை நிர்வாணங்களைச் செதுக்கினார்கள். ஆனால், பிற்காலத்தில் ஹுசைன் போன்ற ஓவியர்கள் நிர்வாணத்தை வரைந்தபோது, குற்றவாளியாக்கி நாட்டை விட்டே வெளியேற்றியது நமது துரதிர்ஷ்டம்தான்.

டேனி ஆலிவர் (Dani Olivier) பிரெஞ்சு புகைப்படக் கலைஞர். அவருடைய நிர்வாணப் புகைப்படங்கள் ஒளியும் உடலும் கலந்த நவீன ஓவியங்கள்போல இருக்கின்றன. மாடல்களின் மீது அரூபமான (Abstract) ஒளிகளின் வடிவங்களைப் பாய்ச்சி அனாடமியைத் துல்லியமாகப் பதிவுசெய்கிறார். இருளின் பின்னணியில் ஒளியால் உருவாக்கப்பட்ட சிலைகளைப்போல அற்புதமாக இருக்கின்றன இந்தப் படங்கள். பெரும்பாலான நவீனக் கலைஞர்கள் சமூகத்துக்குக் கருத்து என்று எதுவும் சொல்லவருவது இல்லை. அழகியலே பிரதானம். அதில் அவர்கள் செய்யும் சோதனை முயற்சிகள்தான் கலையை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச்செல்பவை. பார்வையாளர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ப அதை எடுத்துக்கொள்வதுதான் முக்கியம்.

கலைடாஸ்கோப் - 31

`இந்த மாதிரி நியூடு போட்டோகிராஃபிக்கு எப்படி மாடல்கள் கிடைக்கிறார்கள்?' என்று ஒரு நேர்காணலில் கேட்டதற்கு, `நான் ஏற்கெனவே புகைப்படங்கள் எடுத்த மாடல்கள் புதிய மாடல்களை அழைத்துவருவார்கள். நிறைய அப்ளிகேஷன்கள் என்னிடம் நிறைந்துகிடக்கின்றன. பொருத்த மானவற்றைத் தேடி எடுப்பதுதான் கஷ்டம்’ என்று செல்லமாகச் சலித்துக்கொண்டார். `ஆனால், அந்த மாடல்கள் தங்களை கலையின் மீதான அர்ப்பணிப்புடன் புகைப் படத்துக்கு ஒத்துழைப்பார்கள்' என்றார் டேனி.

`நுரையால் செய்த சிலையா?' என்று ஒரு பாடலில் கேட்பார் கவிஞர் வைரமுத்து. இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் `ஒளியால் செய்த சிலையா?' எனக் கேட்கத் தோன்றுகிறது!