மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கலைடாஸ்கோப் - 34

கலைடாஸ்கோப் - 34
பிரீமியம் ஸ்டோரி
News
கலைடாஸ்கோப் - 34

எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

விஷுவல் கார்னர்

கடவுளின் கலை

இயற்கையின் படைப்பில் உள்ள வடிவங்கள், வண்ணங்கள் எதுவுமே எந்த ஓவியர்களாலும் வடிவமைப்பாளர்களாலும் மீண்டும் செய்ய முடியாதவை. அந்தத் தாழ்வுமனப்பான்மையோ அல்லது சவாலோதான் மனிதர்களை விதவிதமான படைப்புகளை உருவாக்கச் செய்கிறதா? இயற்கை எனும் பேராற்றலின் முன்னால் மனிதர்கள், அம்மாவின் முன்னால் குட்டிக்கரணம் அடித்து தன்னைக் கவனிக்கவைக்கும் குழந்தைகளின் விளையாட்டு போலத்தான் இதை எல்லாம் செய்துகொண்டிருக்கிறார்களா?

கலைடாஸ்கோப் - 34

ரிகார்டோ சோலிஸின் (Ricardo Solis) ஓவியங்களைப் பார்க்கும்போது எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. இவருடைய ஓவியங்களில் மிருகங்கள், பறவைகள் எல்லாம் வண்ணம் அடிக்கப்பட்டோ, சிலை போன்று செதுக்கப்பட்டோ, விதவிதமாக உருவாக்கப்படுவதைச் சித்தரிக்கிறார். உயிரினங்களிடம் இயல்பாக உள்ள தன்மைகளை இவருடைய ஓவியங்களில் மனிதர்களே உருவாக்குவதுபோல மிகுந்த கற்பனைவளத்தோடு வரைகிறார். உதாரணம், நீர்யானை பார்ப்பதற்கு பலூன்போல வழுவழுப்பாக இருக்கிறது அல்லவா, ஹைட்ரஜன் பலூன்போல காற்றடித்துத்தான் அதை உருவாக்குவதாக ஓவியத்தில் காட்டுகிறார்.

கலைடாஸ்கோப் - 34

மெக்ஸிகோவில் பிறந்த சோலிஸுக்கு, சிறுவயதில் இருந்தே இயற்கை மற்றும் கலை மீது காதல். முறைப்படி ஓவியம் கற்ற சோலிஸ், தனக்கு விருப்பமான இயற்கையை வரைய ஆரம்பித்தார்.

வழக்கமான அறிவியல் இல்லஸ்ட்ரேஷன்களைப்போல இருக்கும் இவரது ஓவியங்களில் சின்னச் சின்ன மனிதர்கள், உயிரிகளை உருவாக்குவதை புன்னகை வருகிற மாதிரி வரைந்திருப்பார்.

`ஒரு பறவையின் இறக்கையை உருவாக்கக்கூட எவ்வளவு நுட்பம் தேவைப்படுகிறது' என, பார்வையாளர்களுக்குத் தோன்றுகிறது. `உலகில் இயற்கையில் உள்ள படைப்புகள் என்பது, எவ்வளவு திட்டமிட்டவையாக துல்லியமானவையாக இருக்கின்றன. இது கடவுளின் இருப்பை மறுக்க முடியாததாக ஆக்குகிறது' என ஆன்மிகமும் பேசுகிறார். நாமோ இயற்கையை நோண்டி நொங்கெடுத்துக்கொண்டே `அனுபவி ராஜானு அனுப்பிவெச்சான்...’ என, கடவுள் மீதே பழியைப் போடுகிறோம்.

கொலாஜ்

ஏப்ரல் ஃபூல்

ஏப்ரல் ஃபூல் ஆடுவதில், உலகம் முழுக்க உள்ள மீடியாக்காரர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். கீழே சுவராஸ்யமான ஐந்து ஏமாற்றங்கள்.

1962. பெரும்பாலான வீடுகளில் கலர் டி.வி-க்கள் வராத காலகட்டம். ஸ்வீடிஸ் நேஷனல் டி.வி நிறுவனம், தன் பார்வையாளர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. `உங்கள் வீட்டில் இருக்கும் நைலான் ஸ்டாக்கிங்குகளை டி.வி-யின் முன்னால் பொருத்தினால், நிகழ்ச்சிகளை கலரில் கண்டுகளிக்கலாம்' என்பதே அது. ஆயிரக் கணக்கான பேர் அன்று ஏப்ரல்-1 என்பது ஞாபகம் இல்லாமல் அதைச் செய்து, தங்கள் நைலான் ஸ்டாக்கிங்குகளைப் பொசுக்கிக்கொண்ட பின்னர்தான் ஞானம் அடைந்தார்கள்.

கலைடாஸ்கோப் - 34

1965. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின்போது, Smell-O-Vision டெக்னாலஜிபடி டி.வி பார்ப்பவர்கள் வாசனையையும் நுகரலாம் என அறிவித்தது BBC. முகர்ந்துபார்த்தவர்கள் மூக்கை சூடாக்கிக்கொண்டதுதான் மிச்சம்.

2008-ம் ஆண்டில் BBC, பறக்கும் பென்குவின்கள் பற்றிய ஒரு டாகுமென்டரி ட்ரெய்லரைக் காட்ட, பார்வையாளர்கள் மிரண்டுபோய்க் காத்திருந்தார்கள். மெய்யாகவே பென்குவின்கள் பறப்பதை தத்ரூபமாக 3D-யில் உருவாக்கி நம்பவைத்தார்கள். இப்போதும் இணையத்தில் அந்த ட்ரெயிலரைப் பார்த்தால் `சும்மா’ என நம்ப முடியவில்லை.

Patrick Moore என்கிற விண்வெளி வீரர், ஒரு ரேடியோ ஒலிபரப்பில் `பூமியுடன் மற்றொரு கிரகம் நேர்க்கோட்டில் வருவதால், குறிப்பிட்ட நாளில் சரியாக 9:47 மணிக்கு தரையைவிட்டு எகிறிக் குதித்தால், சில நிமிடங்களுக்கு அந்தரத்தில் மிதக்கலாம்' எனக் கதைவிட்டிருக்கிறார். அன்று ஏப்ரல்-1 என்பது ஞாபகம் இல்லாத பல நேயர்கள், எகிறிக் குதித்து முட்டியை உடைத்துகொண்டார்களாம்.

`ஐந்தாவது ஏமாற்றம் என்ன?' எனக் கேட்கிறீர்களா? முதல் வரியை மீண்டும் படிக்கவும்.

நானோ ஹிஸ்டரி

கிரயான்ஸ்

கிரயான்ஸ் (Crayons) வைத்து படம் வரைந்திருக்கிறீர்களா? `இல்லை' என்றால், நீங்கள் ஸ்கெட்ச், கலர் பென்சில் எனக் கேட்டு அடம்பிடித்த தலைமுறையாக இருக்கலாம். `இன்று சராசரியாக ஒரு குழந்தை 10 வயதுக்குள் 720 கிரயான்ஸ்களைக் காலிசெய்கிறது' என ஒரு புள்ளிவிவரம் படித்தேன். `அதுக்கும் மேல!’ என, சில பெற்றோர்கள் சண்டைக்கு வரலாம். நர்சரி பள்ளிகளின் புண்ணியத்தில் கடந்த 20 வருடங்களில்தான் இந்த கிரயான்ஸ் பயன்படுத்தும் வழக்கம் நம் ஊரில் அதிகரித்திருக்கிறது.

கலைடாஸ்கோப் - 34

ஆனால், உலக அளவில் கிரயான்ஸ்களின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கும் மேலே. தேனீக்களின் மெழுகுகளை உருக்கி, அதில் இயற்கை வண்ணங்களைச் சேர்த்து செய்த Encaustic ஓவியங்கள், 1,000 வருடங்களுக்கு முற்பட்டவை. இந்த முறையில் ஓவியங்கள் வரைவது, பிலிப்பைன்ஸ் நாட்டின் பழங்குடிகளிடம் இன்றும் புழக்கத்தில் உள்ளது. ஆனால், மெழுகை கிரயான்ஸ் வடிவத்தில் உபயோகப்படுத்தும் நவீனக் கண்டுபிடிப்பை 1903-ம் ஆண்டில் செய்தவர்கள் நியூயார்க்கைச் சேர்ந்த பின்னி மற்றும் ஸ்மித். உலக அளவில் கிரயான்ஸ் தயாரிப்பில் முன்னணியாக உள்ள கிரயோலா நிறுவனத்தை இதற்காகவே உருவாக்கினார்கள்.

யேல் யுனிவர்சிட்டியின் ஒரு சர்வேயில், `உலகில் இளம்பருவத்தினருக்குப் பிடித்த வாசனைகளில் இந்த கிரயான்களின் வாசனையும் ஒன்று' என்கிறார்கள். இந்த வாசனைக்கான பிரத்யேகக் காரணம், வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கிரயான்களின் மெழுகில் பயன்படுத்தப்படும் மாட்டின் கொழுப்பு. நம் ஊர் கிரயான்ஸ்களில் இது பயன்படுத்தப்படுகிறதா எனத் தெரியவில்லை. அப்படி இருந்தாலும் தப்பித்தவறி அவற்றைத் தடைசெய்து குழந்தைகளையும் கொந்தளிக்கவைத்துவிடாதீர்கள். ஒரு தகப்பனாக இது தற்காப்புக் கோரிக்கை.

நாஸ்டால்ஜியா நொட்

மரக்குரங்கு

மொபைலில் டெம்பிள் ரன் குரங்கு விரட்ட, தாவி ஓடிக்கொண்டிருந்தான் என் மகன். டார்வினின் பரிணாம வளர்ச்சியை நிரூபிப்பதுபோல 20 வருடங்களுக்கு முன்னர் நாமே குரங்காக மாறி மரங்களில் தாவிக்கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. பிரபலமான விளையாட்டான மரக்குரங்கைப் பற்றித்தான் சொல்கிறேன். இன்று மரங்களே இல்லாத காங்கிரீட் வனத்தில் குரங்குகளாக ஆபீஸுக்கும் வீட்டுக்கும் தாவிக்கொண்டு மரங்களின் அவசியம் பற்றி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுகிறோம்.

கலைடாஸ்கோப் - 34

மண்ணில் போட்ட வட்டத்துக்குள் இருந்து ஒரு குச்சியை கால்களின் வழியே கடாசிவிட்டு மற்றவர் எல்லாம் மரங்களில் ஏறிக்கொள்வார்கள். ஆடுபவன், குச்சியை ஓடிச்சென்று எடுத்து வந்து வட்டத்துக்குள் போட்டுப் பாதுகாக்க வேண்டும். அப்படியே மரங்களில் ஏறியிருப்பவர்களை விரட்டிச்சென்று தொட வேண்டும். அதற்குள் இன்னொருவன் மரத்தில் இருந்து இறங்கி வந்து குச்சியை எடுத்துக் கடித்தால், ஆடுபவன் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சிம்பிள் ரூல். கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், ஆடும்போது நம்மை அதகளப்படுத்தும்.

மரம் ஏறுதல், ஓடவிட்டு ஆட்டம்காட்டுதல் என உடலுக்கும் மனதுக்கும் வேலைவைக்கும் வழக்கமான நமது மரபு விளையாட்டுக்கள்போல இயற்கையுடன் இணைந்த விளையாட்டுக் களில் இதுவும் ஒன்று. அன்று பழைய சோறு சாப்பிட்டாலும் தெம்பாக மரம் ஏறும் அளவுக்குப் பசங்களுக்கு வலு இருந்தது. ஆனால் இன்றோ, எக்ஸாம் ஸ்டடிக்கு இடையே `எனர்ஜி டிரிங்க்’ கேட்கிறார்கள்.

அஞ்ஞானச் சிறுகதை

மகிமா

``எங்கள் மருத்துவம் உலகெங்கும் நுழைந்தது, யுத்தங்கள் வழியாக...” என்ற டாக்டர் லூயியை, கூர்மையாகப் பார்த்தான் எதிரில் இருந்த குள்ளக்கிழவன்.

“யுத்தக் களங்களில் சிப்பாய்கள் துரிதமாகக் குணமடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பக்கவிளைவுகளைப் பற்றி நாங்கள் கவலைப்படுவது இல்லை. இன்று அதைத்தான் எல்லோர் மீதும் பிரயோகிக்கிறோம். வேகம்தான் எங்கள் வெற்றி” என்றான் லூயி.

``ஆனால், நாங்கள் நோயின் கிளைகளை அல்ல... அதன் வேர்களை ஆராய்வோம். வேகம் அல்ல, விவேகம்தான் எங்கள் இலக்கு” என்றான் கிழவன்.

கலைடாஸ்கோப் - 34

``இந்தக் குள்ளக்கிழவனை இந்த கேப்சூலுக்குள் அடையுங்கள்” என்றான் லூயி.

பணியாளர்கள், கிழவனை அடைத்தார்கள்.

“இந்தத் தேசத்தவர்தானே நீங்கள்? உங்கள் ஆட்கள்தான் சிக்கலானவர்கள். குறிப்பாக, இந்தக் கிழவனைப் போன்றவர்கள். ஏதேதோ கதைவிடுகிறார்கள்.”

“அதெல்லாம் உண்மையாக இருக்கலாம் சார். இவர்கள் அஷ்டமாசித்தி பெற்றவர்கள்'' என்றான் ஒரு பணியாளன்.

“அப்படியென்றால்..?” என்று புருவம் தூக்கினான் லூயி.

“அணிமா முதல் வசித்துவம் வரை, எண் பெரும் சித்திகள். அவை, உங்கள் இயற்பியல் விதிகளுக்குச் சவால்விடுபவை” என்றான் இன்னொருவன்.

“சும்மா ஏமாற்று. இந்தக் கிழவனை கேப்சூலுடன் அழித்துவிடுங்கள்” என்று கத்தினான் லூயி.

கேப்சூல், அந்தரத்தில் மெள்ள எழுவதைப் பார்த்தான்.

“இது இலகிமா. காற்றைப்போல உடலை லேசாக்குதல்” என்றான் ஒரு பணியாளன்.

அடுத்த நொடி, கேப்சூல் சடாரென வெடித்துச் சிதறியது.

கலைடாஸ்கோப் - 34

“இது மகிமா. மலையைவிட உடலைப் பெரிதாக்குதல்” என்றான் இன்னொருவன்.

டாக்டர் லூயியின் ஆய்வகத்தைச் சிதறடித்தபடி வளரத் தொடங்கினான் கிழவன்.