
படங்கள்: ஸ்டில் ராபர்ட்
`‘அழியாத கோலங்கள்’ பட எக்ஸ்டென்ஷனை டி.வி-க்குப் பண்ணணும்னா என்னவா பண்ணலாம்னு ஐடியா சொல்லுங்க’
- பாலு மகேந்திரா சார் இப்படிச் சொல்லியதும், ‘சார், ஜெயமோகனின் ‘கிளிக்காலம்’ குறுநாவல் நல்லா இருக்கும். அதையேகூட டி.வி-க்கு எடுத்துக்கலாம்’ என்றார் முத்துக்குமார்.
50 பக்கங்களுக்குள் இருக்கும் அந்தக் குறுநாவலை அங்கேயே அமர்ந்து படித்தோம்; விவாதித்தோம். முந்தைய தலைமுறை காதல், சமூகத்தில் உறவுகள்... இப்படி அனைத்தையும் வைத்து எழுதப்பட்ட கதை. பாலு மகேந்திரா சார், ஒரு புத்தகத்தைப் பற்றி இலக்கிய வாசகனாகப் பேசுவது வேறாகவும், அதையே திரைக்கதை ஆசிரிய னாக அணுகும்போது வேறாகவும் இருக்கும். ‘அதில் உள்ள இலக்கிய தன்மையை விட்டுடு. முதல்ல அதோட கதை என்னன்னு சொல்லு. முரண் என்னனு சொல்லு.
சிறுகதையோ, நாவலோ அதைப் படமாக்குவதற்கு முன்னாடி இதைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்' என்பார். அடுத்து, ‘ஒரு கதையை நாம ஸ்கிரீனுக்கு மாத்துறோம்னா, முதல் காட்சியிலேயே முரண் ஆரம்பிக்கணும். அப்படி முடியலைனா, முதல் பத்து நிமிடங்களுக்குள்ளயாவது ஆரம்பிக்கணும். அதுவும் முடியலையா, அந்தத் திரைக்கதையை நாம ஆரம்பிக்கவே கூடாது’ என்பார். மேலும், ‘அந்த முரணை முன்வைத்து திரைக்கதையைக் கட்டமைக்கும்போது நாவலின் பல முக்கியமான உன்னதமான தருணங்களை நாம் இழக்க நேரிடும்.
ஆனால் ஒரு திரைக்கதை ஆசிரியன் அறுவைசிகிச்சை செய்யும் ஒரு மருத்துவ நிபுணனைப்போல், துல்லியமாக அந்த விஷயங்களை மெள்ள எடுத்து வெளியே வைத்துவிட்டு திரைமொழிக்கு ஏற்றாற்போல் அந்தக் கதைக்கு மறுவடிவம் கொடுக்கவேண்டும்’ என்பார். பாலு மகேந்திரா சார் மட்டும் இல்லை... எல்லா குருக்கள் சொல்லும் ஸ்கிரிப்ட் கைடுலைன் இது.

பிறகு ‘இந்தக் கதை, எந்தக் காலத்தில் நடப்பதாக செட் பண்ணலாம்?’ என விவாதித்தோம். கடைசி வரை ஒரு முடிவுக்கு வராமல், ‘அழியாத கோலங்களை மனசுல வெச்சுக்கிட்டு உங்களின் அனுபவங்களையோ, உங்களின் கற்பனையையோ சேர்த்து கதை எழுதிட்டு வாங்க’ என்றார். நாங்கள் இருவருமே எழுத ஆர்வமாக இருந்தோம். ஆனால், சாரின் சீனியர் உதவி இயக்குநர்கள் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவத்தை முத்துக்குமார் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
`எழுதி எடுத்துட்டு வாங்கடா’ என்றுதான் ஆரம்பிப்பாராம். எழுதி எடுத்துச்சென்றால், இரண்டு விஷயங்கள் நடக்குமாம். ஒன்று, சினாப்சிஸ் மாதிரியே அதுவும் ஓரமாகப் போய் விழும்.
அடுத்து ‘இதுதான் நீ எழுதினதாடா... ம்ஹூம்...’ என்பாராம். அதனால் சோம்பேறிகள் என்று திட்டுவாங்குவதே மேல் என்று எழுதாமலேயே விட்டுவிடுவார்களாம். ஆனால், நானும் முத்துவும் தனித்தனியாக கதை எழுதினோம். லவ் லெட்டர் தருவது, அதனால் வரும் பிரச்னை, ஒரு பையன் வீட்டைவிட்டு ஓடிப்போவது... என என் பள்ளி கால அனுபவங்களையே நான் காட்சிகளாக எழுதியிருந்தேன். இரண்டு பேரின் கதைகளையும் வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, ‘முதல் காட்சியில...’ என சார் வேறு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். நான் முத்துக்குமாரைப் பார்க்க, அவர் என்னைப் பார்க்க... சார் தொடர்ந்து கதை சொல்லிக்கொண்டே போனார். பிறகு அவரே, ‘இந்தமாதிரி கதை பண்ணுவது நல்லா இருக்கு.
ஆனால், இதை நாம பண்ண வேண்டிய அவசியம் கிடையாதுடா. நாம பண்ணணும்னா ‘மால்குடி டேஸ்’, சுஹாசினி பண்ணின ‘பெண்’ மாதிரி ஒண்ணு பண்ணணும்டா’ என்றார். ‘ஓ.கே... உங்களுக்குப் பிடிச்ச சிறுகதைகள் எல்லாம் சொல்லுங்கப்பா...’ என்றவர், ‘இலக்கிய சிந்தனை சிறுகதைகள் தொகுப்பை எல்லாம் படிச்சு கதைகளை செலக்ட் பண்ணி வைங்க, அப்பிடியே அந்த ரூமுக்குள்ள ஒரு ஃபைல் இருக்கும். அது ராமன் கையெழுத்துல இருக்கும். (அந்த ராமன் ‘சேது’ படத்தில் கதாநாயகியின் அப்பா கேரக்டரில் நடித்தவர்) அதைத்தேடி எடுங்க’ என்றார். தூர்தர்ஷனில் டெலிஃபிலிமாகப் பண்ணுவதற்காக 90-களின் ஆரம்பத்தில் சார் ஸ்லாட் வாங்கி வேலைகள் செய்திருக்கிறார். அதற்காகத் தேர்வுசெய்து வைத்திருந்த கதைகள் அவை. அந்தச் சமயத்தில் ஒருநாள்... நானும் முத்துக்குமாரும் வழக்கம்போல் கதைகள் படித்துக்கொண்டிருந்தோம். சார், யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது தெரிந்தது.
அவர் வந்தார். ‘வாப்பா’ என்று அவரை தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். போகும்போதே, ‘என்னடா முத்து... எப்படிடா இருக்கே?’ என முத்துவை அவர் விசாரித்ததில் இருந்து, முத்துவுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்பது தெரிந்தது. ‘இவர் சுரேஷ் அண்ணன்... சுகா (ஆனந்த விகடனில் வந்த ‘மூங்கில் மூச்சு’ தொடரை எழுதியவர்) ‘சதிலீலாவதி’யில் இருந்து ‘ராமன் அப்துல்லா’ வரை சார்கிட்ட இருந்தார். சீனியர். தன் கல்யாணத்துக்காக ஊருக்குப் போயிருந்தவர் இப்ப வந்திருக்கார்’ என்றார் முத்து. உள்ளே ஏதோ ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர். வெளியே நாங்கள் ‘கதைநேர’த்துக்காக சிறுகதைகள் தேர்வு செய்தபடி இருந்தோம். சுரேஷ் பரபரப்பாக வெளியே போகிறார். சார், ‘சரிப்பா, நீங்க கிளம்புங்க’ என மதியமே எங்களை அனுப்பிவிட்டார். ‘அது என்னவா இருக்கும்?’ என்ற மர்மத்திலேயே அன்றைய மதியம் கழிந்தது. அடுத்த நாள் போனால், ஆபீஸே வேறு ஒரு செட்டப்பில் இருந்தது.
சார் வொயிட் அண்ட் வொயிட் காஸ்ட்யூமில் செம பாசிட்டிவ் எனர்ஜியோடு இருந்தார். நாங்கள் வருவதற்கு முன்பே சுகா அங்கு இருந்தார். ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கப்போகிறது எனத் தெரிந்தது. இந்த வொயிட் அண்டு வொயிட் என்பது ஒரு குறியீடு. தயாரிப்பாளரிடம் கதை சொல்லப்போனாலோ, அட்வான்ஸ் வாங்கப்போனாலோ இதுதான் சாரின் யூனிஃபார்ம். இதெல்லாம் அவர் வழக்கமாகக் கடைப்பிடிக்கும் பழக்கங்கள். வொயிட் அண்டு வொயிட் என்றாலே எங்களுக்கும் சந்தோஷம், ஏனென்றால் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும்.

சிறிது நேரத்தில் பிரபுதேவா வந்தார். அவரை சார், ‘வாங்க... ’ என வரவேற்று தன் அறைக்குள் அழைத்துச் சென்றார். அந்தச் சமயத்தில் சார் ஒருவரின் பெயரை எப்படிப் பயன்படுத்துகிறார் என்று நாங்கள் கணித்தபடி இருப்போம். சுஜாதாவை, வழக்கமாக ‘சுஜாதா’ என்றோ அவரின் இயற்பெயரான ‘ரங்கராஜன்’ என்றோதான் அழைப்பார்கள். ஆனால் சாரோ, ‘ஹேய் ரெங்கா’ என்பார். சில்க்கை தன் பட டைட்டில் கார்டில்கூட ‘சில்க் ஸ்மிதா’ என்று குறிப்பிட மாட்டார். ‘ஸ்மிதா’ என்று மட்டுமே குறிப்பிடுவார். ஜூனியர் பாலையாவின் இயற்பெயர் ரகு.
அவரை யாருமே அந்தப் பெயர் சொல்லி அழைத்திருக்க மாட்டார்கள். ஆனால் இவர், ‘வாங்க ரகு’ என்பார். அன்றும் அப்படித்தான், `பிரபுதேவாவை சார் எப்படி அழைப்பார்... பிரபு என்பாரா, தேவா என்பாரா?’ என எங்களுக்குள் பெரிய விவாதம். கதை கேட்டுவிட்டு வெளியே வந்த பிரபுதேவா, சாரிடம் பணிவாக வணங்கிவிட்டுக் கிளம்பினார். உடனே சார், ‘தட்ஸ் ஓ.கே தேவ்...’ என்றபடி வழியனுப்பிவைத்தார். இப்படி ஏதோ ஒரு வகையில் சார் எங்களை ஆச்சர்யப்படுத்தியபடியே இருப்பார்.
வெளியே இருந்த சுகாவை தனியாகச் சந்திக்க அப்போதுதான் நேரம் கிடைத்தது. ‘என்னண்ணே விஷயம், பிரபுதேவா வந்துட்டுப் போறார்?’ முத்துதான் கேட்டார். ‘இல்லப்பா படம் பண்றதுக்குப் பேசிட்டிருக்கோம்’ என்றார். ‘இவ்வளவு நாள் டெலிவிஷனுக்காகத்தானே வேலைசெஞ்சோம். இது எப்ப நடந்துச்சுன்னே தெரியலை’ என எங்களுக்கு ஷாக். ‘இல்லப்பா இது சாரோட பழைய ஸ்கிரிப்ட். அந்த ட்ரெயின் ஸ்கிரிப்ட் தெரியும்ல?’ என்றார். ‘ட்ரெயின் ஸ்கிரிப்ட்’ என்றால், சாரின் அசிஸ்டென்ட்ஸ் அனைவருக்கும் தெரியும். ‘டேய்... நீ அந்த ட்ரெயின் ஸ்கிரிப்ட் படிச்சியிருக்கியாடா?' என்றார் டைரக்டர். ‘இல்ல சார்’ என்றதற்கு, ‘இங்கதானேடா இருக்கு. எடுத்துப் படிக்கவேண்டியதுதானே’ என்றார். அது, அறிவுமதியின் கையெழுத்தில் பெரிய பவுண்ட் வால்யூம் ஸ்கிரிப்ட்.
அவர் உதவி இயக்குநராக இருந்தபோது எழுதியது. ஒரு குழந்தை, ஓர் ஆள், ஒரு ட்ரெயின்... என இன்ட்ரஸ்டிங் ஸ்கிரிப்ட். அதில் ஒரு ஃப்ளாஷ்பேக் போர்ஷன் மட்டும் முடிக்கப்படாமல் இருந்தது. ‘அந்த ஃப்ளாஷ்பேக் போர்ஷனை முடிக்கணும்டா. நீங்க உங்களுக்குத் தோணுறதை எழுதுங்க’ என்றார். ஓர் இயக்குநரின் அலுவலகத்தில் பேசி எழுதப்படாத, எழுதி முடிக்கப்படாத, எழுதி எடுக்கப்படாத... என ஏகப்பட்ட ஸ்கிரிப்ட்டுகள் இருக்கும். அப்படி அந்த ட்ரெயின் ஸ்கிரிப்ட் தவிர, எங்கள் அலுவலகத்திலும் சார் எழுதி வைத்திருந்த ஸ்கிரிப்ட்ஸ் நிறைய உண்டு. அந்த ஸ்கிரிப்ட்டுகளுக்கு எப்போது உயிர் வரும் எனத் தெரியாது. ஒரு ஸ்கிரிப்ட் படமாகுமா... ஆகாதா என்ற தன்மை, அது எழுதும்போதே இன்று தெரிந்துவிடுகிறது. ஆனால் அப்போது, இது எதுவுமே தெரியாது. அப்போது சீரியல் என்பது மிகச் சிறிய வடிவமாகப் பார்க்கப்பட்ட காலகட்டம்.
ஏதோ ஒன்று வேலை நடந்தால் போதும் என்று இருந்த எங்களுக்கு, ‘சீரியலே பெரிய விஷயமாகப்பட்டது. இதற்கு இடையில் படமே பண்ணப்போகிறோம் என்றபோது மிகப்பெரிய மகிழ்ச்சி. ஆனால் சுகாவோ, ‘அதெல்லாம் அட்வான்ஸ் வாங்கட்டும்பா, அப்புறம் பாத்துக்கலாம். அதுக்குள்ள ஏம்ப்பா இப்படி நீங்க குதிக்கிறீங்க?’ அனுபவத்தில் இருந்து வந்தன வார்த்தைகள். ‘ஹீரோ வந்தாச்சு, தயாரிப்பாளரையும் அழைச்சிட்டு வந்துட்டாங்க, ஸ்கிரிப்ட்டும் ரெடி... அப்புறமும் ஏன் இவருக்கு டவுட்?’ என நினைத்துக்கொண்டேன்.
இரண்டு மாதங்கள் ஓடியிருக்கும். அந்த ட்ரெயின் ஸ்கிரிப்ட்டை வைத்து ஓட்டிக்கொண்டிருந்தோம். ஒருநாள், எங்களைவிட லேட்டாக அலுவலகம் வந்த டைரக்டர், ‘யப்பா... அந்தச் சிறுகதைகளை எல்லாம் கலெக்ட் பண்ணி ஆர்டரா வைக்கச்சொன்னேனே வெச்சுட்டீங்களா?’ என்றார். ‘சார்... அது பண்ணிக்கலாம் சார். அப்புறம் பண்ணிக்கலாம்’ என்றோம். ‘ஏம்ப்பா ஒரு வேலை சொன்னா உடனே பண்ணமாட்டீங்களா? என்னய்யா பண்றது, இப்ப உடனே வேலை ஆரம்பிக்கணும்ல. என்ன பண்ணுவீங்க?’ - உச்சபட்ச கோபத்தில் பேசினார்.
‘ஐயய்யோ அப்ப பிரபுதேவா படம் என்னாச்சு?’ எங்களுக்குப் பகீரென இருந்தது. அப்போது அங்கு வந்த சுகா, எங்கள் ரியாக் ஷனைப் பார்த்ததும், ‘என்னப்பா, அடுத்ததுக்குப் போயாச்சா?’ என்றார் சிரித்தபடி. அனுபவம். உள்ளே போய் வந்தவர், ‘எனக்கு டி.வி புராஜெக்ட்ல வொர்க் பண்ண உடன்பாடு இல்லை. சார்ட்டயும் சொல்லிட்டேன். நீங்க பாருங்க’ என்றபடி கிளம்பிவிட்டார். அப்போது நானும் முத்துக்குமாரும் மட்டும்தான். முத்துக்குமார் எம்.ஃபில் பண்ணிக்கொண்டு இருந்ததால் தினமும் கல்லூரியில் கையெழுத்துபோட வேண்டும்.
அதனால் நான் ஒருநாள், இன்னொரு நாள் முத்து என பேசிவைத்தாற்போல தினமும் லேட்டாக வருவோம். மாறி மாறி திட்டு, 11 மணிக்கு கூல்டிரிங்க்ஸ், மரவள்ளி சிப்ஸ், மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்குக் கிளம்புவது என வாழ்க்கை ஒரே மாதிரி போய்க்கொண்டிருந்தது. ஒருகட்டத்துக்குமேல் முத்துக்குமாருக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகிவிட்டது. முத்துக்குமாரின் கவிதைகள் பிடித்துப்போய்தான், சார் அவரை உதவி இயக்குநராகச் சேர்த்துக்கொண்டார். அவரின் இன்னொரு ஆப்ஷன், பாடலாசிரியர். அந்தச் சமயத்தில் சீமான் ‘வீரநடை’ படம் ஆரம்பித்திருந்தார். அந்தப் படத்துக்குப் பாட்டு எழுத முத்துக்குமாருக்கு வாய்ப்பு வந்தது. ஒருநாள் லேட்டாக வந்த என்னைக் கடுமையாகத் திட்டியவர், ‘வெட்டி... நீ பொறுப்பா இருக்கணும். இப்ப நீ மட்டும்தான் இருக்கிற’ என்றார். ‘என்னது நான் மட்டும்தானா..?’ என பயத்துடன் சாரை சைஸாகப் பார்த்தேன். புரிந்துகொண்டவர், ‘முத்துக்குமார் பாட்டு எழுதப் போகணும்கிறான்டா.
தனக்கு லீடர்ஷிப் குவாலிட்டி இல்லைனு அவனே சொல்றான். நம்ம என்ன பண்ண முடியும்?’ என்றார். ‘திட்டுவாங்குறதை ஷேர் பண்ணிக்க ஒரு மனுஷன் இருந்தான். அவனும் போயிட்டானா... இனி நான் மட்டும்தானா?’ என்ற நினைப்பே எனக்கு பயம் வரப் போதுமானதாக இருந்தது.இதற்கு இடையில் சாரிடம் உதவி இயக்குநராக வந்து சேர்ந்த சீனுராமசாமியும் முத்துக்குமார் சென்ற அதே ‘வீரநடை’யில் உதவி இயக்குநராகப் பணியாற்றக் கிளம்பினார். ‘கதை நேரம்’ தொடங்குகிறது. எனக்கும் முத்துக்குமாருக்கும் முன்னரே பாலு மகேந்திரா சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்வதற்காக, அவரின் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியவர் தர்மன். எங்கள் நண்பர். எங்களோடு விவாதங்களில் கலந்துகொள்வார்.
சார் அவரிடம், ‘நீ எதுக்குடா இந்த ஆபீஸ் பாய் வேலை எல்லாம் பாக்குற, உனக்கு உதவி இயக்குநராகத்தானே ஆகணும். வேற எங்கயாவது போய் சேரேன்’ என்பார். ‘இல்லல்ல சார். நான் வொர்க் பண்ணினா உங்கக்கிட்டதான் வொர்க் பண்ணுவேன்’ என்பார் தர்மன். ‘என்கிட்டதான் இவ்வளவு பேர் இருக்காங்களே. நீ என்னடா பண்ணப்போற?’ என்றால், ‘காத்திருக்கேன் சார்’ என்பார். ‘கதை நேரம்’ படப்பிடிப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தர்மனை அழைத்து, ‘இந்தக் கதை நேரத்தில் நீயும் உதவி இயக்குநர்’ என்றார். அன்று தர்மனுக்கு இருந்த சந்தோஷம் அளவிடமுடியாதது. அந்த தர்மன்தான் ‘பொறியாளன்’ படத்தின் இயக்குநர் தாணுகுமார். அடுத்து ஷூட்டிங் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கௌரி என்கிற ஒரு கல்லூரி மாணவி வந்தார். நடிக்க வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால், அவரும் உதவி இயக்குநராகச் சேர்ந்திருந்தார். நான், தர்மன், கௌரி... என மூவருமே படப்பிடிப்புக்குப் புதியவர்கள். கிளாப் அடிப்பதில் தொடங்கி, டயலாக் சொல்லித்தருவது வரை நானே ஓடுவேன். அப்போது கிளாப் அடிப்பது என்றால் என்னவென்றே தெரியாது.
‘டேய் என்னடா பண்ற, என்னடா சொல்லிக்கொடுத்தாங்க உங்க காலேஜ்ல. ஒரு கிளாப் அடிக்கக்கூட கத்துக்கலையாடா?’ என்பார். ‘சார்... நான் எம்.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சேன் சார்’ என்றால், ‘அதைத்தான்டா கேக்குறேன், எம்.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர்ல ஒரு கிளாப் அடிக்கக்கூட சொல்லித்தரலையாடா?’ என்பார். ஒட்டுமொத்த யூனிட்டே ஸ்தம்பித்து நிற்கும். பாலு மகேந்திராவின் புரிதலில் உலகம் முழுக்க சினிமா மட்டும்தான் சொல்லிக் கொடுப்பார்கள் என்பதாக இருந்தது. ‘ஏன்டா எல்லா வேலையையும் நீயே செய்யுற? பிரிச்சுக்கொடுடா. கௌரியை எடிட் பாத்துக்கச்சொல்லு. தர்மனை கிளாப் அடிக்கச் சொல்லு, நீ டயலாக் சொல்லித்தா’ என்பார். ஆனால், எங்கள் வேலையில் பயங்கரக் குளறுபடிகள் வரும்போது அவருக்கு பிரஷர் அதிகரிக்கும். அப்படியான ஒரு சமயத்தில்தான் ‘கத்துக்குட்டிகளை வெச்சுக்கிட்டு வேலை செய்யலாம். கத்தவே தெரியாத குட்டிகளை வெச்சிக்கிட்டு எப்படிடா வேலைசெய்றது?’ என்றவர், ‘இவனுங்களை வெச்சுகிட்டு வேலை செய்ய முடியாது, நம்ம ஞானி என்ன பண்றான்னு கேளுடா. ஃப்ரீயா இருந்தா வந்து உதவி பண்ணச்சொல்லுடா’ என்றார் தன் மேனேஜர் சாயியிடம். அந்த ஞானிதான் தங்கவேலவன். அப்போதுதான் முதல்முறையாக அவரைச் சந்திக்கிறேன்.
அந்த தங்கவேலவன், பாலு மகேந்திரா அளவுக்கு எனக்கு சினிமாவில் முக்கியமானவராக இருப்பார் என்றோ ‘விசாரணை’ படம் வரை என்னை நகர்த்திக்கொண்டு வருவார் என்றோ அப்போது எனக்குத் தெரியாது!
- பயணிப்பேன்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan