
ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 200ராமமூர்த்தி
அவஸ்தையில் ஆழ்த்திய அநாவசியங்கள்!

பஸ்ஸில் ஆபீஸுக்கு சென்றுகொண்டிருந்தேன். சிக்னலில் பஸ் நிற்க, செக்கிங் இன்ஸ்பெக்டர் ஏறினார். என் ஹேண்ட்பேக்கில் டிக்கெட்டைத் தேடோ தேடென்று தேடினேன். தேவையற்ற காகிதங்கள், சிறிய பொருட்கள் என ஒவ்வொன்றாக கையில் சிக்கின. டிக்கெட் மட்டும் கிடைக்கவில்லை. நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல், என்னிடம் அபராதம் வாங்கினார் செக்கிங் இன்ஸ்பெக்டர். பணம் போனது ஒரு பக்கம் என்றால்... மொத்தக் கூட்டமும் என்னைப் பார்த்ததில் அவமானமாகிவிட்டது எனக்கு! ஆபீஸ் சென்று பேக்கை மீண்டும் ஒருமுறை செக் செய்தபோது டிக்கெட் கிடைத்தது. முதல் வேலையாக என் ஹேண்ட்பேக்கில் இருந்த தேவையில்லாத பேப்பர் மற்றும் இத்யாதிகளைத் தூக்கி எறிந்தேன்.
என்னுடைய இந்த அனுபவம் உங்களுக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கும் என்று நம்புகிறேன் தோழிகளே..!
- ஆர்.வளர்மதி, போளூர்
தேர்வு நடத்துவோர் கவனத்துக்கு...

சமீபத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி - வி.ஏ.ஓ தேர்வில் நான் கலந்துகொண்டேன். தேர்வு நேரத்துக்கு அரை மணி நேரம் முன்பாகவே தேர்வு எழுதுபவர்கள் எங்கள் தேர்வு மையத்தில் அவரவர் இருக்கையில் அமர்ந்துவிட்டனர். 10 மணி தேர்வுக்கு, தேர்வு கண்காணிப்பாளர் 9.40 மணி அளவில் வந்தாலும், அவர் விடைத்தாளை தரவில்லை.. சரியாக 10 மணிக்கு மணி ஒலித்தவுடன் விடைத்தாளையும், வினாத்தாளையும் கொடுத்தார். அதன் பிறகு அவசர அவசரமாக பெயர், பதிவெண் எழுதி வட்டமிட்டு ஷேட் செய்வதால் பதற்றம் ஏற்பட்டது. இதே கதிதான் இதற்கு முன் எழுதிய குரூப்-2 தேர்விலும் நடந்தது. தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு சரியான விதிமுறைகள் தெரியாததே இதற்குக் காரணம்.
இதற்கு முன் மத்திய அரசு தேர்வு ஒன்றில் கலந்துகொண்டேன். அங்கு அரை மணி நேரம் முன்னதாகவே விடைத்தாள் கொடுத்து, விவரங்களைப் பூர்த்தி செய்யச் சொல்லி, பின் வினாத்தாளைக் கொடுத்து அதில் கொடுத்துள்ள அறிவுரைகளைப் படித்துக்கொண்டு இருக்க சொன்னார்கள். சரியாக 10 மணிக்கு சீல் பிரித்துக்கொள்ளலாம் என சொல்லப்பட்டது. இதனால் பதற்றமோ, நேர விரயமோ ஏற்படவில்லை.
மாணவர்கள் நேரத்தை வீண் அடிக்காத வகையில் கண்காணிப்பாளர்களுக்கு முறையான அறிவுரைகள் வழங்க... உரிய துறை அக்கறை செலுத்த வேண்டும்.
- ஆர்.ராஜேஸ்வரி, ஸ்ரீமுஷ்ணம்
இப்படியும் ஒரு `சிக்கனம்’!

சமீபத்தில் ஒரு நாள் என் குழந்தைக்கு இட்லி வாங்க ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். அங்கே கேஸ் சிலிண்டரை படுக்கவைத்து பயன்படுத்திக்கொண்டிருந்தனர். காரணம் கேட்டதற்கு... அவ்வாறு பயன்படுத்தினால், கேஸ் நீண்ட நாட்களுக்கு வரும் என்றனர். அதைக் கேட்ட எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்கள் சிக்கனம் என்ற பெயரில் ஆபத்தை வலிய வரவழைப்பதை உணர்ந்தேன்.
அறிவியல் ரீதியாக, சிலிண்டரை படுக்கவைத்து பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு வரும் என்பதில் உண்மையில்லை. அவ்வாறு செய்வது மிகவும் ஆபத்தானது என்பதுதான் உண்மை. சிலிண்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு பட்டியலே உள்ளது. என்னால் முடிந்த அளவு அவர்களிடம் எடுத்து சொல்லிவிட்டு வந்தேன்.
- என்.காவ்யா, போரூர்