
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

விஷூவல் கார்னர்
கல் கலை
`கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பது நமக்குத் தெரிந்த பழமொழி. மைக்கேல் கிராப் (Michael Grab) செய்யும் மாயாஜாலத்தைப் பார்த்தால் `நிற்பார் நிறுத்தினால் கல்லும் நிற்கும்' என்று பழமொழியை மாற்றலாம்.
நண்பர் கலாநிதி பாவேஸ்வரன், மரபு கட்டடக் கலை பயிற்சிப் பட்டறையில் `கட்டுவதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் கற்களுடன் பேசுங்கள்' என்றார். கற்களுடன் பேசுவது என்றால், அந்தக் கற்களைப் புரிந்துகொள்வது. மைக்கேல் கிராபின் இந்தக் `கல் நிறுத்தல்’களை வீடியோவில் பார்க்கும்போது அவருக்கும் கற்களுக்கும் புவிஈர்ப்பு விசைக்கும் இடையில் உருவாகும் புரிதலை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது.

கனடாவில் பிறந்த கிராப், அமெரிக்காவின் கொலராடோவில் வசிக்கிறார். அங்கே போல்டர் பகுதிகளின் நீர்நிலைகளில் இந்தக் கலையை கடந்த சில வருடங்களாகச் செய்துவருகிறார். `இந்தக் கல் நிறுத்தல்களைச் செய்வது, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிக்கும்' என்று அந்த நகரத்தின் காவல் துறை ஒருதடவை கிராபுக்குத் தடை விதித்தது. கிராபின் ரசிகர்கள் பொங்கி எழுந்து, நீதித் துறைக்கும் அரசாங்கத்துக்கும் கொடுத்த அழுத்தத்தால் அவர்களே கூப்பிட்டு கிராபிடம் மன்னிப்புக் கேட்கும் அளவுக்குப் போனது தனிக்கதை.
இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், `ஏதோ அதிபயங்கரமான பசையைக்கொண்டு அவர் இந்தக் கற்களை ஒட்டியிருக்கிறார்' என்றே சொல்வார்கள். உண்மையில், வெறும்கைகளால் ஈர்ப்புவிசையை அவதானித்தபடி கற்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குகிறார் கிராப். அதுவும் `ஒரே சூழலில் கிடைக்கும் கற்களைத்தான் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்தக் கற்களுக்குள் ஓர் உறவு இருக்கும்' என அவர் சொல்வது சூழலியல் `கல்’வி.

அவருடைய கைகளுக்கும் கற்களுக்கும் இடையே உருவாகும் மேஜிக், நம் கல் மனதையும் சற்று இலகுவாக்கி தியான நிலைக்கு எடுத்துச்செல்கிறது. உதாரணத்துக்கு, 13 நிமிடப் பொறுமையுடன் இந்த வீடியோவைப் பாருங்கள் www.youtube.com/watch?v=kHVLi8LA_0Q
நானோ ஹிஸ்டரி
பருத்தி
நம் ஊருக்கு சுற்றுலா வரும் வெள்ளைக்காரர்கள் செய்யும் முதல் வேலை, பருத்தித் துணிகளை பர்ச்சேஸ் செய்வதுதான். வெப்ப மண்டலச் சூழலுக்கு பருத்திதான் சிறந்த ஆடை என்பதை அறிந்திருக்கின்றனர். நாம்தான் `ஃபேஷன்' என்ற பெயரில் சூழலுக்குப் பொருந்தாமல் வேஷம் போட்டுத் திரிகிறோம்.

3,000 வருடங்களுக்கு முன்னரே சிந்துசமவெளி நகரத்தில் பருத்தி அறுவடைசெய்து, நெய்து, உடுத்தியிருக்கிறார்கள். கிரேக்க ஆசிரியர் ஹெரோடோடஸ் இந்தியப் பருத்தியைப் பார்த்து வியந்து `ஆடுகளுக்கு நல்ல காலம் வந்தது' என எழுதியிருக்கிறார். ஆடைகளுக்காக ஆட்டின் உரோமங்களை வெட்டி எடுப்பதை அவர் விரும்பவில்லைபோல.
ஆனால், உலகின் மிகப் பழைமையான பருத்தி படிவங்களை மெக்ஸிக்கோ குகைகளுக்குள் கண்டெடுத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். நாம் நினைப்பதைவிட மனிதர்கள் உலகெங்கும் வணிகத் தொடர்புகளும் பயணங்களும் செய்திருக்கிறார்கள் என யூகிக்க முடிகிறது.
`விக்கம் பாயல்’ என்னும் கட்டுரையாசிரியர் இந்தியப் பருத்தியின் வரலாறு பற்றிய ஒரு கட்டுரையில், `பருத்தி ஓர் அரசியல் இழை' என்கிறார். காந்தி, பிரிட்டிஷாருக்கு எதிராக பருத்தியை கதரின் வடிவில் ஓர் ஆயுதமாக்கியதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார். காந்தியின் காலத்தைக் கடந்து, இன்றும் அது `பி.டி பருத்தி' போன்ற வடிவங்களில் நமது மண்ணில் அரசியல் இழையாக இருந்து விவசாயிகளின் கழுத்தை இறுக்குகிறது.
கொலாஜ்
கிராம கண்டகர்
உத்திரமேரூரின் முதலாம் பராந்தகன் கால கல்வெட்டுகளில், `ஊர் மக்கள்சபை பல வாரியங்களாகச் செயல்பட்டது' என்பதும் `குடவோலை முறைப்படி உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்' என்ற குறிப்புகளும் இருக்கின்றன. தேர்தலில் நிற்க, சில தகுதிகளின் பட்டியலும் கல்வெட்டுகளில் இருக்கிறது என்பதை, கல்வெட்டியல் துறை பேராசிரியர் முனைவர் மா.பவானி எழுதிய ஒரு கட்டுரையில் படித்தேன்.

அவற்றில் சில...
1. வயது, 30-லிருந்து 60-க்குள் இருக்க வேண்டும்.
2. நல்வழியிலான செல்வமும் தூய்மையான ஆன்மாவையும் பெற்றிருக்க வேண்டும்.
3. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது. அவ்வாறு வாரிய உறுப்பினராக இருந்தோரும், அவர்களது நெருங்கிய உறவினர்களும் உறுப்பினராக இயலாது.
4. ஏதாவது ஒரு வாரியத்தில் இருந்து கணக்கு காட்டாமல் சென்றவர்களும் அவர்களது உறவினர்களும் உறுப்பினராகக் கூடாது. தாயின் சிறிய, பெரிய சகோதரிகளின் மக்கள் - தந்தையின் சகோதரி மக்கள் - மாமன் - மாமனார் - மனைவியின் தங்கையை மணந்தவர் - உடன் பிறந்தாளைத் திருமணம்செய்தவர் - தன் மகளை மணம்புரிந்த மருமகன்... இதுபோன்ற சுற்றத்தினர் யாரும் தங்களது பெயர்களைக் குடவோலைக்கு எழுதுதல் கூடாது.
5. ஆகமங்களுக்கு எதிராக பஞ்சமாபாதகங்கள் செய்தோர், கொள்கைகளை மீறுபவர், பாவம் செய்தவர்கள், கையூட்டுப் பெற்றவர்கள் அதற்கான பரிகாரங்களைச் செய்து தூய்மை அடைந்திருந்தாலும் அவர்களும் உறுப்பினர் ஆகும் தகுதியற்றவரே. அவர்களது உறவினர்களும் உறுப்பினராக இயலாது. கொலைக்குற்றம் செய்யத் தூண்டுபவர், கட்டாயத்தினால் கொலைக்குற்றம் செய்பவர், அடுத்தவர் பொருளை அபகரிப்பவர், ஊர்மக்களுக்கு விரோதியாக இருப்போர் (கிராம கண்டகர்) இவர்கள் உறுப்பினராகத் தகுதியற்றவர்களாவர்.
6. கழுதை ஏறியோரும், பொய் கையெழுத்திட்டோரும் உறுப்பினராகத் தகுதியற்றோர் ஆவர்.
இதன் அடிப்படையில் பார்த்தால், இன்றைய அரசியலில் பல கேஸ்கள் தேறாது.
நாஸ்டால்ஜியா நோட்
பொட்டி வந்தாச்சு
`ஆண்பாவம்' படத்தில் டென்ட் கொட்டாய்க்கு சினிமா பொட்டி வரும் அல்லோலகல்லோல சீன் ஞாபகம் இருக்கிறதா? அதைப்போலத்தான் நாங்களும் பொட்டிக்காகக் காத்துக்கிடப்போம். கோயில் திருவிழாக்களில்கூட பாரம்பர்யக் கலைகளை சினிமா ரீப்ளேஸ் செய்திருந்த காலம். `அம்மன் துணை',

`மாடன் துணை' என ஆரம்பிக்கும் மஞ்சள் நிறத் திருவிழா நோட்டீஸ்களில் என்ன திரைப்படம் போடுகிறார்கள் எனப் பார்ப்பதுதான் முதல் வேலை. ஒருநாள் எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களின் `உபய’த்தில் பழைய சினிமா என்றால், இன்னொரு நாள் ரஜினி, கமல் ரசிகர்களால் புத்தம்புது வண்ணத்தில் தூள் பறக்கும் புதிய சினிமா.
ஊரின் மைதானத்திலோ, கோயில் தெருக்களிலோ திரை கட்டிப் படம்போடுவார்கள். சிறுசுகளான நாங்கள், சாயங்காலத்தில் இருந்தே பொட்டி கொண்டுவரும் அண்ணாச்சிகளைச் சுற்றிச் சுற்றி வருவோம்.
ஒரு பிரீஃப்கேஸ் அளவுக்கே இருக்கும் 35mm புரொஜெக்டர்களைப் பிரித்தால் ஃபிலிம் ரீல்கள் மாட்டுவதற்கான உபகரணம், லென்ஸ், பல்ப் என `டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' படத்தில் வரும் இயந்திரங்களைப்போல விரிந்து ஆச்சர்யப்படுத்தும். மக்கள், பெண்டுபிள்ளைகள் போர்வை சகிதமாக ஆஜராகியிருப்பார்கள். புரொஜெக்டரை ஆபரேட் செய்பவர், வி.ஐ.பி அந்தஸ்துடன் கமிட்டிகளால் கவனிக்கப்பட்டு, ரீலில் இருந்து ஃபிலிமைத் தோரணையாக இழுத்து, புரொஜெக்டரின் ஏதேதோ இடைவெளிகளில் நுழைத்து, காலி ரீலுக்குள் இணைத்து பல்பைப் பற்றவைத்து, ரீலைச் சுற்றவிட்டால், திரை உயிர்பெற்று ரீல் நம்பர்கள் வட்டத்துக்குள் டக்டக்கென மாற ஆரம்பித்ததும் கூட்டம் ஆரவாரிக்கும்.
ஹீரோ இன்ட்ரோவின்போது லாட்டரி கடைகளில் இருந்து வாங்கிவந்த துண்டு லாட்டரிகளை ரசிகர்கள் அள்ளி வீசுவார்கள். அது திரையில் நிழல்களாகக் கொண்டாட்டத்துடன் பறந்து ஹீரோ முகத்தை மறைக்கும். இன்ட்ராக்டிவ் ஆர்ட் என்பதை நம் மக்கள் அப்போதே கண்டுபிடித்திருக்கிறார்கள் என இன்று வியப்பாக இருக்கிறது. ரீல் காலியாகும்போது அடுத்த ரீலை அந்துவிடாமல் மாற்றும் புரொஜெக்டர் ஆட்களின் சாமர்த்தியம் பொடிசுகளால் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. பிறகு, சாட்டிலைட் சேனல்கள் 24 மணி நேரமும் சினிமா காட்ட ஆரம்பித்த பிறகு இந்தத் `திரை கட்டிப் படம் போடும்' கலாசாரத்துக்குத் திரை விழுந்தது. 35mm திரையில் பிரமாண்டமாக நின்ற கதாநாயகர்கள், டி.வி-யில் லில்லிபுட்களாகச் சுருங்கிப்போனார்கள்.
அஞ்ஞானச் சிறுகதை
பிரின்ட்
``3D பிரின்டிங் டெக்னாலஜியில் இது அடுத்த கட்டப் பாய்ச்சல். விலங்குகளை ஸ்கேன்செய்து அதன் உயிரியல் உறுப்புகளுடன் அச்சுஅசலாக ரீபிரின்ட் பண்ண முடியும்” என்றான் பிரம்.
“பண்ணைகள் தேவை இல்லை. பிராய்லர் கோழிகளை எல்லாம் ஒரு சுவிட்சைத் தட்டினால் ஆர்டருக்கு ஏற்ற மாதிரி பிரின்ட் செய்துகொள்ளலாம்” என்றான் விஷ்.
``கோழிகளை மட்டும் அல்ல... ஆடு, மாடு, பன்றி எல்லாவற்றையும்தான். இதுவே எங்கள் புராஜெக்ட். பிரசென்ட் பண்ணினால், அறிவியல் உலகமே மிரளும்” என்றான் பிரம்.

“கோடிகளைக் கொட்ட முதலாளிகள் தயாராக இருப்பார்கள்” என்ற விஷ், பிரம்மைப் பெருமையாக அணைத்தான்.
``நான் இந்த இயந்திரத்தைப் பார்க்க முடியுமா?” என்றான் விஷ்.
பிரம்மும் விஷ்ஷும் அறையைத் திறந்துகாட்டினார்கள்.
ஆதிகால கம்ப்யூட்டரையும் மாவு மில்லையும் கலந்து செய்ததுபோல விசித்திரமாக அறையை நிறைத்தபடி இருந்தது இயந்திரம்.
“இதில்தான் ஸ்கேன் பண்ண வேண்டும்” என்று பிரம் சொன்னதை ஷிவ் பார்த்தான். ஆள் உயர புனல்போல் இருந்தது அது.
``இங்கேதான் பிரின்ட்டுகள் வெளியே வரும்” என்று விஷ் சுட்டிக்காட்டிய இடம், வாசல்போல விரிந்து பிரின்ட்டுகளைத் துப்பத் தயாராக இருந்தது.

ஷிவ், சட்டென பிரம்மையும் விஷ்ஷையும் புனலுக்குள் தள்ளி, மானிட்டரில் `பிரின்ட்' எனத் தட்டினான்.
`நம்பர் ஆஃப் காப்பீஸ்?' என மானிட்டர் கேட்டது.
`அன்லிமிடெட்' என்னும் ஆப்ஷனை அழுத்தினான்!