
படம்: ஸ்டில் ராபர்ட்
`‘கதை நேரம்' படப்பிடிப்பு நாட்கள்தான் என் வாழ்வில் கிரியேட்டிவான, ஆக்கபூர்வமான நாட்கள். நான் ஆசைப்பட்டதை எந்த காம்ப்ரமைஸும் இல்லாமல் எடுக்க முடிந்தது’ என்பார் பாலு மகேந்திரா சார்.
அவரது படைப்பாற்றலின் உச்ச நாட்களில் அவர் பணியாற்றுவதற்கு எங்கள் டீம் உறுதுணையாக முழு ஈடுபாட்டுடன் ஓடிக்கொண்டிருந்தது. தனது பட வேலைகளுக்காக, தங்கவேலவன் பாதியிலேயே சென்றுவிட்டார். எங்களால் முடிந்த அளவுக்குக் கடினமாக வேலைசெய்கிறோம் என்பது சாருக்கும் புரிந்திருந்தது. புது உதவி இயக்குநர்களைச் சேர்த்தால் எங்கள் வேலை பளு சற்று குறையும் என நினைத்தார். அப்போது, லயோலா கல்லூரியின் பண்பாட்டுத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் காளீஸ்வரன் சொன்னார் என, ஒருவர் என்னைப் பார்க்க வந்தார்.
‘`சாரிடம் உதவியாளராக சேர ஆசை'’ என்றார். எல்லா இயக்குநர்களிடமுமே சந்திக்க வருபவர்களைத் தடுத்து நிறுத்தி அனுப்ப ஒருவர் இருப்பார். மற்றவர் கண்களுக்கு அவர் வில்லனாகத்தான் தெரிவார். எங்கள் அலுவலகத்தில் அப்போது நான்தான் அந்த வில்லன். அவரைத் திருப்பி அனுப்பினேன். நான் இல்லாத சமயம் ஆபீஸுக்கு வந்தால், சாரைப் பார்த்து வேலைக்குச் சேர்ந்துவிடலாம் என எல்லோரும் பேசிக்கொள்வதுண்டு. ஒருநாள், வாய்ப்பு கேட்டு வந்த அவரை சார் பார்த்து ``என்ன வேண்டும்?'' எனக் கேட்க, ``உதவி இயக்குநராகச் சேரணும்'' என்றார். ‘`இல்லப்பா... இங்கே நிறையப் பேர் இருக்காங்க.
நீ வேற இடத்துல ட்ரை பண்ணு” என்றார் சார். புதிய உதவி இயக்குநர்கள் தேவை என்ற நிலை இருந்தபோதும், சார் உதவி இயக்குநர்களைத் தேர்வுசெய்யும் முறையே வித்தியாசமானது. சார் அறைக்குள் நுழைய, இவர் வெளியே நகர ஆரம்பித்தார். ஏதோ யோசித்தவராக சார் திரும்பி அவரிடம் “ஏய் நில்லுப்பா... என்ன படிச்சிருக்க?” என்றார்.
`‘பி.பி.ஏ சார்.'' ``சரி, நாளையில இருந்து வந்துடு.” ``உன் பேரு என்ன?'' ``விக்ரம் சுகுமாரன்.'' நான் சொன்னதுபோல, சார் உதவி இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதே தெரியாது. அடுத்த நாளே எங்களுடன் சேர்ந்துவிட்டார் விக்ரம். வந்தவர், சாரைப் பார்த்து காலில் விழ, பாக்கெட்டில் இருந்த சில்லறை எல்லாம் அலுவலகம் எங்கும் சிதறின. ‘`நல்லா இருடா... நல்லா இருடா... காசு எல்லாம் கொட்டுது. நல்லா தான் இருப்ப'’ என வாழ்த்தினார். சாருக்கு நான் ‘வெட்டி’ என்பதுபோல விக்ரம் ‘விக்கறோம்’. அப்படித்தான் அழைப்பார். அந்த விக்ரம் சுகுமாரன்தான் என்னுடன் இணைந்து ‘ஆடுகளம்’ படத்தின் வசனங்களை எழுதியவர், ‘மதயானைக்கூட்டம்’ படத்தின் இயக்குநர். ஆரம்பத்தில், அவரை ஆபீஸுக்குள்ளேயே விடாத நான், பின்னாட்களில் அவருடன் இணைந்து சிறப்பாகப் பணிபுரிவேன் என நினைக்கவில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த அபாரமான புரிதல் படப்பிடிப்பு சமயங்களில் பெரிதும் உதவியாக இருந்தது.
அப்போது நாங்கள் பார்க்கும் படங்களில் பெரும்பாலும் லெஃப்ட் ரைட் பிரச்னை இருக்கும். கேமராவுக்கு எந்தப் பக்கத்தில் லுக் கொடுக்க வேண்டும் என நடிகர்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இல்லையேல், அது தவறாகத்தான் போகும். லுக் எந்தப் பக்கம் கொடுக்க வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் தேறியிருந்தேன். விக்ரமுக்கு அந்தச் சந்தேகம் வந்துக்கொண்டே இருக்கும். இதை சார் அழகாகச் சொல்லிக்கொடுப்பார். `மாஸ்டர் ஷாட் எங்கே எடுக்கிறோமோ, அங்கே போய் நின்று கேமராவுக்கு எல்லோரும் எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டால் இந்தக் குழப்பம் வராது' என்பார். அதைப் புரிந்துகொண்ட பின்னர் எப்போதுமே லெஃப்ட் ரைட் குழப்பம் வருவது இல்லை. சாரின் உதவியாளர்களை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சரியாகச் சொல்வார்கள்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும் விக்ரமும் சைகையால்தான் அதிகம் பேசிக்கொள்வோம். ஒரு சீனை சார் விவரித்தால் அதற்குத் தேவையான ஸ்பெஷல் பிராப்ஸை விக்ரம் உடனே ரெடி செய்யப்போய்விடுவார். ‘இதை அப்புறம் எடுப்போம்ப்பா. பிராப்பர்ட்டீஸ் வேணும்' என சார் சொன்னால், நான் உடனே, ‘எல்லாம் ரெடி சார், எடுக்கலாம்' என்பேன். திட்டமிட்ட பொருட் களையே எடுத்துவராமல் சொதப்புபவர்களிடம் இந்த மாற்றத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. ஷூட்டிங்கில் செட் அசிஸ்டென்ட் மற்றும் புரொடக்ஷன் அசிஸ்டென்ட் இருவரும் முக்கிய மானவர்கள். கடைசி நொடியில் இயக்குநருக்குத் தோன்றும் விஷயங்களைத் தயார்செய்து தரவில்லை எனில், அந்த சீனே வீணாகலாம். எங்கள் செட் அசிஸ்டென்ட் பாஸ்கர் மற்றும் புரொடக்ஷன் அசிஸ்டென்ட் ராஜா இருவரும் அதில் கில்லிகள். அதிலும் ராஜாவிடம் ஏதாவது தேவை எனச் சொன்னால், பதில் ‘அண்ணே... ரெடிண்ணே!’ என்றுதான் வரும்.
ஒருநாள், மெளனிகா, ஜூனியர் பாலையா நடிக்க, ‘சிக்கனம்’ என்றொரு கதையைப் படமாக்கிக் கொண்டிருந்தார். கணவனுக்குவேண்டிய சாப்பாட்டைக்கூட சரியாகக் கொடுக்காமல் பணம் சேர்க்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் கதை. கடைசியில் அவர்கள் சேமிப்பு எல்லாம் திருடுபோய்விடும். அந்தப் படத்தில் ஒரு காட்சி. ஜூனியர் பாலையாவுக்கு மதிய உணவாக, நான்கு இட்லியும் வெங்காயமும் பச்சைமிளகாயும் மட்டுமே இருக்கும். பக்கத்து டேபிள்காரர்களின் பாக்ஸில் வெரைட்டியான உணவு வகைகள் இருக்கும். சார் ஸ்பாட்டில் வந்து சொல்ல, நானும் விக்ரம் சுகுமாரனும் தயாரானோம். காலையில் செய்த இட்லி கெட்டுப்போயிருந்தது. மதியத்துக்குள் தயார்செய்துவிடலாம் என்ற நம்பிக்கை. இட்லி வாங்க ராஜாவும் கிளம்பிப் போய்விட்டான். அதற்குள் சார் கேமராவை வைத்துவிட்டார். `டிபன்பாக்ஸைத் திறந்து, இட்லியையும் வெங்காயத்தையும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைய வேண்டும் ரகு' என சார் சொல்லியிருந்தார். ஜூனியர் பாலையாவை `ரகு' என்றுதான் சார் அழைப்பார்.
அவருக்குப் பக்கத்தில் `ஆடுகளம்' நரேன் மற்றும் பலர் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். மாஸ்டர் ஷாட். ஷாட் ரெடி என்றதும் பாக்ஸைத் திறந்தவர் அதிர்ச்சியடைந்தார். சாரும் `சூப்பர் ரகு' என முடித்துவிட்டார். அவரின் அதிர்ச்சி, இட்லியைப் பார்த்ததால் வரவில்லை. இட்லியே இல்லாததைக் கண்டு வந்தது என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். பின்னர், குளோஸப் ஷாட் எடுப்பதற்குள் ராஜா இட்லியோடு வந்துவிட்டான். கன்டினியூட்டியில் சார் எப்போதும் கவனமாக இருப்பார். எல்லா நடிகைகளுக்கும் முடியை பாதி காது வரை மறைக்கும்படி விட்டிருப்பார். சில பேர், ஷாட் இடைவேளையில் முடியை காதுக்குப் பின்னால் தள்ளிவிடுவார்கள். எடிட்டிங்கில் இதை சார் பார்த்துவிட்டால் அவ்வளவுதான். அவர் கோபத்தைப் பார்த்து நாங்கள் அலறுவது எடிட்டிங்கின்போதுதான். படப்பிடிப்பில் அவர் கோபப்பட்டால் அதை சரிசெய்ய எங்களுக்கு வாய்ப்பு உண்டு. எடிட்டிங்கில் ஒன்றுமே செய்ய முடியாது. நான் தப்பித்து, சிகரெட் பிடிக்க ஓடிவிடுவேன். கெளரிக்கு எப்போதுமே திட்டிலிருந்து விலக்கு உண்டு. விக்ரம் சுகுமாரன்தான் மாட்டிக்கொள்வார்.
அந்தச் சமயங்களில் சினிமாவிலேயே கஷ்டமான வேலை எடிட்டிங் என்பதுபோல நினைத்திருக்கிறோம். சாரின் அந்தக் கெடுபிடிதான் அவர் உதவியாளர்கள் அனைவரையும் படத்தொகுப்பில் பெரும் ஆளுமை உடைய இயக்குநர்களாக மாற்றியிருக்கிறது.
இன்னொரு எபிசோட், எங்களை ரொம்பவே படுத்தியது. மறுநாள் காலை ஷூட்டிங். நள்ளிரவு 1:45 மணி வரை டிஸ்கஷன் நடந்துகொண்டிருந்தது. நடிகர்கள் மற்றும் டீமுக்குச் சொல்லியாகிவிட்டது. அந்த நேரத்தில் சாருக்கு அந்தக் கதை திருப்தி அளிக்கவில்லை.
``வேற கதை இருக்காடா வெட்டி?'' என்றார். நானும் சுஜாதாவின் போலீஸ் ஸ்டேஷன் கதை ஒன்றைச் சொன்னேன். வாசலில் நின்றபடியே கேட்டவர், ``இதையே பண்ணிடலாம்டா... ஏற்பாடு பண்ணிடுங்க. நான் காலையில 5.30 மணிக்கு வந்துடுறேன்'' என்று சொல்லிவிட்டு சென்றார். அதற்குப் பின்னர் தேவையான பொருட்களைத் தயார்செய்துவிட்டு, லொகேஷனை கன்ஃபார்ம் செய்துவிட்டு நானும் விக்ரமும் அப்படியே காலை ஷூட்டிங்குக்குச் சென்றுவிட்டோம். அப்படி ராட்சசத்தனமாக வேலைபார்த்துக் கொண்டிருந்தோம். அதனால், உடல்நிலையும் பாதித்தது.

எனக்கு `மஞ்சள்காமாலை. எட்டு வார ஓய்வு. விக்ரமுக்கு அல்சர். அவருக்கும் எட்டு வாரங்கள் ஓய்வு தேவைப்பட்டது. `கதை நேரம்' ஒரு வருட வேலை என்பதால், எங்கள் டீமில் ஒருவர் ஓய்வு எடுப்பதும், புதியவர் வருவதும் தொடர்ந்தது. அப்படி வந்து சேர்ந்தவர்தான் சுரேஷ், `எத்தன்' படத்தின் இயக்குநர். அடுத்து திலகவதி அவர்கள் சொல்லி, பாலு சத்யா என்கிற இளைஞர் சாரை வந்து சந்தித்தார். சார், அவர் பேரைக் கேட்டதும், ‘`பாலசுப்ரமணியன்’' என்றார். நீண்ட மெளனத்துக்கு பின்னர் “உன்னை எல்லோரும் எப்படிக் கூப்பிடுவாங்க?” என்றார். “ `பாலு'னு கூப்பிடுவாங்க சார்” என்றார். ``நம்ம ஆபீஸ்ல உன் பேரு மணி. நம்ம ஆபீஸுக்கு ஒரு பாலு போதும்ப்பா'' என்றார் சார். சாரிடம் கிரெடிட் வாங்குவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. பத்து எபிசோடுகள் வரை ‘பயிற்சி இயக்குநர்கள்’ என்றுதான் எங்களுக்கு டைட்டிலில் போட்டார். சாரின் சீனியர் உதவியாளர்கள்கூட, ‘அப்ரென்டீஸ்களுக்கு டைட்டில் போட்ட முதல் டைரக்டர் நம்ம சார்தான்’ எனக் கிண்டலடித்தனர். 10 எபிசோடுகளுக்குப் பிறகு, நான், தர்மன், கெளரி ஆகியோர் உதவி இயக்குநர்கள் ஆனோம்; விக்ரம் சுகுமாரன் பயிற்சி இயக்குநர் ஆனார். அந்த கிரெடிட்டே என்னை இயக்குநர் ஆக்கிவிடும்... 52 வாரங்கள் முடிந்ததும் எல்லாம் நடந்துவிடும் என நம்பி இருந்தேன். இன்னும் 100 நாட்கள்தான், 10 எபிசோடுதான் எனக் கணக்கிட்டுக்கொண்டிருந்தேன்.
ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்க முடியும். ஒரு பக்கம் காதல் வேறு. ரூமுக்கு வந்து காத்திருக்கும் காதலியைப் பார்க்கக்கூட போக முடியாது. வீக் எண்ட் முடிந்தால் அவரும் காலேஜுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். இது எல்லாமே சாருக்கும் தெரியும். இரண்டு உதவியாளர்கள் இணைந்து ஒரு டீமாக வேலைசெய்தால், அது அவ்வளவு நிறைவாக இருக்கும். காலையில் ஸ்பாட்டுக்கு வரும் இயக்குநர் மாலை திரும்பிச் செல்லும் வரை கோபப்படாமல் இருந்தால், அந்த நாள்தான் உதவி இயக்குநர்களின் வாழ்வில் முழுமையான ஒரு நாளாக இருக்கும். நானும் விக்ரமும் இணைந்து அப்படி பல நாட்கள் சாரை கோபப்படாமல் பார்த்துக்கொண்டிருக் கிறோம். அதற்கு முன்பு, `இவர்களை எல்லாம் வைத்து எப்படி வேலை செய்யப்போகிறேன்?' எனக் கவலைப்பட்ட சார், ``மை பாய்ஸ் ஆர் தி பெஸ்ட்” எனச் சொல்லும் இடத்துக்கு நாங்கள் நகர்ந்திருந்தோம்.
அதற்குக் காரணம், எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த புரிதல்.
`கதை நேரம்' இன்னும் இரண்டே வாரங்கள்தான் என்ற நிலையில், ஒருநாள் மதியம் ஆபீஸில் பரோட்டாவும் மட்டன் வறுத்த கறியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
அப்போது வந்த சார் ``கதை படிச்சீங்களாப்பா?” என்றார். “கதைகள் இருக்கே சார்” என நாங்கள் சொல்ல, இன்னும் 13 எபிசோடுகள் `கதை நேரம்' நீட்டித்துவிட்டதாகச் சொன்னார். ‘`ஒரு வருஷம், 52 எபிசோடுகள்தானே சார் சொன்னீங்க?’' என்றேன். `‘அப்ப சொன்னேன். இப்ப எக்ஸ்டெண்ட் பண்ணிட்டோம். இதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா?'’ என அவர் சொன்னதும், எனக்கு அயர்ச்சியாக இருந்தது. மனதளவில் நான் மாற்றத்துக்குத் தயாராகியிருந்தேன். ‘இனி நான் டைரக்டர் ஆக வேண்டியதுதான்’ என்ற நிலையில், இன்னோர் ஆறு மாதங்களைச் செலவழிக்க என்னால் முடியவில்லை. விக்ரம் தயங்கினாலும், அவரும் குழப்பத்தில் இருந்தார். அன்று நள்ளிரவு தாண்டியும் என்னுடன் பேசிவிட்டு விக்ரம் கிளம்பினார். மறுநாள் ஷூட்டிங். விக்ரம் என் அறைக்கு வந்தபோது ``நான் ஷூட்டிங்குக்கு வரவில்லை'' என்றேன்.
``நீங்க போகலைன்னா நானும் போகலைங்க. என்னால சமாளிக்க முடியாது'' என்றார். இருவரும் கிளம்பி ‘கிளாடியேட்டர்’ படம் பார்க்கச் சென்றுவிட்டோம். ஆபீஸில் இருந்து ஆள் வந்து தேடியிருக்கிறார்கள். படம் நன்றாக இருக்கவே, அடுத்த காட்சியும் பார்த்தோம். சாரிடம் சொல்லவில்லை. சுரேஷிடமும் நரேனிடமும் சொல்லி அனுப்பினோம். சார் மெளனிகாவிடமும் சஷியிடமும் ‘`இப்படி சொல்லாம விட்டுட்டு ஓடுறவனத்தான் இவ்ளோ நாளா சப்போர்ட் பண்ணிட்டு இருந்தீங்க. நான் அவனை மன்னிக்கவே மாட்டேன். இனி `வெட்டி'ன்றவனுக்கு என் ஆபீஸ்லயோ, வாழ்க்கை யிலயோ இடமே இல்லை. அவனை வரவே வேணாம்னு சொல்லிடுங்க’' என்று சொல்லியிருக் கிறார். அவருடைய அந்த நியாயமான கோபத்தைச் சந்திக்க நானும் தயாராகத்தான் இருந்தேன். அதன்பின் `கதை நேர'த்தை சார் நான்கு வாரங்களில் நிறுத்திவிட்டார்.
- பயணிப்பேன்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan