
படம்: ஸ்டில் ராபர்ட்
பாலு மகேந்திரா சாரிடம் இருந்து நின்ற பிறகு என் அன்றாட வாழ்க்கையே மாறியிருந்தது. ஷூட்டிங் நாட்களில் அதிகாலையில் எழுந்து கிளம்புவது எனக்குப் பெரும் சிரமம்.
அதனால் இனி காலையில் எழுந்திருக்க வேண்டாம் என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது. கோடை விடுமுறை கண்ட பள்ளி மாணவன்போல் அப்படி ஒரு சந்தோஷம். நண்பன் சக்தியும் மணிகண்டனும்தான் என் அப்போதைய அறைத் தோழர்கள். மணிகண்டன் பின்னாளில் இயக்குநர் ஆகும்போது மணிமாறன் ஆகிவிட்டார்.
விக்ரம் சுகுமாரன் அப்போது ரெட் ஹில்ஸில் இருந்தார். வாரம் மூன்று நாட்களாவது கதை விவாதத்துக்கு அறைக்கு வந்துவிடுவார். காலை 10 மணிக்குத்தான் எழுந்திருப்போம். டீ சாப்பிட்டுவிட்டு, ஏதேனும் ஒரு படம் பார்ப்போம். கொஞ்ச நேரம் கதைகள் பேசுவோம். மாலை கிளம்பிச் சென்று காதலியைப் பார்ப்பேன். அவ்வளவுதான். அந்த நாள் முடிந்துவிடும். எனக்கான நேரம் அதிகம் கிடைத்தது. சில நாட்கள் ஜாலியாகச் சென்றன. ஒருநாள் காதலியின் வீட்டில் திருமணம் பற்றிய பேச்சு வந்தது. என்னிடம் அவர் கேட்டபோது, `படம் பண்ணாம கல்யாணம் பண்றது இல்லைனு முடிவுபண்ணோமே’ என்பதைச் சொன்னேன். அவரும் `சரி’ என்றார்.
ஒருகட்டத்தில் எனக்குப் பயம் வந்தது. வாழ்க்கை ஓர் ஒழுங்கில் இல்லை என்பதை உணர்ந்தேன். அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, கிளம்பி, டீ குடித்துவிட்டு வந்து புது ஸ்கிரிப்ட் எழுதலாம் என அமர்ந்தேன். இரண்டு சீன்களுக்கு ஒன்லைன் மட்டுமே முடிந்திருக்கும். அதற்குள் சக்தி காலை டிபன் ரெடி செய்திருப்பான். அது, பெரும்பாலும் உப்புமாவாகத்தான் இருக்கும். சக்தியின் உப்புமாவை `பேச்சுலர்களின் டிலைட்’ எனலாம். அதேபோல, சாம்பார் வைப்பதில் மணி எக்ஸ்பர்ட். இதுவரை நான் சாப்பிட்ட சாம்பார்களில் மணி செய்ததுதான் பெஸ்ட்.

ஒரு நாள் ஷூட்டிங் சென்றாலே படம் இயக்கிவிடலாம் என நினைத்திருந்த எனக்கு, ‘கதைநேரம்’ தொடருக்காக 200 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தும் படம் இயக்கும் தைரியம் வரவில்லை. சீரியலில் வேலை செய்ததால்தான் அந்தத் தைரியம் வரவில்லையோ என நினைத்தேன். அப்போது சீரியல், டேப்பில் எடுப்பார்கள். சினிமா, நெகட்டிவில் எடுப்பார்கள். சினிமாவில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தால் நம்பிக்கை வந்துவிடும் எனத் தோன்றியது. (இப்போது சினிமாவும் சீரியலும் ஒன்றுதான்) அப்போது நாராயணன் (பின்னாளில் ‘ஆடுகளம்’ நரேன்), நடிகர் அர்ஜுன் தன் அடுத்த படத்துக்கு அசிஸ்டன்ட் தேடுவ தால் அங்கு வேலைசெய்யும் அவரின் நண்பர் பிரித்வியைப் போய்ப் பார்க்கச் சொன்னார். ஹோட்டல் உட்லண்ட்ஸில் கதை விவாதம் நடந்துகொண்டிருந்தது. அங்கே போய் ரெஸ்யூம் கொடுத்தேன்.
‘அடுத்த புதன்கிழமை மதியம் வந்து சேர்ந்துகொள்ளுங்கள்’ என்றார்கள். அந்தச் சமயத்தில் இயக்குநர் கதிரும் தன் அடுத்த படத்துக்கு அசிஸ்டன்ட் தேடுவதாகத் தெரிந்தது. அங்கேயும் ஒரு ரெஸ்யூம் கொடுத்து வைப்போம் என்று அவரின் அலுவலகம் சென்றேன். எப்படி பாலு மகேந்திரா சார் அலுவலகத்தில் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வருபவர்களை நான் தடுத்து நிறுத்தினேனோ, அதேபோல் அங்கே ஜெயக்குமார் என்பவர் என்னைத் தடுத்து நிறுத்தினார். எனக்குச் சிரிப்பு வந்தது. ரெஸ்யூம் கொடுத்துவிட்டுக் கீழே வந்தபோது, கதிர் சார் காரில் வந்து இறங்கினார். விஷயத்தைச் சொன்னேன். ‘எங்கேயாவது வேலைசெஞ்ச அனுபவம் உண்டா?’ என்றார் கதிர் சார். பாலு மகேந்திரா சாரிடம் வேலைசெய்ததைச் சொன்னதும், ‘அவரை விட்டுட்டு ஏன் வரணும்?’ என்றார். ஃபிலிமில் வேலைசெய்ய ஆசைப் படுவதாகச் சொன்னேன். என்னை அழைத்துக் கொண்டே மாடி ஏறினார். நான் ஆங்கில இலக்கிய மாணவன் என்றதும், நான் படித்த புத்தகங்கள் பற்றி எல்லாம் கேட்டுக்கொண்டே வந்தார். பின் அவரும் `அடுத்த புதன்கிழமை காலையில் வந்து பாருங்க’ என்றார்.
அர்ஜுன் சாரிடம் வேலை நிச்சயம். கதிர் சார் வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறார். அவரைக் காலையில் சென்று பார்த்துவிட்டு, மதியம் அர்ஜுன் சாரிடம் சென்று சேர்ந்துகொள்வதுதான் என் திட்டம். நேராக கதிர் சார் அலுவலகம் சென்றேன். கதிர் சார் என்னிடம், ‘உதவியாளர்கள் வேலைக்கு யாராவது வந்தால், சிறுகதை எழுதச் சொல்லிதான் சேர்த்துப்பேன்’ எனச் சொல்லியதும், கதை எழுத நான் தயாரானேன். சில நொடிகள் மெளனத்துக்குப் பிறகு தன் அசிஸ்டன்ட் ஜெகதீஷை அழைத்து, ‘காதல் வைரஸ்’ பட ஸ்கிரிப்ட்டை என்னிடம் தரச் சொன்னார். நான் இயக்குநர் கதிரிடம் உதவியாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டேன் என்பது எனக்குப் புரிந்தது. வாழ்க்கையில் எல்லா பெரிய விஷயங்களும் எனக்குச் சாதாரணமாக நடந்துவிடும்.
அப்படியான ஒருநாள் அது. லயோலாவில் படிக்கும்போது குறும்படம் எடுப்பதற்காக, அப்பா 15,000 ரூபாய் தந்திருந்தார். பள்ளி நாட்களில் ஒரு வார இதழில் படித்த ஒரு பக்கக் கதைக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன். அந்தக் கதையை எழுதியவரின் பெயர் மறந்துவிட்டது. பார்வையற்ற புல்லாங்குழல் கலைஞனையும் அவன் மனைவியையும் பற்றிய கதை. வசனங்களே இல்லாத படம். காலையில் ஒரு கோயிலின் முன்பாகத் துண்டை விரித்து அதன் முன் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்குவான். நெருங்கி வரும் காலடிச் சத்தங்களைவைத்தே வருகிறவர் வசதியானவரா, இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பான். ஷூ சத்தம் கேட்டால், சிரத்தையாக வாசிப்பான். சாதாரண ஹவாய் செருப்பு என்றால், சுமாராக முடித்துவிடுவான். கூடவே பெண்கள் வருகிறார்கள் என்றால், குழலில் ரொமான்ஸ் பொங்கும். மாலை நெருங்க நெருங்க, துண்டில் பணம் எதுவும் விழுந்திருக்காது.
அப்போது அவன் மனைவி 10 ரூபாயைச் சில்லறையாக மாற்றி வந்து, அவன் வாசிக்க வாசிக்க யாரோ போடுவதுபோலப் போடுவார். அதை அவன் சந்தோஷமாக எடுத்துச்செல்வதாக அந்தக் கதை முடியும். அதைக் குறும்படமாக எடுத்தபோதுதான் எங்களுக்கு சினிமாவில் ஒன்றுமே தெரியவில்லை என்பது புரிந்து வலித்தது. உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததற்கும் முந்தைய காலம் அது. லெஃப்ட் ரைட்கூட தெரியாது. அதற்காக அன்று எங்கள் டீமுக்கு வந்தவர் குருநாத். குருதனபால் மற்றும் ராஜ்சிப்பி ஆகிய இயக்குநர்களின் கோ-டைரக்டர். கேமராவை கல்லூரி நண்பன் மார்ட்டின் பார்த்துக்கொண்டான். நானும் சக்தியும் டைரக்ஷன் டீம். மணிகண்டன் புரொடக்ஷனைக் கவனித்துக்கொண்டான். ஷூட்டிங் முடிந்ததும் லயோலா கல்லூரி அருகில் இருக்கும் ஜனதா டீக்கடையில் நின்று, படப்பிடிப்பில் சொதப்பியதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.
எதுவுமே சரியாக வரவில்லை என்ற டென்ஷன். அப்போது என் தோழி ரஜினி ஹேமா வந்தார். உடன் அவரின் தோழி ஆர்த்தியும். அவரை அறிமுகப்படுத்தியதால், `ஹலோ’ என்றேன். ஷூட்டிங்கில் சொதப்பிய கடுப்பில் இருந்ததால், ஹலோவைத் தாண்டி எதுவும் பேசவில்லை. இருவரும் சென்றுவிட்டார்கள். அடுத்த நாள் கல்லூரிக்கு வந்த ரஜினி ஹேமா, ‘நீ சரியாப் பேசலைனு ஆர்த்தி ஃபீல் பண்ணினா’ என்றார். என்னைப் பற்றி ஹேமா, ஆர்த்தியிடம் பில்டப் செய்திருக்கிறார். எந்த விஷயம் நடந்தாலும் ‘வெற்றி இப்படிச் செய்வான். வெற்றி இதைச் சொன்னான், வெற்றி அதைச் சொன்னான்...’ இப்படி எல்லாவற்றிலும் என்னைப் பற்றி உயர்வாகச் சொல்வது ஹேமாவின் வழக்கம். மேலும் நான் ஹேமாவைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் பேச மாட்டேன் என்றும் ஆர்த்தியிடம் சொல்லியிருக்கிறார். அன்றும் அப்படியே நடந்துவிட, ‘ஹேமா சொன்னது மாதிரியே இவன் நம்மளைக் கண்டுக்கவே இல்லை’ என ஆர்த்தி நினைத்திருக்கிறார்.
அடுத்த சில நாட்களில், ஒரு முறை ஹேமாவைப் பார்க்க அவர் தங்கியிருந்த எக்மோர் ஒய்.டபிள்யூ.சி.ஏ ஹாஸ்டலுக்குச் சென்றிருந்தேன். மெயின்கேட்டில் இருந்து ஹாஸ்டல் உள்ளடங்கி இருக்கும். விசிட்டர்கள் சந்திக்கும் இடம் கேட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும். அங்கு ஆர்த்தி என்னைப் பார்த்ததும், ‘ஹாய் வெற்றி...’ என ஓடிவந்தார். அது, ஏதோ நீண்ட நாள் பழகிய தோழி ஒருத்தி ஆர்வத்துடன் ஓடிவருவதுபோல் இருந்தது. ஆனால், அது எங்களின் இரண்டாவது சந்திப்பு. என்னுடன் வந்த நண்பன் கரிகாலன் ஆர்த்தி ஓடிவருவதைப் பார்த்ததும் ‘மச்சான்... இந்தப் பொண்ணு உன்னை லவ் பண்ணுது போலிருக்கே’ என்றான். ஆர்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து ஹேமா வந்தார். அதன் பிறகு ஆர்த்தியைப் பார்க்கவா, ஹேமாவைப் பார்க்கவா என எனக்கே தெரியவில்லை. அடிக்கடி ஹாஸ்டலுக்குச் செல்ல ஆரம்பித்தேன். நேரில் பார்க்க முடியாதபோது ஆர்த்தியுடன் போனில் பேசுவேன்.

ஒருநாள் ஆர்த்தி, `உங்களைச் சந்திக்க வேண்டும்’ என்றார். `நாளை மாலை ஹாஸ்டலுக்கு வருகிறேன்’ என்றேன். `காலையிலேயே பார்க்கணும்’ என்றார். `அப்போ ஏழு மணிக்கு காலேஜ் வந்துடுறேன்’ என்றேன். ‘அஞ்சு மணிக்கே வந்துடு’ என்றார். தி.நகரில் சந்தித்தோம். பிறகு பெசன்ட் நகர் பீச்சுக்குச் சென்றோம். ஆர்த்தி எமோஷனலாக இருந்தார். ‘நாம் சந்தித்ததை ரஜினி ஹேமாவிடம் சொல்ல வேண்டாம்’ என்றார். நானும் ‘சரி’ என்றேன். பின், ஹேமாவுக்குத் தெரியாமலே நாங்கள் சந்திப்பதும் போனில் பேசுவதும் தொடர்ந்தன.
சில நாட்கள் சென்றன. ஒருநாள் ஹேமா, ‘ஆர்த்தி எப்பவும் போனிலே பேசிட்டிருக்கா. யாரையோ லவ் பண்றானு நினைக்கிறேன்’ என்றார். நானும் விளையாட்டாக, ‘ஏன்... அது நானாக்கூட இருக்கலாம்ல? ஆர்த்தியுடன் எப்போதாவது நானும் பேசுவது உண்டு’ என்றேன். ஹேமா நம்புவதாகத் தெரியவில்லை. அவருக்குத் தெரியாமல் நான் ஆர்த்தியிடம் பேசுவதாக நானே சொன்னாலும், அதை அவர் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அன்று ஹேமாவுக்குத் தெரியாத இன்னொரு பீச் சந்திப்பு. ஆர்த்தி நார்மலாக இல்லை. பீச் மணலில் ஹார்ட்டின்போல எதையோ வரைந்தும் அழித்தும்கொண்டிருந்தார். பதற்றமாக இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. திடீரென, ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்றார். நானும், ‘ஓகே... பண்ணிக்கலாம்’ என்றேன்.
திருமணம் என்பது வரை ஆர்த்தி தெளிவாக யோசித்துப் பேசியதால், சில விஷயங்களை முன்பே சொல்லிவிடலாம் எனத் தோன்றியது. ‘இப்பதான் சினிமாவுக்குப் போயிருக்கேன். எப்ப படம் பண்ணுவேன்னு தெரியல. பத்து வருஷம்கூட ஆகலாம். அவ்ளோ நாள் வெயிட் பண்ண முடியுமானு பார்த்துக்கோ. உன்னை வெயிட் பண்ணச் சொல்ற உரிமை எனக்கு இல்ல’ எனச் சொன்னேன். ‘காத்திருப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ எனத் தீர்க்கமாகச் சொன்னார் ஆர்த்தி. ஆனால் ‘இவன் சும்மா சொல்றான். கண்டிப்பா ரெண்டு வருஷத்துல படம் பண்ணிடுவான்’ என்ற எண்ணம் ஆர்த்திக்கு. அப்போது சினிமா பற்றிய எந்த விஷயமும் அவருக்குத் தெரியாது. (நான் சொன்னதுபோலவே சரியாக 10 வருடங்கள் கழித்து 2007-ம் ஆண்டில்தான் ‘பொல்லாதவன்’ ரிலீஸ் ஆனது.) ஆர்த்தி அப்போது ஐ.சி.டபிள்யூ.ஏ படித்துக் கொண்டிருந்தார். அதை முடித்ததும் மாதம் 2,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அதிலும் 1,000 ரூபாய் நான் வாங்கிக்கொள்வேன்.
மாதா மாதம் அம்மா எனக்கு வீட்டு வாடகைக்கும் மளிகைக்கும் 10 ஆயிரம் ரூபாய் தருவார்கள். அதுபோக வாராவாரம் செலவுக்கு 4,000 ரூபாய் தருவார்கள். அது போதாது என ஆர்த்தியிடமும் 1,000 ரூபாய் வாங்கிக்கொள்வேன். அதன் பின் ஹைதராபாத்தில் ஜி.ஈ நிறுவனத்தில் ஆர்த்திக்கு நல்ல வேலை கிடைத்தது. என்னை விட்டுப் போக மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தார். ‘உன் புரொஃபஷனல் கோல்-ஐ நம்ம ரிலேஷன்ஷிப் கெடுக்கிற மாதிரி இருந்தா, இந்த ரிலேஷன்ஷிப்ல அர்த்தமே இல்ல’ என்றேன். புரிந்துகொண்டார். ஹைதராபாத் செல்ல சம்மதித்தார். மாதம் 20 ஆயிரம் சம்பளம் என நினைக்கிறேன். அதில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை நான் வாங்கிக்கொள்வேன்.
அப்போது ஆர்த்தி சென்னையில் இருந்தார். என்னைச் சந்திக்க வரச் சொன்னார். என்னால் போக முடியாத சூழல். அதைச் சொன்னதும் `நான் வேணும்னா வரட்டுமா?’ என்றார். எங்க வரப்போறா என்ற நினைப்பில் `சரி’ என்றேன். அப்போது சைதாப்பேட்டை பேர்ன்பேட்டையில் என் அறை. அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டு வாசலில் ஆர்த்தி. வாசலில் ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஹவுஸ் ஓனர் அம்மா கத்த ஆரம்பித்து விட்டார். ஆர்த்தியை அழைத்துக்கொண்டு டீக்கடைக்குச் சென்றேன். பின் அங்கு இருந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அங்கே கோல்ஃப் கிரவுண்டுக்குப் போகும் வழி, ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலை. அந்த வழியில் இருவரும் நடந்துகொண்டிருந்தோம்.
இருட்டு, அமைதி, தனிமை... பக்கத்தில் காதலி. என் படங்களில் தொடர்ந்து வரும் இருட்டுத் தெருக்களில் காதலியை, காதலன் முத்தமிடும் காட்சிகள் இங்கிருந்துதான் வந்திருக்க வேண்டும். என் கதாநாயகர்களைப்போல எனக்கும் திடீரென முத்தமிட வேண்டும் என தோன்ற, ஆர்த்தியை அணைத்து முத்தமிட்டேன். எங்கிருந்தோ ஒரு வெளிச்சம் எங்கள் மீது விழுந்தது. எதிரே ஒரு போலீஸ் ஜீப் எங்களை நோக்கி வேகமாக வந்து நின்றது. ‘ஏய்... இங்க வா’ என்றார் ஒரு போலீஸ்காரர். ‘இல்ல சார்...’ என ஏதோ சொல்ல முயன்றேன். ‘ரெண்டு பேரும் ஜீப்புல ஏறுங்க” என்றார் அவர்.
- பயணிப்பேன்...
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan