அவள் 16
Published:Updated:

பன்ச் கிராஃப்ட் ஃப்ளவர்ஸ்!

பன்ச் கிராஃப்ட் ஃப்ளவர்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பன்ச் கிராஃப்ட் ஃப்ளவர்ஸ்!

கிராஃப்ட்

‘‘சின்ன வயசில் ஸ்கூல் ஃபங்ஷனுக்காக, கலர் கலரா காகித தோரணங்களை வெட்டி ஒட்டி செய்தது ஞாபகம் இருக்கா? கிட்டத்தட்ட அதே பாணியில், கலர் காகிதங்களில் குட்டி குட்டியாக பூக்கள் செய்வதுதான், பன்ச் கிராஃப்ட் ஃப்ளவர்ஸ். இதை டிசைன் டிசைனா நிறைய செய்து வெச்சுக்கிட்டா, பிறந்தநாள் பரிசுகள், கிரீட்டிங் கார்டு கவர்கள், போட்டோ ஃப்ரேம்கள்... இப்படி எதுல வேணுமானாலும் ஒட்டி, அழகுபடுத்தலாம். சிம்பிளான வழியில் செலவே இல்லாமல் உங்கள் குடும்பத்தினரையும் தோழிகளையும் அசத்தலாம்!’’ என்கிறார் சென்னை, தி.நகரில் ஆர்ட் அண்ட் கிராஃப்ட் வகுப்புகள் நடத்தும் ஹாரத்தி.

நாமும் செய்யலாமா?!

பன்ச் கிராஃப்ட் ஃப்ளவர்ஸ்!

தேவையானவை:

வண்ணக் காகிதங்கள் (விருப்பமான வண்ணங்களில்), சிறிய கத்தரிக்கோல், பசை (க்ளூ), ட்வீசர்ஸ் (முள் எடுக்கும் சிறிய இடுக்கி போன்றது), உருண்டையான முனைகொண்ட பிரஷ் (அல்லது உருண்டையான முனைகொண்ட பால் பாயின்ட் பேனா), ஃபோம் ஷீட் அல்லது `மெத்'தென்ற மேற்பரப்பைக் கொண்ட டைரி அட்டை.

செய்முறை:

படம் 1:
முதலில் காகிதத்தில் ரோஜாக்கள் செய்யலாம். சிவப்பு நிற காகிதத்தை, 5-க்கு 5 (செ.மீ) என்ற அளவில் ஒரு துண்டு, 4-க்கு 4 என்ற அளவில் ஒரு துண்டு, 3-க்கு 3 என்ற அளவில் 2 துண்டுகள் என வெட்டி எடுக்கவும். 

படம் 2: 5-க்கு 5 செ.மீ அளவில் வெட்டியிருக்கும் காகிதத் துண்டை எடுத்து, அதை முக்கோணமாக மடித்து, மீண்டும் அதை இன்னொரு முக்கோணமாக மடிக்கவும் (நான்காக மடிக்க வேண்டும்).

படம் 3: அதன் மேல், பால் பாயின்ட் பேனா அல்லது ஸ்கெட்ச் பேனாவால் பூவிதழ்கள்போல வரையவும்.

படம் 4: வரைந்த கோட்டின் மேல் அப்படியே வெட்டி எடுக்கவும். ஒரு பூ டிசைன் கிடைக்கும்.

படம் 5: இதேபோல, நான்கு காகிதத் துண்டுகளிலும் பூ வரைந்து வெட்டி எடுக்கவும். 

படம் 6: வெட்டிய பூ டிசைன்களை, ஃபோம் ஷீட் அல்லது மெத்தென்ற பரப்பின் மீது வைத்து, பிரஷ்ஷின் உருண்டை முனையால் அழுந்தத் தேய்க்கவும் (பால் பாயின்ட் பேனாவாலும் தேய்க்கலாம். இதனால், காகிதத்தின் பரப்பு மென்மையாக மாறும்).

படம் 7: ஒவ்வொரு பூ டிசைனையும், இரண்டு இரண்டு இதழ்களைவிட்டு (நான்கு பக்கமும்) வெளியிலிருந்து உள்நோக்கி, சிறிதளவு கத்தரியால் வெட்டவும் (கவனமாக வெட்டவில்லை என்றால், பூ டிசைன் இரண்டாக வெட்டுப்பட்டுவிடும்).

பன்ச் கிராஃப்ட் ஃப்ளவர்ஸ்!

படம் 8: பிறகு, ட்வீசரை (இடுக்கி) வைத்து, இதழ்களை லேசாகத் திருகிவிடவும். அப்போதுதான் நிஜ ரோஜா இதழ்களின் தோற்றம் வரும்.

படம் 9: ரோஜாவின் நடுப்பகுதி வருவதற்கு, இருப்பதிலேயே சிறிய காகித டிசைனை (3-க்கு 3) 4 துண்டுகளாக வெட்டி, சீட்டு விளையாடும்போது அடுக்குவதுபோல ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அப்படியே இடமிருந்து வலமாகச் சுருட்டிக்கொண்டே வந்து, கடைசியில் பசை தடவி ஒட்டவும்.

படம் 10: இதற்கு அடுத்த அடுக்கு செய்ய, 3-க்கு 3 அளவிலான மற்றொரு துண்டை எடுத்து, ஒரு இடத்தில் மட்டும் வெட்டிவிட்டு, ரோஜா இதழ்போல ஒன்றன் மேல் ஒன்றாக (அடுக்கடுக்காக வருவதுபோல) வைத்து ஒட்டவும். இதன் நடுவே, முதலில் செய்துவைத்திருக்கும் நடுப்பகுதிக்கான மொட்டு போன்றதை ஒட்டவும். 

படம் 11: அடுத்து, 4-க்கு 4 அளவிலான இதழையும் ஒரு இடத்தில் வெட்டிவிட்டு, அடுக்காக வைத்து, ஒட்டவும். ஏற்கெனவே செய்துவைத்த பூவை, இதன் நடுவே பசை வைத்து ஒட்டவும்.

படம் 12: கடைசியாக, 5-க்கு 5 அளவிலான பெரிய துண்டு காகிதப்பூ டிசைனையும் முன் சொன்ன முறையிலேயே வெட்டி ஒட்டி, அதன் நடுவே ரோஜாவை ஒட்டி, நன்கு காயவிடவும்.

படம் 13: இலை செய்ய, இளம் பச்சை நிறத்திலான காகிதத்தில் 2-க்கு 2 செமீ அளவில் 2 காகிதத் துண்டுகளை வெட்டவும். 

படம் 14: அதை நீளவாக்கில் சரிபாதியாக மடித்து, இலைபோல வரைந்து வெட்டி எடுக்கவும்.

பன்ச் கிராஃப்ட் ஃப்ளவர்ஸ்!

படம் 15,16: உருண்டை முனை பிரஷ்ஷால் நன்கு தேய்த்துவிட்டு, ரோஜாவின் கீழே இரண்டு இலைகளையும் ஒட்டவும்.

படம் 17: இதுபோல தேவையான அளவுகளில், டிசைன்களில், விருப்பமான நிறங்களில் பூக்கள் செய்து, அன்பளிப்பு கவர்கள், பரிசுப் பொருட்களின் பேக்கிங் மேலே ஒட்டி அலங்கரிக்கலாம். குழந்தைகளின் ப்ராஜெக்ட், ரெக்கார்டு நோட்டுகளையும் அழகுபடுத்தலாம்.

பன்ச் கிராஃப்ட் ஃப்ளவர்ஸ்!

``பேப்பரில் பூக்களைப்போல டிசைன்களில் பன்ச் செய்வதற்கு, பன்ச்சிங் மெஷின்கள் கிடைக்கின்றன. அவற்றில் நிறைய டிசைன்கள் இருக்கும். சிறிது விலை அதிகம். விரும்புபவர்கள் அந்த பன்ச்சிங் மெஷினை வாங்கி, கலர் காகிதங்களை பன்ச் செய்து, அந்த டிசைன்களை வைத்து விருப்பமான வடிவில் பூக்கள் செய்துகொள்ளலாம்’’ - பரிந்துரையுடன் முடித்தார், ஹாரத்தி!

பிரேமா நாராயணன் படங்கள்:சொ.பாலசுப்ரமணியன்