Published:Updated:

மைல்ஸ் டு கோ - 5

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

படம்: ஸ்டில் ராபர்ட்

அன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை பிரீஸ் ஹோட்டலில் மௌனிகா, விஜய் ஆதிராஜ், கிட்டி நடிக்கும் `மீண்டும் ஒரு காதல் கதை’ ஷூட்டிங்.

சார் என்னை அழைத்து “கிட்டிக்கு குர்தா கொடுத்துடு. மெளனிக்கு ‘போல்கா டாட்ஸ்’ கவுன் கொடுத்துடு” என்று சொன்னார். நான் காஸ்ட்யூமர் ரவியிடம் போல்கா டாட்ஸ் டிரெஸைக் கேட்க, அவர் “அந்த டிரெஸ் இங்கே இல்லை வெற்றி” என்றார். நானும் கெளரியும் தேடினோம். தர்மனும் சேர்ந்து தேட, அது கிடைக்கவே இல்லை. சாரிடம் விஷயத்தைச் சொன்னதும், கடுங்கோபமாகித் திட்டத் தொடங்கினார்.

அன்று அந்த லொக்கேஷனுக்கு ஒரு மணி நேரத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் வாடகை. அதைச் குறிப்பிட்டு, கவனமாக வேலையை முடிக்க வேண்டும் என எங்களிடம் சார் சொல்லியிருந்தார். ஒருவேளை ஆபீஸில் இருக்குமோ என்ற சந்தேகத்தில் போன் செய்து, அங்கு இருந்த முருகனைப் பார்க்க சொன்னோம். அவர் தேடிப் பார்த்துவிட்டு அங்கும் இல்லை என்றார். அப்போது, நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, `‘சார்... உங்க ரூம்ல இருக்குமா?'’ என்றேன். `‘வாய்ப்பே இல்லை’' என்றவர் ஒளிப்பதிவாளர் மூர்த்தியை அழைத்தார்.

அவர் `பயணங்கள் முடிவதில்லை' உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். பாலு மகேந்திரா சாரின் நண்பர். `என்னுடைய வொர்க்கை 95 சதவிகிதம் மேட்ச் பண்ண முடியும்னா, அது மூர்த்தியால மட்டும்தான் முடியும்' என சார் அடிக்கடி சொல்வார். அவரை அழைத்து, தன் அறையின் சாவியைக் கொடுத்து ``மூர்த்தி, அந்த டிரெஸ் என் ரூம்ல இருக்குங்கிறான். போய்ப் பாருங்க'' என அனுப்பினார். நானும் மூர்த்தி சாரும் சாலிகிராமம் ஓடினோம். அவசரத்தில் சார் சாவியை மாற்றித் தந்திருந்தார். வேறு வழியின்றி பூட்டை உடைத்தோம். அறைக்குள்ளும் போல்காவைக் காணவில்லை. அப்போது போன் அடித்தது. கௌரிதான் பேசினார்

மைல்ஸ் டு கோ - 5

``வெற்றி, டிரெஸ் இங்கேதான் இருக்கு. உடனே வாங்க'' என்றார். அவசரமாக ஓடினோம். காஸ்ட்யூமர் ரவி, டிரெஸை அயர்ன் செய்து புள்ளியை உள்பக்கமாக மடித்து வெள்ளைப் பக்கத்தை வெளியே வைத்திருக்கிறார். அதைக் கண்டுபிடித்ததும் சார்தான். அன்று சாருக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இதற்கு மேல் எங்களை மட்டும் வைத்து வேலை செய்ய முடியாது என நினைத்தவர், மேனேஜர் சாயை அழைத்து ‘ஞானி என்ன பண்றான்னு பாரு?’ என்றார். அந்த ஞானிதான் தங்கவேலவன்.

தங்கவேலவன், பாலு மகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்ந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை எனச் சொல்வார்கள். அவர் ‘மறுபடியும்’ படத்துக்கு முந்தைய படங்களை முன்வைத்து அவரின் திரைமொழி, வசனங்கள் எனத் தனித்தனியே பிரித்து, வியந்து ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். அது சாரின் கண்களில் பட்டு அவரை அழைத்துப் பேசினார். பிறகு, சாரே அவரிடம் `வந்து என்னிடம் உதவியாளனாக வேலை செய்' என அழைத்தார்.

அவரைத்தான் சார் மீண்டும் வரச் சொன்னார். `மீண்டும் ஒரு காதல் கதை'யின் பேட்ச் வொர்க் படப்பிடிப்பு, சென்னை தாவரவியல் பூங்காவில் ஒரு நாளும், அடுத்த நாள் பிரீஸ் ஹோட்டலில் ஒரு மணி நேரம் என இரண்டு நாட்கள் நடந்தது. அன்று சென்னை தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்பு. நான் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்க பிரீஸ் ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழைந்ததும் ரிசப்ஷனில் ``நான் பாலு மகேந்திரா உதவியாளன்'' என்றேன். “வெற்றி மாறன்தானே?” என்றதும், எனக்கு ஆச்சர்யம். ``உங்களை போன் பண்ண சொன்னாங்க” என ஒரு நம்பரைத் தந்தார்கள். எதிர்முனையில் விஜய் ஆதிராஜ் எடுத்து, போனை தங்கவேலவனிடம் கொடுத்தார்.

`‘வெற்றி... இந்த சீன்ல விஜய் போட்டிருந்த ஜீன்ஸ் நீல நிறமா, காக்கி நிறமா?” என்றார். நான் ``காக்கி'' என்றேன். கௌரி நீல நிறம் என எழுதியிருப்பதாக தங்கவேலவன் சொன்னதும் எனக்குக் குழப்பம். எப்போதும் நினைவில் இருந்து சொல்லும் விஷயத்தைவிட எழுதிவைத்த ரெக்கார்டின் மீது நமக்கு நம்பிக்கை அதிகம்தானே! நேரில் பார்த்தால் என்னால் உறுதியாகச் சொல்லிவிட முடியும் என அவரிடம் சொன்னேன். ஆனால், அங்கே சென்று சேர 40 நிமிடங்கள் ஆகும். அதுவரை சாரை சமாளித்துக்கொள்வதாக தங்கவேலவன் கூறினார். மறுபடியும் காஸ்ட்யூம் குழப்பத்தில் திட்டா என்ற கவலையுடன் லொக்கேஷனுக்கு ஓடினேன். விஜய் ஆதிராஜை நீல நிற பேன்ட்டில் பார்த்ததுமே, அது தவறு என்பது தெரிந்தது. காக்கிதான் என அடித்துச் சொன்னேன்.

கௌரி, எழுதிவைத்ததைக் காண்பித்தார். இதற்கு முந்தைய காட்சிகள் இரண்டு இடங்களில் எடுத்திருந்தோம். ஒன்று மலையில் நடந்து செல்லும் ஷாட். அடுத்து, பேருந்தில் அமர்ந்திருக்கும் ஷாட். கெளரி பேருந்தில் எடுத்த நாளில்தான் பேன்ட் நிறத்தை கவனித்து குறிப்பிட்டிருந்தார். அது குளோஸ் ஷாட் என்பதால் பேன்ட் ஃப்ரேமில் வராது. அதனால், மலையில் எடுத்த ஷாட்தான் சரி என விளக்கினேன். அப்போது சார், காட்சியைப் பற்றி விஜய் ஆதிராஜ் மற்றும் மெளனிகாவிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

தங்கவேலவன் மெள்ள விஜய் ஆதிராஜை அழைத்து காக்கி பேன்ட்டை மாற்றச் சொன்னார். அதைக் கவனித்த சார், `ஏன் என்னாச்சு?’ எனக் கேட்க, `சின்ன கன்ஃப்யூஷன் சார். இப்ப க்ளியர் ஆகிருச்சு” என்றார் தங்கவேலவன். “கம்... லெட்ஸ் ஸ்டார்ட் வொர்க்” எனச் சிரித்த முகமாக சார் சொன்னார். படப்பிடிப்பு சுமுகமாக ஆரம்பித்தது என்பதே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘சின்னச்சின்ன விஷயங்களை எல்லாம் டைரக்டர்கிட்ட கொண்டுபோகணும்னு இல்லை. அவங்க கிரியேட்டிவ்வான வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. அதுக்கான சூழலை நாமதான் உருவாக்கித் தரணும்.

இந்த மாதிரியான பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ளணும்” - இது, உதவி இயக்குநரா சினிமாவில் எனக்குக் கிடைத்த முக்கியமான பாடம். சொன்னவர், தங்கவேலவன். `மீண்டும் ஒரு காதல் கதை' ஒளிப்பரப்பானது. அதைத் தொடர்ந்து ‘கதை நேரம்’ தொடங்க சார் திட்டமிட்டிருந்தார். அதற்காக கதைகள் படித்துக் கொண்டிருந்தோம். சுஜாதா எழுதிய `நிஜத்தைத் தேடி' என்ற சிறுகதையைத் தேர்வுசெய்து, திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தார் சார். ``மெயின் கேட்டில் இருந்து வீடு உள்ளடங்கி இருக்க வேண்டும். வீட்டுக்குள் இருந்து பார்த்தால், கேட்டில் இருப்பவர் தெரிய வேண்டும். அப்படியான வீடுதான் இந்தக் கதைக்குச் சரியாக இருக்கும்’' என்றார் சார்.

மைல்ஸ் டு கோ - 5
மைல்ஸ் டு கோ - 5

அதற்கான லொக்கேஷன் பார்க்க நானும் தங்கவேலவனும் சென்றோம். வளசரவாக்கத்தில் உள்ள ராஜசிம்மா ஹவுஸைப் பார்த்ததும் கதைக்குப் பொருத்தமான அமைப்பு அந்த வீட்டில் இருப்பதாக தங்கவேலவன் சொன்னார். அவர் சொல்லும் வரை அது எனக்குப் புலப்படவில்லை. ஆபீஸ் போனதும் லொக்கேஷன் கிடைத்த சந்தோஷத்தில் நான் கடகடவென சாரிடம் சொல்ல ஆரம்பித்தேன். சார், மறுநாள் வந்து பார்த்துவிடுவதாகச் சொன்னார். அதன் பின்னர் ஒருநாள் தங்கவேலவன் என்னிடம் அது பற்றிப் பேசினார்.

“வெற்றி... அன்னைக்கு நீங்க சார்கிட்ட வீட்டைப் பத்தி சொல்றப்ப, உங்களுக்குத் தோணினதா மென்ஷன் பண்ணீங்க. அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. நான்தானே அந்த வீடு ஏன் சரியா இருக்கும்னு சொன்னேன்” என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் அந்த நோக்கத்தில் சொல்லவில்லை என்பதை அவரும் அறிந்திருந்தார். என் நோக்கம் அது அல்ல என்றாலும், சொன்னது தவறுதான் என்பதைப் பொறுமையாக எடுத்துச்சொன்னார். முதலில், அதை நான் சொல்லியிருக்கக் கூடாது. அப்படிச் சொன்னாலும், அவர் சொன்னதாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றார். எனக்கு அது மிகப் பெரிய ஒரு வெளியைத் திறந்துவிட்டதாக உணர்ந்தேன். அவர் சொன்னது மிகச் சரி என்பதை உணர்ந்த பிறகுதான், எந்த விஷயத்தைப் பற்றி எப்போது பேசினாலும் முடிந்தவரை அதை யார் சொன்னது என்பதை இன்று வரை நான் குறிப்பிட முயற்சிக்கிறேன். அதற்குக் காரணம் தங்கவேலவனும் அந்தச் சம்பவமும்தான்.

தங்கவேலவன் எங்களுடன் வந்து சேர்வதற்கு முன்னர் வரை எல்லாமே பிரச்னைகள்தான். எங்களால் வேலையைச் சமாளிக்க முடியவில்லை. உதவியாளர்களிடம் சார் எதிர்பார்த்தது ராட்சச வேகம். அன்று எக்மோர் தாமஸ் குக் அலுவலகத்தில் படப்பிடிப்பு. கம்ப்யூட்டர் முன்னால், ஃபோர் கிரவுண்டில் கெளரியை சார் உட்காரச் சொல்லி விட்டார். மிச்சம் இருந்தது நானும் தர்மனும் மட்டுமே. அன்று சாரும் ஏதோ டென்ஷனில் இருந்தார். சின்னச்சின்னப் பிரச்னைக்குக்கூட, ‘நீங்க எல்லாம் எப்படிடா டைரக்டர் ஆகப் போறீங்க?’ என சார் திட்டுவது வழக்கம். ‘நீங்க எல்லாம் எப்படி டைரக்டர் ஆகப்போறீங்க?’ என்ற வார்த்தைகள் என்னை மனரீதியாக அதிகம் பாதித்தன.  

திடீரென எனக்குள் ஒரு கோபம். “நீங்க எல்லாம் எப்படிடா டைரக்டர் ஆகப்போறீங்க?” என்று அவர் சொன்னதும் `‘நான் டைரக்டர் ஆகுறதில்லைனு முடிவுபண்ணிட்டேன்’' என்றேன். சடாரெனத் திரும்பிப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, ‘`சினிமாவுக்கு நல்லதுடா’' என்றார். அப்போது என் ஒரு கையில் எடிட்டிங் நோட்டும் மறுகையில் ஸ்கிரிப்ட் பேடும் இருந்தன. `‘அதை சினிமா சொல்லட்டும். நீங்க சொல்லாதீங்க'’ என்றபடி இரண்டையும் டேபிளில் ஓங்கி எறிந்துவிட்டு அங்கு இருந்து வெளியேறினேன். மொத்த படப்பிடிப்பு குழுவுக்கும் ஷாக். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் படப்பிடிப்பு எதுவும் இல்லாமல், அப்போதுதான் ஷூட்டிங் தொடங்கியிருந்த சமயம்.

அந்த நேரத்தில் நான் அவசரப்பட்டுவிட்டதாக எல்லோருமே நினைத்தார்கள். மௌனிகா, விஜய் ஆதிராஜ் உள்பட பலரும், `எதிர்த்துப் பேசாதே’ என்பதுபோல சைகை காட்டினார்கள். எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்ததாலும், ஒன்றரை ஆண்டுகள் வேலை இல்லாத நாட்களில் சாருக்கு உதவியாளனாக நான் மட்டுமே இருந்ததாலும் மௌனிகாவுக்கு என் மீது ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு. அடுத்து என்ன என்பதுபோல எல்லோரும் ஸ்தம்பித்து நிற்க, எந்தச் சலனமும் இல்லாமல் `டேக் போலாம் வாங்க’ என்றது சாரின் குரல். வெளியே வந்து சிகரெட் பற்றவைத்தேன். அங்கு இருந்து ஒய்.டபிள்யூ.சி.ஏ ஹாஸ்டல் ஐந்து கி.மீ தொலைவு. நடக்கத் தொடங்கினேன். பின் நேராக தியேட்டர் சென்று படம் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பினேன். என்னைத் தேடி மேனேஜர் சாய் வந்ததாகச் சொன்னார்கள். மறுநாள் காலை எழுந்து நேராகக் கல்லூரிக்குச் சென்றுவிட்டேன்.

சாரிடம் வேலைக்குச் சேர்ந்த பின்னர் கல்லூரிப் பக்கம் செல்வதே இல்லை. இப்போது மீண்டும் படிப்பின் மீது கவனம் வந்தது. கல்லூரி முடிந்து மீண்டும் அறைக்குச் சென்றால், சாய் எனக்காகக் காத்திருந்தார். “எங்கே போன வெற்றி? சார் உன்னை பார்க்கணும்னார்...” அன்று படப்பிடிப்பு முடிந்ததும் சார் என்னைத் தேடியிருக்கிறார். என்னைச் சந்திக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். மேனேஜர் சாய் ஒருமுறை சாரை வந்து பார்த்தால் போதும் என வற்புறுத்தினார். ஆபீஸ் சென்றேன். “என்னப்பா... என்ன விஷயம்?” என்றார் சார்.

“உங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னு” “ம்ம்... சரி.” என்னைக் கிளம்பச் சொல்லும் தொனியிலே பேசிக்கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. “இல்லை சார். அன்னைக்கு நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.” “ஒண்ணு தெரிஞ்சிக்கோடா. நீ இல்லாம என் லைஃப்ல எந்த மாற்றமும் இல்லை. ரெண்டு நாள் ஷூட்டிங்கூட முடிஞ்சிருச்சு.” ``சார்... என்னோட சின்ன வாழ்க்கையிலேயே நீங்க இல்லாதது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தலை. அப்புறம் நான் எப்படி சார் உங்க வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்துவேன்?” - இது நான். ``சரி, இப்ப என்ன பண்ணப்போற?” என்றவரிடம் ‘`காலேஜ் போய் டிகிரியை முடிக்கப்போறேன்” என்றேன். `‘பாலு மகேந்திராவிடம் வேலைசெய்றதைவிட, அந்தப் படிப்பு நல்ல வழியைக் காட்டிடுமா?’’ என்றவரிடம் சொல்ல என்னிடம் பதில் ஏதும் இல்லை. ``நாங்க எல்லாரும் அடுத்த கட்டம் போயிடுவோம். நீ அப்படியே நின்னுடுவ...” என்றவர், “அன்னைக்கு நானும் கொஞ்சம் ஓவராப் பேசிட்டேன். உன் வயசு. நீயும் ரியாக்ட் பண்ணிட்ட. எல்லா சமயத்திலும் இறைவன் எனக்கு செகண்ட் சான்ஸ் தருவார். அப்படி ஒரு செகண்ட் சான்ஸ் நான் உனக்குத் தர்றேன். வேணும்னா நீ வந்து வொர்க் பண்ணு” என்றார். அப்போதும் நான் கேட்கவில்லை. `‘நான் படிக்கப்போறேன் சார்’’ எனச் சொல்லிவிட்டு, என் அம்மாவைப் பார்க்க ராணிப்பேட்டைக்குக் கிளம்பினேன். வீட்டுக்குள் நுழையும்போதே அம்மா யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தார்.

பேசி முடித்ததும் ``என்னடா பண்ணிட்டு வந்த?” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “முதல்ல போய் சார்கிட்ட மன்னிப்பு கேட்டு, வேலையில் சேரு” என்றார். வேறு வழி இல்லாமல் நானும் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். மறுநாள் காலை. சார் வீடு. கதவைக்கூடத் திறக்காமல், “என்னப்பா?” என்றார். `‘கொஞ்சம் பேசணும்’’ என்றதும் `‘ஆபீஸுக்கு வா’’ என்றார். நம்ம ஆபீஸ்தானே என நான் உள்ளே நுழைந்தேன். ஆபீஸில் பார்வையாளர்கள் காத்திருக்கும் இடத்தில் என்னை உட்காரச் சொன்னார். என்னை விட்டுவிட்டு கௌரியையும் தர்மனையும் தன் அறைக்கு அழைத்து டிஸ்கஷனைத் தொடங்கினார். எனக்கு அவரின் மனநிலை புரிந்தது. சில மணி நேரத்துக்குப் பிறகு என்னிடம் வந்தவர், “என்னப்பா வெட்டி... என்ன விஷயமா வந்த?”என்றார். “இல்லை சார். திரும்ப வேலைக்கு வரணும்” என்றேன். “நேத்து வரைக்கும் உனக்கு அந்த சான்ஸ் தந்தேன். இவ்ளோ ஆகிருச்சு. இனி என்னால சேர்த்துக்க முடியாது” என்றவர் “ஒரு ஸாரிகூட சொல்ல மாட்டல்ல நீ?” என்றார். நான் அமைதியாக இருந்தேன். ``நீ மறுபடியும் சேரணும்னா மத்த உதவியாளர்கள் அதுக்கு ஒப்புக்கணும். நீ அவங்கக்கிட்ட பேசு” என்றார். நான் கெளரியிடமும் தர்மனிடமும் பேசினேன். “ஏன் வெற்றி அப்படிப் பண்ணீங்க?” எனக் கேட்டார் கெளரி.

எல்லாம் நல்லபடியாக முடிந்து வேலை மீண்டும் ஆரம்பித்தது. நடந்ததை எல்லாம் நினைத்து நான் நெருடலுடன் வேலை செய்துகொண்டிருந்தேன். ஆனால், சார்... அந்த நான்கு நாட்களை எங்கள் உறவில் இருந்து தூக்கிப்போட்டுவிட்டு சகஜமாகிவிட்டார். அவை எதையுமே அவர் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. அதுதான் பாலு மகேந்திரா. `கதை நேரம்' படப்பிடிப்பு சமயம்தான் சார் ஆபீஸ் அதிகப் பரபரப்பாக இருந்த காலம் எனலாம். அப்படி ஒரு பரபரப்பான நாள் அது. வெளியே போகணும் என்பதால் ஒரு ஆட்டோ எடுத்துவரச் சொன்னார். ஆட்டோ வந்துவிட்டது. நானும் தர்மனும் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். கீழே வந்த சார் முகத்தில் பயங்கர டென்ஷன். திடீரென `எடிட்டிங் ரிப்போர்ட் எழுதிட்டியா?’ என தங்கவேலவனைச் சத்தம் போட்டார்.

அவர் முடிக்கப்போவதாகச் சொல்ல, இன்னும் கோபமாகச் சத்தம்போட்டார். என்ன காரணம் என்றே புரியாமல் மொத்த ஆபீஸும் அவர் சத்தத்துக்கு இடம் அளித்து அமைதியானது. ‘மாலை வருவதற்குள் எல்லாம் முடித்திருக்க வேண்டும்’ என்றார். என்னைப் பார்த்து ``உங்கிட்ட என்ன என்ன புக்ஸ் இருக்கு?” என்றார். `‘எடிட்டிங் புக்கும் இன்னும் ரெண்டு புக்ஸும் இருக்கு’’ என்றேன். ``4:30 மணிக்கு எடுத்துட்டு வந்து என்னை வீட்டுல பாரு. இப்ப கிளம்பு” என்றார். மற்ற மூவரும் அங்கே இருக்க, என்னை மட்டும் கிளம்பச் சொன்னது வித்தியாசமாகவும் நெருடலாகவும் இருந்தது. மாலை, புத்தகங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனேன். வாசலுக்கே வந்தவர் அதை வாங்கிக்கொண்டு `‘இனிமே நீ வேலைக்கு வர வேண்டாம். கிளம்பு’’ என்றார். அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்.

- பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan