மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 32

கலைடாஸ்கோப் - 32
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 32

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

அம்பு

“தமிழகத்தில் கொல்லூர் முதல் கீழ்வாலை வரை பாறை ஓவியங்கள் வரைந்த உனது முப்பாட்டன்களில் ஒருவன் இவன்” என்றார் ஸ்டூவர்ட்.

ஆனந்த் அவனைப் பார்த்தான். தோள்களில் புரளும் கேசத்துடன், கண்களில் தீர்க்கமான பார்வையுடன் அவன் திரும்பிப் பார்த்தான்.

“காலத்தைக் கடந்து இவனை எதற்காகக் கொண்டு வந்தீர்கள்... பாறை ஓவியங்களைப் பிரதி எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?” என்றான் ஆனந்த்.

கலைடாஸ்கோப் - 32

“எனக்கு, பிரதிகள் வேண்டாம்; ஒரிஜினல்தான் வேண்டும். எனது ஆர்ட் மாஃபியாவின் சாம்ராஜ்யம் பெரிது என்பது ஒரு ஏஜென்டாக உனக்குத் தெரியும். இவனை வரையச் சொல்லி ஒரு வாரமாக டார்ச்சர் செய்கிறோம். `மாட்டேன்' என அடம்பிடிக்கிறான்” என்றார் ஸ்டூவர்ட் கடுமையாக.

ஆனந்த் அவனிடம் பேசிவிட்டு ஸ்டூவர்ட்டை நோக்கித் திரும்பி, “அவனால் தமிழகத்துப் பாறைகளில் மட்டுமே வரைய முடியுமாம். கேன்வாஸில் அல்ல” என்றான்.

``உங்கள் ஊரில் இருந்து பெயர்த்துக் கொண்டுவந்த பாறை, கேலரியில் இருக்கிறது. அதில் வரையலாம்.''

பாறை ஓவியன், தாவரச் சாயங்களுடன் பாறை முன்னால் நின்றான். ஒரு பெரிய வட்டமும் அதற்குள் ஒரு வில்லையும் அம்பையும் வரைந்தான்.

அவன் வரைவதை, திமிராகப் பார்த்தபடி தள்ளி நின்றார் ஸ்டூவர்ட்.

அந்த வட்டத்துக்குள் தாவரச் சாயத்தின் கருமை கொண்டு நிறைத்தான் அவன். இருண்ட குகைபோல ஆழமாகத் தெரிய ஆரம்பித்தது அது.

ஸ்டூவர்ட் சுதாரிப்பதற்குள், அவன் நொடியில் அந்த ஓவியக் குகைக்குள் துள்ளிக் குதித்து மறைந்தான்.

கலைடாஸ்கோப் - 32

சில விநாடிகளில், குகைக்குள் இருந்து ஓர் அம்பு தன்னை நோக்கி காற்றில் பாய்ந்து வருவதை ஸ்டூவர்ட் பார்த்தார் கடைசியாக!

பத்து பைசா...

அஞ்சு பைசா..!


இன்றைய ஜெனரேஷனுக்கு, மொடமொடக்கும் ரூபாய் நோட்டுக்களே பாக்கெட் மணிக்குப் போதவில்லை. அன்று பத்து பைசா கேட்டாலே, சொத்தில் பாகப்பிரிவினை கேட்பதுபோல பெற்றோர் பார்ப்பார்கள். `பத்து ரூபாய்க்கு என்னவெல்லாம் வாங்கலாம் தெரியுமா?' என இன்றைய விளம்பரம் ஒன்றில் கேட்கிறான் ஒரு சிறுவன். `பத்து பைசாவுக்கு அன்று என்னவெல்லாம் வாங்கலாம் தெரியுமா?' எனக் கேட்க விரும்புகிறேன்.

கலைடாஸ்கோப் - 32

இன்றும் எங்கேனும் காணக்கிடைக்கும் பத்து, ஐந்து பைசாக்களைப் பார்க்கும்போது பள்ளிக்கு வெளியே நெல்லிக்காய், மாங்காய்ப் பிஞ்சு, இலந்தைப் பழம் விற்கும் பாட்டிகள் ஞாபகம் வந்து, குட்டியாக ஒரு `வட்டியும் முதலும்' உள்ளுக்குள் ஓடத்தான் செய்கிறது. பத்து பைசாக்களைப்போல அந்தப் பாட்டிகளும் காலாவதியாகிவிட்டார்கள்.

இந்த பத்து, ஐந்து பைசாக்கள் தேய்ந்துவிடும். கடையில் நீட்டினால் அண்ணாச்சிகள் துரத்துவார்கள். அதையும் விட்டுவைக்காமல் ரயில் தண்டவாளத்தில் வைத்து `சப்பையாக்கி விரிந்த' காசை ஏதோ சாகசம்போல காட்டித் திரிந்த `பயங்கரவாதிகளை’ அன்று பார்த்திருக்கிறேன். பிறகு, என்றோ ஒரு நல்ல நாளில் இந்திய அரசு இந்த பத்து காசு, ஐந்து காசுகளை எங்களுக்குத் தெரியாமல் செல்லாக்காசுகளாக அறிவித்திருக்கிறது. `ஞாபகத்தின் உண்டியலைக் குலுக்கினால், அந்தப் பைசாக்களின் குலுங்கல் சத்தத்தை இன்றும் நம் காதுகளில் கேட்கலாம்’ என்றுதான் முடிக்க நினைத்தேன். நெகிழ்ச்சியில் கண்ணீரை வீணடிக்க விரும்பாததால், அப்படி முடிக்காமல் விடுகிறேன்!

தெர்மின்

கை, கால், வாய் என உடலின் எந்த அங்கமும் தொடாமல் மீட்டும் இசைக்கருவி இருக்கிறதா? இருக்கிறது... அதன் பெயர் தெர்மின் (Theremin). இது அடிப்படையில் ஓர் எலெக்ட்ரானிக் கருவி. இதன் இரண்டு ஆன்டனாக்களுக்கு நடுவில் காற்றில் கைகளை வீசி, ரேடியோ அலைகளில் அதிர்வுகளை (radio frequency oscillators) உண்டாக்குவார்கள். இந்த எலெக்ட்ரிக் சிக்னல்கள் ஸ்பீக்கர்கள் வழியாக இசையாக வெளிவரும். யு டியூப்-ல் `Theremin' எனத் தேடிப்பாருங்கள்.

இதைக் கண்டுபிடித்தவர் ரஷ்யரான லியோன் தெர்மின் (Leon Theremin). சோவியத் அரசாங்கம் Proximity sensor என்னும் கருவியைக் கண்டுபிடிப்பதற்காகப் பணித்த குழுவில் இருந்தவர். பிறநாட்டை உளவுபார்க்கத்தான் சோவியத் ரஷ்யா இந்த மாதிரியான எலெக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் கருவிகளைக் கண்டுபிடிக்க ஆர்வம் காட்டியது. ஆனால், அந்த ஆராய்ச்சியின் எதிர்பாராத உபவிளைவாகத்தான் இந்த தெர்மின் இசைக்கருவியை 1920-களில் கண்டுபிடித்தார் லியோன்.

கலைடாஸ்கோப் - 32

ஆனால், லியோன் அதை 1928-ல் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்று பேடன்ட் வாங்கினார். பிரபல அமெரிக்க எலெக்ட்ரானிக் கம்பெனியான RCA-வுக்கு, விற்பனைக்காக அதைத் தயாரிக்கும் அனுமதியும் கொடுத்தார். பத்து வருடங்களாக சோவியத் யூனியனுக்குத் திரும்பாத அவரை, சோவியத்தின் KGB உளவு ஏஜென்ட்டுகள் கடத்திக்கொண்டு போய், சைபீரிய சிறைச்சாலை ஆய்வகத்தில் வேலை செய்யவைத்ததாகச் சொல்கிறார்கள். அவர் எங்கே இருக்கிறார் என, பல வருடங்கள் தெரியாமல் இருந்தது. பொருளாதாரக் காரணங்களால்தான் லியோன், சோவியத்துக்குத் திரும்பினார் என ஒரு சாஃப்ட் வெர்ஷனும் இருக்கிறது.

இவருடைய `தி திங்க்’ என்னும் ரேடியோ உளவுக்கருவியை, 1945-ம் ஆண்டில் அமெரிக்க அம்பாஸடருக்கு அன்பளிப்பாக அளித்த ஒரு ஷீல்டில் ரகசியமாக மறைத்துவைத்துக் கொடுத்திருக்கிறது சோவியத். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதை அமெரிக்கர்கள் தெரிந்துகொண்டார்கள். இந்த அரசியல் உள்ளடி விஞ்ஞான ஆராய்ச்சிகளால் நமக்குக் கிடைத்த ஒரு நல்ல காரியம் இந்த `தெர்மின்' எனும் அற்புத இசைக்கருவி!

சீட்டுக்கட்டு!

சீட்டுக்கட்டில் அதிக மதிப்புகொண்ட கார்டு ராஜா அல்ல, ஏஸ் ஆஃப் ஸ்பேடு (Ace of spades) என்பது தெரியும். சீட்டுக்கட்டின் வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு சீனாவில் ஆரம்பிக்கிறது. அதன் வடிவங்கள், வெவ்வேறு காலங்களில்... வெவ்வேறு நாடுகளில் பல கைகள் மாறி இன்று உலகம் முழுவதும் ஒரு ஸ்டேண்டர்டு வடிவத்துக்கு வந்திருக்கிறது. மிகக் கடைசியாக, 19-ம் நூற்றாண்டில் சீட்டுக்கட்டில் சேர்ந்த கார்டு ஜோக்கர். சில நேரங்களில் ராஜாவைவிட ஜோக்கருக்கு மதிப்பு கூடிவிடும். தேர்தல் காலத்தில் இதைப் படிக்கும்போது நடப்பு அரசியலுடன் ஒப்பிட்டுப்பார்த்து நீங்கள் கற்பனைசெய்தால், நான் பொறுப்பு அல்ல.

கலைடாஸ்கோப் - 32

`நம் ஊர் அரசமரத்தடியில் `அஞ்சு, பத்து' என பெட் கட்டுவது முதல் அமெரிக்க கேசினோக்களில் கோடிகளைப் புரட்டுவது வரை வர்க்கபேதம் இல்லாமல் விளையாடிக்கொண்டிருக்கும் இந்தச் சீட்டு ஆட்டம், உண்மையில் விக்டோரியன் காலகட்ட அரசாட்சியின் வர்க்க ஞாபகங்களை சமூகத்தின் ஆழ்மனதில்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டு' என சோஷியாலஜிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். அரசுக்கும் பிளேயிங் கார்டுகளுக்கும் இருக்கும் தொடர்பு ஆச்சர்யமானது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜெர்மன் சிறைச்சாலைகளில் இருந்த அமெரிக்க வீரர்களுக்கு விளையாடக் கொடுத்த சீட்டுக்கட்டுகளை தண்ணீரில் நனைத்தால், அதன் மேல் அடுக்கு உரிந்துவந்து சிறையில் இருந்து தப்புவதற்கான ரகசிய வரைபடம் உள்ளே தெரியுமாம்.

வியட்நாமியரைப் பொறுத்தவரையில், ஏஸ் ஆஃப் ஸ்பேடு கார்டுகள் `மரணத்தின் குறியீடு' என ஒரு நம்பிக்கை இருந்ததாம். அதனால், வியட்நாம் யுத்தத்தின்போது அமெரிக்கா லட்சக்கணக்கில் ஏஸ் ஆஃப் ஸ்பேடு கார்டுகளை அச்சடித்து வியட்நாமின் காடுகளில் விசிறி அடித்திருக்கிறது. வியட்நாமியப் போர்வீரர்களை உளவியல்ரீதியாக அச்சம்கொள்ளவைப்பதுதான் அமெரிக்காவின் ஐடியா. ஏஸ் ஆஃப் ஸ்பேடு கார்டுகளை `பைசைக்கிள் சீக்ரெட் வெப்பன்' என்றே அழைத்திருக்கிறார்கள். அரசியல் அதிகாரத்தின் முன், மக்கள் அனைவரும் சீட்டுக்கட்டுகளில் இருக்கும் எண்கள் மட்டும்தானா?

தோற்றவனின் கலை

கலைடாஸ்கோப் - 32

சில வருடங்களுக்கு முன்னர் கேட்ட உரையாடல், `எழுத்தாளர்கள், இசைஞர்கள், ஓவியர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும்' என்றார் ஒருவர். கேட்டுக்கொண்டிருந்தவரின் பதில் `அப்படியா... ஹிட்லர்கூட ஓவியர்தான்'. படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால்தான் மாற்றம் வரும் என்பது பணக்கார காமெடி. உண்மையில், ஒரு மனிதன் அறம்கொண்டவனாக இருப்பதற்கும் படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நம் ஊர் தலைவர்களை உதாரணம் காட்டியே நிறுவ முடியும். அது கிடக்கட்டும், ஹிட்லருக்கு வருவோம்.
இங்கே நீங்கள் பார்க்கும் அற்புதமான வாட்டர் கலர் ஓவியங்கள் அனைத்தும் ஹிட்லர் வரைந்தவை. ஓவியர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டார் என்பது நாம் அறிந்த செய்தி. வியன்னாவின் நுண்கலைக் கல்லூரி, `அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டே' என ஹிட்லரைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இப்படி வரலாற்றின் ஆடுகளம் ஒரு நல்ல ஓவியனை இழந்து, மோசமான ஓர் அரசியல்வாதியைப் பெற்றுக்கொண்டது.

கலைடாஸ்கோப் - 32

ஆனால், சிறிய வயது ஹிட்லரின் இந்த ஓவியங்களில் நான் ஒன்றைக் கவனிக்கிறேன். அது ஜெர்மனியின் மிகப் பிரமாண்டமான கட்டடங்களின் மீதான ஹிட்லரின் ஈர்ப்பு. பிற்காலத்தில் ஜெர்மனியின் தலைவனாக தன்னைத்தானே ஆக்கிக்கொண்டு ஆட்சி நடத்தியபோது பிரமாண்டமான கட்டடங்களைக் கட்டுவதில் ஹிட்லர் அதீத ஆர்வம் காட்டினார்.

கலைடாஸ்கோப் - 32

ஆல்பெர்ட் ஸ்பீர் (Albert Speer), கட்டட வடிவமைப்பாளர். `நாஜி கட்டடக் கலை' (Nazi architecture) எனும் தனி பாணியையே உருவாக்கினார்; ஸ்பீர் ஹிட்லரின் ஆயுத, யுத்த அமைச்சராக இருந்தார்; ஹிட்லரின் பிரமாண்ட கட்டடக் கனவுகளுக்கு வடிவம்கொடுத்தார். எவ்வளவு பிரமாண்டமாக இருந்தால் என்ன, வெறுப்பின் அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட எதுவும் ஆட்டம் கண்டுவிடும் என்பதற்கு உதாரணமாகிவிட்டது ஹிட்லரின் கலை!