Published:Updated:

18 ஆண்டுகள் சிறுகதை வரலாற்றில் தடம் பதித்த `ஹாஸ்ய மன்னன்' எஸ்.வி.வி! கதை சொல்லிகளின் கதை பாகம் 13

18 ஆண்டுகள் சிறுகதை வரலாற்றில் தடம் பதித்த `ஹாஸ்ய மன்னன்' எஸ்.வி.வி! கதை சொல்லிகளின் கதை பாகம் 13

Published:Updated:

18 ஆண்டுகள் சிறுகதை வரலாற்றில் தடம் பதித்த `ஹாஸ்ய மன்னன்' எஸ்.வி.வி! கதை சொல்லிகளின் கதை பாகம் 13

18 ஆண்டுகள் சிறுகதை வரலாற்றில் தடம் பதித்த `ஹாஸ்ய மன்னன்' எஸ்.வி.வி! கதை சொல்லிகளின் கதை பாகம் 13

முந்தைய பாகங்கள்:

பாகம் 1 - வ.வே.சு.ஐயர்

பாகம் 2 - ஆ.மாதவய்யா

பாகம் 5 - மௌனி

பாகம் 6 - கு.பா.ரா

`கமலா' என்று ஒரு பெண். பாவாடை கட்டிக்கொள்ளத் தெரியாமல் மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த காலம் முதல், அவளை எனக்குத் தெரியும். நான் அவளை எப்போதும் பரிகாசம் செய்துகொண்டிருப்பேன்.

``கமலா, உனக்கு அறுபது வயதில் சிறு பிள்ளையாய் ஒரு புருஷனைப் பார்த்து வைத்திருக்கிறேன். ரொம்ப அழகாக இருப்பான். தடியை ஊன்றிக்கொண்டு கூனிக் கூனி இடுப்பைப் பிடித்துக்கொண்டு நடப்பான்.”

``போங்க மாமா... நீங்கள் எப்பப் பார்த்தாலும் இப்படித்தான்!”

``அய்யோ, நான் பொய் சொல்கிறேன் என்றா நினைக்கிறாய்? உண்மையாகப் பார்த்து வைத்திருக்கிறேன். குழந்தை மாதிரி வாயில் ஒரு பல் இராது.”

``அய்ய்ய்யோ! அய்யோ... போங்க மாமா! நீங்கள் இப்படியெல்லாம் பேசினால் கெட்டகோபம் வரும். நான் போய்விடுவேன், இங்கு இருக்க மாட்டேன்.”

``நிஜமாய்த்தான் சொல்கிறேன் கமலா. உனக்கு வைரத்தோடு, வைர லோலாக்கு, ஸ்வஸ்திக் வளையல் எல்லாம் போடுவான். `கமலா... கமலா' என்று தடியை ஊன்றிக்கொண்டே கையால் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நொண்டி நொண்டி உன் பின்னாலேயே ஓடி வந்துகொண்டிருப்பான்.”

``அய்ய்ய்யோ போதுமே... மூடுங்களேன் வாயை!” என்று சொல்லிக்கொண்டே மேலே சொல்லவிடாமல் என் வாயை அமுக்கிப் பொத்துவாள்.

கமலாவுக்கு 16 வயதாகி, சமீபத்தில் கல்யாணம் நடந்தது. புருஷன் சின்னஞ்சிறு பிள்ளை. நன்றாகப் படித்தவன். சம்பாதிக்கிறான். ரொம்பவும் அழகாக இருப்பான். அப்பேர்ப்பட்ட புருஷன் கிடைத்தாரே என்று கமலாவுக்குப் பெருமை.

ஆறேழு மாதங்களாகியும் இப்போதுதான் அவளைப் பார்த்தேன். எனக்கு நமஸ்காரம் செய்தாள்.

``உட்காரு கமலா” என்றேன். அவள் தயங்கினாள்.

சாதாரண கேள்விகள் கேட்டு அவள் வெட்கத்தைப் போக்கி முன்புபோல் சகஜமாகப் பேசும்படியான நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்று, அவளுடைய மாமனார்-மாமியார், மைத்துனன்மார்கள் இவர்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தேன். பதில் சொல்லிக்கொண்டு வந்தாள்.

``உன் புருஷனுக்கு இப்போது என்ன சம்பளம்?”

``அதெல்லாம் எனக்கென்ன தெரியும் மாமா?”

``புருஷனுக்கு என்ன சம்பளம் என்று தெரியாமல்கூடவா இருக்கிறாய்?”

``தெரியாது மாமா?”

``சரியாய் 10 மணிக்கு ஆபீஸுக்குப் போய்விடுவான் போலிருக்கிறது!”

``ஒன்பது மணிக்கே புறப்பட்டுப் போய்விடுவார்.”

``அப்புறம், சாயந்திரம் 5 மணிக்குத்தானே வருவான்?”

``ஐந்துக்கு வர மாட்டார். ஆறுக்குதான் வருவார். சில நாள் 8 மணிகூட ஆகிவிடும்.”

``அதுவரைக்கும் நீ `எப்போ வருவாரோ எந்தன் களி தீர!’ என்று அவனையே நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாய்!”

``போங்க மாமா!”

``என்னை எங்கே போகச் சொல்கிறாய்?”

``பின்னே, நீங்க இப்படியெல்லாம் பேசுகிறீர்களே.”

``எப்படியெல்லாம் பேசுகிறேன்? உள்ளதைச் சொன்னேன். நீ அவனையே நினைத்துக்கொண்டே உட்கார்ந்து இருக்கிறதில்லை?”

``இல்லை.”

``நிச்சயமாய்?”

``நிச்சயமாய்.”

``புளுகு.”

``புளுகில்லை. நிஜம், நிஜம், நிஜம்.”

எங்களுக்குள் முன்பு இருந்த சிரிப்பு, விளையாட்டு, சிநேகம் ஏற்பட்டுவிட்டன.

``உன் முகத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!”

``உங்களுக்குத் தெரியும்! நீங்கள்தான் மாமியை எப்போது பார்த்தாலும் நினைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.”

``ஆமாம். உன்னைப்போல் `இல்லை' என்கிறேனா? நினைத்துக்கொண்டுதான் உட்கார்ந்திருக்கிறேன். உன் புருஷன் என்ன கோபக்காரனா... சாதாரணமாகச் சிரித்து விளையாடிக்கொண்டு குஷியாக இருப்பவனா?”

``அதெல்லாம் எனக்குத் தெரியாது மாமா.”

``எதைக் கேட்டாலும் தெரியாது என்கிறாயே? உனக்கு என்னதான் தெரியும்?”

``எனக்கு ஒன்றுமே தெரியாது. போய்வருகிறேன் மாமா.”

``உட்காரு சொல்கிறேன். ஒன்றும் சொல்லாமல் `போகிறேன்' என்கிறாயே. உன் புருஷனுக்கு சங்கீதம் தெரியுமா?”

``அது என்ன தெரியுமோ, எனக்கென்ன தெரியும்?”

`` `தெரியுமா?' என்று கேட்கிறதுதானே?”

```நான் போய்வருகிறேன் மாமா.”

``உட்காரு... உட்காரு. சங்கீதம் தெரிந்தவனாக இருந்தால், வலிப்பு வந்தவன் மாதிரி மூஞ்சியைக் காண அடித்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் `கொய்... கொய்..!' என்று இழுத்துக்கொண்டிருப்பானே? அதுகூடவா காதில் விழுந்திடாது?”

``எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது மாமா.”

``அகமுடையானைத் தெரியுமோ, இல்லையோ.”

``அதுகூடத் தெரியாது.”

``அவனை நீ பார்த்ததே இல்லே?”

``இல்லை.”

``யாரோ இப்போது `9 மணிக்கெல்லாம் ஆபீஸுக்குப் போய்விடுவா, ராத்திரி 8 மணிக்குத்தான் வருவா' என்றாயே, அது யார்?”

`அது யாரோ தெரியாது.”

கல்யாணமான புதிதில் பெண்களிடத்தில் புருஷனைப் பற்றிப் பேசினால் அவர்கள் இப்படித்தான் `கோனாமானா' என்று பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். முகத்தில் மாத்திரம் அடங்காத சந்தோஷம் விளங்கிக்கொண்டிருக்கும்.

``புருஷன் பேரை எடுத்தாலே, உனக்கு வாயெல்லாம் பல்லாய்ப்போய்விடுகிறதே!”

``மாமி பேச்சை எடுத்தால் உங்களுக்கு அப்படி இருக்கிறது.”

``ஆமாம். உன்னைப்போல் `இல்லை' என்கிறேனா? உன் புருஷன் உன்னை என்னவென்று கூப்பிடுகிறது?”

``நீங்கள் மாமியை என்னவென்று கூப்பிடுகிறது?”

``பேரைச் சொல்லித்தான் கூப்பிடுகிறது.”

``மற்ற பேர்களும் அப்படித்தான் கூப்பிடுவா.”

``அதைக் கேட்கவில்லை. `கமலா... கமலா' என்று சாதாரணமாகக் கூப்பிடுகிறதுதான் இருக்கிறதே. அந்தரங்கமாகக் கூப்பிடுகிற பேர் ஒன்று இருக்குமே?”

``நீங்கள் மாமியை என்னவென்று கூப்பிடுகிறது?”

`` `ஏ... சைத்தான்!' என்பேன்.”

``ஹோ... ஹோ... ஹோ!”  இடி இடி என்று சிரித்தாள்.

``என்னைக் கேட்டாய் நான் சொன்னேனே. நீ இப்போது சொல்ல வேண்டுமோ இல்லையோ?”

``எனக்கு செல்லப்பேரு ஒன்றுமில்லை.”

``நீ சொன்னா நான் நம்புவேனா... இல்லாமல் இருக்குமா? எப்படிக் கூப்பிடுகிறான் சொல்லு?”

``இல்லை மாமா. போங்க மாமா, என்னை ஒன்றும் கேட்காதீர்கள். எனக்கு ஒன்றும் தெரியாது மாமா'' என்று எவ்வளவோ சாகசங்களும் பிகுவும் பண்ணி, கடைசியில் `` `தேள் குட்டி' என்று கூப்பிடுகிறது” என்று சொல்லி, கையால் முகத்தை மூடிக்கொண்டு பிடித்தாள் ஓட்டம்.

``ஏ... தேள் குட்டி! இங்கே வா'' என்று சிரித்துக்கொண்டே அவள் பின் கத்தினேன். போனவள் போனவள்தான். எத்தனை தரம் `கமலா' எனக் கூப்பிட்டாலும், ஒருதரம் `தேள் குட்டி’ எனக் கூப்பிடுகிற சந்தோஷத்தை அவளுக்குக் கொடுக்குமா? ஆனால், வேறொருவர் அதைக் கேட்க முடியுமோ?''

காதல் பேச்சுகளே விநோதம்! வாழ்க்கையில் இனிப்பு பூராவும் அல்லவா சிருஷ்டியில், காதலில் திணிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.வி.வி எழுதிய `காதல் பேச்சு' என்ற சிறுகதையின் பகுதி இது. `மணிக்கொடி' வந்துகொண்டிருந்த காலத்தில் எழுதியவரானாலும், மணிக்கொடிப் பக்கமே தலைவைத்துப் படுக்காத ஓர் எழுத்தாளராக வாழ்ந்தவர் எஸ்.வி.வி எனப் புகழ்பெற்ற எஸ்.வி.விஜயராகவாச்சாரி. ஆங்கிலத்தில் எழுதி புகழ்பெற்ற பிறகு, தமிழுக்கு எழுத வந்தவர் எஸ்.வி.வி. `மணிக்கொடி'க்காரர்கள் மறுத்த கல்கியால், கல்கியின் வேண்டுகோளால் தமிழில் கதை எழுத வந்தவர் எஸ்.வி.வி. ஆங்கிலத்தில் `தி இந்து' பத்திரிகையிலும் தமிழில் `ஆனந்த விகடன்' பத்திரிகையிலும் தவிர வேறு எந்தப் பத்திரிகையிலும் எழுதாதவர் இவர். அவருடைய நூல்களை அல்லயன்ஸ் பதிப்பகத்தில் மட்டுமே வெளியிட்டார். இன்றும் அல்லயன்ஸ் மட்டுமே வெளியிட்டுவருகிறது.

கல்கி பிறகு ஆனந்த விகடனிலிருந்து வெளியேறி, சொந்தமாக `கல்கி' பத்திரிகையை ஆரம்பித்தார். அப்போது எஸ்.வி.வி-யும் கல்கியில் எழுதுவார் என்கிற பலரது பொதுவான எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி, கடைசி வரை ஆனந்த விகடன் எழுத்தாளராகவே வாழ்ந்து மறைந்தார். `எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே' என்கிற ஆனந்த விகடனின் லட்சிய முழக்கத்தோடு மிக நெருங்கியவராக வாழ்ந்தவர் என்று `ஹாஸ்ய மன்னன்' எஸ்.வி.வி-யைக் குறிப்பிடலாம்.

இவரைப் பற்றி 11.08.1940 ஆனந்த விகடனில் அமரர் கல்கி எழுதியதிலிருந்து...

`நான் சென்னைக்கு வந்த புதிதில், `இந்த எஸ்.வி.வி யார்... உங்களுக்குத் தெரியுமா?' என்று சென்னையில் நான் சந்தித்தவர்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்படி என்னைக் கேட்கும்படியாகச் செய்தது அப்போது புதிதாக வெளியாகியிருந்த `ஸோப் ப்ளஸ்' என்கிற புத்தகம்தான். இந்தப் புத்தகத்தில் முதல் விஷயம் `கோவில் யானை' என்னும் கதைதான். இதைப் படித்தபோது நான் சிரித்ததை இப்போது நினைத்தால்கூட வயிற்றை வலிக்கிறது. புத்தகத்தைப் படிக்கையில் இப்படிச் சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்தது. படித்து முடித்த பிறகோ, பெருமை பொத்துக்கொண்டு போயிற்று. `நம்முடைய தமிழ்நாட்டில் இப்படி எழுதக்கூடிய ஒருவர் இருக்கிறாரே?' என்று நினைக்க நினைக்க கர்வம் ஓங்கி வளர்ந்தது. தமிழ்நாட்டைக் குறித்து முன் எப்போதும் இல்லாத கௌரவ உணர்ச்சியும் உண்டாயிற்று. `தமிழ்நாட்டின் இலக்கிய ஊற்று’ என்பது அடியோடு வற்றிப்போய்விட்டது என நினைத்ததெல்லாம் சுத்த தவறு. இவ்வளவு நகைச்சுவையுடன் எழுதக்கூடிய மனிதர் ஒருவர் இருக்கும்போது, தமிழ்நாட்டில் ஜீவசக்தி இல்லை என்று சொல்ல முடியாது.

ஒருநாள் எஸ்.வி.வி-யைப் பார்ப்பதற்காக இரண்டு நண்பர்களுடன் திருவண்ணாமலைக்குச் சென்றோம். இரவு 11 மணிக்கு அவருடைய வீட்டைக் கண்டுபிடித்து, கதவை இடித்தோம். எஸ்.வி.வி-யே வந்து கதவைத் திறந்தார். `யாரோ கட்சிக்காரர் அவசர கேஸ் விஷயமாக வந்திருக்கக்கூடும்' என அவர் நினைத்திருக்கலாம். நாங்கள் விஷயம் இன்னதென்று சொன்னதும், இடி இடி என்று சிரித்தார். ராத்திரி 11 மணிக்கு வந்து கதவை இடித்து, தூக்கத்திலிருந்து எழுப்பி `ஒன்றும் காரியமில்லை. வெறுமனே உங்களைப் பார்ப்பதற்காக வந்தோம்' என்று சொன்னால் யாருக்குத்தான் சிரிப்பு வராது?

`எங்களை எத்தனையோ தடவை காரணம் இல்லாமல் சிரிக்கச் சிரிக்க அடித்தீர்கள் அல்லவா! அதற்கு பழிவாங்கிவிட்டோம்' என்று சொன்னேன்.

இந்தச் சந்திப்பின்போது அவரை தமிழிலும் எழுதுமாறு கேட்டுக்கொண்டார் கல்கி. எஸ்.வி.வி-யின் முதல் சிறுகதை `தாட்சாயிணியின் ஆனந்தம்' என்ற தலைப்புடன் 01-07-1933-ம் ஆண்டில் வெளியானது. அதை ராஜாஜி படித்துவிட்டு அளவற்ற மகிழ்ச்சி தெரிவித்தாராம். `இவ்வளவு நன்றாக எஸ்.வி.வி இங்கிலீஷில் எழுதியதே கிடையாது' என்று ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரும் பாராட்டினாராம்.'

25.08.1880-ம் ஆண்டு திருவண்ணாமலையில் வேணுகோபாலாச்சாரியாருக்கும் கனகவல்லி அம்மையாருக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர் எஸ்.வி.வி. 1934-ம் ஆண்டு வரை திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் பார்த்த அவருக்கு, வக்கீல் தொழில் ஓடவில்லை. அதற்கு, தான் பிராமணராகப் பிறந்ததுதான் காரணம் எனக் குறிப்பிடுகிறார். `பிராமணிய அடையாளங்களையும் அதன் மிச்சங்களையும் நாங்கள் எப்போதோ விட்டொழித்தும், எங்களுக்கு பிராமணப் பட்டம் வேண்டாம் என்று தொண்டை கிழியக் கத்தியும் அது எங்கள் இனத்தின்மேல் நாசமாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது. சில பரம்பரைச் சொத்துகள் நம்மை விட்டுப்போகாது' என்று அவர் குறிப்பிட்டதாக வாசந்தி தன்னுடைய `எஸ்.வி.வி எனும் ரஸவாதி' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

ஆனால், அ.மாதவய்யாவைப்போன்றோ பாரதியைப்போன்றோ தன் எழுத்திலோ வாழ்க்கையிலோ சாதியத்துக்கு எதிராக அவர் இயங்கியதாகவோ எழுதியதாகவோ தடயம் இல்லை. ரசிப்பதற்கான எழுத்து என்கிற ஒரே வகையில் அவரது பயணம் போய்க்கொண்டிருந்தது.

``பழைமைக்கும் புதுமைக்கும் நடக்கும் போராட்டத்தை உணர்ந்து, அதில் புதுமைதான் வெல்ல முடியும் என்கிற திட நினைவுடன், அதே சமயம் பழைமையில் ஊறியவராகவே அவர் தன் கதாபாத்திரங்களைச் சிருஷ்டித்து நடமாடவிட்டார்” என்பது க.நா.சுப்பிரமணியன் கணிப்பு. இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும்விதமான பல கதைகளைக் காணலாம். `பத்மநாபன்’ என்ற கதை நல்ல எடுத்துக்காட்டு.

பத்மநாபன், சடகோப ஐயங்காரின் ஏகபுத்திரன். சடகோப ஐயங்கார், பெரிய பணக்காரர். அடிநாளில் அவர் பரம ஏழையாக இருந்தார். சொந்தப் பிரயத்தனத்தினாலேயே ஏராளமான பணத்தைச் சம்பாதித்தார். அவருக்கு இரண்டு மூன்று லட்சம் ரூபாய் சொத்து இருக்கும் என்று ஜனங்கள் மதிப்பிடுவார்கள். அவருடைய ஏகபுத்திரன்தான் பத்மநாபன். சடகோப ஐயங்கார் பணக்காரர் மட்டுமல்ல; தேசத் தலைவர்களில் முக்கியஸ்தர் என்று பேரும் பெற்றவர். `தலைவர்' என்ற பட்டத்துக்குத் தக்கபடி சமூகச் சீர்திருத்த விஷயங்களில் ரொம்ப முற்போக்கான கொள்கை உடையவர். ``சாதி வித்தியாசங்கள் அடியோடு தொலைந்தால்தான் இந்தியாவுக்கு `கதி மோட்சம்' உண்டு. மாதர்களுக்கு நாம் பெரிய அநீதியை இழைத்துவிட்டோம்'' என்பதுபோன்ற கருத்துகளை பிரசங்கங்களில் எடுத்துவிடுவார். ஆனால், சொந்த வாழ்வில் பக்கா ஐயங்காராக ஆச்சாரத்துடன் வாழ்ந்தவர்.

அவருடைய பையனான பத்மநாபனோ, பலமான பொதுவுடைமைவாதி. ``சாதியாவது மதமாவது... பிராமணனாம் பிராமணம் அல்லாதவனாம், ஹரிஜனாம். இவை எல்லாம் என்ன நான்சென்ஸ்!'' என்று பேசுபவன். இவற்றை அப்படியே வாழ்விலும் கடைப்பிடிப்பவன். பத்மநாபன், சாதி மறுத்துக் காதலித்து அப்பா-அம்மா சம்மதம் இல்லாமல் வாரனேஷ் என்கிற பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்கிறான். காலப்போக்கில், அந்தப் பெண் மீன் இல்லாமல் சாப்பிட மாட்டாள் என்பதில் தொடங்கி முரண்பாடு முற்றுகிறது. அவன் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, காதல் மனைவிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போகிறான்.

`என்னால் நீ ஒரு சுகமும் கண்டவளல்ல. நான் இறந்தாவது உனக்கு சுகத்தைத் தேடிக்கொடுக்கிறேன். நான் இருக்கும் வரையில் நீ வேறு கல்யாணம் பண்ணிக்கொள்ள சட்டம் இடம் கொடாது. உன் பேரில் எனக்கு ஏற்பட்ட காதல், அணு அளவும் எனக்குக் குறைவில்லை. உனக்கு ஏற்ற புருஷனை நீ மறுமணம் செய்துகொண்டு இன்ப வாழ்க்கையில் இருக்க அவகாசம் கொடுப்பதற்காக, நான் இந்த உலகத்தைவிட்டு மறையத் தீர்மானித்துவிட்டேன்' என்கிற அவனது கடித வரிகளைப் பார்த்து மனம் திருந்தும் அவள், அவனுடைய அப்பாவுக்கு தந்தி அடித்து வரச்சொல்கிறாள். அப்பா-அம்மாவுடன் ஏற்கெனவே பத்மநாபனுக்காக என நிச்சயிக்கப்பட்ட பெண்ணான ஜயலட்சுமியும் வருகிறாள். அவளைப் பார்த்து ``வாரனேஷ் நீ என் தங்கை. இன்று முதல் பத்மநாபன் எனக்கு தம்பிமுறை மாதிரி'' என்று சொல்கிறாள். அந்த வருடமே பத்பநாபனுக்கும் ஜயலட்சுமிக்கும் விவாகம் நடக்கிறது.

சாதிமறுப்புத் திருமணத்தை நொடியில் அழித்துவிடுகிறார் கதையில். இதேபோன்ற ஒரு விஷயத்தை புதுமைப்பித்தன் ``கோபாலய்யங்காரின் மனைவி' என்கிற கதையில் வெகு யதார்த்தமாகச் சித்திரித்திருப்பார். புருஷனாகக் கூட வாழ்ந்தவனை சட்டென `தம்பி' என்று சொல்வதாக நம்ப முடியாத திருப்பத்தை எல்லாம் புதுமைப்பித்தனோ கு.ப.ரா-வோ செய்ய மாட்டார்கள். `மணிக்கொடி'ப் பாரம்பர்யம் அது.

என்றாலும் மேலே தரப்பட்டுள்ள `காதல் பேச்சு' கதையில் வருவதுபோல நுட்பமான ஒரு மன ஓட்டத்தோடு கூடியதாகத்தான் அவரது நகைச்சுவைக் கதைகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. கர்னாடக சங்கீத ரசனை உள்ளவர்களை வலிப்பு வந்ததுபோல முகத்தைக் கோணலாக்கி, `கொய்... கொய்..!' என்பவர்கள் எனக் கேலி செய்கிறார். கமலா பாத்திரம் வெகு யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

அவருடைய எல்லா கதைகளுமே அக்ரஹாரத்தைவிட்டுத் தாண்டி வெளியே வராத கதைகள்தாம். அவருக்குத் தெரிந்த உலகத்தை அவர் எழுதியிருக்கிறார் என்பதில் தவறேதும் இல்லை. அந்த எல்லைக்குள் நின்று மாமியார்-மருமகள் சண்டை எனில், மருமகள் பக்கம் நின்று எழுதுவார். அந்த அளவுக்கு அவர் முற்போக்கு. படித்த நாகரிகமான பெண்கள் பற்றி அந்தக் காலத்து மனிதர்களுக்கு இருந்த குழப்பமான பார்வையே அவருக்கும் இருந்தது.

`தாயைப் பார்த்து மகளைக்கொள்’ என்கிற சிறுகதையில் ஒரு பெண்ணை ஒரு வாலிபன் காதலிக்கிறான். அவள் தாயாரைப் பார்த்த பிறகு, `இந்தப் பெண் வேண்டாம்' என்கின்றனர் அவனது பெற்றோர். அவளது தாய் ஒன்றும் நடத்தைக்கெட்டவள் அல்ல. ஆனால், புருஷனைப் பாடாய்ப்படுத்துபவள். கதாநாயகன், `அந்தப் பெண்தான் வேண்டும்' என அடம்பிடித்து கல்யாணம் செய்துகொள்கிறான். கடைசியில் கதை என்ன ஆச்சு என்றால், அந்தப் பெண் எடுத்ததற்கெல்லாம் ஏட்டிக்குப்போட்டி பேசும் ஆங்காரியாக உருவாகிறாள். தாயைப்போல மகள் என்கிற பழம்பஞ்சாங்கக் கருத்து இறுதியில் வெல்கிறது கதையில்.

ஆனால், அவரது கதைகள் பற்றி இலக்கியத்தர முத்திரையைக் கையில் வைத்திருந்த க.நா.சு., சொன்ன கருத்துகள்தாம் அவரை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டன எனலாம். ``இந்தத் தலைமுறைக்கும் எஸ்.வி.வி-யின் எழுத்துகள் உகந்ததாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன். ஏனென்றால், இலக்கியத்தரம் என்பது சில எழுத்தாளர்களிடம் தலைமுறைக்குத் தலைமுறை குறைவதில்லை. அப்படிப்பட்ட இலக்கிய ஆசிரியர் எஸ்.வி.வி. இலக்கியரீதியிலும் எஸ்.வி.வி சில எதிர்கால இலக்கிய ஆசிரியர்களைப் பாதிப்பது மிக மிக அவசியம் என்றும் எனக்குத் தோன்றுகிறது” என்று அழுத்தமாக எழுதுகிறார் க.நா.சு.

என்னுடைய வாசிப்பில் அவருடைய `ஹாஸ்யக் கதைகள்', `தீபாவளிக் கதைகள்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் சம்பத்து, `சபாஷ் பார்வதி', `புது மாட்டுப்பெண்' போன்ற நாவல்கள் வழியே அவரை கல்கியைப்போல அகல உழுத ஒரு வெகுஜன எழுத்தாளராக மட்டுமே அடையாளம் காண முடிகிறது. கல்கியிடம் காணும் காந்திய முற்போக்குக் கருத்துகளுக்குக்கூட எஸ்.வி.வி-யிடம் இடமில்லை.

ஆனாலும், சிறுகதை வரலாற்றில் 18 ஆண்டுகளாக பல்லாயிரம் வாசகர்களைக் கட்டிப்போட்ட கதைகளை எழுதிய ஒருவரைப் பற்றிச் சொல்லாமலே எப்படி விட முடியும்?