மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 33

கலைடாஸ்கோப் - 33
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 33

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

அஞ்ஞானச் சிறுகதை

01

``எல்லாவற்றையும் அழிக்கச் சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு” என்றபடி ஜினியின் மார்பை கைகளால் தள்ளிய நினோ, புத்தகங்களை நோக்கித் திரும்பினான்.

“இல்லை. இவை எல்லாம் பழைய தத்துவங்கள். நான் விட மாட்டேன்” என்றபடி நினோவைப் பின்னுக்கு இழுத்தான் ஜினி.

“இந்த புரோகிராமிங் உலகத்தில் பழைய தத்துவங்களுக்கு எல்லாம் என்ன மதிப்பு? நீயும் நானும் எல்லாம் வெறும் டேட்டாக்கள். நம்மைச் சுற்றி உள்ள எல்லாமே டேட்டாதான். இது டேட்டா உலகம் என்பதை மறந்துவிட்டாயா?'' என்ற நினோ, உதறிக்கொண்டு முன்னால் சென்றான்.

ஜினி தாவி நினோவைத் தடுத்து, “டேட்டா என்றால் என்னவெனத் தெரியும் அல்லவா?” என்றான்.

“எல்லாம் 01 01 என்கிற பைனரிகள். அவ்வளவுதான்” என்ற நினோ, தன்னை விடுவித்துக்கொண்டு புத்தகங்களை நோக்கிப் பாய்ந்தான்.

கலைடாஸ்கோப் - 33

ஜினி தாவி, நினோவைப் பின்னால் இருந்து கழுத்தில் கைகளைச் சுற்றி இழுத்தபடி சொன்னான், “கருவும் உருவும் இரண்டு என்பார் அறிவிலார். கருவே உருவானது யாரும் அறிகிலார். இதுவும் பழைய தத்துவம்தான். திருமூலர் சொன்னது.”

``மனிதர்களுக்கு வேறு வேலை இல்லை. இப்படி ஏதாவது அர்த்தமற்ற சொற்களைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அதனால்தான் இந்தத் தத்துவங்களை மேலிடம் அழிக்கச் சொல்கிறது” என்றபடி கோபமாகத் திமிறினான் நினோ.

“மன்னித்துவிடு. தத்துவங்களைக் காப்பாற்ற, உன்னை அழிக்கப்போகிறேன். அதாவது உன் டேட்டாவை. தெளிவாகச் சொன்னால், உன் பைனரிகளான ஜீரோவையும் ஒன்றையும் பிரிக்கப் போகிறேன்” என்றபடி ஜினி ஒரு கையால் நினோவின் கழுத்தைச் சுற்றிவளைத்தபடி மறுகையால் அவன் பின்னந்தலையைத் திறந்து, புரோகிராம் பட்டனை அழுத்தினான்.

கலைடாஸ்கோப் - 33

நினோ மெள்ளக் கரைந்து மறைந்து கொண்டிருந்தபோது, ஜினி சொல்வது காதில் விழுந்தது...

``0 என்பது கரு, 1 என்பது உரு.”

விஷுவல் கார்னர்

பாம்படம்

எத்தனை நாட்களுக்குத்தான் வெளிநாட்டவர்களின் நவீனக் கலைகளில் க்யூபிசம், தாதாயிசம், அப்ஸ்ட்ராக்ட், என ஆராய்ந்துகொண்டிருப்பது... கொஞ்சம் நம் ஊர் பக்கம் கண்களைத் திருப்பினால், ஆச்சர்யம் பாட்டிகளின் காதுகளில் `பாம்படம்’ வடிவத்தில் தொங்கிக்கொண்டிருந்தது.

காரணம், அதன் அப்ஸ்ட்ராக்ட் தன்மை. நவீன ஓவியங்களில், கணித வடிவங்களை (Geometric Shapes) கொண்டு வரையும் பாணிகள் பல உண்டு. ஜெர்மன் ஓவியப் பாணியான பாவுஹாஸ் (Bauhaus), இத்தாலியின் ஃப்யூச்சரிசம் (Futurism), பிரிட்டனின் ஓர்டிசம் (Vorticism) ரஷ்யாவின் சூப்பர்மேடிசம் (Supermatism), தமிழ் சினிமா பாடல்கள் வழியாக நமக்கு நன்கு பரிச்சயமான ஓவியர் பிக்காஸோ உருவாக்கிய க்யூபிசம் (Cubism) போன்றவை இந்த ஜியோமெட்ரிக் வடிவ பாணி கலைகள். ஆனால், இவற்றில் பெரும்பாலானவற்றின் பிறப்பு, 20-ம் நூற்றாண்டு. ஆனால் நமது பாம்படம், அந்தப் பாட்டிகளைப்போலவே பல நூற்றாண்டு பழைமைகொண்டது.

கலைடாஸ்கோப் - 33

பாம்படங்களின் வடிவமைப்பைப் பாருங்கள். நான் மேலே சொன்ன எல்லா வகையான மாடர்ன் அப்ஸ்ட்ராக்ட் பாணிகளுக்கும் சவால்விடும் வகையில் உருளை, செவ்வகம், கன சதுரம், பந்து, முக்கோணம், கோளங்கள் என ஜியோமெட்ரிக் வடிவங்களைக்கொண்டு ஏகப்பட்ட அப்ஸ்ட்ராக்ட் தன்மையுடன் இருக்கிறது. தனித்தனியாக அதன் வடிவங்கள் இப்படிக் கணிதம் பேசினாலும் அதன் முழுமையான வடிவில் ஒரு பாம்போ, பறவையோ, குதிரையோ அரூபமாக இருப்பதையும் கவனிக்க முடிகிறது.

கலைடாஸ்கோப் - 33

நமது மரபில் தங்க அணிகலன்கள் செய்யும் கலைஞர்கள் எப்படி காலத்தால் இவ்வளவு நவீனமாக இருந்திருக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் எனக்கு இல்லை. கட்டடங்கள், உடைகள், அணிகலன்கள், பண்டபாத்திரங்கள் எனச் சின்னச்சின்ன விஷயங்களிலும் அவர்கள் காட்டியிருக்கும் நுட்பங்களைப் பார்த்தால், அந்த ஆச்சர்யம் இருக்காது. இன்று மாடர்ன் அப்ஸ்ட்ராக்ட் சிற்பங்கள் வெள்ளைக்காரர்களின் கண்டுபிடிப்புதான் என நமக்கே `காது குத்து’கிறார்கள்!

நாஸ்டால்ஜியா நோட்

சைக்கிள்  சவுட்டு

நாஞ்சில் நாட்டில் முன்னர் எல்லாம் `சைக்கிள் சவுட்டு' போடுவார்கள். `சவுட்டு' என்ற வார்த்தை மீது டவுட்டு வந்து குழம்ப வேண்டாம். `சைக்கிள் மிதித்தல்' எனப் பொருள். ஒரு வகையான உள்ளூர் சைக்கிள் வித்தை. அதையே தொழிலாகச் செய்யும் குழுக்கள் இருப்பார்கள். திடீரென ஓர் ஊருக்குள் வந்து புளியமரத்தடி, அரசமரத்தடி, பஞ்சாயத்து மைதானம் எனத் தோதான இடமாகப் பார்த்து செட்டை போடுவார்கள். சந்துபொந்து எல்லாம் ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்தால், மாலையில் வேலைகளை முடித்துக்கொண்டு குடும்பமும் குட்டியுமாக மக்கள் கிளம்பிவிடுவார்கள்.

கலைடாஸ்கோப் - 33

முதல் நாள் உள்ளூர் பிரமுகரின் தலைமையில் பூஜை எல்லாம் போட்டு சைக்கிள் மிதிக்கும் ஆள் சைக்கிளில் ஏறிவிட்டால், குறைந்தது 10 நாட்களுக்கு அதைவிட்டு இறங்க மாட்டார் என்பது நம்பிக்கை. மாலையில் சைக்கிளில் சுற்றிக்கொண்டே இருப்பவரை, காலையில் நாங்கள் பள்ளிக்கூடம் போகும்போதுகூட சந்தேகமாகப் பார்ப்போம். சைக்கிளில் இருந்தபடி கை அசைப்பார்.

அருகில் திறந்தவெளியில் சோறு ஆக்கிக்கொண்டிருக்கும் அக்காக்கள், மாலையில் ஜிகினா மேக்கப்புடன் சரோஜாதேவியாகவும் ஸ்ரீதேவியாகவும் மாறுவார்கள். சைக்கிளுக்கு ஆயில் போட்டுக்கொண்டிருக்கும் அண்ணாக்கள், சிவாஜியாகவோ கமலாகவோ மாறி `மயக்கம் என்ன... இந்த மெளனம் என்ன..?' என்றோ, `இளமை... இதோ இதோ...' என்றோ வளைந்து நெளிந்து ஆடுவார்கள். டியூப்லைட்டை கரணம் அடித்து நொறுக்குவது, பாறங்கல்லை நெஞ்சில் வைத்துப் பிளப்பது, பல மணி நேரமாக தலையை மண்ணுக்குள் புதைப்பது என மரண வித்தை காட்டுவார்கள். பார்வையாளர்களின் கரகோஷமும், `மேலத்தெரு நாகராஜன் பத்து ரூபாய் அன்பளிப்பு’ போன்ற அறிவிப்புகளுக்கு நடுவில் குத்தப்படும் ரூபாய் நோட்டுக்களும்தான் வாழ்வாதாரம். இந்த சைக்கிள் வித்தைக்காரர்களின் வாழ்வியலை அறிய, இரண்டு விஷயங்களைப் பரிந்துரைக்கிறேன். ஒன்று, ஈரானிய இயக்குநர் மக்மல்பஃபின் `தி சைக்கிளிஸ்ட்’. மற்றொன்று, விகடனில் வந்த சைக்கிள் மணி என்பவரின் நேர்காணல் (யூடியூப் விகடன் டி.வி-யில் இருக்கிறது).

கொலாஜ்

விடாது  கிருமி

ஒருவரை ஓர் அறையில் கட்டிவைத்து, தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் பார்க்கவைத்தால், அவர் `OSD’ எனும் Obsessive-compulsive disorder என்ற மனநோய்க்கு ஆளாகிவிடுவார். இதைப் பற்றி நமது `கார்ப்பரேட் சித்தன்' கேரக்டரை வைத்து `வியாபாரக் கிருமிகள்' என்ற நகைச்சுவைக் கட்டுரையை எழுதினேன்.

கலைடாஸ்கோப் - 33

`காலையில் எழுந்து கக்கூஸ் போனா கிருமி, கைகளைக் கழுவினா கிருமி, பல்லைத் தேய்ச்சாலும் கிருமி, குளிச்சாலும் கிருமி, நடந்தா காலில் கிருமி, நடக்கிற தரையில் கிருமி, உட்கார்ந்தா கிருமி, உட்கார்ற இடத்தில் கிருமி, முகத்தைத் துடைச்சா கிருமி, சாப்பிட்டா கிருமி, சாப்பிடுற தட்டில் கிருமி, தண்ணி குடிச்சா கிருமி, வெளியே போனா கிருமி, உள்ளே வந்தா கிருமி, மண்டையில் கிருமி, தொண்டையில் கிருமி, வாயில் கிருமி, வாசலில் கிருமி, துணியில் கிருமி, தும்மினா கிருமி, தூங்கினா கட்டில்ல கிருமி, தூங்கி எழுந்தா மறுபடியும் பல்லில் கிருமி'... என, `தெனாலி' கமல் டோனில் அதில் கார்ப்பரேட் சித்தன் தன் தினப்படி அனுபவங்களைப் பட்டியலிட்டிருப்பான்.

அந்தக் கட்டுரையை, ராஜவேல் நாகராஜன் (`பசங்க' பாண்டிராஜின் உதவி இயக்குநர்), பிரேம்ஜி அமரன் நடிப்பில் `விடாது கிருமி' என்னும் ஒரு குறும்படமாக எடுத்து யூடியூபில் ஹிட்டடித்திருக்கிறார். பிரேம்ஜி அமரன், தன் வழக்கமான சேட்டைகளுடன் வியாபாரக் கிருமிகளிடம் மல்லுக்கட்டி சமூகத்தின் மனசாட்சியை `என்ன கொடுமை சார் இது?’ என உலுக்குகிறார்!

நானோ ஹிஸ்டரி

நேச  வாகனங்கள்

சோஷியபிள் கேரேஜ் (Sociable carriage) எனும் ஒரு பதம், ஆங்கிலத்தில் இருக்கிறது. `நேச வாகனங்கள்' எனத் தமிழில் சொல்லலாம். காரணம், அதன் வடிவமைப்பு. அதன் வரலாற்றைத் தேடினேன். மேற்கு உலகில் குதிரை வண்டிகள் ஓடிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில், பெரும்பாலும் பணக்காரச் சீமான்கள் சொகுசாக பின்னால் இருக்க, குதிரையோட்டி வண்டியைச் செலுத்திக்கொண்டி ருப்பான். நம்மூர் கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன் படங்களில் ஜமீன்தார்கள் ஃப்ளாஷ்பேக்கில் இந்த மாதிரி வண்டிகளில் வந்து ஏழைபாழைகளுக்கு வேட்டி-சேலை கொடுப்பதை நாமும் பார்த்திருப்போம். விக்டோரியன் ஸ்டைல் குதிரை வண்டிகள் இவை.

ஆனால் நேச வாகனங்கள், இதற்கு நேர் எதிரானவை. சாமானியர்களும் குதிரை வண்டிகளில் பயணிக்க ஆரம்பித்தபோது இந்த வடிவம் வந்திருக்கலாம். அதாவது எதிரெதிராக அமைக்கப்பட்ட இருக்கைகளில் பயணிப்பவர்கள் அருகருகே முன்பின் தெரியாதவர்களுடனும் அமர்ந்து பயணிக்கலாம் என்பதே இதன் கான்செப்ட். ஒரு வகையில் இந்த மாதிரி வாகனங்கள் பயணத் தூரங்களின் இடைவெளிகளை மட்டும் அல்ல, மனிதர்களுக்கு இடையிலான இடைவெளிகளையும் குறைக்கின்றன. ரயிலை, `ஒரு நேச வாகனம்' என்பேன். ரயில் பயணங்களில் எதிரில் இருப்பவர்களிடம் (மயக்க பிஸ்கட் எச்சரிக்கைகளை எல்லாம் மறந்து) ஒரு புன்னகையாவது சிந்தாதவர்கள் இல்லை.

கலைடாஸ்கோப் - 33

கார் போன்ற வாகனங்களை ஒன்றுக்கு மேற்பட்டோர் பகிர்ந்துகொண்டு பயணிப்பதை `கார் பூலிங்' (Car pooling) என்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில், காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து மாப்பிள்ளை ஊர்வலம்போல மெதுவாக நகர்கிறது. கவனித்தால், டிரைவர்கள் ஸ்டீயரிங்குடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, பின்னால் சாய்வாக ஒரே ஓர் ஆள் உட்கார்ந்து லேப்டாப்பைத் தட்டிக்கொண்டோ, ஸ்மார்ட்போனைத் தடவிக்கொண்டோ அல்லது ஏதோ ஆங்கிலப் பேப்பரைப் பிரித்துப் படித்தபடியோ இருப்பார்.

நான்கு பெரிய கார்கள் செல்லும் பரப்பளவில் ஒரு பேருந்து செல்லலாம். ஆனால், நான்கு கார் என்றால் டிரைவர்களையும் சேர்த்து எட்டுப் பேர். பேருந்தில் எத்தனை பேர் என நீங்களே கணக்கு பார்த்துக்கொள்ளுங்கள். இந்த இடத்தில்தான் `கார் பூலிங்’ போன்ற வாகனங்களைப் பகிர்ந்துகொண்டு பயணிக்கும் பழக்கம் தேவையாக இருக்கிறது. உங்கள் வாகனமும் ஒரு நேச வாகனமாக மாற ஓர் அரிய வாய்ப்பு. இரண்டாம் உலகப் போரின்போது பெட்ரோல் தட்டுப்பாடு இருந்தது. அப்போது கார் பூலிங்கை உற்சாகப்படுத்த செய்த ஒரு விளம்பரத்தை (இதில் கார் ஷேரிங் என்கிறார்கள்) பாருங்கள். நுண்ணிய நகைச்சுவை புரிகிறதா?