Published:Updated:

மைல்ஸ் டு கோ - 9

மைல்ஸ் டு கோ
பிரீமியம் ஸ்டோரி
News
மைல்ஸ் டு கோ

படம்: ஸ்டில் ராபர்ட்

இருள் சூழ்ந்த சைதாப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ கோல்ஃப் மைதானச் சந்தில் தனியாக நின்ற என்னையும் ஆர்த்தியையும் போலீஸ் ஜீப்பில் ஏறச் சொன்னதும், எங்களுக்குப் பதற்றம்.

நான் அந்த போலீஸ்காரரிடம் சென்று `நான் லயோலா கல்லூரி மாணவன்' என்றும், `அவர் என் தோழி' என்றும் சொன்னேன். ஐ.டி கார்டு கேட்டார். கொடுத்ததும், அதை உற்றுப்பார்த்தவர், ‘ரெண்டு பேரும் கிளம்புங்க. ஐ.டி கார்டை ஸ்டேஷன்ல வந்து நீ வாங்கிக்க’ என்றார்.

நான் ஆர்த்தியுடன் நெருக்கமாக இருக்க முயன்ற எல்லா தருணங்களுமே சொதப்பலில்தான் முடிந்திருக்கின்றன.

ஆர்த்திக்கு, என் அம்மாவைப் பார்க்க வேண்டும் என ஆசை. அதற்காக இருவரும் ராணிப்பேட்டைக்குச் செல்லலாம் என, மதியம் 1 மணிக்கு ஆர்த்தியை பாரிஸ் கார்னருக்கு வரச் சொல்லிவிட்டேன். அப்போது பஸ் ஸ்டாண்டு அங்கேதான் இருந்தது. அது, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ ஷூட்டிங் முடிந்திருந்த சமயம். அந்தப் படத்தைத்தான் முதன்முதலாக சார் டிஜிட்டல் எடிட்டிங் செய்தார். அன்று காலையில் சாரின் அலுவலகம் சென்றிருந்தேன். சார் என்னை கோடம்பாக்கத்தில் இருந்த ஆர்.சி ஸ்டுடியோவுக்குப் போகச் சொன்னார். `ஷூட் செய்திருந்த டேப்பை கேப்ச்சரிங்குக்காகக் கொண்டுபோய் லேபில் கொடுத்துவிட்டு, அப்படியே ஆர்த்தியை அழைத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பலாம்' என நினைத்திருந்தேன்.

லேபுக்குக் கிளம்பிய சமயம், சாரும் எங்களுடன் வருவதாகச் சொன்னார். சாருடன் நானும் கெளரியும் லேபுக்குச் சென்றோம். எல்லா டேப்களையும் என்ட்ரி போட்டு, உள்ளே கொண்டுபோய்க் கொடுத்தோம். அப்போது ஆவிட்தான். (ஆவிட் - டிஜிட்டல் எடிட்டிங்கில் புகழ்பெற்ற சாஃப்ட்வேர்). அங்கு இருந்த ஆபரேட்டரிடம், ஆவிட் எடிட்டிங் முறை பற்றி ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சார். அவர் விசாரித்ததும், அந்த ஆபரேட்டர் உடனுக்குடன் எடிட் செய்து காட்டினார். லேபைப் பார்த்துவிட்டுப் போகலாம் என வந்தவர், ‘கெளரி... அந்த சீன் பேப்பரைக் கொடு’ என  அப்படியே எடிட் செய்ய ஆரம்பித்துவிட்டார். மணி நண்பகல் 12:30. எனக்குள் பதற்றம் பரவிக்கொண்டிருந்தது. இடையிடையே வெளியே ஓடிப்போய் ஆர்த்தியின் ஹாஸ்டலுக்கு போன்செய்தேன். லைன் கிடைக்க வில்லை. அதற்குள் சார் என்னைத் தேட ஆரம்பித்துவிட்டார். அவரை ஏமாற்றி, வெளியே வந்து மீண்டும் மீண்டும் முயற்சிசெய்தேன். லைன் கிடைத்தால், `ஆர்த்தி இல்லை' என்றார்கள். அந்த ஸ்டுடியோ எண்ணைக் கொடுத்து, ஆர்த்தி வந்ததும் கால் பண்ணச் சொல்லுமாறு சொன்னேன்.

`முடிஞ்சா சொல்றோம்' என பதில் வந்தது. சாரும் தொடர்ந்து எடிட் செய்துகொண்டே இருந்தார். மாலை 6 மணி ஆகியும் கிளம்பவில்லை. அவர் அன்று எடிட்டிங் முடித்தபோது இரவு 12 மணி. `ஆனது ஆகிவிட்டது, நாளை காலை முதல் வேலையாக ஆர்த்தியின் ஹாஸ்டலுக்குச் சென்று பேசிவிட வேண்டும்' என நினைத்தேன். அடுத்த நாள் காலை 6 மணி. கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தால் ஆர்த்தி. கோபமும் அழுகையுமாக நின்றிருந்தார். ‘என்னம்மா?’ எனக் கேட்டதுதான் தாமதம், அழத் தொடங்கிவிட்டார். நேற்று மதியம் 1 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பாரிஸ் கார்னர் பஸ் ஸ்டாண்டிலேயே எனக்காகக் காத்திருந்திருக்கிறார் என்பது பிறகுதான் தெரிந்தது. நான் வரவில்லை என்பதைவிட, `எதற்காக வரவில்லை?' என அவருக்குள் ஏதேதோ காரணங்கள் தோன்றியிருக்கின்றன. பிறகு, அவரை ஒருவாறு சமாதானம் செய்து அனுப்பிவைத்தேன்.

நண்பர்களுடன் வெற்றிமாறன்
நண்பர்களுடன் வெற்றிமாறன்

நானும் ஆர்த்தியும் சேர்ந்து பார்த்த முதல் படம் ‘காதலா காதலா’. இடைவேளை வரை படம் ஓடியது. அதன் பிறகு ‘ஓ.கே இவ்வளவு நாட்கள் பேசிப் பழகியிருக்கிறோமே’ என நினைத்தபடி, ஆர்த்தியின் கையை கேஷுவலாகப் பிடித்தேன். அதை எதிர்பார்க்காத ஆர்த்தி, பயத்தில் இன்னொரு கையில் இருந்த டிபன் பாக்ஸைக் கீழே போட்டு விட்டார். சத்தம் கேட்டு எல்லோரும் எங்களைத் திரும்பிப் பார்க்க, நான் அப்படியே உறைந்து விட்டேன். என் பாதி கை அவரின் கையைப் பிடித் திருந்தது. கையை எடுப்பதா... வேண்டாமா என்ற குழப்பம் அவருக்கு. கையைப் பிடிக்கலாமா... வேண்டாமா என்ற குழப்பம் எனக்கு. படம் முடியும் வரை அப்படியே இருந்தோம்.

இதற்கிடையில் ஆர்த்தியை அவரின் வீட்டில் திருமணத்துக்கு நெருக்க ஆரம்பித்தனர். எனக்கும் அது புரிந்தது. ‘நீ படம் டைரக்ட் பண்ண அப்புறம் வீட்ல பேசலாம். அதுவரைக்கும் நான் சமாளிச்சுக் கிறேன்’ என்பார். நான் அப்போது கதிர் சாரிடம் ‘காதல் வைரஸ்’ படத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். ‘காதல் வைரஸ்’ படம் முடிய கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறகு, அந்தப் பட ஹீரோ ரிச்சர்டிடம் கதை சொல்லியிருந்தேன். அவருக்கும், அவர் அப்பா வுக்கும் அந்தக் கதை பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ஞானவேலும் ஜெயபிரகாஷும் (இப்போது நடிகர் ஜெயபிரகாஷ்) சேர்ந்து ‘ஜி.ஜே சினிமாஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம்  தொடங்கியிருந்தனர். அந்த பேனரில்தான் என் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது.

பாலு மகேந்திரா சார்தான் என்னை பரிந்துரை செய்து அவர்களுக்குக் கடிதம் தந்தார். இருவருக்குமே என் மீது அன்பும் நம்பிக்கையும் உண்டு. நான் சொன்ன கதை அவர்களுக்குப் பிடித்திருந்தாலும், அப்போது அதைப் படமாக எடுக்க அவர்களுக்குத் தயக்கம் இருந்தது. பிறகு, சார் இயக்கத்தில் `ஜூலி கணபதி' படத்தை ஜி.ஜே சினிமாஸ் தயாரித்தது. நான் அதில் உதவியாளராகப் பணிபுரிந்தால், அதற்கு அடுத்து படம் இயக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என நினைத்தேன். (`என் வாழ்க்கையில் எனக்கு இடமே இல்லை' எனச் சொன்ன சாரிடம், நான் மீண்டும் சேர்ந்த கதையை, பிறகு சொல்கிறேன்.) இதற்கிடையில் வேலை தொடர்பாக ஆர்த்தி இரண்டு முறை அமெரிக்காவுக்குச் சென்றதால், அவர் வீட்டில் திருமணப் பேச்சு எழவில்லை. அப்போது என் நண்பர்கள் மணி, தர்மன் மற்றும் `அடிதடி' பட இயக்குநர் சிவராஜ் ஆகியோருக்கு திருமணம் முடிந்திருந்தது. ஆர்த்தி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், எங்கள் அறையில் எல்லோரும் சந்தித்தோம். இரண்டு நாட்கள் ஊர் சுற்றினோம். நான் அப்போது சாலிகிராமத்தில் உள்ள ராமர் தெருவில் தங்கியிருந்தேன். அதே தெருவில் இன்னொரு வீட்டில் ஆர்த்தி குடிவந்தார்.

எனக்கு 26 வயது வரை பைக் ஓட்டத் தெரியாது. மணி திருமணத்தின்போது வாங்கிய பைக்கில்தான் ஓட்டக் கற்றுக்கொண்டேன். அந்தச் சமயத்தில் ஆர்த்திதான் எனக்கு பைக் வாங்கி தந்தார். யமஹா ஆர்.எக்ஸ் 135, TN 10 D 3551. பைக் வாங்கியதும், ‘முதலில் கோயிலுக்குப் போகலாம்’ என்றார். `நம் சோகத்தைவிட சந்தோஷத்தைத்தான் நம் அப்பா, அம்மா போன்ற பெரியவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என நினைப்பேன். அப்போது `எனக்கு உடனே சாரைப் பார்க்க வேண்டும்' எனத் தோன்றியது. அப்பா இருந் திருந்தால் சாரைப் பார்க்கத் தோன்றியிருக்குமா... இல்லையா எனத் தெரியவில்லை. சாரிடம் இருந்து வெளியே வந்த பிறகு, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவரை நான் பார்க்கவே இல்லை. நானும் ஆர்த்தியும் சார் வீட்டுக்குச் சென்றோம். அகிலாம்மாதான் கதவைத் திறந்தார். ‘நல்லா இருக்கியா?’ - அகிலாம்மாவிடம் இருந்து வந்த அக்கறை கலந்த அன்பான வார்த்தைகள் என்னை நெகிழவைத்தன. விஷயத்தைச் சொன்னேன். அவர் உள்ளே போனதும், சார் வெளியே வந்தார். நான் அவருக்கு ஏற்படுத்திய காயமோ, மனவருத்தமோ எதுவுமே சாரிடம் அப்போது இல்லை. பைக் சாவியை அவரிடம் கொடுத்து, அவர் காலில் விழுந்து இருவரும் ஆசீர்வாதம் வாங்கினோம். அன்று அவர் சொன்ன வார்த்தை நன்றாக நினைவில் இருக்கிறது... ‘`பார்த்து ஓடுறா.''

இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கதிர் சாரிடம் வேலை செய்வதைச் சொன்னேன். ``நல்லா வேலை செய்டா!” என்றார். `மூன்றாம் பிறை' படத்தின் போஸ்டர் டிசைனர் கதிர் சார்தான். அவர் நன்றாக விஷுவலைஸ் செய்யக்கூடியவர் என சார் சொன்னார். மீண்டும் ஆர்த்தி வீட்டில் கல்யாணக் கவலை. மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள். படம் இயக்குவதற்கு 10 வருடங்கள் ஆகும் என நான் வைத்திருந்த கணக்கைவிட அதிக காலம் ஆகும் என எனக்குத் தோன்றியது. தவிர, ஆர்த்திக்கும் அது திருமணத்துக்கான சரியான வயது.

‘நீ விருப்பப்பட்டா, கல்யாணம் பண்ணிக்க. என் சினிமா கனவுக்காக உன்னைக் காத்திருக்கச் சொல்றது நியாயம் இல்லைனு நினைக்கிறேன்’ என்றேன். நான் இப்படிப் பேசியது ஆர்த்திக்குக் கோபத்தை வரவழைத்தது. ‘உன்னைவிட்டுப் போவதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. நீ படம் இயக்குற வரை நான் காத்திருக்கேன்’ என உறுதியாகச் சொல்லிவிட்டார். ‘அது ஒரு கனா காலம்’ படப்பிடிப்பின்போது தனுஷிடம் ஒரு கதை சொன்னேன். அவருக்கு அது பிடித்திருந்தது. என்னை கவிதாலயாவுக்கு அனுப்பினார். அங்கே கதை ஓ.கே ஆகி, அட்வான்ஸாக 10,000 ரூபாய்க்கு செக் தந்தார்கள். வாங்கியவுடன், ஆர்த்தியை போனில் அழைத்து, ‘செக் வந்தாச்சு... நான் இனி டைரக்டர். நீ வீட்டில் தைரியமாக நம்ம விஷயத்தைப் பேசு’ என டைரக்டராகவே ஆகி விட்டதாக நினைத்தேன். ஆர்த்தி, அவர் அப்பாவின் நண்பர் கலீல் அவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவரை வைத்து வீட்டில் பேச்சைத் தொடங்கினோம்.

‘சினிமாக்காரன். அதுவும் படிப்பைக்கூட சரியா முடிக்கலை’ - ஆர்த்தியின் அப்பா என்னை ‘நோ’ சொல்ல இந்த இரு காரணங்கள் போதுமானதாக இருந்தன. ‘யப்பா... நீ பையனை நேர்ல பாரு. அப்புறம் ஒரு முடிவுக்கு வா’ - அந்த நண்பர் எங்களுக்காக விடாமல் அவரிடம் பேசினார். அவரும் ‘சரி’ என நினைத்து சென்னைக்கு வந்தார். நானும் அம்மாவும் அவரைப் போய்ப் பார்த்தோம். நான் பேச்சை ஆரம்பித்தேன்... ‘சினிமாவுலதான் எனக்கு வேலை. டைரக்டராக முயற்சி பண்ணிட்டிருக்கேன். தம் அடிப்பேன்; தண்ணியடிக்க மாட்டேன். நாளைக்கு பாலு மகேந்திரா சாரை வந்து பாருங்க’ - படபடவெனப் பேசினேன். ‘இவன் உண்மையைச் சொல்றான்’ என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. என்னை அவருக்குப் பிடித்திருந்தது. மறுநாள் வந்து சாரைப் பார்ப்பதாகச் சொன்னார். அம்மாவும் “ஆர்த்தி என் பொண்ணு மாதிரி. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க” என்றார். அதுவும் அவருக்கு நம்பிக்கையைத் தந்தது.

அடுத்த நாள், சார் ஆபீஸுக்குச் சென்றோம். சாரும் ஆர்த்தியின் அப்பாவும் முக்கால் மணி நேரம் தனியாகப் பேசினார்கள். வெளியே வந்ததும் அவர் கிளம்பிவிட்டார். உள்ளே என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. ஆர்த்தியையும் அவர் அப்பாவையும் வழி அனுப்பிவிட்டு ஆபீஸுக்கு வந்தேன். என்ன பேசினார்கள் என்பது தெரியாமல் ஆபீஸுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருந்தேன். சாரே, ‘சொன்னன்டா... உன்னைப் பத்தி சொல்லி யிருக்கேன்’ என்பதோடு முடித்துக்கொண்டார். ஆனால், சார் பேசிய விஷயங்களை ஆர்த்தி யிடம் அவர் அப்பா சொல்லியிருக்கிறார். ‘வெட்டிய எனக்கு எட்டு வருஷமா தெரியும். ஸ்மோக் பண்ணுவான். மத்த எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ஒருநாள்கூட அவன் மேல ஆல்கஹால் ஸ்மெல் வந்தது இல்லை. ஸ்பாட்ல எந்தப் பொண்ணுகூடவும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசி நான் பார்த்தது இல்லை. எட்டு வருஷம் லாம் ஒருத்தன் நல்லவனா நடிக்க முடியாது. அவன் கரியர்லயும் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. நம்பி உங்க பொண்ணைக் கொடுக்கலாம். எங்கே தேடினாலும் இப்படி ஒரு பையன் கிடைக்க மாட்டான்’ - ஓர் இயக்குநர் தன் உதவி இயக்குநரைப் பற்றி இதற்கு மேல் எதுவும் நல்லவிதமாகச் சொல்லிவிட முடியாது. இரு வீட்டிலும் திருமணத்துக்கு  ஒப்புக்கொண்டனர். செப்டம்பர் 8-ம் தேதி திருமணம். நாள் குறித்துவிட்டார்கள். அதாவது தனுஷ் படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கி முடித்துவிட்டு செப்டம்பரில் திருமணம். இதுதான் திட்டம். ஆனால், ஜூன் மாதம் படம் டிராப். எனக்கு அப்போதும் படம் இயக்காமல், திருமணம் செய்ய விரும்பவில்லை. பத்திரிகை எல்லாம் அடித்தாகிவிட்டது. ஆர்த்தியிடம் சொன்னேன். ஆர்த்தியும் நான் சொன்னதற்கு `சரி’ என்றார். திருமணத்தைத் தள்ளிவைக்கலாம் என இருவரும் முடிவுசெய்தோம். அம்மாவிடம் சொன்னேன்... ‘செருப்பால அடிப்பேன். நீ படம் பண்ணு, பண்ணாம போ. ஆனா, முதல்ல கல்யாணம் பண்ணு. இதுக்கு மேல அந்தப் பொண்ணைக் காத்திருக்கவைக்க நான் சம்மதிக்க மாட்டேன்’ எனக் கொதித்துவிட்டார். நானும் கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லிவிட்டேன். திருமணச் செலவுகளை வீட்டில் கேட்கக் கூடாது என நானும் ஆர்த்தியும் முடிவு செய்திருந்தோம். சென்னையில் ஒரு ரிசப்ஷன், நாகர்கோவிலில் ஒரு ரிசப்ஷன். எல்லா செலவுகளையும் ஆர்த்திதான் பார்த்துக்கொண்டார். கடைசி நேரத்தில் 50,000 ரூபாய் தேவைப்பட்டது.

அப்போது தனுஷிடம் கேட்டுப் பார்க்கலாம் என அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். தனுஷ் தனது மனைவியிடம் செக் புக்கை எடுத்து வரச் சொன்னார். உடனே ஒரு லட்ச ரூபாய்க்கு செக் போட்டுக் கொடுத்தார். அப்போது அந்தப் பணம் எனக்கு பெரிதும் உதவியது. நாகர்கோவில் ரிசப்ஷனுக்குச் செல்ல எல்லோருக்கும் சென்னையில் இருந்து ட்ரெய்ன் புக் செய்திருந்தோம். அதற்கு முன் ஏ.எம்.ரத்னம் சாரிடம் ‘பொல்லாதவன்’ கதையைச் சொல்லியிருந்தேன். அவருக்குப் பிடித்திருந்தது. `பண்ணலாம்' எனச் சொல்லியிருந்தார். ரிசப்ஷனுக்குச் செல்லும் முன்னர் அவரிடம் கன்ஃபர்ம் செய்துகொள்ளலாம் என நானும் மணியும் அவர் அலுவலகம் சென்றிருந்தோம்.

மைல்ஸ் டு கோ - 9

3 மணி இருக்கும். அப்போது அவர் அங்கு இல்லை. பிறகு எங்களை தி.நகரில் ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருந்தார். அவர் வருவார் என அங்கு காத்திருந்தோம். ரிசப்ஷனுக்கு ஊருக்குச் செல்ல ட்ரெய்னுக்கு நேரமாகிக்கொண்டிருந்தது. ரத்னம் சார் வர லேட் ஆனதால், மற்ற எல்லோரையும் கிளம்பச் சொன்னேன். நான் காரில் வருவதாகச் சொன்னேன். ‘நீ வராமல் நான் போக மாட்டேன்.நானும் கார்ல வர்றேன்’ என ஆர்த்தி சொல்லிவிட்டார். நாங்கள் யாரும் ட்ரெய்ன் ஏறவில்லை என்றதும் ஊரில் ஆர்த்தியின் அப்பாவுக்கு டென்ஷன். நேரம் ஆக ஆக, என் அம்மாவும் பதற்றமாகிவிட்டார். வேறு வழி இல்லாமல், ரத்னம் சாருக்காகக் காத்திருக்கத் தொடங்கினோம். - பயணிப்பேன்...

#VikatanGoodReadsChallenge

#VikatanGoodReadsChallenge
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!

Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan