
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

கார்த்திகை தீபத்தின்போது நம் ஊர் சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். இப்படி நெருப்போடு விளையாடுவது, பழங்குடிகள் பண்பாட்டில் உண்டு. `பூச்சிகளை விரட்டுவதற்குத்தான் இந்த மாதிரியான சடங்குகள் தோன்றியிருக்கும்’ என்று மானுடவியலாளர்கள் ஏதாவது காரணம் சொல்வார்கள். மானுடர்களின் அழகியல் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எல்லாவற்றிலும் ஒரு பயன்பாட்டு நோக்கத்தைப் போட்டுப்பார்க்கும் 19-ம் நூற்றாண்டு நுகர்வுச் சிந்தனைதான் இதற்குக் காரணம். கலை, இது எதற்குள்ளும் எளிதில் சிக்குவது இல்லை.

இங்கிலாந்தின் தேம்ஸ் நதிக்கரையில் வளர்ந்தவர் ட்ரெவர் லீட் (Trevor Leat). அவருக்கு தேம்ஸ் நதியில் மிதந்து வரும் மரச்சுள்ளிகளைக்கொண்டு உருவங்கள் செய்வது பிடித்தமான சிறுவயது விளையாட்டு. அதுவே அவரை ஸ்காட்லாந்தின் விவசாயிகள் மற்றும் மீனவர்களைத் தேடிச்சென்று மரப்பின்னல்களால் செய்யும் கூடைகள் போன்ற பொருட்களைக் கற்றுக்கொள்ளவைத்தது. பிறகு முழுநேர மரப்பின்னல் சிற்பக் கலைஞரானார்.

ட்ரெவர் லீட்-க்கும் சொக்கப்பனைக்கும் என்ன தொடர்பு? இன்று இவருடைய வில்லோ மரப்பின்னல் சிற்பங்கள், மேற்குலகின் பல நாடுகளில் நடக்கும் விக்கெர்மேன் (Wickerman) திருவிழாக்களில் கொளுத்தப்படுகின்றன. வில்லோ மரங்களில் இருந்து எடுக்கப்படும் நார்களை, பிரத்யேகமாக புராசஸ் செய்து பிரமாண்டமான சிற்பங்களை உருவாக்குகிறார். தீக்கு இரையாகப் போகிறது என்றாலும் பிரமாண்ட சிற்பங்களை மிக நுட்பமான அழகியலுடன் உருவாக்குகிறார் ட்ரெவர்.
எரியும் பிரமாண்ட சிற்பங்களை, திருவிழாக்களில் கண்டுகளிக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். நமக்கோ அரசியல்வாதிகளின் கொடும்பாவி எரிப்பைக் காணத்தான் கொடுத்துவைத்திருக்கிறது!

போ டோஸ்டர்
வரலாறு, சுவாரஸ்யமான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் சுவாரஸ்யமான, காண முடியாத மனிதர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் முகங்களை கடைசி வரை யாராலும் அடையாளம் காண முடிவது இல்லை. அப்படி ஒருவர், போ டோஸ்டர் (Poe Toaster).
எட்கர் ஆலன் போ, 19-ம் நூற்றாண்டின் பிரபல கவிஞர், எழுத்தாளர். எட்கர், 1849-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறந்துவிட்டார். அவர் இறந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 1930-ம் ஆண்டில் பால்டிமோரில் இருக்கும் எட்கரின் கல்லறையில் அவர் பிறந்தநாளான ஜனவரி 19-ம் தேதி, விடியற்காலையில் சில ரோஜா மலர்களும் எட்கருக்குப் பிடித்த கோக்னா (Cognac) மதுக்குவளையும் கூடவே ஒரு குறிப்பும் இருந்தன. அதை ரகசியமாக விடிந்தும் விடியாத அதிகாலையில் வந்து வைத்துச்சென்றது ஓர் உருவம். கடந்த 2009-ம் ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இது தொடர்ந்தது.
அந்த ரகசிய மனிதனின் முகம் யாருக்கும் தெரியாது. மீடியா அந்த மனிதனுக்கு வைத்த பெயர்தான் `போ டோஸ்டர்'. 70 ஆண்டுகளாக ஒருவரே வைக்க முடியுமா என்பதும் மீடியாவின் சந்தேகம். அதனால் தந்தைக்குப் பிறகு மகன் என்கிற `முகமூடி வீரர் வேதாளர்’ ஃபார்முலாபோல அந்த `போ டோஸ்டர்’ பலராக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அவன் வைத்துச்செல்லும் குறிப்பு
களில், `எட்கர்... உங்களை என்னால் மறக்க முடியாது’ போன்ற சின்னச் சின்னக் குறிப்புகள்தான் இருக்கும். இப்படி ஒரு வெறித்தனமான ரகசிய வாசகர் எட்கருக்கு இருந்திருக்கிறார். நம் ஊர் எழுத்தாளர்களுக்கு போ டோஸ்டர் ரேஞ்சுக்கு இல்லை என்றாலும், பிரெட் டோஸ்டர் வாங்கிக்கொடுக்கிற அளவுக்காவது வாசகர் கிடைக்க `எட்கர் ஆலன் போ’வின் ஆத்மாவை வேண்டுகிறேன்!

கதவு
கதவு தட்டும் ஓசை கேட்டது. டார்வின் எழுதிக்கொண்டிருந்த குறிப்புத்தாளின் மீது பேனாவை வைத்துவிட்டு, சோர்வாக எழுந்து, கதவை நோக்கி நடந்தார். வெண்தாடி, அங்கியின் காலரில் தாழ்ந்து உரசிக்கொண்டிருந்தது. டார்வின் ஹவுஸின் அறைகள் மெல்லிய குளிரில் உறைந்ததுபோல இருந்தன.
“யார்?” என்றார் கதவைத் திறக்காமல்.
``நான் உங்களுக்குப் பரிச்சயமற்றவன். ஆனால், உங்களுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது” என்று குரல் வந்தது
“நான் குறிப்புகள் எழுதும் நேரத்தில் யாரையும் சந்திப்பது இல்லை. நேர விரயம்” என்று சொன்னவர் மெலிதாக இருமிக்கொண்டார்.
“உங்களுடைய பரிணாமக்கொள்கை பற்றி கொஞ்சம் பேச வேண்டும்” என்றது குரல்.
“அதைத்தான் உலகமே ஒப்புக்கொண்டது அல்லவா... அதில் என்ன இப்போது சந்தேகம்? அதைப் பற்றி இந்த இரவில் பேச என்ன தேவை?” என்று வயதான கோபத்துடன் சொன்னார்.
`` `குரங்கில் இருந்து மனிதன் வந்தான்’ என்கிறீர்கள். யூகங்களையே ஆதாரம் ஆக்கினீர்கள். குரங்குக்கும் மனிதனுக்கும் நடுவில் என்ன எனக் கேட்டபோது, அது `மிஸ்ஸிங் லிங்க்’ அதாவது விடுபட்ட கண்ணி எனச் சொன்னீர்கள்” என்றது குரல்.
“ஆமாம்... அதற்கு என்ன?” என்றார் டார்வின்.
“அவை எல்லாம் கற்பனை என்கிறேன் நான்” என்றது குரல்.
``என்ன உளறுகிறாய்?” என்று படபடப்புடன் கேட்டார் டார்வின்.
“மிஸ்ஸிங் லிங்க்காக கற்பனையில் மட்டுமே வாழ்வது எவ்வளவு கடினம் தெரியுமா?” - கரகரப்பான பதில் வந்தது.
நடுங்கும் வயோதிக விரல்களால் டார்வின் மரத் தாழ்ப்பாளைத் திறந்தபோது ரோமங்கள் அடர்ந்த பாதங்களை முதலில் பார்த்தார்!

முகம்பார்க்கும் கண்ணாடி
ஒரு மலையாளப் படத்தில், கண்ணாடிகளே இல்லாத ஒரு மலைக் கிராமம் வரும். ஒரு தம்பதி வீட்டில் தவறுதலாக வந்துசேரும் கண்ணாடியில், கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்குத் தெரியாமல் கணவனும் கண்ணாடியை எடுத்துப் பார்த்துவிட்டு ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவார்கள்; குழம்புவார்கள். கண்ணாடியைக் கண்டுபிடிக்காவிட்டால், மனிதகுலம் அப்படித்தான் குழம்பியிருக்கும்.
மனிதர்கள் தண்ணீரைத்தான் கண்ணாடி போல முகம் பார்க்கப் பயன்படுத்தினார்கள். பிறகு, எரிமலையின் லார்வா கற்களை பாலீஷ் போட்டு கண்ணாடியாக்கி முகம் பார்த்திருக் கிறார்கள். கி.மு 6000-ம் ஆண்டைச் சேர்ந்த இந்த வகைக் கல் கண்ணாடிகளின் எச்சம், துருக்கி மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப் பட்டிருக்கிறதாம். நம் குறுந்தொகையில் `கையுங் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல...’ என்ற ஒரு பாடல் வரி கண்ணாடிப் பிம்பத்தைப் பற்றி பேசுகிறது. வழக்கம்போல `மெசபடோமியாவிலும் சீனாவிலும் காப்பர், பித்தளை எனப் பல்வேறு உலோகங்களைத் தீட்டி முகம் பார்க்கும் ஆடிகளாகப் பயன்படுத்தினார்கள்’ என்று இணையம் சொல்கிறது.
முகம்பார்க்கும் ஆடிகளைச் செய்ய கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், கண்ணாடிதான் மிகக் குறைந்த எதிரொளிக்கும் தன்மைகொண்டது. அது ஒளியை உள்வாங்கிக் கடத்தும். அதனால்தான் ஒரு பக்கத்தில் சில்வர் அல்லது க்ரோம் போன்ற உலோகப் பூச்சுகளைக் கொடுத்து, அதை எதிரொளிக்கும்படி செய்கிறார்கள்.
`கண்ணாடி உடைந்தால் நல்லது அல்ல’ என்பது காலில் குத்தும் என்பதால் வந்த நம்பிக்கை அல்ல. உலகம் முழுக்க ஆடியை வைத்து பல நம்பிக்கைகள் இருக்கின்றன. அதில் ஒன்று... மேற்குலகில் ஹாலோவீன் நாள் அன்று, பெண்கள் கண்ணாடியை தங்கள் முகத்துக்கு நேராகப் பிடித்துக்கொண்டு படிக்கட்டில் பின்னோக்கி இறங்கினால், தங்கள் எதிர்காலக் கணவனை உடனே காண முடியும் என்பது. எனக்கும் இது உண்மை என்றே படுகிறது. எதிர்காலக் கணவர் `எலும்பு முறிவு மருத்துவராக’ இருந்தால்!

பூப்பறிக்க வருகிறோம்
தொலைக்காட்சியில் முன்னர் எல்லாம் தொலைந்துபோனவர்கள் பற்றிய அறிவிப்பு வரும். ஆனால், தொலைக்காட்சியில் தங்களைத் தொலைப்பவர்கள் இன்றைய சிறார்கள் எனச் சொல்லத் தோன்றுகிறது. சிறுவர்களுக்கு `சோட்டா பீம்' என்றால், சிறுமிகள் டோராவுடன் கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள். முன்னர் சிறுமிகளுக்கு என்றே விளையாட்டுக்கள் இருந்தன. அதில் ஒன்று `பூப்பறிக்க வருகிறோம்’.
இந்த விளையாட்டில் சிறுமிகள் இரண்டு குழுவாகப் பிரிந்துகொள்வார்கள். `நானும் அந்தப் பக்கம் வர மாட்டேன்... நீயும் இந்தப் பக்கம் வரக் கூடாது’ டைப்பில் நடுவில் ஒரு கோடு. ஆடும் இரண்டு குழுக்களும் தங்களுக்குள் கைகளைக் கோத்துக்கொண்டு எதிர்க்குழுவை நோக்கி, `பூப்பறிக்க வருகிறோம்... வருகிறோம் இந்த மாதத்தில்’ எனப் பாடியபடி முன்னே செல்வார்கள். `எந்தப் பூவைப் பறிக்கிறீர்கள்... எந்த மாதம் பறிக்கிறீர்கள்?’ என எதிர்க்குழு அடுத்தடுத்து பாடுவார்கள். `சித்ரா பூவைப் பறிக்கிறோம்... சித்திரை மாதம் பறிக்கிறோம்’ என அதற்கு பதில் பாட்டு வரும். சித்ரா என்பது எதிர்க்குழுவில் இருக்கும் ஒரு சிறுமியின் பெயராக இருக்கும். சித்ரா இல்லை என்றால் சிந்துவோ, பிந்துவோ இருக்கும். கூட `பூ' எனச் சேர்த்துப் பாடவேண்டும். இப்படி இரண்டு பக்கங்களிலும் பூக்கள் தயாராகிவிட்டால், அவர்கள் இருவரும் கோட்டின் இரு பக்கங்களிலும் நின்று, ஒருவரை ஒருவர் இழுக்க வேண்டும். யார் இழுபட்டு கோட்டுக்கு அந்தப் பக்கம் போய்விடுகிறார்களோ, அவர்கள் எதிர்க்குழுவில் இணைந்துகொள்வார்கள். இப்படி எந்தக் குழுவில் கடைசி உறுப்பினரும் காலியாகிவிட்டார்களோ, அதன் எதிர்க்குழு வெற்றிபெற்றதாகக் கணக்கு. இதில் யாருக்கும் தோல்வி இல்லை என்பதுதான் அற்புதம். ஏனென்றால், இழுபட்டவர் எதிர்க்குழுவில் ஒருவராகிவிடுவார்தானே.

பூக்களின் பெயரைப் பட்டப்பெயராக வைத்து விளையாடும் வழக்கமும் உண்டு. மாதங்கள் பெயரைக்கூடச் சொல்வார்கள். பூக்கள் மாதங்கள் பற்றிய அறிவு, பாடுதல், உடல் திறன் என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விளையாட்டு. நிலா இரவுகளில் ராகத்தோடு பாடியபடி, சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்த கிராம முற்றங்கள் இன்று ட்யூஷன் செல்லும் சிறுவர்களைப் பார்த்தபடியோ, வீட்டுக்குள் இருந்து வரும் சீரியல் சதித்திட்ட டயலாக்குகளைக் கேட்டபடியோ சோகமாக அமைதிபூண்டு கிடக்கின்றன!