Published:Updated:

சிறுமி ஹாசினியின் வழக்கு... தஷ்வந்த் மேல்முறையீட்டால் என்ன நடக்கும்? - வழக்கறிஞர் பேட்டி!

சிறுமி ஹாசினியின் வழக்கு... தஷ்வந்த் மேல்முறையீட்டால் என்ன நடக்கும்? - வழக்கறிஞர் பேட்டி!

சிறுமி ஹாசினியின் வழக்கு... தஷ்வந்த் மேல்முறையீட்டால் என்ன நடக்கும்? - வழக்கறிஞர் பேட்டி!

Published:Updated:

சிறுமி ஹாசினியின் வழக்கு... தஷ்வந்த் மேல்முறையீட்டால் என்ன நடக்கும்? - வழக்கறிஞர் பேட்டி!

சிறுமி ஹாசினியின் வழக்கு... தஷ்வந்த் மேல்முறையீட்டால் என்ன நடக்கும்? - வழக்கறிஞர் பேட்டி!

சிறுமி ஹாசினியின் வழக்கு... தஷ்வந்த் மேல்முறையீட்டால் என்ன நடக்கும்? - வழக்கறிஞர் பேட்டி!

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அவருடைய தந்தை பாபுவுக்கு ஆதரவாக வாதாடியவர் வழக்கறிஞர் கண்ணதாசன். அவரிடம், தஷ்வந்தின் தீர்ப்பு குறித்துப் பேசினோம்...

“இந்த வழக்கு உங்களுக்குச் சவால் நிறைந்ததாக இருந்ததா?”

“நிச்சயமாக, இந்த வழக்கு எனக்குச் சவால் நிறைந்ததாகவே இருந்தது. ஏனெனில், இந்த வழக்கில் ஐவிட்னஸ் என்பதே யாரும் கிடையாது. ஒரு கொலை வழக்குக்கு முக்கியமாகத் தேவைப்படுவது ஐவிட்னஸ்தான். அந்தச் சாட்சிகள் இல்லையென்றால், இதுபோன்ற வழக்குகளில் தண்டனை கிடைப்பது என்பது மிகக் கடினம். ஆனால், இந்த வழக்கில் சூழ்நிலைச் சாட்சிகள்தான் இருந்தன. அதைவைத்து நிரூபிப்பது என்பது மிகக் கடினமான காரியம். அதாவது, ஒரு கொலை வழக்கில் சூழ்நிலைச் சாட்சிகளைவைத்து நிரூபிப்பது என்பது வழக்கினுடைய தொடர்ச்சியாக இருக்க வேண்டும். மேலும் அதில், சந்தேகம் ஏற்படாத அளவுக்கு உண்மை நிலை இருக்க வேண்டும்”. 

“இந்த வழக்கில் எதுபோன்ற சவால்களைச் சந்தித்தீர்கள்?”

“இந்த வழக்கில், கடைசியாக அந்தக் குற்றவாளியுடன் குழந்தையைப் பார்த்த சாட்சி, குற்றவாளி பேக்குடன் சென்ற சாட்சி, குழந்தை எரியூட்டப்பட்டதற்கான சாட்சி, கொல்லப்பட்டது அந்தக் குழந்தைதானா என்கிற சாட்சி, குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதற்கான சாட்சி, தஷ்வந்துதான் அதற்குக் காரணம் என டி.என்.ஏ. டெஸ்ட் என இந்த வழக்கு இறுதிவரை மிகச் சவால் நிறைந்ததாகவே இருந்தது”.

“இந்த வழக்கு மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், அதிலிருந்து குற்றவாளி தப்பிக்க ஏதேனும் சாத்தியங்கள் இருக்கிறதா?”

“இந்த வழக்கைப் பொறுத்தவரை இதில் நேரடிச் சாட்சிகள் இல்லை. சந்தர்ப்பச் சூழ்நிலைச் சாட்சிகள் மட்டுமே இருக்கின்றன என்று எதிர்தரப்பு சொல்கிறது. ஆனால், இதுபோன்ற அறிவியல்பூர்வாக உறுதிசெய்யப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘மேல் முறையீடு செய்வோம்’ என்று  சொல்வது அவர்களுடைய உரிமை. இதில், எந்தக் கருத்தும் நாம் சொல்ல முடியாது”.

“மேல்முறையீட்டின்போது அரசுத் தரப்பில் எந்தமாதிரியான வாதங்களை வைப்பீர்கள்?”

“கீழ்க்கோர்ட்டில் அனைத்துச் சாட்சியங்களும் அலசி ஆராய்ந்து நிரூபிக்கப்பட்ட பின்புதான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மிகவும் கொடூரமான எண்ணம் கொண்டவனால் மட்டுமே, சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்து தடயங்களை மறைக்க முடியும். அதனால், சட்டத்தின்படி இது தவறான செயல் என்பதாலேயே இந்த வழக்கு முடிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்து தடயங்களை மறைத்ததால், தக்க சாட்சியங்களின்படி குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை வழங்குவதான் சரியான வேண்டுகோளாக இருந்தது. இந்த வேண்டுகோள்கூட என்னுடையது அல்ல... சிறுமி ஹாசினியின் தந்தையான பாபுவின் வேண்டுகோள். என்னைப் பொறுத்தவரை, நான்  தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்துகொண்டவன். மேலும், தூக்குத் தண்டனை கூடாது என்ற நிலைப்பாடுகொண்ட நான், இந்த வழக்கில் சிறுமியின் தந்தையான பாபு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே அந்தத் தண்டனையை வேண்டுகோளாக வைத்தேன்”. 

“சிறுமி ஹாசினியின் தந்தை பாபு, தீர்ப்பு பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?”

“ ‘இது எனக்கு மன நிம்மதியைக் கொடுக்கிறது. என் குழந்தை எனக்குத் திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும்கூடப் பரவாயில்லை. இந்தத் தீர்ப்பு எனக்குத் திருப்தியாக இருக்கிறது’ என்றார். என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகள் வழக்குகளில் ஆஜராக மாட்டேன். அதேவேளையில், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இலவசமாக ஆஜராகுவேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை, நட்சத்திரா பவுண்டேஷன் என்ற என்.ஜீ.ஓ. அமைப்புத்தான் இதில் பெரும் பங்கு எடுத்தது. அதன் அமைப்பின் நிறுவனர் ஷெரின் பாஸ்கோ. அந்த அமைப்பினர்தான், காசு செலவுசெய்து மிகவும் கஷ்டப்பட்டுப் போராடினார்கள். அவர்களைப் போன்ற அமைப்பினர் இருப்பதால்தான் எங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கு வழக்கை நடத்துவதற்குச் சுலபமாக இருக்கிறது”.

“இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு இந்தியாவில் சட்டங்கள் நிலையாக இருக்கின்றனவா... அல்லது வேறு ஏதாவது புதிய சட்டங்கள் இயற்ற வேண்டுமா?”

“இன்று இருக்கும் சட்டங்களைச் சரியாக அமல்படுத்தி, அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். நாடு முழுவதும் இதுபோன்று எண்ணற்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த ஒரு வழக்குக்குத்தான் விரைவாக விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இதேமாதிரி அனைத்து வழக்குகளுக்கும் விசாரணை நடத்தி விரைவாகத் தீர்ப்பு வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான சில பாலியல் வழக்குகள் இன்னும் எப்.ஐ.ஆர் நிலையிலேயே உள்ளன. ஆக, இதுபோன்று ஒவ்வோர் இடத்திலும் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றுதான் சிறப்புக் கோர்ட்களே உள்ளன. இப்படிக் கால தாமதம் படுத்துவதால் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் நரக வேதனையே. வளர்ந்து திருமண வயதில் அனுபவிக்க வேண்டிய வேதனைகளை இன்று அவர்கள் சிறுவயதிலேயே அனுபவிப்பதுதான் காலக்கொடுமை”. 

“குழந்தைகளின் இந்தக் கொடுமைகளுக்கு என்ன காரணம்?”

“இதற்குக் காரணம், பாலியல் சீண்டல்கள் மட்டும்தான். இதனால், அவர்களுக்கு ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இதுவே பின்னாளில் அவர்களுடைய இல்லற வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்குச் செல்கிறது”. 

“இதற்கு என்ன வழி?”

“இதற்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். அதற்குச் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, இதுபோன்று பாதிக்கப்படும் வழக்கில் பொய் கேஸ் போடக் கூடாது. சரியான கேஸ் என்றால், புலன் விசாரணை செய்து தண்டனை பெற்றுத் தரவேண்டும்”. 

“இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி தண்டனை வழங்கியதுபோல், மற்ற வழக்குகளை விரைந்து முடிப்பதில்லையே... அது ஏன்?”

“குறிப்பாகச் சில மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக வாதாடாமல், குற்றவாளிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக வாதாடுகின்றனர். இப்படியிருந்தால், நமக்கு என்ன நியாயம் கிடைக்கப்போகிறது என்று பாதிக்கப்படுபவர்கள் மேலும் வெறுப்படைகிறார்கள். இதுபோன்று நாட்டில் தவறுகள் நிறைய உள்ளன”. 

“இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன?”

“இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க நாட்டில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் தாங்களே சொந்தச் செலவில் வழக்கு நடத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். இதுபோன்று போராடும் அமைப்பைப் பாதிக்கப்பட்டவர்கள் வைத்துக்கொள்ள சட்டத்திலேயே இடமிருக்கிறது. ஆனால், இதுகுறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் இல்லை. குறிப்பாக, சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற இடங்களில் விழிப்பு உணர்வு இல்லை. அங்கே இந்த அளவுக்கு பாலியல் வழக்குகள் வருவதில்லை. இதற்கு முக்கியமாய் எல்லோரிடமும் விழிப்பு உணர்வைக் கொண்டுவர வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றால், எங்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்ற  நம்பிக்கை அவர்களுக்கும் வரவேண்டும். இதுபோன்ற விழிப்பு உணர்வை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியது அரசாங்கமும்... காவல்துறையும்தான். குறிப்பாக, குழந்தைகள் பாலியல் வழக்குகளைப் பொறுத்தவரை அவசியம் விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்”.