
''பெருமாள் கோயில் திருவிழா வரட்டும்... அவனுங்க ரெண்டு பேரையும் பொலி போட்றேன்..."
போலீஸுக்கும் எனக்கும் படா தோஸ்து உறவு! '12 ஆண்டுகளுக்கு முன்’ என்ற பின் நினைவு டைட்டில் கார்டுடன் தொடங்குகிறது அது.
அன்று நாச்சியார்கோவிலில் இலியாஸை பிக்கப் பண்ணிக்கொண்டு, கும்பகோணம் விஜயா தியேட்டரில் மேட்னி போவதாகத் திட்டம். தீபாவளி துணிக் கடை விளம்பரம் மாதிரி நண்பன் பளீர் வேட்டி-சட்டையில் நின்றான். இருவரும் தெருவில் இறங்கி நடந்து திரும்பும்போது, இரண்டு போலீஸ்காரர்கள் எங்களைப் பின்தொடர்வதைக் கண்டேன். அலட்சியமாக என்னிடம் திரும்பிய இலியாஸ், ''மாப்ள... அப்பிடியே மெதுவா மூவ் பண்ணு...' என்றான். எனக்குப் பகீர் என்றது.
''என்னடா... எதாச்சும் பிரச்னையா?'
''மூவ் பண்றா...'

அதற்குள் போலீஸ்காரர்கள் தபதப எனத் துரத்த ஆரம்பிக்க, சிதறி ஓட ஆரம்பித்தோம். சரியாகத் தெரு முக்கில் திரும்பும்போது பஸ் வர, படிக்கட்டில் தவ்வி ஏறினான் இலி. பின்னாலேயே 'கிழக்கே போகும் ரயில்’ க்ளைமாக்ஸ் ராதிகா மாதிரி ஓடிய எனக்கு, எதிர்பாராத கணத்தில் முதுகில் சொட்ட்ட்டேரென்று லத்தி இறங்கியது. அலறி ஸ்தம்பித்த நொடியில்... இன்னொரு அடி. கால்கள் பின்னி, கண்கள் இருளும்போதே கோத்து இழுத்து பஸ்ஸுக்குள் ஏற்றினான் இலியாஸ். கலவரமாகப் பார்த்த கண்டக்டரிடம், விரித்த கையில் கட்டை விரலை மட்டும் மடக்கி ஒரு 'சிக்னல்’ வணக்கம் போட்டான். கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு இருக்கும் இலியாஸ், இப்படி ஏகப்பட்ட நட்பு சிக்னல்கள் வைத்திருந்தான். நான் கிட்டத்தட்ட பஸ்ஸுக்குள் மூர்ச்சையாகி விழுந்தேன்!
பஸ் ஸ்டாண்டில் என்னைக் கைத்தாங் கலாக இறக்கி, சைக்கிள் ஸ்டாண்டில் உட்காரவைத்து, கோல்டு ஸ்பாட் வாங்கி வந்தான் நண்பன்.
''வலி பின்னுது மாப்ள...''
''பெருமாள் கோயில் திருவிழா வரட்டும்... அவனுங்க ரெண்டு பேரையும் பொலி போட்றேன்...'
''அது இருக்கட்டும்ரா... நம்மளை ஏன்டா போலீஸ் தொரத்துச்சு?'
''அரசியல் மாப்ள... நாளைக்கு எதிர்க் கட்சி பந்த்ல... அதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா தி.மு.க-காரன் எல்லாரையும் அரெஸ்ட் பண்றானுங்க. நாந்தானே இளைஞரணித் துணைச் செயலாளரு...' அப்போதுதான் அவனது வேட்டியில் கறுப்பு-சிவப்புக் கரையைக் கவனித்தேன்.
''இதுக்கெல்லாம் பயந்து கொள்கைய விட்டா, அரசியல்ல வளர்ச்சி இருக்காது மாப்ள. இன்னிக்குப் பயப்படாம இப்பிடி வந்தாதான், கட்சியில ஒரு அட்டென்ஷன் வரும். சிட்டிபாபுலாம் மிசால அடி வாங்கி செத்தே போயிட்டாப்ல. தளபதிக்கு இன்னும் உடம்பு முழுக்கத் தழும்பு இருக்காம்... நம்ம சும்மா உட்ர முடியுமா மாப்ள...'
''அதுக்கு நீ அடி வாங்கலாம்... நான் எதுக்கு வாங்கணும்?'

அடுத்த முறை என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துப்போனது ஒரு நாய். நிஜமாகவே நிஜ நாய்!
கருமத்தம்பட்டியில் பாலிடெக்னிக் படிக்கும்போது, ஏரியா கவுன்சிலர் வீட் டுக்கு எதிர்த் திசையில் அறை எடுத்துத் தங்கி இருந்தோம். என் வகுப்பு மற்றும் அறைத் தோழன் ஜெகத், கல்லூரியின் வசூல் ராஜா. ஒரு முறை பஞ்சாபி தாபாவில் மூன்று பீர் குடித்துவிட்டு, ஏதோ ஒரு லாரியில் ஏறிப் படுத்து, ஆந்திரா வரை போய்த் திரும்பியவன். மூன்றாவது செமஸ்டர் முடிவில் முறையே எனக்கு 5, அவனுக்கு 7 அரியர்கள்.
அந்தக் கடுப்பில் அவன் நடந்து வரும் போது, தெருவில் இரண்டு நாய்கள் 'என்னமோ ஏதோ...’ கொண்டாடி இருக் கிறது. பயல் மிருகமாகிக் கல் எறிந்ததில், ஆண் நாய்க்குக் கால் முறிவு. கொஞ்ச நேரத்தில் ஏரியா பரபரப்பானது. காரணம், அடிபட்ட நாய் ஒரு கவுன்சிலர் வீட்டு ப்ளாக்கி. அடுத்த ஒரு மணியில் ஜெகத்தை போலீஸ் வந்து அள்ளிப்போனது. 'கேவலம் ஒரு நாய்க்காக மாணவனைக் கைது
செய்வதா..?’ என்ற ஆவேசத்தோடு நாங்கள் குரூப் கட்டி சாலை மறியலில் இறங்கினோம். கொஞ்ச நேரத்தில் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வந்தார்.
''ஃப்ரெண்ட்ஸ்... எதுவா இருந்தாலும் வாங்க ஸ்டேஷன் போய்ப் பேசலாம்...' என்றார் இன்முகத்தோடு.
''அதெல்லாம் முடியாது சார்... ஜெகத்தை ரிலீஸ் பண்ணிட்டு மன்னிப்பு கேளுங்க...'
''அதுக்குத்தான் கூப்பிடுறேன். நீங்க ஸ்டூடன்ட்ஸ்... விஷயம் சீரியஸானா, எங்களுக்குத்தானே கெட்ட பேரு. ப்ளீஸ் ஃப்ரெண்ட்ஸ்... ஸ்டேஷன்லவெச்சு முடிச் சுக்கலாம்'- உலகப் பணிவின் பிராண்ட் அம்பாஸடர் மாதிரி இருந்தார் இன்ஸ் பெக்டர். ''இப்போ புரியுதா ஸ்டூடன்ட்ஸ் பவர்'' எனக் கண்ணடித்தான் பகவதி.
ஸ்டேஷனில் ஜெகத், ஜன்னி வந்த முயல் மாதிரி உட்கார்ந்து இருந்தான். இன்ஸ்பெக்டர் எங்களைப் புன்னகையோடு உட்காரச் சொன்னார்.
''உங்களை மீறி நாங்க என்னப்பா பண்ணிர முடியும்?'
''பரவாயில்ல சார்... அந்த கவுன்சிலரை வந்து எங்கிட்ட ஸாரி கேக்கச் சொல்லுங்க. முடிச்சுக்கலாம்...' என்ற கேசவனை, ''உங்க பேரு என்ன தம்பி... இங்க வாங்க' என பாசமாக அழைத்தார். பக்கத்தில் போன வனுக்கு, மின்னல் நொடியில், பொளேர் என்று விழுந்தது ஓர் அறை. சுதாரிப்பதற்குள் மொத்த பேரையும் போட்டுப் பொளக்க ஆரம்பித்தார்கள். 'போலீஸ் புத்தி’ என்பார் களே... அதைப் புரிந்துகொண்ட முதல் தருணம் அது. கதவைச் சாத்திக்கொண்டு தூக்கிப் போட்டு மிதிக்க, ஆளாளுக்குக் காலில் விழுந்து கதற ஆரம்பித்தோம்.

''ஸ்டூடன்ட்ஸ்னா என்ன பெரிய ....டா? யோவ்... போன் போட்டு இவனுங்க அப்பனுங்களை எல்லாம் வரச் சொல்லு...' என இன்ஸ்பெக்டர் சொன்ன நொடியில், பகவதி ஓடிப் போய் அவரைக் கட்டிப் பிடித்து அழுதான்.
''வேணாம் சார்... ப்ளீஸ். நாங்கவேணா கவுன்சிலர்கிட்ட ஸாரி கேக்குறோம் சார்...'
''போலீஸ்னா என்ன ரோட்ல போற நாயா..? அடுத்த தடவை எவனையாவது இப்பிடிப் பார்த்தேன்... அடிச்சுத் தொங்க விட்டுட்டு, செமஸ்டர் ரிசல்ட்டால சூஸைடுனு சொல்லிருவேன்.போங்கடா...'
அன்று இரவு தாபாவில் பீர் அடித்து விட்டு ஜெகத் சொன்னான்...
''மாப்ள... எனக்கு ஒரு புள்ள பொறந்தா, அவன நாயும் போலீஸும் இல்லாத ஊர்ல தான் படிக்கவைப்பேன். இது சத்தியம்!'
திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தபடி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய நேரம். ஒரு சாயங்காலம் கம்பெனி தொலைபேசியில் அருளானந்தம் வந்தார்.
''தோழர்... காலைல குமரன் சிலை பக்கம் வந்துருங்க...'
''என்னண்ணே..?'
''டங்கனை எதிர்த்து ஆர்பாட்டம். மறக்காம வந்துருங்க தோழர்...'
காலையில் கறுப்பு டி-ஷர்ட் மாட்டிக்கொண்டு கிளம்பினேன். ஆர்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், மூன்று அம்பாஸடர் கார்கள் புழுதி பறக்க வந்து நின்றன. ''அமெரிக்காவுக்கும் அதன் அடிவருடி நாடுகளுக்கும் இந்தியச் சந்தை யின் கதவுகளைத் திறந்துவிடும் அரசே... உள்ளூர்த் தொழில்களின் நசிவைப் பற்றி...' என அருளானந்தம் பேசிக்கொண்டு இருந்தபோதே அம்பாஸடர் கும்பல் கூட்டத்தில் நுழைய, கலவரம் வெடித்தது. யார் என்ன என்றே தெரியாமல் அனாமத் தாக எனக்கும் சில பல அடிகள் விழுந்தன. எங்கெங்கு இருந்தோ கற்கள் பறந்து வர, தலைக்குள் பூச்சிகள் பறந்தன. புழுதி அடங்குவதற்குள் போலீஸ் வந்தது. அருளானந்தம் மண்டை உடைந்து ஓரமாக சுருண்டுகிடந்தார். எங்கள் தரப்புக்குப் பலத்த சேதாரம். அப்படியே எங்களை வேனில் அரசு மருத்துவமனைக்கு அள்ளிப் போனார்கள். முதலுதவி முடித்து, கோயம் புத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பொதுச் சிறைக்குக் கொண்டுபோனார்கள். வேனில் பக்கத்தில் இருந்த போலீஸ்காரரிடம் அருள் கேட்டார்,
''ஏனுங்க... கலவரம் பண்ணது அவனுங்க. எங்களை எதுக்கு ஜெயிலுக்குக் கொண்டுபோறீங்க?'
''நாங்க என்னங்க பண்றது... மேலிடம் சொல்றதைச் செய்றோம். இது சும்மாங்க... அரசியல் கைதிகள் லிஸ்ட்ல நாலஞ்சு நாள் உள்ளவெச்சுட்டு விட்ருவாங்க. உள்ள நம்ம ஆளுங்க இருக்காங்க, ஏதாச்சும் வேணும்னா கவனிக்கச் சொல்லவா?'
ஒரு வாரம் சிறைச் சுற்றுலா. ஒரு பெரிய ஹாலில் 20, 30 பேர் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டோம். சிறைச் சாப்பாட்டைச் சாப்பிட்டு, அப்படி ஓர் இடத்தில் தியாகு மாதிரியானவர்கள் பல வருடங்கள் வாழ்ந்ததை நினைத்தால் இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது. பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் பழகிக்கொண்ட சிறை வாழ்க்கையின் வனாந்தரங்கள் மிகக் கொடூரமானவை. கண்ணீரும் ரத்தமும் உயிருமானவை. எங்களைப் போன்ற, ஒரு வார அரசியல் கைதிகளுக்கு, கொடுமையான சாப்பாடு, பாத்ரூம் அவஸ்தைகள் தவிர்த்து, அது சும்மா ஓர் அனுபவம்.
காலையில் எழுந்ததும் மற்ற கைதிகளுக்குமாகச் சேர்த்து மாவோவையும் சே குவேராவையும் பேச ஆரம்பிப்பார் அருள். அதிகாரிகள் வருவது தெரிந்தால், அரசியல் கோஷம் போட ஆரம்பிப்பார். பின்னாலேயே நாங்களும் கோஷம் போடுவோம். சாயங்காலம் முழுக்க மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பாடல்கள் களைகட்டும். அங்கே 'கட்ட’ கோபால்தான் 'சப்ளையர்’. எப்போ தும் போலீஸ்காரர்களைக் கிண்டல் பண்ணிக்கொண்டு, எல்லாக் கைதிகளோடும் ஏதாவது பேசியபடி சுற்றிக்கொண்டு இருப்பார். எங்கள் ஹாலுக்கு அவ்வப்போது வந்து காசுக்கு பீடி, சிகரெட் சப்ளை செய்வார். ஒரு நாள் சொன்னார்,
''நீங்கல்லாம் கெஸ்ட் மாரி வந்துட்டுப் போறீங்க. உங்களுக்கு ஜாலியாத்தான் இருக்கும். உள்ள இருக்கறவங்களுக்கு எல்லாம் இது நரகம். குடும்பம் குட்டினு விட்டுட்டு வந்து, அவனவனும் செத்துச் சுண்ணாம்பாகுறான். தப்புப் பண்ணிட்டு வந்து, இங்கே இருந்து திருந்திப் போறவன் கொஞ்சம்தான். இன்னும் கொடூரமாப் போறவன்தான் அதிகம். விசாரணை, கோர்ட்டு, ஜெயில்னு போயிட்டீன்னா... நீ அழிஞ்ச தம்பி. எத்தனை பேர் நாசமாப் போயிருக்கான் தெரியுமா..? இந்த போலீஸ் அதிகாரிக இருக்காங்களே... மகராசனுங்க எப்போ, எப்பிடி இருப்பாங்கன்னு எவனுக் குமே தெரியாது...'
''நீங்க எதுக்குண்ணே வந்தீங்க..?'
''இந்தா... இந்த சப்ளைக்குத்தான். சின்னச் சின்னதா திருட்டு கேஸ்னு சுத்திட்டு இருந்தேன் தம்பி. போலீஸாப் பார்த்துதான் இப்பிடி ஒரு வேலையப் போட்டுக் குடுத்துச்சு. எதாவது சும்மா கேஸைப் போட்டுக்கிட்டு வந்துருவேன். வெளிய விக்கிறதைவிட இங்க டபுள், ட்ரிபிள் மடங்கு ரேட்டு. எனக்குப் பாதி, போலீஸுக்குப் பாதி!'
சென்னைக்கு வந்த பிறகு 'நீயா நானா’ வுக்குச் சிறப்பு விருந்தினராகப் போகிற மாதிரி ஆகிவிட்டது காவல் நிலையங்களுக் குப் போவது. சரக்கு அடிக்கிற நண்பர்களும் பேட்ரோல் வண்டிகளும் இருக்கிறவரை இந்த நிலை நீடிக்கவே செய்யும். சமீப நள்ளிரவில், மொபைலில் ஆறு முறை அலறிய மோகன் நம்பரைப் பார்க்காமல் தூங்கிவிட்டேன். காலையில் கூப்பிட்டால் ஸ்விட்ச்டு ஆஃப். சாயங்காலம் அறைக்குப் போனால், கையில் கட்டுடன் உதடு கிழிந்து உட்கார்ந்து இருந்தான். என்னைப் பார்த்ததும் அவனுக்குக் கிழிந்த உதடு துடித்தது.
''மனுஷனாடா நீ... ஒரு மனுஷன் என்ன கண்டிஷன்ல இருக்கான்னு உணர வேணாம்...'
''தூங்கிட்டேன் நண்பா... என்னாச்சு..?'
அசோக் நகர் டாஸ்மாக் ஒன்றில் நண்பனுடன் சரக்கடித்துவிட்டு, போதையில் தனது வண்டிக்குப் பதில் இன்னொரு வண்டியில் சாவி போட்டு இருக்கிறான் மோகன். சம்பந்தப்பட்டவர் ஓடி வந்து கேட்க, வார்த்தைகள் முற்றி கைகலப்பாகி விட்டது. மிகச் சரியாக வந்த பேட்ரோல் வண்டி அப்படியே எல்லோரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு ஸ்டேஷனுக்குப் போக, அங்கே வைத்து விழுந்ததுதான் செம குண்டு.
மோகன் எடுத்துப்போனது அவன் நண்பனின் பைக். அந்த நண்பன் டியூவுக்கு வண்டி வாங்கி, சேட்டுக்குப் பணத்தைக் கட்டாமல் சவூதிக்கு ஒட்டகம் மேய்க்கப் போய்விட்டான். சேட்டு அதே ஸ்டேஷனில் அந்த வண்டி திருடு போய்விட்டதாக ஏற்கெனவே புகார் கொடுத்து இருக்கிறார். மோகனின் வண்டி நம்பரை செக் பண்ணும் போது இது தெரியவர, அடிதடி கேஸோடு திருட்டு கேஸும் போனஸாக புக்கானது. போதையில் ஒரு சாவியை மாத்திப் போட்டதற்குப் பின்னால், இத்தனை ட்விஸ்ட்டுகளை மோகன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.
''ஓஹோ... இப்பிடிப் போதையைப் போட்டு வண்டி திருடுறதுதான் சார் ஜாப்போ? டேய்! நம்ம தினத்தந்தி ரிப் போர்ட்டருக்கு போன் பண்ணி போட்டோகிராஃபரோட வரச் சொல்லு... 50, 100 வண்டிக தேறும்போல இருக்கே...' என மோகனை ஏதோ அல்-கொய்தா புதுத் தலைவர் ரேஞ்சுக்குக் கட்டம் கட்டி பரோட்டா கொத்திவிட்டார் எஸ்.ஐ. கடைசியில் யார் யாருக்கோ போன் போட்டு, 24 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்ட பின் எழுதி வாங்கிக்கொண்டு தான் விட்டனராம்.
கேரளக் காவல் துறையில் பல ஆண்டு கள் போலீஸ் வேலை பார்த்த ராமச்சந்திரன் நாயர் என்பவர் எழுதிய, 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி’ என்ற புத்தகத்தைப் படித்து இருக்கிறீர்களா? நக்ஸல் பாரி புரட்சியாளன் நர்கீஸை மேலதிகாரிகளின் குரூரமான வற்புறுத்தலால், தனது கையால் சுட்டுக் கொன்றதில் இருந்து, இந்தியக் காவல் துறையில் பணியாற்றும் ஒருவன், பொதுமக்களிடம் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறான், அதிகார மையங்கள் அவனை எப்படி எல்லாம் கேவலமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்பது வரை மிகத் தீவிரமாக எழுதப்பட்ட பதிவு அது.
உண்மையில் பிளாட்ஃபாரத் தில் இளித்துக்கொண்டு நிற்கும் போலீஸ்காரர்களை யார் உருவாக்குகிறார்கள்..? ரத்தம் வழிய வழிய... நாலு பேர் அடித்துக்கொள் ளும்போது ஒதுங்கி ஒளியும் போலீஸ்காரர் கள் எப்படி உருவாகிறார்கள்? சாலைகளிலும் கடைகளிலும் அனுதினம் பார்க்க நேரிடும் போலீஸ்காரர்களைக் கேவலமாகத் திட்டும் நமக்கு, பெரும் அரசியல் பேரங் களிலும் கலவரங்களிலும் கொலைகளிலும் பங்கு போட்டு நடத்தும் காவல் அதிகாரி களைத் தெரிவதே இல்லை. பெரும் பண அரசியல் புரிவதே இல்லை.
போலீஸ்காரர்களில் அற்புதமானவர் களை, நேர்மையானவர்களை, போராளி களை, எழுத்தாளர்களை, கலைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இங்கே நிறைய பேருடைய மனிதத்தை, அதிகாரமும் அரசியலும் தின்றுவிடுகின்றன.
கேவலமான அரசியல்வாதிகளின் கையில் காக்கிகளின் மனிதம் மழுங்கடிக்கப் பட்டுக்கொண்டே இருக்கிறது. அரசியலும், சாதியும், பணமும், காவல் துறையை இயக் கிக்கொண்டு இருக்கிறவரை வாச்சாத்தி களும் பரமக்குடித் துப்பாக்கிச் சூடுகளும் இந்தச் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். மனிதமும் அதன் பொருட்டு எழும் கோபமுமே போலீஸின் ஆயுதங்களைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சந்தர்ப்பவாதம் அல்ல!
தேர்தல் முடிவுக்கு அடுத்த வாரம் ஓர் இரவு, அண்ணா சாலை புகாரியில் சாப்பிடப்போனால், பக்கத்து டேபிளில் இலியாஸ் உட்கார்ந்து இருந்தான். அவன் எதிரே இரண்டு போலீஸ்காரர்கள். ''வா மாப்ள...'' என எக்கச்சக்கமாக சந்தோஷமானான். சாப்பிட்டு வெளியே வந்ததும் இரண்டு போலீஸ்காரர்களும் எங்களுக்கும் சேர்த்து பீடா வாங்கப்போனார்கள். லைட் வெளிச்சத்தில் அப்போதுதான் இலியாஸ் தே.மு.தி.க. வேட்டி கட்டிஇருந்ததைக் கவனித்தேன்.
''என்ன மாப்ள... கட்சி மாறிட்டியா..?' என்றதும் ஏப்பம் விட்டுக்கொண்டே சொன்னான்.
''அரசியல்ல வளர்ச்சி முக்கியம் மாப்ள. போலீஸைப் பாத்து நாம பயப்பட்டா... அது வீழ்ச்சி. நம்மளைப் பாத்து போலீஸ் பயப்பட்டா... அது வளர்ச்சி!''
(போட்டு வாங்குவோம்)
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan